மல்லிகா இளநிலை அதிகாரியாக சென்னையில் உள்ள அந்த அலுவலகத்தில் சேர்ந்த போது, சுப்பராயன் அவளுக்கு மேலதிகாரியாக இருந்தார். மல்லிகாவின் கல்வித் தகுதியைப் பார்த்ததும், இதற்கு அடுத்த உயர்நிலைப் பதவிக்குத் தகுதி இருக்கும் பொழுது இந்த வேலையில் சேர்ந்தது ஏன் என்று அவர் கேட்டார். தான் இரண்டு பதவிகளுக்கும் தேர்வில் கலந்து கொண்டதாகவும், முதலில் இந்த வேலைக்கான நியமன ஆணை கிடைத்ததாகவும் உடனே வேலையில் சேர்ந்துவிட்டதாகவும் மல்லிகா கூறினாள்.

பின் அலுவலகத்தில் வேலை செய்வதற் குப் பயிற்சி அளித்த சுப்பராயன், இப்பொழுது கிடைத்த வேலையில் மனநிறைவு பெற்றுவிடக் கூடாது என்றும், அவளுடைய தகுதிக்கு ஏற்ற அடுத்த உயர்நிலைப் பதவியை அடைய முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

ஒரு மாதம் கழிந்த பிறகு, மாலதி என்பவள் இளநிலை அதிகாரிக்கு அடுத்த உயர்நிலைப் பதவியில் வேலைக்குச் சேர்ந்தாள். மாலதி வேலையில் சேர்ந்தது மல்லிகாவிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் அவ்வேலைக்கான தேர்வின் போது மாலதியைவிட மல்லிகாதான் நன்றாகச் செயல்பட்டு இருந்தாள். எழுத்துத் தேர்வில் இதை ஓரளவு தான் யூகிக்க முடிந்தாலும், குழு விவாதத்தில்

இது தெள்ளத் தெளி வாகவே தெரிந்தது. நேர்முகத் தேர்வு பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை என்றாலும், கல்லூரிக் கல்வி யில் மல்லிகா தங்கப் பதக்கங்கள் பலவற்றைப் பெற்றி ருப்பதும், மாலதி எதிலும் முதன்மை பெறவில்லை என்பதும், மாலதியைவிட மல்லிகா தான் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதைத் தெளிவாகக் காட்டின. அப்படி இருக்கும் போது மாலதி உயர்நிலைப் பதவிக் கும், மல்லிகா இளநிலைப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டது எப்படி? மல்லிகாவால் பொறுக்க முடியவில்லை. சுப்பராயனிடம் தன்னுடைய மன உளைச்சலைக் கொட்டி அழுதேவிட்டாள். சுப்பராயனும் விவரங்களை விசாரித்துச் சொல்வதாகக் கூறினார். பின் நிர்வாக அதிகாரியிடம் விசாரித்த போது இந்திய நாட்டின்- இந்து மதத்தின் கொடூரமான இழிவான நோய் தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது.

மல்லிகா, மாலதி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு வேலைகளுக்குமான தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். மல்லிகா தான் இரண்டு வேலை களுக்குமான தேர்வுகளில் முதன்மையாகத் தேர்வு பெற்று இருக்கிறாள். ஆனால் பார்ப்பனரான மேலாண்மை இயக்குநர் பார்ப்பனத்தியாகிய மாலதியை உயர்நிலைப் பதவிக்கும், மல்லிகாவை இளநிலைப் பதவிக்கும் தேர்ந்தெடுக்க விரும்பி இருக்கிறார். அப்படிச் செய்ய முடியாது என்று நிர்வாக அதிகாரி தெரிவித்த பொழுது உயர்நிலை அதிகாரி நியமனம் தொடர்பான கோப்பைக் கிடப்பில் போட்டு வைக்கும் படியும், இளநிலை அதி காரிக்கான தேர்வில் முதன்மை பெற்றிருக்கும் மல்லி காவிற்கு வேலை நியமன ஆணை அனுப்பும்படியும் கூறியிருக்கிறார்.

அதன்படி அனுப்பியதில் மல்லிகா வேலையில் சேர்ந்தவுடன், அவள் ஏற்கெனவே வேலை யில் சேர்ந்துவிட்டதால் உயர்நிலை அதிகாரி வேலைக் கான தேர்வில் இருந்து மல்லிகாவின் பெயரை நீக்கி விட்டு, மாலதிக்கு வேலை நியமன ஆணை அனுப்பும் படி கூறியிருக்கிறார். நிர்வாக அதிகாரியும் அதன்படியே செயல்பட வேண்டி இருந்திருக்கிறது.

விவரங்களைத் தெரிந்துகொண்ட மல்லிகாவிற்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் மல்லிகாவும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் தான். பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தங்களுடைய வாய்ப்பைப் பறித்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு இருந்த அவளுக் குப் புதிய அனுபவமாக இருந்தது. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே பிரிவினையா? அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்4லை. சுப்பராயன் அவளைத் தேற்றினார். ஆனாலும் அவளால் அமைதி யடைய முடியவில்லை.

“சார்! ரிசர்வேஷன் தான் நம்ம வாய்ப்பைக் கெடுக்குதுன்னு இதுவரைக்கும் நெனச்சிட்டு இருந் தேன். இதென்னா சார்! கொடுமையா இருக்கு?”

“இல்லே மல்லிகா! ரிசர்வேஷன் நல்லபடியா இம்பிளிமெண்ட் ஆனா நமக்கு நல்லதாத்தான் இருக் கும்” என்று சுப்பராயன் சொல்லவும் “நமக்கும் தான் இன்னா, அப்படீன்னா நீங்களும் ஃபார்வர்ட் கம்யூனி டியா சார்?” என்று மல்லிகா கேட்டாள். சுப்பராயனும் ஆம் என்று பதிலளித்தார்.

“அது சரி சார்! ரிசர்வேஷன் இருந்தா நமக்கு சான்° கொறையத்தானே சார் செய்யும்? அது நமக்கு நல்லதுன்னு எப்படிச் சொல்றீங்க?” என்று மல்லிகா கேட்டாள்.

“உங்க அனுபவமே காட்டுதுல்லே? உங்களுக் குத் தகுதியும் திறமையும் இருந்தும், உங்களைவிட தகுதியிலேயும், திறமையிலேயும் கொறஞ்ச மாலதியை உங்களுக்கு மேலே உட்கார வச்சுட்டாங்க இல்லே? பவர் சென்டர்லே பிராமின் டாமினேஷன் இல்லாட்டி இந்த மாதிரி செய்ய தைரியம் வருமா? பவர் சென்டர்லே பி.சி.யும், எஸ்.சி.யும் நெறைஞ்சிருந்தா நம்ம மாதிரி நான் பிராமின் ஃபார்வார்ட்காரங்களுக்கு இப்ப கெடைக் கிறதைவிட அதிகமாகவே கெடைக்கும்” என்று சுப்பராயன் கூறியதை மல்லிகா சிறிது குழப்பத்துடன் உள் வாங்கிக் கொண்டாள்.

சரி! பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் உரிய பங்கைக் கொடுத்தால்தான் பார்ப்ப னரல்லாத மற்ற முற்பட்ட வகுப்பு மக்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தனக்குத் தோன்றாதபோது சுப்பராயனுக்கு எப்படித் தோன்றியது? மல்லிகா கேட்டேவிட்டாள்.

வ.உ.சி. சேலத்தில் 5.11.1927இல் ஆற்றிய ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற உரையில் இருந்தும், அதன் தொடர்ச்சியாக ஈ.வெ.ரா.வின் நூல்களில் இருந்தும் உணர்வுபெற்றதாக சுப்பராயன் கூறினார்.

இதுவரைக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும்தான் தங்கள் வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்த மல்லிகாவுக்கு, சுப்பராயனுடைய விளக் கம் வியப்பை அளித்தது. சமுதாயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருப்பதாக உணர்ந் தாள். சுப்பராயன் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன் சமூகத்தையே சேர்ந்தவர் என்பதும் தெரிந்த பிறகு அவருடன் இன்னும் நெருக்கமாகப் பழகலானாள்.

சுப்பராயன் திருநெல்வேலிக்காரர் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் இருப்பதையும் தெரிந்து கொண்டாள். சுப்பராயன், மல்லிகா இவ்வலுவலகத் தில் சேரும் முன்பே திருமணமாகி, ஆறு மாதங்களில் கணவனை இழந்தவள் என்று அறிந்த போது மிகவும் வருத்தப்பட்டார். மல்லிகாவை மறுமணம் செய்து கொள்ளும்படி கூறிய போது, ஆறு மாத திருமண வாழ்க்கையில் மாமனார், மாமியார், நாத்தனார் மட்டுமல்லாது கணவன் வழி உறவினர்கள் பலரால் தொல்லைப்பட்டு இருப்பதாகவும், ஆகவே இனியும் திருமணம் செய்துகொண்டு இதுபோன்ற தொல்லை களுக்கு உட்படத் தயாராக இல்லை என்றும் கூறி விட்டாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த அலுவலகத்தில் மீண்டும் உயர்நிலை அதிகாரிப் பதவிக்கு ஒருவர் தேவைப்பட்டார். வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்களை அனுப்பும்படி நிர் வாகத்தினர் கேட்டிருந்தனர். மல்லிகா தானும் அப்பதவிக் குத் தகுதி பெற்றவள் என்றும் தன்னையும் அத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறும் கோரி அனுமதியைப் பெற்றாள்.

இப்பொழுது பழைய மேலாண்மை இயக்குநர் மாற்றலாகிப் போய், வேறு ஒருவர் இருந்தார். இவரும் பார்ப்பனர்; மேலும் பழையவரை விட அதிகமான பார்ப்பன ஆதிக்கப் பற்று உடையவர். மல்லிகா மிகவும் கவலை அடைந்தாள். இம்முறை தனக்கு இவ்வேலை கிடைக்காவிட்டால், தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் தனக்கு மேலதிகாரிகளாக வந்துவிடு வார்களே என்ற ஆதங்கத்தில் எப்படியாவது இத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி னாள். தன்னுடைய நலனில் அக்கறை கொண்ட சுப்பராயனிடமே யோசனை கேட்டாள்.

 சுப்பராயனும் இவ்வேலைக்கான தேர்வில் கலந்துகொள்ள இருப்ப வர்களைப் பற்றிய விவரங்களைப் பெற்று வரச் சொல்லி அவற்றை ஆராய்ந்து பார்த்தார். இவ்வேலை பொதுப் பிரிவிற்கு உரியது என்றும், இவ்வேலைக்குப் போட்டியிடுபவர்களில் பார்ப்பனர் யாரும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

உடனே மல்லிகாவிடம் மேலாண்மை இயக்குநரை தனிமையில் சந்திக்கும் படியும், அப்பொழுது, தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வள் என்று கூறி, இவ்வாய்ப்பில் தனக்குக் கிடைக்கா விட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக் குக் கீழ், தான் பணிபுரிய நேரும் என்று கூறும்படியும் அறிவுரைத்தார். மல்லிகாவும் அவ்வாறே செய்ய, பார்ப்பனர் யாரும் அத்தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தினால், மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட மல்லிகாவையே தேர்ந்து எடுக்கலாம் என்று மேலாண்மை இயக்குநர் முடிவு செய்தார்.

அதன்படியே மல்லிகாவும் உயர்நிலை அதிகாரி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டதும் அவள் வேறு பிரிவில் பணியமர்த்தப்பட்டாள். அப்படி வேறு பிரிவுக்கு மாறிய பொழுது, வேறு ஓர் அதிகாரிக்குக் கீழ்ப் பணியாற்றும் போது பல இக் கட்டுகளைச் சந்திக்க நேர்ந்தது.

சிறு தவறுகள் நேர்ந் தாலும் கடிந்துகொள்ளும் மேலதிகாரிகளிடம் வேலை பார்ப்பது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. சுப்ப ராயனும் மல்லிகா தவறு செய்யும் போது எடுத்துக் காட்டி சரியானபடி கோப்புகளில் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறார். சில சமயங்களில் கண்டிப்புடனும் அறிவுரை கூறி இருக்கிறார்.

ஆனால் ஒரு பொழுதும் சீண்டியதில்லை. ஆனால் மற்றவர்கள் எப்பொழுது தவறு செய்வாள்; சீண்டிப் பார்க்கலாம் என்று காத்தி ருப்பது போல் இருந்ததைக் கண்ட மல்லிகா, வேலை யில் கவனம் செலுத்துவது என்பதைவிட மேலதி காரியிடம் சிக்காமல் எப்படி வேலை செய்வது என்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இச்சூழ்நிலை அவளுக்கு, சுப்பராயன் மேல் அதிக மாரியாதையை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஒரே அலவலகத்தில் இந்தப் பிரிவில் தான், இவருக்குக் கீழ் தான் வேலை செய்வேன் என்று கூறமுடியாது. எங்குப் பணியமர்த்தம் செய்யப்படுகிறார்களோ அங்கு தான் வேலை செய்ய வேண்டும். சுப்பராயனும் இதைத்தான் மல்லிகாவிடம் கூறினார். அவளும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தன்னைத் தகவ மைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள்.

காலம் இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், உச்சநீதிமன்றத்தில் 9.9.2013 அன்று அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு மல்லிகாவின் மனதில் சிறு அசைவை ஏற்படுத்தியது. வழக்கு இதுதான் :

ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணு டன் நட்பை வளர்த்துக் கொண்டு, அது கமுக்கமாக உடலுறவு கொள்ளும் வரை வளர்ந்துவிட்டது. இவ்வாறு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந் தாலும், தன் மனைவி, குழந்தைகளைக் கவனிப்பதில் ஒரு குறையும் வைக்கவில்லை.

ஆனால் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதை அறிந்த அவ்வதிகாரியின் மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். காவல் துறை யினர் அவ்வதிகாரியின் மேல் வழக்குப் பதிவு செய்ய, வழக்கை விசாரித்த நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேல்முறையீடு, அதன் மேல்முறையீடு என்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட போது, அந்த அதிகாரி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாலும், தன் மனைவி, குழந்தைகளைக் கவனிப்பதில் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதால் அவர் எந்தக் குற்றத்தையும் புரியவில்லை என்றுகூறி அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்ததும், மல்லி காவின் மனதில், தான் சுப்பராயனுடன் இதுபோல் உறவு வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இப்படித் தோன்றிய உடன் மறுபுறத்தில் இவ்வுறவில் தான் கருத்தரித்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே தோன்றியது. ஆனால் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இக்காலத்தில் உடலுறவு கொண்டாலும், கருத்தரிக்காமல் இருக்கும் வழிகளைத் தெரிந்து அவற் றைக் கையாளலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

ஆனால் சுப்பராயனிடம் தன் எண்ணத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று வழி தெரியாமல் மயங்கினாள். அடிக்கடி அவருடைய அறைக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினாள். ஆனால் தன் எண்ணத்தை வெளியிட முடியாமல் திணறினாள். ஒரு வேளை அவர் சினத்து சீறிவிட்டால் என்ன செய்வது? அதுவும் மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டால் என்ன செய்வது? அவள் மிகவும் திணறினாள். சுப்பராயனும் மல்லிகா வினிடத்தில் ஏதோ மாற்றம் இருப்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் கேட்டேவிட்டார். ஆனாலும் மல்லிகா ஒன்றுமில்லை என்று கூறிச் சென்று விட்டாள்.

வேலைப்பளு அதிகமாக இருக்கும் சமயத்தில் சுப்பராயன் விடுமுறை நாளான சனிக்கிழமையன்று அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வது வழக்கம். அப்படி விடுமுறையில் வேலை பார்க்கும் போது நிறைய அளவில் வேலைகள் முடிந்துவிடும்.

இது மல்லிகாவுக்குத் தெரியும். வேலை நாள்களில் தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டு, அதனால் அவர் சினத்து சீறிவிட்டால் அலுவலகம் முழுவதும் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் தயங்கிய மல்லிகா, சனிக்கிழமையன்று அலுவலகம் சென்று அவரைப் பார்த்து, தன் உள்ளக்கிடக்கையைக் கூறுவ தால் அசம்பாவிதம் எதுவும் நிகழாது என்று நினைத் தாள்.

அதன்படி ஒரு சனிக்கிழமையன்று மல்லிகாவும் அலுவலகத்திற்குச் சென்றாள். சுப்பராயனை அவருடைய அறையில் சென்று சந்தித்ததும், அவர் அவளை வியப்புடன் ஏற இறங்கப் பார்த்தார். அவளும் அவரிடம் தனியாகப் பேச விரும்பி வந்ததாகக் கூறினாள்.

சுப்பராயனும் விவரத்தைக் கூறும்படி கேட்டவு டன் “சார் நான் சொல்றதைக் கேட்டு நீங்க கோவிச் சிக்கக் கூடாது” என்று அவள் பீடிகை போட்டாள்.

“சரி! விஷயத்தைச் சொல்லுங்க”

“நான் வயசிலே சின்னவதானே? என்னை ஏன் வாங்க போங்கன்னு மரியாதை குடுக்கிறீங்க? சும்மா வா, போன்னே சொல்லலாமே?” என்று மல்லிகா கூறியவுடன் சுப்பராயனுக்கு ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று புரிய ஆரம்பித்தது.

“இல்லீங்கம்மா! ஆபீ°லே எல்லாரையும் மரியாதை யாத்தான் நடத்தணும், கூப்பிடணும். ஆபீ° நடத் தைக்கு மாறா நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” என்று சுப்பராயன் சற்றுக் கடுமையான குரலில் கேட்டவுடன் மல்லிகாவிற்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழுவ தைப் பார்த்து மனமிரங்கிய சுப்பராயன் சற்றுத் தாழ்ந்த குரலில் சமாதானமாகப் பேசி, அவள் சொல்ல வந்த தைச் சொல்லும்படிக் கேட்டார்.

மல்லிகாவும் தயங்கித் தயங்கி, தன் உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டாள். எல்லாவற்றையும் கேட்ட சுப்பராயனுக்கு ஒரு புறம் கோபம் வந்தாலும், இன்னொரு புறம் பரிதாபப்படவும் செய்தார்.

“அது தான் நான் அன்னைக்கே சொன்னேன். நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு” என்று சுப்பராயன் கூற, மொத கல்யாணம் பண்ணின வளையே எவ்வளவோ கொடுமைப்படுத்துறாங்க. ரெண்டாவது கல்யாணம்னா யாரும் மதிக்க மாட் டாங்க” என்று மல்லிகா கூறினாள்.

“இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தா மட்டும் மதிப்பாங்களா?”

“யாருக்குந் தெரியாம ரகசியமா வச்சுக்கலாம். அப்படியே தெரிஞ்சாலும் பின்னாலே தான் ஏதாச்சும் பேசுவாங்களே தவிர மாமனார், மாமியார், நாத்தனார் மாதிரி கொடுமைப்படுத்தமாட்டாங்க.”

இதைக் கேட்டவுடன் மல்லிகா தன் மனதில் ஆழமாக ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் நினைத்தார். மேலும் இன்று அலுவலக வேலை பார்க்க முடியாது; அதற்கான மனநிலை வருவதற்கே நிறைய நேரம் தேவைப்படும் என்பதையும் உணர்ந்து கொண்டார்.

“மல்லிகா! நீங்க உங்க மனசுலே தவறான ஆசைய வளர்த்துக்கிட்டு இருக்கீங்க. இது நியாய மில்லே. எனக்கும் குடும்பம் இருக்கு. பெண்டாட்டி, பிள்ளைங்க இருக்காங்க. இந்த மாதிரி தப்பான ஆசைய வளர்த்துக்கிறதுக்குப் பதிலா நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கீங்க. அதுதான் நல்லது. இப்ப ஆபீஸ்லே வேலை பார்க்குறப்ப எவ் வளவு பேரை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறீங்க. அதேபோல வாழ்க்கையிலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறதுக்கு முடியும்” என்று அறிவுரை சொன்ன சுப்பராயன், இதுபோன்ற உறவுகள் சட்ட விரோதம் என்றும், இருவருடைய வேலைக்கும் உலை வைத்து விடும் என்றும் கூறினார்.

உடனே மல்லிகாவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இது ஒன்றும் சட்ட விரோதம் இல்லை என்று வாதாடினாள். சுப்பராயனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. அவ்வழக்கில் விசா ரணை நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பதையும், அதிலிருந்து தப்பி உச்சநீதிமன்றம் விடுதலை செய்த காலம் வரையில் அனுபவிக்க நேர்ந்த துன்பங் களையும் விளக்கிய சுப்பராயன் எது எப்படியிருந் தாலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்தாமல் வாழ்வதுதான் வாழ்வு என்றும் கூறினார். மேலும் அவள் விரும்பினால் நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்வதற்குத் தானே பொறுப்பெடுத்துக் கவனிப்பதாகவும் கூறினார்.

இதைக்கேட்ட மல்லிகா மனவருத்தத்துடன் விடை பெற்றுக் கொண்டாள். ஒருபுறம் சுப்பராயன் சொல்வது போல் மறுமணம் செய்துகொள்வதுதான் சரியான தீர்வு என்று தோன்றியது. ஆனாலும் சுப்பராயனைப் போல் ஒரு நல்ல ஆண் மகன் கிடைப்பான் என்று அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. இந்தஇருவகை நினைப்பிலும் அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

சுப்பராயனும் தன்னுடைய ஆளுமை ஒரு பெண்ணின் மனதை இவ்வாறு பாதித்திருப்பதை அறிந்து மனவருத்தம் அடைந்தார். உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு ஒரு பெண்ணையே தவறான வழிக்குத் தூண்டியிருக்கிறது என்றால், தவறான வழிகளைக் கையாளும் ஆண்கள் எப்படி யெல்லாம் இதைப் பயன்படுத்துவார்களோ என்று திகைத்துப் போனார். பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதிலுமே அக்கறை கொள் ளாத நீதிபதிகள் இருந்தால் நாடு எப்படி உருப்படும் என்று மனவருத்தமும் அடைந்தார்.

சிலகாலம் அவளுடைய கண்களில் படாமல் இருப் பது நல்லது என்று அவருக்குத் தோன்றியது. அப் பொழுதுதான் திருநெல்வேலியில் தொடங்கப்பட இருக்கும் ஒரு அலுவலகத்துக்குத் தலைமை அலுவலராகப் பணிபுரிய அயல்பணியில் (Deputation) செல்லத் தயாராக உள்ளவர்கள் தேவை என்று அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்தது. உடனே அதற்கு ஒப்புதல் கொடுத்து ஒரு மூன்றாண்டு காலம் அயல் பணியில் வேலை செய்யத் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டார்.

Pin It