கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகம் அறியப்பட்டவர் கவிஞர் இளம்பிறை. இளவேனிற்காலம், முதல் மனுஷி உட்பட ஐந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கிராமப் புற உழைக்கும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார். படிப்பறிவில்லாத, வறுமையான குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு கவிஞராக அறியப்படுவதற்குப் பட்ட சிரமங்களை நம்மிடம் மிக இயல்பாகப் பேசினார். வாழ்வின் இன்னல்களை பகிர்ந்து கொள்ளும்போதும் வார்த்தைகளில் சோகத்திற்கு பதிலாக நகைச்சுவையும், வெகுளித்தனமான சிரிப்பும் மட்டுமே வெளிப்பட்டது இளம்பிறையிடம். அவருடன் பேசியதிலிருந்து....

ilampirai_640

உங்கள் இளமைக்காலம் குறித்து?

ராமநாதபுரம் மாவட்டம் தான் என் சொந்த ஊர். வானம் பார்த்த பூமியில் விவசாயம் வறண்டு போனதால் என் பெற்றோர் வேலை தேடி திருவாரூர் வந்து அங்கேயே தங்கி விட்டார்கள். நான் பிறந்தது திருவாரூர் அருகிலுள்ள தாட்டியக்குடி கிராமம். என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே விவசாயக் கூலிகள். எங்கள் வீட்டுல ஆறு பெண் குழந்தைகள், ஒரு பையன். நான் ஐந்தாவதா பிறந்ததால் என்னோட பேரை பஞ்சவர்ணம்னு வைச்சிட்டாங்க. கிராமங்களில் குழந்தைகளைப் படிக்க வைக்கிற பழக்கம் இருந்ததில்லை. அதனால வீட்டுலே எங்க அண்ணாவைத் தவிர யாரும் பள்ளிக்கூடம் போகலை. அவனும் பத்தாவது வரைக்கும்தான் படிச்சான்.

எனக்கு ஐந்து வயசானதும் எங்க ஊர் வாத்தியார் தான் எங்க அப்பா கிட்டப் பேசி வற்புறுத்தி என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கச் சொன்னார். அவரோட தொந்தரவு தாங்காமத் தான் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாங்க. முதல்நாள் பள்ளிக்கூடம் போன அனுபவத்தை இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது. என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறதுக்காக எங்கப்பா அழைச்சிட்டுப் போனார். பள்ளிக்கூடம் பூட்டியிருந்தது. அப்பா கோபத்தில் வாத்தியாரை திட்ட ஆரம்பிச்சிட்டார். அப்பதான் பக்கத்தில் இருந்த ஒருத்தர் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் திறக்காதுங்கிற விஷயத்தை சொன்னார். ஆனாலும் அப்பாவுக்குக் கோபம் தீரலை. என்ன கிழமையானா என்ன, வரச் சொல்லிட்டு பள்ளிக்கூடத்தை மூடினது தப்புதானேன்னு அப்பா கத்தினார்.

வயலில் வேலை செய்யிற வயசு வருகிறவரைக்கும் பள்ளிக்கூடம் போகட்டும்னு தான் வீட்டில் அனுப்பினார்கள். வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கூடத்திற்கு போகணும். அந்தப் பயணமே ரொம்ப சுகமானதா இருக்கும். சிலுசிலுத்து ஓடுகிற வாய்க்கால் தண்ணீர், வயல், விளையாட்டு, அவ்வப்போது வந்து தங்கியிருக்கும் குருவிக்காரர்களை வேடிக்கை பார்க்கிறது, நாவற்பழம் பொறுக்கறதுன்னு சந்தோஷமாக இருக்கும். முதல்நாள் பள்ளிக்கூடம் போன காட்சியும் இன்னமும் நினைவிருக்குது. ஒரு மஞ்சள் பையில் ஒரு நோட்டோட அட்டையை மட்டும் எடுத்துக்கிட்டுப் போனேன். சும்மா தோழிகளோட விளையாடறதுக்கு மட்டும்தான் அப்பல்லாம் பள்ளிக்கூடம் போவோம்.

பள்ளி விடுமுறையில் வயலில் வேலை செய்யணும். அந்தக் காசில தான் படிப்புச் செலவை பார்த்துக்கணும். ஏழாவது படிக்கும்போது என்னோட தமிழ் ஆசிரியர் தான் படிப்போட அவசியம் பற்றி நிறையக் கதைகள் சொல்வார். அதுவரைக்கும் எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது. அதுக்குப் பிறகுதான் படிக்கணுங்கிற ஆர்வம் வந்தது. அப்படியே பள்ளிப்படிப்பை முடிச்சு ஆசிரியர் பயிற்சி முடிந்து இன்னிக்கு ஒரு டீச்சராயிட்டேன்.

இந்த மாதிரி கல்வியறிவே இல்லாத ஒரு சூழ்நிலையில் வளர்ந்திருக்கீங்க. பள்ளிப்பாடம் தவிர வேறு படிக்க வாய்ப்பே கிடைச்சிருக்காது. பிறகு எப்படி எழுத ஆர்வம் வந்தது?

எனக்கு சின்ன வயசிலேயே கிராமியப் பாடல்கள் மேல் ஆர்வம் இருந்தது. பதிமூணு வயசிலேயே நானாகப் பாடல்கள் எழுதுவேன். அதற்கான சூழ்நிலை என் வீட்டில் இருந்தது.

எங்க அம்மாவோட இரண்டு தம்பிகளும் அடுத்தடுத்து இறந்து போயிட்டாங்க. அம்மா அதை நினைச்சு அடிக்கடி ஒப்பாரி பாடுவாங்க. வீட்டில் நிறையக் குழந்தைகள் இருந்ததால் எப்போதும் ஒரு தொட்டில் தொங்கும். அதுக்கு தாலாட்டு பாடுவாங்க. இந்தப் பாடல்களில் கவித்துவம் மிகுந்திருக்கும். விடுமுறை நாட்களில் வயலுக்கு களையெடுக்க, நாற்று நடப் போகும்போது அங்கு பெண்கள் பாடுகிற பாடல்களையும் ரொம்ப ஆர்வமாக் கேட்கிறதுண்டு. தன்னோட சோகத்தையும், சந்தோஷத்தையும் அவங்களே இட்டுக்கட்டிப் பாடுவாங்க. இந்தப் பாடல்களை தொடர்ந்து கேட்கும்போது இதே மாதிரி நானும் எழுதணும்னு ஆசை வந்தது.

எங்களோட குலதெய்வம் அய்யனார். அய்யனாரை வாழ்த்தி ஒரு பாட்டு எழுதினேன். அதப் பாடிக் காட்டும்போது ரொம்ப நல்லாயிருக்கிறதா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் பார்க்கிற எல்லாத்தையும் பாடலா எழுதினேன். இப்படித்தான் எழுத ஆரம்பிச்சது.

நான் வளர்ந்த கிராமத்துச் சூழ்நிலையில் புத்தகங்கள் படிக்கிறதுக்கோ, டி.வி, ரேடியோவுக்கோ வாய்ப்பே இல்லை. வீட்டுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கும்போது கட்டியிருக்கிற பொட்டலத் தாளைப் படித்தது தான் என் வாசிப்பு அனுபவம்.

நான் ஒன்பதாவது படிக்கும்போது பி.டி.உஷா ரொம்ப பிரபலமாயிருந்தாங்க. அவங்க தான் என்னோட ரோல்மாடல். அதேமாதிரி வீராங்கனையா வரணுங்கிறதுதான் என்னோட கனவா இருந்தது. பள்ளிக்கூடத்தில் நடக்கிற போட்டிகளில் கலந்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். அதைத் தொடர முடியாமல் போய்விட்டது. தமிழ்ச் செய்யுள்களையும் நான் ரொம்ப நேசித்தேன். அதே மாதிரி பேச்சுப் போட்டிகளில் ரொம்ப ஆர்வமா கலந்துப்பேன்.

அப்படி ஒருதடவை பேசும்போது உள்ளூரில் சிறு பத்திரிகை நடத்துகிற நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் பத்திரிகையில் என்னை எழுத வைத்தார்கள். வேறு புத்தகங்களையும் அவர்கள் தான் அறிமுகப்படுத்தினார்கள். அவற்றைப் படிக்கும்போது தான் கவிதை, சிறுகதைன்னு வேறு விஷயங்கள் இருக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. தொடர்ச்சியாக கிராமத்துக் கவிதைகள், பாடல்கள் எழுத ஆரம்பித்தேன். அந்த சிற்றிதழ் நண்பர்களே என் பதினேழு வயசில என் முதல் புத்தகத்தை வெளியிட்டார்கள்.

நீங்க எழுதறது, படிக்கிறது இதையெல்லாம் உங்களோட வீட்டில் எப்படி எடுத்துக்கிட்டாங்க?

அவங்களுக்கு நான் கவிதை எழுதறதெல்லாம் தெரியவே தெரியாது. நான் கவிதைப் புத்தகம் படிச்சிட்டிருந்தா கூட ஏதோ பாடப் புத்தகம் படிக்கிறதா நினைச்சிப்பாங்க. காதல் கடிதமே எழுதினாலும் அவங்களுக்கு அது பாடம் எழுதறதாத்தான் தெரியும். எங்க வீட்டுலே கவிதை படிக்காதேன்னு திட்ட மாட்டாங்க, எதையுமே படிக்காதன்னு தான் திட்டுவாங்க. ‘ராத்திரி விளக்கேத்தி வைச்சி படிச்சிட்டிருந்தா கொசு வரும், மண்ணெண்ணைய் தீர்ந்து போகும் சீக்கிரம் அணைச்சிட்டுப் படு’ன்னு சொல்வாங்க.

ஏன்னா நான் பள்ளிக்கூடம் போனதில் எங்கம்மாவுக்கு விருப்பமே கிடையாது. பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ணப்போறே, ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சட்டிப்பானை கழுவுறதுக்கு எதுக்கு படிப்புன்னு கேட்பாங்க. பள்ளிக்கூடம் போயிட்டிருந்தப்போ ஒரு நாள் திடீர்னு, ‘பள்ளிக்கூடம் போகக்கூடாது’ன்னு சொன்னாங்க. அதைமீறி நான் போவேன்னு சொன்னதுக்காக விளக்குமாறு எடுத்து ஊரெல்லாம் துரத்தித் துரத்தி அடிச்சாங்க.

எங்க ஊர்ல பெரிய பண்ணை ஒருத்தர் இருந்தார். ஊர்ல இருக்கிற அத்தனை நிலங்களும் அவருக்குத் தான் சொந்தம். அவர்தான் எங்கம்மாவை சமாதானப்படுத்தினார். பள்ளிக்கூடம் போறதுக்காக இந்தப் புள்ளை இப்படி மாலை மாலையா அழறா, அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைன்னு சொல்லி என் கையில் ஐம்பது காசுக் கொடுத்து அன்னிக்கு என்னைக் காப்பாத்தினார்.

பள்ளிக்கூடத்தை விரும்பறதுக்கு இன்னொரு காரணம் வயல்வேலைக்கு போக வேண்டாங்கிறது. விடுமுறையில் மட்டும் வயலுக்கு போய் வேலைச் செய்யிறதே ரொம்பக் கஷ்டம். ரொம்ப பசியோடு வெயிலில் வேலை செய்யணும். மத்தியானம் ஒரே ஒரு பன்னும் டீயும் கிடைக்கும். அந்த பன்னு, டீ வீட்டுலே கிடைக்காதேங்கிறதுக்காக சில நாட்கள் வேலைக்குப் போயிருக்கேன். வயலுக்கு வேலைக்குப் போயிட்டு வர்றவங்களைப் பார்த்தா பன்னும், டீயும் சாப்பிட்டுட்டு வர்றாங்களேன்னு பொறாமையா இருக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் இருந்து வாங்கிட்டு வர்ற ஆறிப்போன டீ அது. வேலைக்குப் போற நாட்கள்ல அந்த டீ எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருப்போம்.

பள்ளிப்படிப்பு முடிஞ்சு ஆசிரியர் பயிற்சிக்குப் போனதையும் வீட்டில் யாரும் விரும்பலை. சரியான உடையோ, செருப்போ, சாப்பாடோ, தலையில் தேய்க்கிற எண்ணையோ எதுவும் கிடையாது. சனி, ஞாயிறுகளில் வயலில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் கிடைக்கும். அதை வைச்சுத்தான் என்னோட செலவுகளை கவனிச்சிக்கணும். படிச்சு முடிச்சதும் உடனடியா பக்கத்தில் உள்ள கிராமத்தில் வேலை கிடைத்தது.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் எழுதியிருக்கிறீர்கள். எந்த மாதிரியான விஷயங்கள் உங்களை தொடர்ந்து எழுதத் தூண்டியது?

ilampirai_338கிராமம், அது சார்ந்த வாழ்க்கை முறை, கிராமத்தில் உள்ள உழைக்கும் பெண்களின் அவலம் இதுதான் இப்போதும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது. கிராமத்தில் பெண்களோட நிலை ரொம்பக் கொடுமையானது. பெரும்பாலும் எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு கடினமான வேலை செய்யிறவங்களா இருப்பாங்க. ஆண்கள் மாதிரி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்க முடியாது. வீட்டிலும் நிறைய வேலைகள் செய்தாக வேண்டிய கட்டாயம். குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். அதிலும் குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்களுக்கு அதற்குப் பிறகு சரியான ஓய்வும் இல்லாமல் கடினமான வேலைகளை செய்யும்போது உடல்ரீதியாக அதிக சிரமங்கள் ஏற்படும்.

இதையெல்லாம் விட ஆண்களிடம் அவர்கள் அனுபவிக்கிற கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. வேலை முடிந்து வீட்டுக்கு குடித்து விட்டு வரும் ஆண்களின் அடி, உதை, சந்தேக வசைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். எந்தவித சந்தோஷங்களும் இல்லாமல் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் கிராம வாழ்க்கையே ஒரு ஏக்கமான வாழ்க்கை தான்.

படிச்சு வேலை பார்க்கிறதுக்காக வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து வந்துவிடுகிற நமக்கு இருக்கிற சந்தோஷம் கூட சொந்த மண்ணில் இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு இல்லை. “அவங்க சேத்தில் கைவைச்சாத் தான் நாம சோத்தில் கைவைக்க முடியும்”னு தமிழ் சினிமாவில் அடிக்கடி ஒரு வசனம் வரும். ரொம்ப உண்மையான ஒரு வசனத்தை மேம்போக்கா சொல்லிட்டுப் போவாங்க. ஆனா நல்ல உணவு, உடை எதுவும் இல்லாம நம்மளோட வசதியில் கால்வாசி கூட கிராம மக்கள் அனுபவிக்கவில்லை. நாம குடிக்கிற ஜூஸ் பத்தி கூட அவங்களுக்குத் தெரியாது. ஆனா நாம இவ்வளவு சந்தோஷமா இருக்கிறதுக்கு உழைக்கிறவங்க அவங்கதான்.

நாம செய்யிற வேலையை விட கிராமத்தில விவசாயிகள் செய்யிற வேலை எந்தவிதத்தில் குறைச்சல்? ஏன் இந்த சம்பள வேறுபாடு?

விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் வேலை இல்லாத நிலை, பணி நிரந்தரமின்மை. தண்ணீர் தேவைப்படும்போது கிடைக்காது; தேவையில்லாத நேரத்தில் தண்ணீர் வரும். ஆற்றுச்சரிவில் பயிர் செய்திருக்கிற பணப்பயிர்கள் எல்லாம் அழிஞ்சு போயிடும். இயற்கையும், அரசாங்கமும் தொடர்ந்து கிராமங்களை வஞ்சித்து வருகிறது. தண்ணீர் தேவைப்படும்போது கொடுக்காம, அவங்களோட அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுறாங்க. விவசாயிகளோட பாதிப்பைப் பத்தி அவங்களுக்கு கவலையில்லை. இதனால் தான் விவசாய நிலங்கள் தொடர்ந்து அழிஞ்சுக்கிட்டே வருது.

கிராமங்களில் இருந்து எல்லோரும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாமே என்னை அதிகமாகப் பாதிக்கின்றன. இதைத்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை முறையில் பெண்களுக்கு கிராமத்தை விட நகரம் சிறந்தது தானே? ஆனால் உங்களோட கவிதைகள் பெரும்பாலும் இழந்து போன கிராம வாழ்க்கையைப் பற்றி தானே ஏக்கமாக பேசுகிறது?

நான் எப்போதுமே நகர வாழ்க்கையைக் குறை சொல்லி எழுதியதில்லை. கிராமங்கள் அழிஞ்சு போற வேதனையைத் தான் பதிவு பண்ணியிருக்கேன். இப்போது கிராமங்கள் அதன் நிஜத் தன்மையை இழந்து நகர்மயமாகிக் கொண்டிருக்கிறது; விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆதங்கத்தைத் தான் நான் எழுதியிருக்கிறேன். கிராமங்கள் அழிவது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு என்ன தீர்வு? அரசியல் ரீதியாகத் தான் தீர்வு காண முடியும். கிராமங்கள் அழிவதற்காக வருத்தப்படவும் அது என்னென்ன இழந்திருக்கிறது என்பதை பதிவு பண்ணவும் மட்டுமே என்னால் முடியும். அவ்வளவுதான். அதைத்தான் நான் செய்கிறேன்.

என் இளவயதில் நான் பார்த்த அந்த அழகான கிராமம் என் கண்முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் திறந்து விடுகிற மடைவாயிலில் மழை பெய்யும்போது அவ்வளவு மீன்கள் வரும். சமையலுக்கு காய்கறிகள் எல்லாம் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனா இன்னிக்கு மீன்கள் அழிஞ்சு போச்சு.

இதற்குத் தீர்வு காண வேண்டிய அரசியல்வாதிகள் மருந்துக்குக் கூட மக்களைப் பற்றி சிந்திக்காதவர்களாக இருக்கிறார்கள். அரசியலில் இருக்கக்கூடிய என் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் சீட் வாங்கித் தருவது, காசு வாங்கிக் கொண்டு சிபாரிசு செய்வது இதைத்தான் தங்களது வேலையாக செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களை இந்தப் பதவிக்கு அனுப்பிய மக்களைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்குக் கிடையாது. ஆனால் இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டு தன் கடமையைச் செய்கிறவர்கள் கிராம மக்கள்தான்.

இதெல்லாமே சரி. ஆனால் கிராமங்களில் பெண்ணடிமைத்தனம், சாதிக் கொடுமைகள் இன்னமும் இருந்து கொண்டுதானே இருக்கிறது?

என் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் சென்னையில் வழக்கறிஞரா இருக்கிறார். கிராமத்துக்கு போய் ரொம்ப நாட்கள் ஆயிட்டதா சொன்னார். ‘சொந்த ஊராச்சே, அங்க அடிக்கடி போகாம உங்களால எப்படி இருக்க முடியுது’ன்னு கேட்டேன். ‘நான் வக்கீலுக்குப் படிச்சு இங்க தான் பெரிய ஆள். இப்ப நான் கிராமத்துக்கு போனாலும் என்னை தையான் மவனேன்னு தான் கூப்பிடறாங்க, இங்க என்னை சார்னு கூப்பிடறாங்க. நான் கிராமத்துக்கு போக மாட்டேன்’னு சொன்னார்.

கிராமங்கள் சாதி ரீதியாக இப்படித்தான் இருக்கிறது. நீங்க என்ன படித்து என்ன வேலையில் வேண்டுமானாலும் இருங்க, ஆனா நாங்கதான் உசந்தவங்கன்னு சொல்ற மனநிலை மாறவேயில்லை. இப்போதும் கிராமங்களில் குடியானவங்க பகுதி தனியாவும், சேரிப்பகுதி தனியாவும்தான் இருக்குது. குடியானவங்க பகுதியில் வன்னியர், முதலியார், செட்டியார், தேவர்னு எல்லாச் சமூக மக்களும் வாழ்வாங்க. அவங்களுக்குள்ள மாமா, அண்ணா, சித்தப்பான்னு உறவுமுறைகள் சொல்லிக் கூப்பிடுவாங்க. ஆனா சேரியில் வசிக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை அவங்க எவ்வளவு பெரியவங்களா இருந்தாலும் பெயர் சொல்லித் தான் கூப்பிடுவாங்க. குடியானவங்கத் தெருவில் இருக்கும் பத்து வயதுப் பையன் கூட சேரியில் வசிக்கிற அறுபது வயது உத்ராபதியை “யேய் உத்ராபதி இங்க வா” என்றுதான் கூப்பிடுவான்.

நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது இருந்த இந்த நிலை இன்றுவரை மாறவேயில்லை. நானும் ரொம்ப நாட்கள் அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்படித்தான் சொல்லித் தரப்பட்டது. சாதியில் தான் இந்த வேறுபாடு எல்லாம். பொருளாதார நிலையில் எங்களுக்கும் தலித் மக்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நாங்களும் விவசாயக்கூலிகள், அவர்களும் விவசாயக்கூலிகள். கிராமத்தை விட்டு வெளியில் வந்தபிறகு, நிறையப் படிக்க ஆரம்பிக்கும்போது, இதுதொடர்பாக நண்பர்களுடன் பேசும்போது தான் இந்தப் பிரிவினைகள் பற்றித் தெரிய வந்தது.

ஆனால் இப்ப திருவாரூர், நாகப்பட்டினம் பக்கம் உள்ள கிராமங்களில் சாதித் திமிரோடு யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேராவூரணி போன்ற கிராமங்களில் இன்னமும் தனிக்குவளை கொடுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

உங்களோட கவிதைகளில் நிறைய ஏமாற்றங்களையும், துரோகங்களையும் பதிவு செய்திருக்கிறீர்கள்...

(இடைமறித்து) என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் எதுவும் பேசுவதில்லை. நான், என் இரண்டு குழந்தைகள் இதுதான் என் குடும்பம். எழுதுவது என்பது நம் மனதில் அந்த நேரத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் அவ்வளவு தான். அந்த வகையில் அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை நான் பதிவு செய்திருப்பேன் அவ்வளவு தான்.

lt;strong>தற்போது பெரும்பாலான பெண்கள் படித்து வேலைக்குப் போகிறவர்களாக, தன் வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு உள்ளவர்களாக மாறிக் கொண்டு வருகின்றனர். குடும்பங்களில் பெண் மீதான அடக்குமுறையில் இப்போது ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

படிப்பதாலோ, வேலை செய்வதாலோ பெண்களின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிட்டதாக நான் கருதவில்லை. தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக பெண்களுக்கு எதிரான நிறைய சங்கிலிகளை இந்த சமூகம் உருவாக்கி வவத்திருக்கிறது. அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் நாம் தப்பிவிட முடியாது.

நான் உங்களோட பேசிக்கிட்டிருக்கிற இந்த நேரத்தில் கூட, இரவுக்கு என்ன சமைக்கிறது, நாளைக்கு குழந்தைகளுக்கு என்ன சாப்பாடு தருவது, காலையில் எப்ப எழுந்திருக்கிறது போன்ற விஷயங்கள் தான் மனசுக்குள் ஓடிட்டிருக்கு. சமையல் என்கிற விஷயம் நம் சிந்தனையையே முடக்கி விடுகிறது. பெண்கள் ஏன் சமைக்கணும்னு கேள்வி கேட்டுட்டெல்லாம் இதிலிருந்து தப்பித்து விட முடியாது. பெண்களும் வேலைக்குப் போறாங்க, இருக்கிற வேலைகளை பகிர்ந்து கொள்ளணுங்கிற எண்ணம் ஆண்களுக்கு வரணும்.

பத்திரிகைகளில் பார்த்தா ஆண்கள் வேலை செய்யிறதை கிண்டல் பண்ணி எழுதுவாங்க. ஆண் துணி துவைப்பதை, சமையல் செய்வதை கேலியான விஷயமா எழுதுவாங்க. இதன் மூலம் மறைமுகமாக, பெண்கள் என்னதான் படிச்சு வேலைக்குப் போனாலும் குடும்பத்திற்குள் அவள் அடிமைதான் என்ற எண்ணம் தான் தொடர்ந்து பதிய வைக்கப்படுகிறது. இந்த நிலை மாறுவதற்கு முதலில் ஊடகங்கள் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக விஷயங்களில் அவர்களுக்கு தெளிவும், அக்கறையும் இருக்க வேண்டும்.

பெண்களின் வாழ்க்கை முறை முன்பை ஒப்பிடும்போது சிறிது மாறியிருக்கிறது. பெண்கள் கல்வி கற்று சுயமாக எழுந்து நிற்கிறார்கள். அதுமட்டும் போதாது. அவர்கள் யாரையும் சாராமல் சுயமரியாதையோடு வாழப் பழக வேண்டும். எங்கு செல்வதற்கும் ஆண்களின் துணை தேடாமல் தானாக மோதிப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தயக்கம், அச்சம் போன்றவற்றை தகர்த்தாலே பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனாலும் படிக்காத, விவரம் தெரியாத ஒரு ஆணுக்கு இந்த நாட்டில் இருக்கும் சுதந்திரத்தில் பாதியளவு கூட படித்த சிந்திக்கும் பெண்ணுக்கு இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

குடும்ப அமைப்பைத் தாண்டி வெளியுலகில் ஆண்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? தோழமையோடும், நிஜமான புரிதலோடும் இயங்க முடிகிறதா? அங்கும் ஆணாதிக்கம் தான் நீடிக்கிறதா?

பெண்ணியம் பேசிக்கொண்டு ஆண்களை எதிர்ப்பவள் அல்ல நான். எனக்கு ஆண்கள் மீது எந்த வெறுப்பும் கிடையாது. ஆண்கள் இல்லாத உலகம் வெறுமையாகத் தான் இருக்கும். பழகும் ஆண்களில் தோழமையோடு நம்மிடம் பழகும் ஆண்களும் இருக்கிறார்கள், நம்மை அச்சுறுத்தும் ஆண்களும் இருக்கிறார்கள்.

நாம் எவ்வளவுதான் சுதந்திரம், சமத்துவம் குறித்துப் பேசினாலும் ஒரு ஆணின் தவறான பார்வையோ, தொந்தரவுகளோ இன்றி ஒருமணி நேரம் கூட சாலையில் பயணம் செய்துவிட முடியாது. தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பெண் தனியாக சென்று ஒரு தேநீர் அருந்துவதோ, உணவகத்துக்குச் சென்று தனியாக உணவருந்துவதோ கூட இங்கு ஒரு அதிசயமான காட்சி தான். இட்லி வைக்கிறவன், சட்னி ஊத்துறவன் எல்லாரும் சுற்றி நின்று பார்க்கிற பார்வையில் சாப்பிடும் ஆசையே போய்விடுகிறது.

தலைவலிக்குதுன்னு டீக்கடையில் போய் டீக்குடிச்சா, ஆம்பிளைங்க நிக்கிற கடையில் தனியா வந்து டீக்குடிக்கிறா, இவ எந்த மாதிரி பொம்பளையா இருப்பான்னு பார்க்கிற பார்வையில் இன்னொரு தலைவலியே வந்துவிடும்.

இப்படி உலகமே ஆண்கள் வசம் தான் இருக்கிறது. இதே நிலைதான் நான் சந்திக்கிற எல்லாத் தளத்திலும் இருக்கிறது. சில பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு அனைத்து பெண்களும் சுதந்திரமாக வசிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது. காங்கிரஸ் கட்சிக்கே சோனியா காந்தி என்கிற பெண் தானே தலைவர்னு கேட்டா எல்லாப் பெண்களும் சோனியா காந்தி மாதிரியா வாழ முடிகிறது?

குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் மீள வேண்டுமானால் திருமணம் என்கிற அமைப்பு உடைய வேண்டும் என்றும் அதற்கு மாறாக இணைந்து வாழ்தல் என்ற கருத்தையும் பெண்ணியவாதிகள் முன்வைக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இதெல்லாமே தானாகவே நடைபெற வேண்டிய விஷயங்கள். ஒருவர் சொல்வதால் ஒரு கருத்து உடனடியாக உயிர்பெற்று விடாது. நம் தமிழ்ச் சமூகத்தில் திருமணமே இல்லாமல் இருந்தது. காதலில், இணைந்து வாழ்தலில் பொய் வந்தது. பெண்ணைக் கர்ப்பிணியாக்கி விட்டு ஆண்கள் ஏமாற்ற ஆரம்பித்தனர். இதனால் தான் வாழ்க்கை ஒப்பந்தம் செய்து திருமணத்தை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இப்போது மறுபடியும் திருமணம் என்கிற விஷயத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்து ஏற்பட்டிருக்கிறது.

இது அவரவர் சொந்த முடிவு. ஒட்டுமொத்த சமூக மாற்றத்தையெல்லாம் காலம் தீர்மானிக்கும். நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்தெல்லாம் சிந்திப்பதில்லை. இதுகுறித்து எழுதப்படும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். திருணமோ, சேர்ந்து வாழ்தலோ இரண்டுமே என்னை பெரிய அளவில் ஈர்க்கவோ, பாதிக்கவோ இல்லை.

பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் போக்கு தமிழில் இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பாலியல் பிரச்சினைகளை பெண் எழுத்தாளர்கள் ஏன் எழுதக்கூடாது? நான் எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்பதை நான் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இதைத்தான் எழுத வேண்டும் என்று சொல்வதற்கு இங்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆயிரம் ஆண்டுகளாக அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த பெண்கள் தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களையும் எதிர்த்து, கேள்வி கேட்டு அடக்கி மறுபடியும் பூட்டி வைக்க வேண்டுமா?

அவர்கள் எழுதும் விஷயங்கள் அவர்களின் வாழ்க்கை, மனநிலை சம்பந்தப்பட்டது. முதலில் அவர்கள் நினைப்பதை பேசட்டுமே, அதன்பிறகு அதில் உள்ள நல்ல, கெட்ட விஷயங்களை அவர்களே தீர்மானிக்கட்டும்.

பெண்கள் தங்கள் உடலைப் பற்றியே எழுதுவதாகச் சொல்லும் ஆண்கள் எதை எழுதிக்கொண்டிருந்தார்கள்? சங்க இலக்கியம் தொடங்கி தொடர்ச்சியாக அவர்களும் பெண்களின் உடலைத் தானே அழகாகவும், ஆபாசமாகவும் எழுதிக் கொண்டிருந்தார்கள். ‘பெண்களின் உடல் அவளுக்குச் சொந்தமல்ல, அதுகுறித்தும் தாங்கள் தான் எழுத வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்களா?

உடல் சார்ந்து எழுதுவதைத் தவிர்த்து சமூகப் பிரச்சனைகள் குறித்து எழுதுவதில் பெண்கள் அக்கறை காட்டுவதில்லை, பெண்களின் எழுத்து வெறும் சுயபுலம்பல்கள் தான் என்ற குற்றச்சாட்டும் பெண் எழுத்தாளர்கள் மீது தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது...

பெண்கள் இங்கே தொடர்ந்து துயரங்களை அனுபவித்து வருபவர்கள். அத்தனைக் கஷ்டத்தையும் கொடுத்துட்டு அதைப் பத்தி எழுதினா அது புலம்பல்னு சொன்னா என்ன சொல்றது? எழுத்து என்பது தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வெளிவரும்.

தமிழில் பெண் கவிஞர்கள் அத்தனை பேரின் கவிதைகளையும் படித்திருக்கிறேன். சமூகம் சார்ந்த விஷயங்களை அபாரமான பொறுப்புணர்வோடு பதிவு செய்திருக்கிறார்கள். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு வார்த்தை அல்லது ஒரு வரியை எடுத்துக்கொண்டு வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்தக் கவிதை பிரபலமடைந்து சமூகம் சார்ந்த எழுத்து பின் தங்கி விடுகிறது. ஒருவேளை கவிதையில் பேசப்படும் உறுப்பு சார்ந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப பேசுவதால் இவர்களுக்கு ஏதாவது இன்பம் கூட ஏற்படலாம்.

சமூகத்தில் யார் அதிகம் துன்பம் அனுபவிக்கிறார்களோ, யார் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அவர்களைச் சார்ந்து தான் நம் எழுத்து இருக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக அக்கறையாக இருக்க முடியும். ஆனால் நம் சமூகத்தில் பொய் தான் அதிகமாக காணமுடிகிறது. ஆண்கள் இதுவரை எழுதிய எழுத்து அத்தனையும் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. மிகப் போலியாக தாய்ப்பாசம், தந்தைப்பாசம் என்றுதானே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெத்த தாய்க்கு டீ கூட வாங்கிக் குடுக்காத ஆட்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

‘ஆல்பெர் காம்யு’வோட அந்நியன் படிக்கும்போது அதில், தன் தாய் இறந்தபோது அவரைப் பார்க்கக் கூடாத விரும்பாத தன்னுடைய உணர்வை பதிவு செய்திருப்பார். இதுபோன்ற நேர்மையான படைப்புகள் இங்கும் வரவேண்டும். அது விவாதத்துக்குள்ளாக்கப்படும் போது தான் இந்த நிலைமாறும். இதே நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் இருப்பதால் தான் பெண் படைப்புகளும் எதிர்ப்பை உருவாக்குவதாகவே நான் கருதுகிறேன்.

பெண்கள் படித்து தங்கள் திறமையினால் முன்னுக்கு வந்தால் கூட அவள் பெண் என்பதால் அவளுக்கு இது சாத்தியமானது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து?

இது மிகவும் தவறானப் போக்கு. பெண் தன்னுடைய திறமையால் முன்னால் வரும்போது இங்கிருக்கும் ஆண்கள் அதை அங்கீகரிப்பதில்லை. பெண்ணுக்கு இங்கிருக்கிற எல்லாக் கண்ணாடிக் கதவுகளும் சீக்கிரம் திறந்திடும் என்பது ஆண்களின் பேச்சு. பொம்பளை தானே அவ இப்படித்தான் வந்திருப்பா. அரசியல்வாதியாகட்டும், எழுத்தாளராகட்டும், அலுவலக ஊழியராகட்டும் பெண் உயர்ந்து விட்டால் இதே வார்த்தைகள் தான்.

பெண்கள் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாகச் சிந்தித்து உழைக்கிறார்கள். அதனால் தான் இந்தக் குறுகிய காலத்தில் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியிருக்கிறது. பெண்கள் சைக்கிள் ஓட்டும்போது கூட மிக வேகமாக ஓட்டுவார்கள். அவர்களுக்கு எத்தனைக் காலம் மறுக்கப்பட்ட விஷயம் அது. அந்த வேகம் அதில் தெரியும். அந்த வேகத்தில் தான் அவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.

அதை நேர்மையாக பார்க்காமல் கொச்சையாகப் பார்ப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதைக் காதில் கூட வாங்கிக்கொள்ளாமல் நம்முடைய பாதையில் தொடர்ந்து பயணப்பட வேண்டியது தான்.

நீங்கள் கணவரோடு இல்லாமல் குழந்தைகளோடு வாழ்கிறீர்கள். பெண்கள் கணவர் இல்லாமல் தனியாக வாழ்ந்தால் நம் சமூகத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

வீடு வாடகைக்குப் பிடிக்கிறது, பக்கத்து வீட்டுக்காரங்களோட கேள்விக்குப் பதில் சொல்றது தவிர எனக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

வீட்டுக்காரர் எங்கேன்னு கேட்டா வேற ஏதாவது நாட்டில் இருக்கிறதா சொல்லுவேன். இதுக்கு முன்னாடி இருந்த வீட்டில் சேகுவேரா ஃபோட்டோ மாட்டி வைச்சிருந்தேன். வீட்டுக்காரம்மா பார்த்துட்டு, ‘இதுதான் உங்க வீட்டுக்காரரா, ரொம்ப அழகாயிருக்காரே’ன்னு கேட்டாங்க, ஆமாங்க சுனாமியில் செத்துப் போயிட்டார் உடல் கூட இன்னும் கிடைக்கலைன்னு சொன்னேன்.

வீட்டுக்காரம்மா வீட்டுலே பலகாரம் பண்ணினா எனக்கும் கொடுப்பாங்க. அது எனக்குப் பிடிக்காத உணவா இருக்கும். உடனடியா சேகுவேரா உதவி செய்வார். அவரோட போட்டோவைக் காட்டி, ‘இந்த சாப்பாடு அவருக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால இதப் பார்த்தாலே அவரு ஞாபகம் வருது, வேணாங்க’ன்னு சொல்லிருவேன்.

இதுமாதிரி அப்பப்ப சில பொய்கள் போதும். இதுக்காக யாரையாவது கூட வைச்சிக்கிட்டிருந்தா அதுதான் கஷ்டம். கணவர், குழந்தைகள் எல்லாமே பெண்களுக்கு ஒரு முட்டுக்கட்டை தான். வேலையும் பார்த்துட்டு, வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் கவனிச்சிட்டு எழுதறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். நான் எழுதியே ரொம்ப நாளாச்சு. பல கவிதைகள் உள்ளுக்குள்ளேயே புதைஞ்சு போயிடுது. அப்புறம் அதைத் தோண்டி எடுக்காம அப்படியே புதைச்ச கவிதைகளே நிறைய இருக்குது.

இலக்கியத்தை நம்பி வேலையையும் விட முடியலை. சமயங்களில் வெறுப்பாயிடுது. யாராவது இரண்டு வேளை சாப்பாடு மட்டும் குடுத்து எழுதச் சொன்னா நல்லாயிருக்கும்னு தோணுது. பிள்ளைகள் வளருகிற நேரத்தில் வருகிற பிரச்சனை தான் இது. இதுவும் கடந்து போகும்போது எழுதுவேன்னு நம்பறேன்.

வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி வாழ முடியுது. ஆனால் இங்கு அந்த வாய்ப்பே இல்லை...

இங்க ஒரு கதைக்கோ, கவிதைக்கோ முன்னூறு ரூபாய் தாண்டி யாரும் தர்றதில்லை. பெரிய பத்திரிகையா இருந்தா ஐநூறு ரூபாய். என்னோட புத்தகங்களை வெளியிடுறதுக்காக நிறைய செலவு செய்திருக்கேன். லோன் போட்டு புத்தகங்கள் போட்டுருக்கேன். அதில கிடைக்கிற லாபமா நான் பணத்தை மட்டும் பார்க்கலை. அதில் கிடைக்கிற நண்பர்களையும், அனுபவங்களையும் நான் எனக்குக் கிடைக்கிற லாபமா பார்க்கிறேன்.

பெண் எழுத்தாளர்கள் ஏன் எந்தப் பிரச்சனையோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதில்லை. உலகமயமாக்கலாகட்டும்.. .. .. .. ..

பெண் எழுத்தாளர்கள்னு இல்லை பொதுவாக எழுத்தாளர்கள்னே எடுத்துக்கோங்க அவர்கள் இணைந்து இயங்குவதற்கு இங்கு எந்த அமைப்புகளும் இல்லையே.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகள் இருக்கிறது. ஆனால் அங்கும் பெண்களை காணமுடிவதில்லை.. .. .. .. ..

ilampirai_380இதைப் பெண்களோட குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண்டிய அவசியமில்லை. வீடு, குழந்தைகளைத் தாண்டி என்னால எழுதவே முடியலைங்கிறபோது நான் எங்க போய் கலந்துக்கிறது? குழந்தைங்க எப்படி வேணும்னாலும் போகட்டும்னு நான் போக முடியுமா? இதேதான் எல்லாப் பெண்களுக்கும். இதனாலேயே உள்ளுக்குள் அழுதுக்கிட்டு உக்காந்திருக்கிறோம். இதனால எங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லைன்னு சொல்ல முடியுமா?

பெண் எழுத்தாளர்கள் தன் நிலையை, தனக்கான அரசியலை, சமூகம் சார்ந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து எழுதறது, பத்திரிகைகள் நடத்துவது இதையெல்லாமே சமூகப் பிரச்சனைகளோட தன்னை ஐக்கியப்படுத்திக்கிற ஒரு விஷயமாகத் தான் நான் பார்க்கிறேன். பெண்கள் தன்னைப்பற்றிப் பேசும்போது அவள் நிறையப் பெண்களைப் பற்றிப் பேசுவதாகத் தான் அர்த்தமாகிறது. ஏனெனில் பெண்கள் பெரும்பாலும் சோகத்தோடும், கண்ணீரோடும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தாண்டி ஒரு பெண் தன் பிரச்சனையை எழுதினாலும் அதை சமூகப் பிரச்சனையாகத் தான் பார்க்க வேண்டும். தனி ஒருப் பெண்ணாக இருந்தாலும் அவளும் இந்த சமூகத்தின் அங்கம் தானே.

மற்ற பெண் எழுத்தாளர்களோடு உங்களுக்குத் தோழமையான உறவு இருக்கிறதா? அவர்களது படைப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தனிப்பட்ட முறையில் எனக்கு யாரோடும் நெருக்கமில்லை. எல்லாப் பெண் கவிஞர்களும் அபாரமாக எழுதுகிறார்கள். தொடர்ந்து வாசித்து வருகிறேன். கிராமம் சார்ந்த எழுத்தில் கவிஞர் தேன்மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும். “நேற்று ஒரு காட்டுப்பூவிற்கு பெயரிட்டேன் காஞ்சனை என்று” இது எனக்கு மிகவும் பிடித்தக் கவிதை.

தேன்மொழி பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி.. இவ்வளவு திறமை இருந்தும் தேன்மொழி போன்றவர்களால் ஆண்களோடு போட்டி போட்டு திரைப்படத்துறையில் முன்னணி இடத்திற்கு வரமுடியவில்லையே?

இது ஆண்களின் உலகம். இங்கு தேன்மொழிக்கு மட்டுமல்ல எல்லாப் பெண்களுக்கும் அதிக சிரமங்கள் இருக்கிறது. பெண்கள் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார்கள். இதெல்லாமே ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடிய போராட்டங்கள் அவ்வளவுதான். நம் சமூகத்தில் எல்லா ஒழுக்க நியதிகளும் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அவனுடைய தவறுக்கும் சேர்த்து இவள் வசவு வாங்க வேண்டும்.

இங்கு எல்லா பாதிப்பும், அவமானங்களும் பெண்களுக்குத் தான். ஆண்களுக்கு எத்தனை வயதானாலும், எவ்வளவு பெரிய சிந்தனையாளனாக இருந்தாலும் அவன் எந்தக் கீழ்த்தரமான செயலையும் செய்துவிட்டு பெண்ணை அதற்கு பலிகொடுக்க முடியும். இது பழமையில் ஊறிப்போன பார்வையின் கோளாறு தான். பெண்களும் இதை உணர்ந்து கொள்ளாமல் ஆண்களையே நம்பி தங்கள் வாழ்வை இழந்து விடுகிறார்கள்.

இங்கு பெண்களுக்கு என்று எந்த கருத்தும் இல்லை. ஆண்களின் கருத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள். எழுத்து, சினிமா, கலை எதை எடுத்துக்கொண்டாலும் பல வருடங்களாக ஆண்கள் அவர்கள் நியாயத்தை மட்டுமே பேசி வருகிறார்கள். அதனால் வெகுவானப் பெண்களும் அதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் இந்த உலகமே தன்னோடதுன்னு நினைக்கிறாங்க. நல்ல உடை, நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல பொண்ணு இப்படி பொண்ணைக்கூட ஒரு பொருளாத் தான் பார்க்கிறாங்க. அவளை மனுஷியாப் பார்க்கிற மனநிலை வரவே இல்லை.

பெண்ணுக்கென்று சுயமரியாதை இருக்கிறது, அவளுக்கென்று தனிமனசு, சிந்தனை இருக்குன்னு இவங்க யாரும் யோசிக்கவே மாட்டாங்க. ஒரு பெண் நண்பனிடமோ, காதலனிடமோ பழகும்போது அவனை நம்பித்தான் பழகுகிறாள். அவனை நம்பித்தான் உடல்ரீதியான உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறாள். அந்த உறவையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு கிண்டல் அடிப்பது தான் ஆண்களின் வேலை. பென்களைப் பற்றிய பேச்சே ஆண்களுக்கு சுவாரஸ்யமானது.

சாதாரண பெண்கள் ஏமாறுவது ஒரு புறமிருக்க, படித்து, வேலைபார்க்கும் பெண்களும் ஆண்களை நம்பி ஏமாந்து விடுகிறார்களே!

ஏமாத்துறது சாதாரண ஆணாக இருந்தால் பரவாயில்லை. படித்து வேலைக்குப் போய் சிந்திக்கிற ஆண்கள் தானே இப்படி நடந்துக்குறாங்க.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து ஒரு பெண் எப்படி விடுபடணும்னு நினைக்கிறீங்க?

பெண்கள் பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும் உணர்வு ரீதியாகவும் யாரையும் சாராமல் இருக்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இருப்பதில்லை. ஆறுதலுக்காகவும், அன்புக்காகவும் ஆண்களை நம்பிப் பழகுகிறார்கள். ஆனால் ஆண்கள் மனதில் ஏதாவது ஒரு திட்டத்தோடுதான் பெண்களோடு பழகுகிறார்கள். சாதாரண படிக்காத ஆண்களை விட படித்த, சிந்திக்கிறவர்கள் தான் இதை அதிகம் செய்கிறார்கள்.

படித்தவர்கள் தங்கள் அறிவை பெண்களை எப்படி ஏமாற்றுவது, எந்த ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிவிடுவது என்றே யோசிக்கிறார்கள். எல்லோரும் விழறாங்கன்னு சொல்லிட்டு நாமளும் போய் விழக்கூடாது. மற்றவர்களின் அனுபவங்களை அலட்சியம் செய்யாமல் அதை உள்வாங்கிக் கொள்கிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் சுயம் குறித்த சிந்தனை அதிகரிக்க வேண்டும். பெண்களின் மனமாற்றம் மட்டுமே பெண்களுக்கு விடுதலை வாங்கித் தர முடியும்.

-நேர்காணல்: மினர்வா & நந்தன்
வாசகர் கருத்துக்கள்
P.Venugopal
2007-08-29 04:18:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I like to have the address of this writer as i like to write a letter of appreciation for her dedicated writing on the rural wemen and their sufferings. I also like to share some of my views with the writer which may be helpful in her future writings for wemen empowerment in order to bring away our poor sisters from poverty and sufferrings in the rural India. P. VENUGOPAL,GENERAL MANAGER, BESTWESTERN HOTEL CHANDAN, GANDHIDHAM-KUTCH GUJARAT. MOB.09426915997.
THANKS FOR PROVIDING AN OPURTUNITY TO READ AND KNOW ABOUT THIS AUTHOR .

veeramani
2007-08-30 03:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சகோதரி இளம்பிறை யின் நேர்காணல் நன்றாக இருந்தது.....கிராமங்களை ஞாபகப்படுத்தியது அவரது உரையாடல்..தொடர்ந்து எழுதுங்கள்.........

அன்புடன் 
வீரமணி

Sujah.S
2007-08-31 10:08:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சகோதரியின் சிந்தனைகள் நியத்தில் நடப்பவை,நன்றாக உள்ளது.(திருமணம் என்பது மற்றும் நல்ல உடை, நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல பொண்ணு இப்படி பொண்ணைக்கூட ஒரு பொருளாத் தான் பார்க்கிறாங்க. அவளை மனுஷியாப் பார்க்கிற மனநிலை வரவே இல்லை.

பெண்ணுக்கென்று சுயமரியாதை இருக்கிறது, அவளுக்கென்று தனிமனசு, சிந்தனை இருக்குன்னு இவங்க யாரும் யோசிக்கவே மாட்டாங்க. ஒரு பெண் நண்பனிடமோ, காதலனிடமோ பழகும்போது அவனை நம்பித்தான் பழகுகிறாள். அவனை நம்பித்தான் உடல்ரீதியான உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறாள். அந்த உறவையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு கிண்டல் அடிப்பது தான் ஆண்களின் வேலை. பென்களைப் பற்றிய பேச்சே ஆண்களுக்கு சுவாரஸ்யமானது.) இந்த கருத்து முற்றிலும் உண்மை.சகோதரியுடன் தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளேன்.
சுஜா.சி

kamaraj
2007-08-31 02:41:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

interview is good except women poets writings.women poets writings are very bad.

kamaraj
2007-09-02 12:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

interview is good except women poets writings.women poets writings are very bad.

Jayashree
2007-09-03 04:57:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Could I get the address or email id of the author Ms.Elambirai.

Aara
2007-09-08 11:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ilampirai interview reflection of current society.Her thoughts about all males in one meaning is cannot tolerence.

N Suresh
2007-09-12 07:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கவிஞர் இளம்பிறையின் மனம் திறந்த உண்மை பேச்சு என் மனதில் பெரிய ஒரு பாரத்தை தந்துள்ளது. கிராமங்களைப் பற்றி பல உண்மைகள் இந்த நேர்காணல் வெளிகொண்டு வந்துள்ளது. பெண்களின் சொல்ல முடியா உணர்வுகளின் வலியை மென்மையாகச் சொல்லி இந்த சமூகத்தைப் பற்றின ஒரு பெரிய கேள்விக்குறி என்னில் நிறைத்த இந்த நேர்காணலுக்கும் கீற்றிற்கும் எனது நன்றி பல...

கவிஞர் பல படைப்புகள் படைத்து, அவர்களின் எழுத்துக்களால் வருங்கால சமூகத்தை சீர் செய்வார்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன்

என் சுரேஷ், சென்னை

Janaki
2007-10-13 02:26:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Fantastic Woman , and Fantastic Article,.

seetha
2007-10-23 07:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கவிஞர் இளம்பிறைக்கு ஆட்சேபம் இல்லயெனில் எனக்கு அவர்களுடன் தொடர்புகொள்ள ஆசை.
அவருக்கு என் வாழ்த்துக்கள்

Vaa.Nehru
2007-11-16 06:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அதைமீறி நான் போவேன்னு சொன்னதுக்காக விளக்குமாறு எடுத்து ஊரெல்லாம் துரத்தித் துரத்தி அடிச்சாங்க.
பெண்கள் இங்கே தொடர்ந்து துயரங்களை அனுபவித்து வருபவர்கள். அத்தனைக் கஷ்டத்தையும் கொடுத்துட்டு அதைப் பத்தி எழுதினா அது புலம்பல்னு சொன்னா என்ன சொல்றது? எழுத்து என்பது தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வெளிவரும்.
கிராமங்கள் சாதி ரீதியாக இப்படித்தான் இருக்கிறது. நீங்க என்ன படித்து என்ன வேலையில் வேண்டுமானாலும் இருங்க, ஆனா நாங்கதான் உசந்தவங்கன்னு சொல்ற மனநிலை மாறவேயில்லை.miga nermaiyana oru kiramattthu sakothiriyadam paesiya unarvu. niraya ivarkal ezhuthavendum. vazthukkal. Periyar solliya penkal varukintrarkal ezhutthulakil.varaverpom.varaverpom.Naalai Ivarkalaip Pontravarkalal Vidiyum Ennum Nambikkaiyodu
Vaa.Nehru

poonkodi
2007-11-20 05:03:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I get the news about the address of this writer to this website from Mr.Vaa. Nehru in a meeting. In this interview she said the real things about the society. No one can oppose the each and every word of this interview.

Girijamanaalan (Tamil Writer)
2008-02-01 05:50:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ச‌கோத‌ரி க‌விதாயினி இள‌ம்பிறை அவ‌ர்க‌ளின் நேர்காண‌லைப் ப‌டித்து விய‌ந்து போனேன். இச்ச‌மூக‌த்தைப் ப‌ற்றியும், பெண்க‌ளின் நிலையைப் ப‌ற்றியும் அவ‌ர் ம‌ன‌த்தில் ப‌திந்துள்ள‌ அத்த‌னை விஷ‌ய‌ங்க‌ளும் இந்த‌ நேர்காண‌ல் மூல‌ம் வாச‌க‌ர்க‌ளுக்குக் கிடைத்துவிட்ட‌து. 
> கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.

Rajendran
2008-12-30 01:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

The interview is really good. But read the followings.

இப்போதும் கிராமங்களில் குடியானவங்க பகுதி தனியாவும், சேரிப்பகுதி தனியாவும்தான் இருக்குது. Who decided the words குடியானவங்க and சேரிப்பகுதி.. 

பத்து வயதுப் பையன் கூட சேரியில் வசிக்கிற அறுபது வயது உத்ராபதியை.. who are living in சேரியில் ..
சேரியில் வசிக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை அவங்க எவ்வளவு பெரியவங்களா இருந்தாலும் பெயர் சொல்லித் தான் கூப்பிடுவாங்க.... 
Who are all சேரியில் வசிக்கிற ஒடுக்கப்பட்ட people ...

As a reader, I am not expecting these kinds words from Sister Elambirai's interview.

Sheela Sivakumar
2009-03-16 07:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I like the interview of Kavignar. Elambirai. Please give me her address, email id and phone no.

Sheela Sivakumar
2009-03-16 08:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I like these Points from Elambirai Words.
படிப்பதாலோ, வேலை செய்வதாலோ பெண்களின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிட்டதாக நான் கருதவில்லை. தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக பெண்களுக்கு எதிரான நிறைய சங்கிலிகளை இந்த சமூகம் உருவாக்கி வவத்திருக்கிறது. அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் நாம் தப்பிவிட முடியாது.
வீடு, குழந்தைகளைத் தாண்டி என்னால எழுதவே முடியலைங்கிறபோது நான் எங்க போய் கலந்துக்கிறது? குழந்தைங்க எப்படி வேணும்னாலும் போகட்டும்னு நான் போக முடியுமா? இதேதான் எல்லாப் பெண்களுக்கும்.

சில பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு அனைத்து பெண்களும் சுதந்திரமாக வசிக்கிறார்கள் என்ற கருத்து தவறானது.

சாதியில் தான் இந்த வேறுபாடு எல்லாம். பொருளாதார நிலையில் எங்களுக்கும் தலித் மக்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நாங்களும் விவசாயக்கூலிகள்

நீங்க என்ன படித்து என்ன வேலையில் வேண்டுமானாலும் இருங்க, ஆனா நாங்கதான் உசந்தவங்கன்னு சொல்ற மனநிலை மாறவேயில்லை.
I would like to contanct with Elambirai.Please send me her address.

selvii
2009-08-11 12:48:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிக அருமையான நேர் காணல்!
கிராமத்தின் அழுக்கையும் அழகையும் ஒருங்கே கொட்டிய உரையாடல்!

Pin It