நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2041 விடைத் திங்கள் 29ஆம் நாள்                                                                

(12.6.2010) காரிக்கிழமை,

இடம் : பசும்பொன் தேவர் அரங்கம், சென்னை, தியாகராயர் நகர், சென்னை 17

நம் தமிழ்இனம் அறிவு பெறுவதற்கும் வேலை பெறுவதற்கும் பொருள் வலிமை, தொழில் வலிமை பெறுவதற்கும், நிலவுரிமை காப்பதற்கும் நாம் தமிழினமாக வலிமை பெற வேண்டும்.  வாழ்வியல் நிகழ்வுகளில் சமற்கிருதத்தை ஏற்றதனால் நம் மொழியையும் மானத்தையும் இழந்தோம்.  ஆங்கில வழிக் கல்வியினால் படைப்பாக்கத்தை இழந்தோம். நம் அன்னை மொழியாம் தமிழ்மீது பற்றின்மையால் அன்பையும் வீரத்தையும் இழந்தோம்.

இந்தியத்தால்-திராவிடத்தால் தமிழின அடையாளடங்களை இழந்தோம். இவையனைத்தையும் இழந்ததால் நாம் அடிமையாகவே பிழைத்து வருகிறோம். நாம், இன அடையாளங்களோடு வாழ்வதற்குத் தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக, ஆட்சிமொழியாக, முறைமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, தொடர்பு மொழியாக ஆக்கப்படுதல் மிகமிக இன்றியமையாத கடமையாகும்.

நம் இன எதிரிகளும், இந்திய அரசும், வேற்றுமொழியாளர்களும், பன்னாட்டு நிறுவனங்களும், தமிழக அரசியலாளர்களும் திட்டமிட்டு நம் இனத்தை அழிக்க முற்படுகின்றனர். அனைத்துச் சூழ்ச்சிகளையும் முறியடித்துத் தமிழையும், இனத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் நீங்காக் கடமையாகும். மேற்கண்ட தேவை களைக் கருத்தில் கொண்டு, தமிழர் மீட்சி மாநாடு நடத்துவது காலத்தின் கட்டாயம் என்று கருதி இம்மாநாடு கூட்டப்பட்டது.

முற்பகல் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது. திரு. சந்திரேசன் தலைமையேற்றார். திரு. செய. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். அவ்வமயம் தமிழினக் கூட்டமைப்பின் தேவை பற்றியும், இன்றைய நிலையில் ஒரு முகாமையான செய்தியை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதனை இங்கு வெளியிடுவதாகக் கூறினார்.

“சீனாவிலிருந்து 25ஆயிரம் சீனக் கைதிகள் இலங்கையில் கொண்டு வந்து இறக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குத் தமிழர்களுக்குப் போட்டியாக அந்தக் கைதிகள் செயல்பட இருக்கிறார்கள்; தமிழர்களைக் கருவறுக்கத் திடடமிடுகிறார்கள் என்ற மிகவும் கமுக்கமான செய்தியை இங்கே வெளியிடுகிறேன்”என்றார்.

இந்த மாநாட்டுக்குக் கலந்துகொள்ள வந்திருக்கும் அறிஞர்கள், பொழிவாளர்கள், பார்வையாளர்களாக வந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்பதாக தமிழர் மீட்சி மாநாட்டை முன்னின்று மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தவரும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ள அனைவருக்கும் உணவு வழங்கிய வருமான திரு. செய. செல்வகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றியது மிகப் பொருத்தம்.

தமிழினக் கூட்டமைப்பின் அமைப்பாளர் மருத்துவர் வ.நா. தன்மானன் அவர்கள் இம்மாநாட்டின் தேவை பற்றியும், செயற்பாடுகள்பற்றியும், மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அறிஞர்கள், பொழிவாளர்கள்பற்றியும் அறிமுகவுரையாற்றினார். இம்மாநாட்டின் மூலம் நாம் செய்ய இருக்கும் தொடர்பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழினக் கூட்டமைப்புத் தலைமை நெறியாளர் திரு. பா. இறையெழிலன், ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழகத் தலைவர் திரு. இரா. மாமல்லன் , தமிழ்ச் சமூகங்களின் கூட்டமைப்புத் தலைவர் கு. செந்தில், அரிமா சீவானந்தம், பொன் ஏழுமலை, ந.வி. தமிழேந்தி, க.இரா. சீனுவாசன் ஆகியோர் முற்பகல் நிகழ்ச்சக்கு முன்னிலை வகித்தனர்.

தமிழினக் கூட்டமைப்பின் நெறியாளர் திரு. இரா. மாமல்லன் அவர்கள் தமிழினத்தின் வீழ்ச்சிபற்றியும் அதற்கு யாரெல்லாம் கேடு விளைக்கிறார்களோ அவர்களையெல்லாம் இனங்கண்டு வேரறுக்க வேண்டும்; இனியும் நாம் வாளாவிருக்க முடியாது என்றும் நம் தமிழினத்தைக் காக்கப் புறப்படுவோம் வாரீர்” என வீரவுரையாற்றினார்.

முற்பகல் ஆய்வரங்கில், முனைவர் கு. திருமாறன் அவர்கள் ‘செம்மொழிக்கான மொழியியல் வரைவுகள்’ என்னும் தலைப்பில் சிறப்பானதொரு பொழிவினையாற்றினார். செம்மொழி என்றால் என்ன? என்னென்ன தகுதிப்பாடுகள் இருந்தால் செம்மொழி ஆகமுடியும்? அந்தத் தகுதிகள் அனைத்தும் தமிழுக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன என்பதால்தான் செம்மொழி என உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று இன்னும் பல வரலாற்று உண்மைகளை எடுத்தியம்பினார்.

அடுத்து, ‘எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?’ என்னும் தலைப்பில் திரு. இராம. கிருட்டிணன் அவர்கள் இப்போதுள்ள நிலையில் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது. கணினியிலோ, அச்சிலோ அல்லது தமிழைப் புதிதாகப் படிக்கத்தொடங்கும் யாருக்குமோ இப்போதுள்ள எழுத்துகளை ஏற்பதில் எவ்வித இடையூறும் இல்லை. அத்துறை சார்ந்தவர்கள் யாரும் அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

இவர்கள் சொல்லும் குறியீடுகளை மாற்றுவதால் ஏற்கெனவே உள்ள நூல்களை, பதிவுகளைப் பின்னால் வரும் பிறங்கடைகள் இழக்க நேரிடும் என்பதை ஏனோ கருதிப்பார்க்கத் தவறுகிறார்கள். மக்களைக் குழப்புவதற்காகத், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகச் சிலர் நம்மீது தங்கள் எண்ணங்களை திணிக்கிறார்கள். மக்களைக் குழப்புவதாகவே இத்திட்டம் அமைகிறது. எனவே, எந்த நிலையிலும் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்பதை மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்தார்.

‘உயிர்க்கொலை செய்யப்பட்ட ஊடக அறம்’ என்னும் பொருள்பற்றி, சிறந்த ஊடகவிலாளர் திரு. கா. அய்யநாதன் அவர்கள் தமது கருத்துகளைப் பதிவு செய்தார்கள். ஈழத்தில் நடந்த ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைத் திட்டமிட்டு மறைத்தார்கள் என்பது ஊடக அறம் சாகடிக்கப்பட்டது என்பதற்குச் சரியாக எடுத்துக்காட்டு. மேலும் பல செய்திகளுடன் தமது பொழிவை நிறைவு செய்தார்.

‘சாதிகளின் வளர்ச்சியும் தமிழின வீழ்ச்சியும்’ என்னும் தலைப்பில் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திரு. பொன்னிறைவன் அவர்கள் சிறப்பானதொரு பொழிவை அளித்தார்கள். சாதிகளினால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் இனவழியான அழிவைச் சந்திக்க நேர்ந்தது. திட்டமிட்டு நம்மைப் பிரிப்பதற்காகவே சூழ்ச்சியாக உண்டாக்கப்பட்தே சாதி என்னும் உண்மையை மிகவும் ஆழமாகவும் அறிவோடும் எடுத்து வைத்தார்கள். தந்தை பெரியார் போன்ற தலைவர்களும் சாதியை ஒழிப்பதற்காகவே அரும்பாடுபட்டார்கள். பார்ப்பனச் சூழ்ச்சியை முறியடித்து நாம் சாதி நோயிலிருந்து வெளியே வந்து தமிழன் இனத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் இன்னும் பல தரவுகளை மிகச் சிறப்பாக எடுத்து வைத்தார்.

“இறக்கடிக்கப்பட்ட இதழியல் அறம்” என்னும் பொருளில் ஊடகவியலாளர் மக்கள் தொலைக்காட்சி கசேந்திரன் அவர்கள் மிக அருமையானதொரு உரையை வழங்கினார். இன்றைய நிலையில் செய்தி இதழ்கள் மற்ற இதழ்கள் எவ்வாறு மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்கின்றன என்பதையெல்லாம் மிக விரிவாகப் பதிவு செய்தார்கள்.

“மறுக்கப்படுகின்ற தமிழரின் கடல் உரிமைகள்” என்னும் தலைப்பில் தமிழரின் குறிப்பாகத் தமிழக மீனவர்கள் உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன என்றும், இந்திய அரசு இலங்கையின் இடையூறுகள் எதையும் கண்டுகொள்வதில்லை என்றும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை இந்தியர்களாகக்கூடக் கருதுவதில்லை. 600க்கு மேற்பட்டோர் இலங்கை அரசால் கொல்லப்பட்ட நிலையிலும் ஒரு ‘முதல் தகவல் அறிக்கை’ கூடதயாரிக்கவில்லை. அப்படியே கண்டுகொள்ளாமல்விடப் பட்டுள்ளனர்.

தமிழர்களின் உரிமை நிலமாகிய கச்சத்தீவை பறிகொடுத்து நம் உரிமையை இழந்தோம். இப்போது இலங்கை அரசின் சார்பில் சீனர்கள் படைத்தளம் அமைக்க மும்முரமாகப் பணிகள் நடக்கின்றன. இந்த நிலை நீடித்தால் தமிழர்கள் குறிப்பாகத் தமிழக மீனவர்கள் மிகவும் இன்னலுக்குள்ளாவார்கள் என்பது உறுதி என்றும் பல புள்ளி விவரங்களோடு திரு. வி.யு. அருளானந்தம் அவர்கள் உரையாற்றினார்.

தமிழினக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் தமக்கே உரிய அறிவார்ந்த ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். தமிழரின் வீரம், நாகரிகம், பண்பாடு, கலைகள், இசை அனைத்தும் மீட்டெடுக்கப்படவேண்டும். தமிழன் உலகிற்கே முன்னோடியாகத் திகழ்ந்த வரலாறு உண்டு. இடையில் பல காரணங்களால் சூழ்ச்சியால் அவையெல்லாம் அழிக்கப்பட்டன. திருக்குறளும், தொல்காப்பியமும், சங்ககால இலக்கியங்களும் நம் பண்டைத் தமிழர்களின் வாழ்நிலைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நம் காலத்தில் மீட்டெடுக்க உறுதி பூணுவோம் என்று சூளுரைத்தார்.

திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கை விளக்கச் செயலாளர் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமைகளை விளக்கினார்கள். குறிப்பாக நம் முதலமைச்சர் எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார். கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாடு பற்றியும் ஈழத்தில் நடைபெற்ற ஓரிலக்கத்துக்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த கருணாநிதி அதை நீத்தார் நினைவு நாள் கொண்டாடுகிறார் என்றும், ஆற்றொழுக்கான உரையை ஆற்றினார்.

பிற்பகல் அரங்கில்,

“பறிக்கப்பட்ட தமிழரின் நில உரிமைகள்” என்னும் பொருளில் ‘எழுகதிர்’ ஆசிரியர் முனைவர் அருகோ அவர்கள் பொழிவாற்றினார்.

தமிழர்களின் நிலவுரிமைகள் எவ்வாறெல்லாம் பறிக்கப்பட்டன. இன்றைக்கும் நம் மக்கள் வாழுகின்ற பல பகுதிகள் அண்டை மாநிலங்களில் உள்ளன. அதிகாரம் பெற்ற தலைவர்கள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. நம் தலைவர்கள் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. போன்ற தலைவர்கள் மிகவும் அரும்பாடுபட்டு இப்போதுள்ள திருத்தணி போன்ற பகுதிகளை மீட்டார்கள் என்பன போன்ற உண்மைகளை மிக விளக்கமாக எடுத்துரைத்தார்.

“தமிழர் கட்டடக் கலையின் மேன்மையும் அழிப்புகளும்” என்னும் தலைப்பில் மரபுக் கட்டடக் கலை வல்லுநர் தென்னன் மெய்ம்மன் அவர்கள் சிறந்ததொரு உரையை நிகழ்த்தினார். இன்றைய நிலையில் மரபுக் கட்டடக் கலையை அழித்தேவிட்டார்கள்.

நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்களில் நமது மரபுக் கட்டடக்கலை எவ்வாறு சிறந்தோங்கியுள்ளன. தமிழர்கள் எவ்வளவு ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர் என்றும் இன்றைய மரபுக் கலையைத் திட்டமிட்டு அழித்து வருகின்றனர் என்பதைப் பல ஆதாரங்களோடு விளக்கினார்.

‘நெடுநல்வாடை’ என்னும் இலக்கியத்தை முழுவதும் அவர் மகன் செந்நா ஒப்பித்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

தோழர் தியாகு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் “இந்திய இலங்கை அரசுகளின் தமிழீழ அழிப்பும் தமிழின மீட்சிக்கான வழிகளும்” பற்றி நீண்டதொரு உரையை வழங்கினார்.

ஈழத் தமிழர்கள் ஓரிலக்கம் பேர் சாவுக்கு யார் காரணம் என்பதையும், ஈழ விடுதலையை அடைய எவ்வாறெல்லாம் இந்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதையும் எதற்காக அதைச் செய்தார்கள் என்பதையும் விரிவாக விளக்கினார்.

இந்திய அரசுதான் அந்தப் போரை நடத்தியது. தமிழக முதல்வர் துணையுடன் என்று ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைத்தார். தமிழர்களைத் திட்டமிட்டே அழித்தார்கள். தமிழகத் தமிழர்களின் உணர்வுகள் மேலோங்கி இருந்தாலும் அதை முழுமையும் அழித்தொழித்துத் தமிழர்களுக்கு முற்றிலுமான ஓர் எதிர்நிலையை இந்திய அரசு முன்னெடுத்தது.

இறுதியாகப் பொது அரங்கத்துக்கு திரு. சா. சந்திரேசன் தலைமையேற்றார்.

திரு. மறத்தமிழ் வேந்தன் அவருக்கேயுரிய பாத்திறத்துடன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமையுரையில், கருணாநிதித் தலைமையில் உள்ள தமிழக அரசும், இந்திய அரசும் முற்றாகத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. நம்மை அவர்கள் இந்தியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. யார் யாருக்கோ உதவிக்கரம் நீட்டிப் பாதுகாக்கத் துடிக்கும் இந்திய அரசு, ஈழத்தில் தமிழர்கள் தமிழ்இனமாகவே நமது உறவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இந்திய அரசும் தமிழக அரசும் முனைந்துபாடுபடுகின்றன என்றும் மிகவும் கடுமையாக இரு அரசுகளையும் சாடினார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் மாவீரன் பழ. நெடுமாறன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.  “ஈழத் தமிழர்களின் தனிஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. இந்தப் பின்னடைவிற்குத் தமிழக அரசே காரணம். மத்தில் ஆளும் காங்கிரசு கட்சிக்கும் இலங்கைத் தமிழர் அழிவில் பெரும்பங்கு இருந்தது என்பதை மறுக்கவியலாது.

இலங்கை அதிபர் இராசபட்சேவுக்கு மத்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு கண்டனத்திற்குரியது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராசபட்சேயைச் சந்தித்து மனுக்கொடுத்தது ஒரு கண்துடைப்பு.  தமிழர் மீட்சி என்பது வரலாற்று அடிப்படை, மொழி அடிப்படை, பண்பாட்டு அடிப்படை, பொருளியல் அடிப்படை, அரசியல் அடிப்படை என ஐந்து தளங்களில் அமைய வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் மீட்சிக்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும். “

புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க. கிருட்டிணசாமி அவர்கள் “தனி ஈழம் பெறுவதற்காகத் திருச்சியிலிருந்து 150 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டேன். தமிழகத் தலைவர்களை ஒருங்கிணைக்க முயன்றேன். இடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளினால் அது நடைபெறாமல் போய்விட்டது.

தனி ஈழம் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து குரல் எழுப்பப்பட வேண்டும். தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபட வைத்திட வேண்டும். சாதி, அரசியல் கட்சி அடிப்படையில் இருக்கும் நடைமுறை ஒதுக்கப்பட வேண்டும். திராவிடன் என்று தமிழனை அடையாளப்படுத்தப்படுவது மாற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் உடனடியாக டுபட்டு வெற்றிபெற வேண்டும். தனி ஈழக் ககோரிக்கை தமிழகத்திலிருந்து வலுவாக ஒலிக்க வேண்டும். அதற்குத் தமிழர்களே போராடவேண்டும்.” என்றார்.

தமிழக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் அவர்கள் உண்மையான நிலைமைகளை எடுத்துரைத்தார்.

“தமிழர்கள் மிகவும் ஏமாற்றப்படுகிறார்கள். தமிழர்கள் தங்கள் இன உரிமை களைப் பெறுவதற்கு கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டும். தமிழர்கள் ஒன்றிணைந்து போராடினால்தான் தமிழர்களை மீட்க முடியும்” என்று எழுச்சியுரையாற்றினார்.

திரு. பழ. கருப்பையா அவர்கள் தமிழர்கள் தமிழக அரசால் குறிப்பாக கருணாநிதியால் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்து வைத்தார்.

‘தனித்தமிழர் சேனை’ அமைப்பின் தலைவர் நகைமுகன் அவர்கள் “இந்த அரசு எவ்வாறெல்லாம் தமிழர்களை ஏமாற்றி அழிக்கிறார்கள் என்பதையும் கோவை மாநாடு நம்மைத் திசை திருப்புவதற்காக நடத்தப்படும் மாநாடு” என்று கடுமையாகத் திறனாய்வு செய்தார். அவரது குடும்பம் அவரது தனி விருப்பம்தான் தி.மு.க என்று நிறுவிக் கொண்டு வருகிறார். அதனால்தான் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களை குசுபு, எஸ்.வி. சேகர் போன்றவர்களைத் தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டுள்ளார். ஓரிலக்கம் பேரை இழந்து தமிழன் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது, அதன் துன்பத்தை மறைக்க தமிழ்மக்களை ஏமாற்றுவதற்காகக் கோவையில் மாநாடு கூட்டுகிறார்” என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வுச் செயலாளராக வுள்ள நெய்வேலி செந்திலதிபன் அவர்கள், அழகானதொரு ஓர் உரையை வழங்கினார். தமிழர்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய ஆற்று உரிமைகள் பறிபோய்விட்டன. நமக்கு உரிமையுள்ள நிலங்கள் அண்டை மாநிலங்களிடம் சூழ்ச்சியாக ஒப்படைத்துத் தமிழர்களை ஏமாற்றினார்கள் என்று எடுத்துரைத்தார்.

தமிழினம் என்ற அடிப்படையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட்டுப் போராடினால் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழினம் விடுதலை பெற்றுத் தனி ஈழம் மலரும் என்பதையும் அனைவரின் பொழிவுகளிலும் உணரமுடிந்தது.

இறுதியாக, தமிழினக் கூட்டமைப்பின் பொருளாளர் திரு. சா.மு. செயக்குமார் நன்றி கூறும்போது “இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும்” என்று சூளுரைத்தார்.

மாநாட்டுக்குழுவினராகக் கீழ்க்காணும் அன்பர்கள் இணைந்து உழைத்தனர்.

பரம்பை அறிவன், வழக்கறிஞர் சு. வீரமணி, அரிமா செய. திரு. இரவிச்சந்திரன், திரு. த. சாக்கியசக்தி, திரு. க. இரா. சீனிவாசன் மற்றும் பலர் மாநாட்டு வெற்றிக்கு உழைத்த பெருமக்களாவர்.

திரு. கு. செந்தில் தீர்மானங்களைப் படித்து நிறைவேற்றினார்.

Pin It