மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு

சென்னை-17. 29.04.2010.

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப்பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.
Pin It