2008ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படவுள்ளது. லெப். கேணல் தவம் நினைவு விருது குறும்படப் போட்டிக்கான தொடக்க விழா 26.04.08 அன்று பாரிசில் நடைபெற்றது. இவ்விழாவில் லெப்.கேணல் தவம் அவர்களின் உருவப்படத்திற்கு ஈகச்சுடரினை மாவீரர் அகமகன் அவர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.

பாரிசின் முன்னணிக் கலைஞர்கள் கலந்துகொண்ட இச்சிறப்பு ஒன்று கூடலின்போது, தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் இப்போட்டி தொடர்பான ஊடகங்களுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இப்போட்டி தொடர்பான அறிமுக உரையினை 1995ம் ஆண்டுக்காலகட்டத்தில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த திரு.மாணி நாகேஸ் அவர்கள் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்புரைகளை திரு.சுபாஸ், திரு.கி.பி.அரவிந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் லெப்.கேணல் தவம் அவர்கள் பற்றிய ஒளித்தூரிகை எனும் காணொளி விவரணம் காண்பிக்கப்பட்டது. நீண்டகால இடைவெளியின் பின், தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால், மீளவும், இக்குறும்படப் போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறும்படக் கலைஞர்களை உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது. வருடாவருடம் தொடரவுள்ள இப்போட்டியில், வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப். கேணல் தவம் நினைவு விருதுடன், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதா பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

தொடக்க விழாவில் வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான அறிவிப்பாவது:

இந்த ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடத்தப்பட உள்ளது.

லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருதுக்கான இந்தக் குறும்படப்போட்டிக்கான அழைப்பு, பாரிசில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு ஒன்று கூடலின்போது, விடுக்கப்பட்டது.

நீண்டகாலத்தின்பின், தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால், மீளவும், இக்குறும்படப்போட்டி நடைபெறவுள்ளதுடன், வருடாவருடம் தொடரவுள்ள இப்போட்டியில், வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப்டினன்ட் கேணல் தவம் நினைவு விருது வழக்கப்படுவதுடன், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

சொந்த மண்ணிலும், புலம்பெயர்ந்த மண்ணிலும், எம்மவர் சுமந்துநிற்கும், அவலங்கள், துன்பதுயரங்கள், சாதனை வேதனைகளை, ஒரு காலப்பதிவாக்குகின்ற முயற்சி இது.

எம்மவர் மத்தியில், மனங்களில் மௌனமாய் பாதுகாக்கப்படும் அனுபவப் பதிவுகள்தான் எத்தனை ஆயிரம்.. ஆயிரம்.. அத்துடன், எம்மவர் மத்தியில், இத்துறை சார்ந்த வளர்ச்சியை அவாவும் எண்ணங்களும் இப்போட்டிக்கான உந்துதலாகும்.

இந்தியா, இலங்கை தவிர்ந்த, எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


- கிறிஸ்டோபர் பிரான்சிஸ்

Pin It