balachandran students 600

பெரியாரின் எழுச்சிக்குப் பின் மற்ற எந்த மாநிலங்களையும் விட தமிழகம் வஞ்சகமான ஜாதி என்கிற கட்டமைப்பிலிருந்து சற்றே விலகி பயணப்பட்டது. அந்த பயணத்தின் இக்கட்டான ஒரு சூழலில் தமிழகம் இப்போது சென்று கொண்டிருக்கிறது. ஜாதி மீண்டும் மீண்டும் தன்னை மறு உருவாக்கம் செய்து சமூகத்தின் ஓர் அங்கமாக நிலைநிறுத்திக் கொள்ளும் வேலையை செய்து கொண்டே இருக்கிறது.

இந்த அயோக்கிதனமான கட்டமைப்பினால் பயன்பெறுபவர்கள், ஜாதி என்கிற மனிதத் தன்மையற்ற அமைப்பை தன் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிற மனிதர்களும், ஓட்டுப்பொறுக்கி வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும்தான். ஜாதி என்பது எப்போதும் பொறுக்கித்தனமான ஒன்று. சக மனிதர்களை மேல், கீழ் என்று நிறுத்தி வைக்கும், சம நீதியை மறுக்கும் காட்டுமிராண்டித்தனமான இந்த கட்டமைப்பை தமிழர்கள் நாம் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறோம்.

ஜாதியம் எப்போதும் கள்ளத்தனமான அகமணமுறை மூலமாகவே தலைமுறை தலைமுறையாக நம்மிடம் நஞ்சைப்போல பரவிவருகிறது.

நவீனத்தின் மேல் நடக்கும் இந்த யுகத்தில் யுவன்களும் யுவதிகளும் காதலின் வழியாய் ஜாதி என்கிற பிற்போக்குத்தனமான கட்டமைப்பை எத்தி உதைத்து வெளியேறுகின்றனர்.

சுய சிந்தனையோடு ஜாதி கடந்து நேசிக்கும் ஆண்களையும் பெண்களையும் இந்த ஜாதிவெறியர்கள் தங்களின் சுயஜாதிவெறிக்காக கொடூரமாக கொல்கின்றனர். ஜாதிவெறி எப்போதும் தன் சுயஜாதி பெண்களுக்கு எதிராகவே இயங்கிவருகிறது.

உலகம் நவீனத்தின் பாதையில் பயணப்படும் இந்த யுகத்திலும், ஜாதியை முன்னிறுத்தி தமிழகத்தில் நடைபெறும் வக்கிர கொலைகள் ஒன்றே ஒன்றைத்தான் சுட்டி காட்டுகின்றன. மெல்ல மெல்ல ஜாதியத்தின் நிழல்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் இளைஞர்களுக்கு, ஜாதியம் வெளிப்படையாக விடுத்திருக்கிற எச்சரிக்கைதான் இந்த ஜாதிய வக்கிர கொலைகள். நேற்று இளவரசன், இன்று கோகுல்ராஜ். ஆண்டாண்டு காலமாக மனிதர்களின் இரத்தத்தை ருசி பார்த்த ஜாதிவெறி இன்னும் தன் தீராப்பசிக்கு அப்பாவித் தமிழர்களை, மாணவர்களை பலி கேட்கிறது.

இந்தத் தமிழ் மண்ணில் ஜாதியம் வெளிப்படையாக விடுத்திருக்கும் எச்சரிகைக்கு மாணவர்கள் நாம் வலுவான வகையில் பதிலடி தர வேண்டும். ஜாதிப்பேய் தமிழ்மண்ணை விட்டு நீங்கும் மட்டும் அதற்கெதிரனா சமரை மாணவர்கள் நாம் முன்னெடுப்போம். ஜாதியத்தின் முகமூடியை அணிந்துவரும் எவனாயிருந்தாலும் அவனை மாணவர்கள் நாம் அம்பலப்படுத்துவோம். ஜாதியத்தை ஆதரித்து கள்ளமெளனம் காக்கிற எல்லோரையும் கேள்விகுட்படுத்துவோம். இனி இந்த தமிழ்த் தேசம் மாணவர்கள் நம் உழைப்பால் ஜாதியமற்ற தேசமாய் உருவாகட்டும்.

ஜாதியத்தின் அட்டூழியங்களையும், அயோக்கியத்தனங்களையும், ஜாதியையும் பார்த்த இறுதித் தலைமுறை நாமாகவே இருக்கட்டும். எந்த ஜாதிக்காக காதலை நசுக்குகிறார்களோ அதே காதலை ஆயுதமாக்கி ஜாதியை ஒழிப்போம். ஜாதியற்ற தேசமே நிஜமான தமிழ்த் தேசம்.

ஜாதியை வேரறுக்கும் நோக்கோடு பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் முன்னெடுக்கும் மனிதச் சங்கிலி வரும் ஜுலை 11 தமிழர் கடலில்…. (மெரினா,காந்தி சிலை அருகில்)

ஜாதியைக் கருவறுக்க மாணவராய் மனிதராய் ஒன்றுகூடுவோம்.

- பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

Pin It