அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!

நமது சமூகத்தினால் காலம் காலமாய் அவமானப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதார-கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட, தீண்டத்தகாதவர்களாக்கப்பட்ட, பாலியல் சுரண்டலுக்கும்-வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்களாக மாற்றுப்பாலின மக்கள் உள்ளனர்.

நாகரிக சமூகமாய் தன்னை சிங்காரித்துக் கொள்ளுகின்ற எந்த சமூகமும் இனியும் இத்தகையதான சொல்லணா வலியை, கடும் வேதனையை, கொடூர ரணத்தை, மன உளச்சலை தனது மக்கள் பிரிவினரில் ஒன்றான மாற்றுப்பாலினத்தவர்க்கு அளிப்பதை ஏற்று கொள்ள முடியாது!

ஒருவரின் பாலினத்தேர்வு என்பது இயற்கையானது. அவை இயல்பானதும், இயற்க்கையில் எந்தவித ஏற்றத்தாழ்வு அற்றதும் ஆகும். ஆனால் இந்த சமூகம் பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கின்றன. ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல… மாற்றுப்பாலினமும் இயற்கையான மனிதஇனத்தின் ஒரு பாலினதேர்வின் அங்கமே!

இந்த அடிப்படையில் 15 ஏப்ரல் 2014 அன்று உச்ச நீதிமன்றமானது மாற்றுப் பாலினத்தவர்களின் சட்ட உரிமைகள் பற்றி 130 பக்கங்கள் கொண்ட ஒரு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. அதில் மாற்றுப் பாலினத்தவர்கள் யார்... அய்.நா மன்றமும், பிற நாடுகளும் இவர்களை எப்படி அணுகுகின்றன. என்பதை விரிவாக அலசுகிறது.

இறுதியில உச்சநீதி மன்றத் தீர்ப்பில் மாற்றுபாலினத்தவர்களுக்கு அல்லது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல சட்ட உரிமைகளை அங்கீகரிக்கிறது. அவைகள்:

1.நமது அரசியல் அமைப்பு பகுதி III யின் கீழும், நமது பாராளுமன்றமும், சட்ட சபைகளும் இயற்றி உள்ள சட்டங்களும் இருபாலினத்திற்கு அப்பால் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்றவையாக உள்ளன.

2. மூன்றாம் பாலின மக்கள் தங்களின் சுய பாலினத்தை அடையாளப்படுத்துவதை இந்த நீதிமன்றம் உயர்த்திப் பிடிக்கின்றது. ஆண், பெண், அல்லது மூன்றாம் பாலினம் போன்றதான தங்களின் பாலினத்தை அடையாளத்தை சட்டரீதியாக அங்கீகரக்கும்படி மத்திய-மாநில அரசாங்கங்களை இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது.

3. மூன்றாம் பாலினத்தவரை சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களாக மேற்க்கொள்ள தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும்படி நாங்கள் மைய-மாநில அரசாங்கங்களை கேட்டுக் கொள்கிறோம். அரசு வேலை வாய்ப்புகள், கல்வி நிலையங்களில் சேர்க்கை போன்ற அனைத்திலும் இந்த இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட வேண்டும்.

4. இந்த மூன்றாம் பாலினத்தவர் மிக மோசமான பாலின உடல்நலச் சிக்கல்களை எதிர்கொள்வதால் அவர்களுக்கு தனியாக எச்.ஜ.வி கண்காணிப்பு-சிகிச்சை நிலையங்களை மைய-மாநில அரசாங்கங்கள் நடத்த வேண்டும் என இந்த நீதிமன்றம் வலியுறுத்துகிறது.

5. மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பயம், அவமதிப்பு, பாலியல் குழப்பம், சமூக அழுத்தம், மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், நியாமற்ற-நம்பிக்கைகளால் உண்டான சமூக இழுக்கு இன்ன பிற பிரச்சனைகளை களைவதற்கு மைய- மாநில அரசுகள் முயல வேண்டும். தங்கள் பாலின அடையாளத்தை மூன்றாம் பாலினத்தவர் அறிவித்தல் சட்ட விரோதமானது, ஒழுக்ககேடாது என்பது போன்றவைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. மருத்துவமனைகளில் மாற்றுபாலினத்தவர்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்புகள் மேற்க்கொள்வதற்கு தகுந்த வசதிகளை மைய-மாநில அரசாங்கங்கள் .மருத்துவமனைகளில் செய்து தர வேண்டும். தனியான பொது கழிப்பிடங்கள் மற்றும் இதர வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

7. அவர்களின் முன்னேற்றத்திற்க்கான பல்வேறு சமூகநல திட்டங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மைய-மாநில அரசாங்கங்கள் மேற்க்கொள்ள வேண்டும்.

8. தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதற்க்கு மாற்றாக இந்த சமூக வாழ்க்கையின் மாற்றுபாலினத்தவர்களும் ஒர் இன்றியமையாத அங்கமானவர்கள் என்பதை பொதுமக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ள மைய-மாநில அரசாங்கங்கள் முயல வேண்டும்.

9. ஒரு காலத்தில் நமது சமூக வாழ்க்கையில் பண்பாட்டில் மாற்றுபாலினத்தவர்கள் பெற்றிருந்த மதிப்பை போலவே இப்பொழுதும் மதிப்பையும், மரியாதையையும் பெற தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ள மைய-மாநில அரசாங்கங்கள் முயல வேண்டும்.

இத்தகையதொரு சிறப்பானதொரு தீர்ப்பு நடைமுறைக்கு வரவேண்டுமெனில் அவை பற்றி பொதுமான புரிதலை மக்களிடமும், மாற்றுப்பாலினத்தவர்களிடமும் நாம் கொண்டு செல்ல வேண்டும்..

நம்நாட்டில் பல மக்கள்நலச் சட்டங்கள் ஏட்டளவில் இருப்பதற்கு காரணம் அவைகள் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருப்பதுதான். இந்த தீர்ப்பை மக்களிடம் கொண்டு செல்லவும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சட்ட அங்கீகாரங்கள் மற்றும் இவர்களுக்கு இதன் மூலம் என்னென்ன சமூக உரிமைகளை கிடைக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும் பகிர்ந்து கொள்ளவே இந்த கருத்தரங்கம்!

இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டலில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு முக்கிய தீர்ப்பை மாற்றுப்பாலினத்தவர்களின் வேலைவாய்ப்பு பற்றிய அளித்துள்ளது.

“விசால பார்வையால் உலகை விழுங்கு..” என்ற புரட்சிகவி பாரதிதாசனின் வரிகளின் படி மாற்றுப்பாலினத்தவர்களைப் பற்றி ஒரு விரிந்த பார்வையை மக்களுக்கு அளிக்கவும் அவர்களும் இந்த சமூகத்தின் இயற்கையானதொரு அங்கம் என்பதை புரிய வைக்கவும் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாள்: 21-06-2014 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி முதல் 8.30 வரை..

இடம்: இக்சா மையம், (நான்காவது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை 600 008

வரவேற்புரை: வழக்கறிஞர் கார்த்திகேயன், (ம.வ.க), (சைதை நீதிமன்றம்)

தலைமை: வழக்கறிஞர் கிருபா முனுசாமி, (ம.வ.க) (சென்னை உயர்நீதி மன்றம்)

முன்னிலை: வழக்கறிஞர் சுப.மனோகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் (ம.வ.க), வழக்கறிஞர் கார்க்கிவேலன், (ம.வ.க),

கருத்துரை:

தோழர் தொல்.திருமாவளவன், தலைவர் (விடுதலை சிறுத்தைகள்)

பேராசிரியர் அ.மார்க்ஸ்,

தோழர் எழுத்தாளர் ப்ரியாபாபு,

தோழர் செல்வி, பொதுசெயலாளர் (தமிழ்நாடு மக்கள் கட்சி)

தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் (சேவ் தமிழ் இயக்கம்)

எழுத்தாளர் கி.நடராசன் (ம.வ.க), (திருபெருமந்தூர் நீதிமன்றம்)

துணை பேராசிரியர் கோகிலா (அறிவுச்சுடர் நடுவம்)

நன்றியுரை: வழக்கறிஞர் சண்முகம் (ம.வ.க), (எழும்பூர் நீதிமன்றம்)

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

- மக்கள் வழக்குரைஞர் கழகம்

தொடர்புக்கு: சுப.மனோகரன், வழக்குரைஞர் , நெ.138, தம்பு செட்டி தெரு, சென்னை -1 செல் 9940176599, 9840855078

Pin It