திருச்சி மத்திய சிறையில் மனித உரிமை மீறல்கள் - மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம் (Citizens Rights Forum) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இடம் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி.

நாள்: 23.11.2013. சனிக்கிழமை நேரம்: காலை: 10.00 மணி 

சிறைவாசிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, கொடுமைப்படுத்தி கொடும் குற்றமிழைத்த திருச்சி மத்தியச் சிறை கண்காணிப்பாளர் பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும்,
 
குற்றமிழைக்கத் தூண்டிய, குற்றமிழைத்த சிறை அதிகாரிகள், அவர்களைக் காப்பாற்றிவரும் மேலதிகாரிகள் டி.ஐ.ஜி. துரைசாமி, ஏ.டி.ஜி.பி. திரிபாதி அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவும், பணிநீக்கம் செய்யவும்,
 
காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரிகளை சிறைத்துறை மேலதிகாரிகளாக டி.ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி. அக நியமித்து சிறைத்துறையை காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை நீக்கி, சிறை அதிகாரிகளை மட்டுமே சிறைத்துறை மேலதிகாரிகளாக நியமிக்கவும்,

இஸ்லாமிய சிறைவாசிகள் மீது பாரபட்சமாக நடந்துகொள்ளும் போக்கை கைவிடவும்,

சிறை விதிமுறைகளை மீறி திருச்சி மத்தியச் சிறை வளாகத்தினுள் அமைந்துள்ள சட்டவிரோத புறக்காவல் நிலையத்தை அகற்றவும்,
 
சிறை வளாகத்தினுள் சட்டவிரோதமாக முகாமிட்டு சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருபவர் மீது மீண்டும், மீண்டும் பொய்வழக்கு போடுதல், சிறைவாசிகளைச் சந்திக்கவருபவரிடம் இலஞ்சம் கேட்டுவாங்குதல், மிரட்டுதல் போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் கமிஷ்னர் மற்றும் ஐ.ஜி. டீம் காவலர்களை சிறை வளாகத்தை விட்டு அகற்றவும்,
 
சிறையினுள் கைபேசி பறிமுதல் வழக்குகளில், சிறையினுள் அதனை கொண்டு செல்ல உதவிய சிறைக் காவலர்கள், அதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள், சிறையினுள் பேட்டரி சார்ஜ் செய்துகொடுக்கும் அதிகாரிகள் அனைவரையும் விசாரித்து கூட்டுக்குற்றவாளிகளாக சேர்க்கவும்,
 
நிறுவப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் துவக்கப்படாமல் இருக்கும் சிறை பொது தொலைபேசிகளை உடனடியாக சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவும்,
 
பத்தாண்டுகள் தண்டனையை கழித்த அனைத்து சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்யவும்,
 
இரத்த உறவுகள் இறத்தல் போன்ற அவசர காலங்களில் மேல்முறையீடு செய்துள்ள தண்டனைச் சிறைவாசிக்கும் வழிக்காவலுடன் (நீதிமன்ற உத்தரவு இன்றி) உடனடியாக பரோல் விடுமுறை வழங்கப்படவும்,
 
தமிழக சிறைகளில் கடந்த ஆண்டுகளில் இறந்த, தற்கொலை செய்துகொண்ட, கொலைசெய்யப்பட்ட நபர்கள் குறித்தும், உடல் நலன், மன நலன் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட, அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடவும்,
 
எவ்வித காரணமுமின்றி நிறுத்தப்பட்ட, சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிறையில் மாதம் ஒருமுறை திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை மீண்டும் துவக்கவும்,
 
திருச்சி மளிர் தனிச்சிறையில் சிறை வாயில் அனுமதியின் போதும், நீதிமன்றம்  சென்று திரும்பும்போதும் பெண் சிறைவாசிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிடும் கொடுமை தடுத்து நிறுத்தப்பட்டவும், தவறிழைத்த சிறை அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
 
திருச்சி சிறையினுள்ளே இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும், மேல்சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறைவாசி இறந்ததாகவும் போலி ஆவணங்கள் தயாரித்த சிறை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
 
சிறையினுள் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதிப்படுத்தவும்,
 
சிறை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி, வழக்கறிஞர், மனித உரிமைப்போராளிகள் உள்ளிட்டோர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, விசாரணை செய்யவும்,பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கவும்,
 
நீதிபதிகள் போல மனித உரிமை அமைப்புகள் சிறையை பாரவையிட அனுமதி வழங்கவும்,
 
உயர்நீதிமன்றம் உத்தரவுகள் பல இட்ட பின்னரும், குற்றமிழைத்த சிறை அதிகாரிகளுக்கு துணைபோகும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவும்,

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் சிறைவாசிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க அனுமதி அளிக்கவும், சிறைவாசிகளின் உறவினர்கள் உதவிக்கு உடனிருக்க அனுமதிக்கவும்,

சிறைவாசிகளிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,

வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனித உரிமை ஆர்வலர்களே அனைவரும் வாரீர்!

குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்(Citizens Rights Forum) 11, ஏ, டேனியல் அபோட், பேரக்ஸ் காலணி, ஈ.வெ.ரா.சாலை, புத்தூர், திருச்சி-17

கைபேசி: 9443079552, 9894267688

சிறையில் நடக்கும் கொடுமைகளில் சில உங்கள் பார்வைக்கு:

1. பல்வேறு காரணங்களுக்காக சிறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களால் சிறைவாசிகள் கொடுரமாக தாக்கப்படுகின்றனர்.

2. தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமல், ஜட்டியோடும், நிர்வாணமாகவும் தனிமைச்சிறையில் மாதக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர்.

3. தனிமைச்சிறையில் ஜட்டியோடு அல்லது நிர்வாணமாக உள்ளவர்களுக்கு போர்வையோ மற்ற ஆடைகளோ தரப்படுவதில்லை. அந்த அறைகளுக்கு மின்விசிறியோ மின்விளக்கோ கொடுக்கப்படுவதில்லை.

4. தனிமைச்சிறையில் உள்ளவர்களுக்கு உணவு மட்டும் குறைந்த அளவே கொடுக்கப்படும். குடிநீருக்கும் சிறை அறையினுள் கழிவறையில் வரும் தண்ணீரையே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

5. நீதிமன்றம் சென்றுவரும் கைதிகளை கஞ்சா சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி, கிளவுஸ் அணிந்த சிறைகாவலர்கள் ஆசனவாய்க்குள் கைகளை விட்டு சோதனை செய்வார்கள்.

6. கஞ்சா கிடைக்கவில்லை, இன்னும் சந்தேகம் என்றால் நிர்வாணமாக நிற்பவர்களை சிறை மோப்பநாயை விட்டு மோர்ந்துபார், கடி என்று காவலர்கள் கட்டளையிட, நாயும் நிர்வாணமாக நிற்பவர்களை மோர்ந்து பார்த்து நக்கிவிட்டுச் செல்லும்.

7. காயமடைந்து தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டவர்களை (அடிபட்டது வெளியே தெரிந்துவிடும் என்பதால்) உறவினர்களை சந்திக்க மாதக்கணக்கில் அனுமதி மறுக்கப்படும்.

8. அப்படியும் வழக்கறிஞர்கள் மூலம் புகார் ஏதும் கொடுத்தால் சம்பந்தப்பட்ட சிறைவாசிகள் மீது செல் போன், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போடுவார்கள்.

9. புகார் அளிப்பவர்கள் தண்டனை சிறைவாசிகள் என்றால் அவரது பரோல், விடுமுறை, முன்விடுதலை முதலியவற்றில் பழிவாங்க படுவார்கள்.

10. புகார் அளிப்பவர்கள் நிர்வாக காரணம் என்று கூறி நெடுந்தொலைவில் உள்ள வேறு சிறைகளுக்கு நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி மாற்றப் படுவார்கள்.

11. இஸ்லாமிய சிறைவாசிகள் திருச்சி மத்திய சிறைக்குள் இருக்கும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அனுமதி கேட்ட 10க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய சிறைவாசிகள் கொடுரமாக தாக்கப்பட்டு, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர். (இச்சிறையில் 8 க்கும்  மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆறுகால பூஜைகளும், கும்பாபிஷேகமும் தவறாமல் நடைபெறுகிறது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினர் வாரந்தோறும் வெளியே இருந்து சிறைக்குள் வந்து பஜனை சொல்லி தருகின்றனர். கிருத்துவர்கள் மாதம் ஒருமுறை வெளியே இருந்து சிறைக்குள் வந்து திருப்பலி நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.)

12. சிறை பள்ளிவாசால் சிறை அதிகாரிகளால் 19.09.2013 லிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டப்பட்டது. பக்ரீத் அன்று சில சிறைவாசிகளை மட்டும் தொழுகைக்கு அனுமதி அளித்துள்ளனர். பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

13. பல இஸ்லாமிய சிறைவாசிகள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை.

14. மேலும் சிலர் தங்கள் அறைகளில் கூட தொழக்கூடாது என்பதற்காக ஜட்டியோடும், விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகளுக்கான அரைக்கால் டவுசர் அணிவிக்கப்பட்டும் கொடுமைபடுத்தப்படுகின்றனர்.

15. சிறைக்கொடுமைகள் தாங்காமல் பல சிறைவாசிகள் மன நோயாளிகளாக மாறியுள்ளனர், சிலர் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

15. திருச்சி மளிர் தனிச்சிறையில் சிறை வாயில் முதல் அனுமதியின் போதும், நீதிமன்ற சென்று திரும்பும்போதும் பெண் சிறைவாசிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிடுகின்றனர். மாதவிடாய் காலத்தில் அணிந்திருக்கும் ஜட்டி மற்றும் நாப்கின் அனைத்தையும் திறந்து காட்டச்சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைபடுத்தப்படுகின்றனர்.
 
புகார்களுக்கு நடவடிக்கை ஏதுமில்லை:

இந்த கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம், மாநகர காவல் ஆணையர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், உயர் நீதிமன்றம், சிறைத்துறை கூடுதல் இயக்குனர், என அனைத்து இடங்களிலும் புகார்கள் பாதிக்கப்பட்ட பலரால் கொடுக்கப்பட்டும் இன்றுவரையில் தவறிழைத்த சிறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே கொடுமையிலும் கொடுமை.

சட்ட உரிமைகளைப் பொருத்தமட்டில் கைதிகளுக்கும், இதர குடிமக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை. தண்டனைக் காலத்தில் கைதிகளின் இயக்கம் (Mobility) ஒரு குறிப்பிட்ட அளவு முடக்கி வைக்கப்படுகிறதே ஒழிய, மற்றபடி அரசியல் சட்டம் வழங்கும் அனைத்து உரிமைகளும் கைதிகளுக்கும் உண்டு.

சிறைக் கைதிகளின் முன்னாளைய வாழ்வு, அவர்கள் என்ன குற்றத்திற்காக இங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பதெல்லாம் அவர்கள் சிறைச்சாலைகளுக்குள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதற்கான அளவுகோல்கள் அல்ல. சிறைச்சாலைகளுக்குள் எல்லோரும் ஒன்றுதான். சிறை விதிகளுக்குட்பட்டு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் இருப்போர் “நீதிமன்றக் காவலில்” உள்ளனர். இதன் பொருள் அவர்கள் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளனர். பெற்றோர், உற்றார், உறுதுணையர் என யாருமற்ற அவர்களுக்கு, அந்த இடத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உரியது.

நமக்கு அருகில் நாம் வாழும் காலகட்டத்தில் நடைபெறும் இந்தக் கொடுமைகள் குறித்து நாம் அறியாமலும், அறிந்தும் இது குறித்துக் கவலை கொள்ளாமலும் இருந்தோமானால் ஏதோ ஒரு வகையில் நாமும் இந்தக் கொடுமைகளில் பங்கு பெறுகிறோம் என்றுதான் பொருள்.

திருச்சி மத்திய சிறையில் மனித உரிமை மீறல்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மனித உரிமை ஆர்வலர்களே அனைவரும் வாரீர்!

குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்(Citizens Rights Forum)
11, ஏ, டேனியல் அபோட்,
பேரக்ஸ் காலணி,
ஈ.வெ.ரா.சாலை,
புத்தூர்,
திருச்சிராப்பள்ளி – 620 017, தமிழ்நாடு.
9443079552 ,  9894267688

Pin It