அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அவரவர் தாய்மொழி வழி பயில்வதுதான் சரியானது என்பது சமூக அறிவியல் உண்மை. உலகில் பல நாடுகளின் மக்கள் அதை மெய்ப்பித்துள்ளனர். தமிழ்நாட்டிலும் சமூக அறிவியலாளர்களும், கல்வியாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த உண்மையை ஒத்துக் கொள்கின்றனர். தமிழ்வழிக் கல்விக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது.

ஆனால், எவ்வளவு நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் நாளுக்கு நாள் தமிழ்வழிக் கல்விக்கான சாத்தியப்பாடுகள் குறைந்து கொண்டே வருகின்றன என்கிற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது. வெகுமக்களிடம் ஆங்கிலவழிக் கல்விக்கான மோகம் அதிகரித்து வருகிறதே ஒழிய, குறையவில்லை. மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமரும் திராவிடக் கட்சியினர் ஆங்கிலவழிக் கல்விக்கு ஊக்கம் கொடுத்து தமிழ்வழிக் கல்விக்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றனர்.

முற்போக்கு, சனநாயக அமைப்புகளும், ஆர்வலர்களும் தம்மால் இயன்ற அளவுக்கு எதிர்ப்புகளை காட்டினாலும், தமிழ்வழிக் கல்விக்கான போராட்டத்தில் பெரிய வெற்றிகளை சாதிக்க முடியவில்லை. தாய்மொழிக் கல்விதான் - தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்விதான் - சரியானது என்பது சமூக அறிவியல் உண்மை என்றால், அந்த உண்மையை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாமல் இருக்கிறோமே ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? அந்தக் காரணங்களைக் களைவதற்கான வழிமுறைகள் என்ன? என்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம். தவறாமல் கலந்துகொண்டு மேற்சொன்ன கேள்விகளுக்கான விடை காண ஆலோசனை வழங்குங்கள்.

ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்வழிக் கல்வியைச் சாத்தியமாக்குவதற்கான அடுத்தக்கட்ட மிகச் சரியான செயல்பாடுகள் குறித்து அனைவரும் இணைந்து முடிவெடுப்போம்.

நாள் : 09.06.2013 ஞாயிறு
நேரம் : பிற்பகல் 2 மணி
இடம் : பாவாணர் தமிழ்வழிப் பள்ளி வளாகம், அஷ்டலட்சுமி அவென்யூ, பள்ளிக்கரணை, சென்னை - 100

- தமிழ்வழிக் கல்வி பாதுகாப்புக்கான ஆலோசனைக் குழு

தொடர்புக்கு : தந்தை பெரியார் தையலகம், 1/820, அண்ணா சாலை, நெசவாளர் நகர், ஜல்லடியன் பேட்டை, சென்னை 100.

குணா - 9486641586 சிவ.காளிதாசன் -8682854822, பி.டி.சண்முகம் - 9710777547, குழல் - 9710204514

Pin It