கூடங்குளம் அணு உலைகளை மூடக் கோரி கடந்த 438 நாட்களாக இடிந்தகரையில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது மத்திய, மாநில சர்வாதிகார அரசுகள் தேசத்துரோகம், தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட  பொய்வழக்குகள் போட்டும், கடந்த மார்ச் 19 முதல் கூடங்குளம் சுற்றி உள்ள கிராமங்களில் 144 தடையை அமல்படுத்தியும் போராடிய மக்களையும் போராடும் மக்களை சந்திக்க வரும்  மனிதஉரிமை ஆதரவாளர்களைக் கைது செய்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களைக் கொன்றும், போலீஸ் படைகளைக் கொண்டு மிரட்டியும், பெண்களிடம் ஆபாசமாக  நடந்துகொள்வதுடன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கிராமங்களை கொள்ளையிட்டும் வருகின்றன.

இடிந்தகரையின் குரல் இன்று தேச எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கி கூடங்குளம் அணு உலைகளை மூடக்கோரும் போராட்டம்  வலுபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. கூடங்குளம் அணு உலை 1 ல் யுரேனியம் நிரப்பப்பட்டுவிட்டது என்கிறது மத்திய அரசும் அணு சக்தி துறையும். இந்நிலைமைகள்  நாம் அனைவரும் அறிந்ததே.

கூடங்குளம் அணு உலைகளை மூட வேண்டும்; 144 தடையை, பொய்வழக்குகளை, போலீஸ் படைகளை திரும்பப் பெறவேண்டும்; கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; தாக்குதல் நடத்திய போலீஸ் படையினர் தண்டிக்கப்படவேண்டும்  உள்ளிட்டம் கோரிக்கைகளோடு வருகின்ற 29 தேதி அணு சக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மனிதஉரிமை - சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இடிந்தகரை மக்கள் போராட்டத்துக்கு தமிழகத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து எழுதியும் இயங்கியும் வரும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைத்துறையினர் தங்கள் ஆதரவு சக்திகளை, தங்கள் குழுக்களை, தங்கள் வாசகர்களை, தங்கள் முகநூல் குழுவை, தங்கள் வலைப்பக்க குழுவைத் திரட்டி கோட்டையை நோக்கிச் செல்லும் போராட்டக்காரர்களுடன் கரம் கோர்க்க வேண்டுகிறேன்.

- மாலதி மைத்ரி
அணு உலைகளுக்கு எதிரான படைப்பாளிகள்

Pin It