இந்த நூலின் ஆசிரியர் என்னவோ தோழர் இளங்கோவன் கீதா தான். (மாப்ள அவருதான் ஆனா அவர் போட்ருக்கற சட்ட என்னோடது டயலாக் நினைவுக்கு வந்தா நான் பொறுப்பில்லை) அவர் அவ்வப்போது எழுதிய முகநூல் பதிவுகளை நேரில் அவரைப் பார்த்திராத தோழர் ஷமீம் பானு இக்பால் பெரிய நுணுக்கத்தோடும் மெனக்கிடலோடும் தொகுத்திருக்கிறார் பாருங்கள், அது பரிபூரண அன்பினாலன்றி வேறென்ன?

ilangovan geetha bookமுகநூலோடு போய்விடாமல் அச்சிலேற்றியதற்கே தோழர் ஷமீமுக்கு ஒரு சலாம். ஏனென்றால் இந்த நூல் பேசும் பேசு பொருள் அத்தனை காத்திரம். ஆகச் சிறந்த எழுத்தாள மாயையெல்லாம் இல்லாத ஆனால் ஏகப்பட்ட நண்பர்களைக் கொண்ட ஆகப் பெரிய பிரபலமானவர் இவர். நேர்படப் பேசி நேர்மையாய் நடக்கும் மனிதம் மட்டுமே பேசும் மாண்பாளர் இதன் ஆசிரியர்.

இந்த நூலில் காதலையும், கற்பையும், சாதியும்மதமும் குற்றச் செயல்கள், சொத்து ஒரு மன நோய் என்பதையும் நான்கு பகுதிகளாகப் பகுத்து நம்பார்வைக்கு வைப்பதோடு தன் கருத்தைச் சொல்வதில் 'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து' எனும் குறளுக்கேற்ப திடமான சிந்தை தருகிறார்.

பல மாதங்களுக்கு முன்பு முகநூலில் நான் பெயர் முக்கியமா இல்லையா என ஒரு கேள்வியெழுப்பினேன். அதற்கு பலவித பதில்கள் வந்தன. ஆனால் பெயரில் என்ன இருக்கு? என்பதொரு அலட்சியப் போக்கு. பெயரில் இல்லாத சங்கதிகளா? ஒரு மனிதனுக்கு அப்பா பெயர்மீது மட்டுமேயான பெயர்ப்பந்தம் எதற்கு? கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தக்காண பீடபூமியை ஆண்ட தாய்வழிச் சமூக சதகர்ணி மன்னர்களிடம் பெயரில் அம்மாவை முன்னிலைப் படுத்தும் போக்கினைக் காணலாம்.

பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவன் பெயரைச் சேர்ப்பது போலத் தனது பெயரோடு மனைவி பெயரைச் சேர்த்ததில் தொடங்கி பெண்விடுதலையின் சுலப சூட்சுமத்தைச் சொல்கிறார்.

இறையாண்மை பற்றி அன்பர் ஒருவரின் கேள்விக்கான பதிலின் ஒருபகுதியில், கும்பல் கும்பலாய் அப்பாவி மனிதர்களைக் கொலை செய்யும் உபகரணங்களை நீங்கள் புனிதம் என்று போற்றிப் புகழ்வீர்களாக்கும்? என்று அறிவுக்கும் மனிதத்துக்கும் எதிரான வன்முறையைச் சாடுகிறார்.

சங்க இலக்கிய காலந்தொட்டு ஏன் மகேந்திரவர்மன், நரசிம்மவர்ம பல்லவன் காலத்திலும் ஜாதியும் தாலியும் இல்லாமலிருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஜாதி ஒழிந்தாலே சமூகநீதி சாத்தியமென்கிறார்.

சும்மாயிருப்பது சுகமென்றால் இப்போதே சமாதிக்குள் போய்விடவேண்டியதுதானே? எனச்சீற்றத்தோடு சாடி வாழும்போது சவால்களை எதிர்கொண்டு வாழ வேண்டாமா? என முறுக்கேற்றுகிறார்.

காதல் கைகூடாத இளைஞனுக்கு மாற்றியோசிக்கும் சாளரத்தை திறந்துவிட்டுச் செல்கிறார்.

உன் வாழ்க்கை உன் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு இன்வெஸ்ட்மெட் அல்ல எனச் சொல்லவந்த போது மகளின் ஆளுமையை ரசிக்கும் அதேநேரம் மனைவியின் ஆளுமைத்திறனை வசதியாக மறக்கும் ஆணுக்கான சவுக்கடி, பாலியல் சமத்துவப் புரிதல் இப்படியான இயல்பான உரையாடல் அருமையாய் விளக்கப்பட்டுள்ளது. கோபம் பற்றி வள்ளுவர் சொன்னதுபோல சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியால் நாம் பெறுவதைவிட இழப்பதே அதிகமென்று கூறி அதை தவிர்க்கும் வழி சொல்கிறார்.

ஆணாதிக்க சிந்தனையோட சொல்லிடக்கூடாதேன்ற கவனத்தோட சொல்லப்படற ஒரு விஷயம், அந்தந்த வயசுக்கும் அனுபவத்துக்கும் சரின்னு படற நேர்மையோடதான் ஒருத்தரால வாழமுடியும். பருவ வயதில் ஒருவருக்கு நேர்மையாய் பட்ட ஒரு விஷயம் நாற்பதுகளில் நேர்மையில்லை என்று அவருக்கே தோணலாம். பாசாங்கில்லாத வெளிப்படையான துணிச்சல்காரர் என்று ஒரு சினிமா பிரபலம் பற்றிய உரையாடல் இதனூடாக உள்நுழைகிறது.

ஒரு மனிதனின் சுதந்திரமும் தனித்துவமும் பிடுங்கப்பட்டால் மனிதஉரிமை மீறல், அதையே ஒரு குடும்பம் செய்யும்போது புனிதம் தியாகம் என்று இயலாதவர்களின் வாழ்வாதாரம் என மிகச் சிக்கலான பிரச்னையைக் கையெலெடுக்கிறார்.

ஒருவனின் பொருளாதார உயர்வினை வைத்துத்தான் அவன் வாழ்வின் வெற்றி கணிக்கப்படுகிறது என்றால் அது கணிப்பவர்களின் மனநோய் - சமூகத்தின் மன நோய் என்கிறார். உண்மைதானே?

உலகின் ஆகச் சிறந்த உணர்வுகள், அனுபவங்கள், பண்புகள் எல்லாம் பணத்தாலா வருகிறது?

மொத்தத்தில் மனிதநேயம் புரிந்தவர்களுக்கு இந்த நூல் சொல்லும் ஒவ்வொரு அட்சரமும் புரியும். மனிதநேயம் புரியாதவர்களுக்கு எதுவும் புரியாது.

நூலின் பெயர் :வாங்க பேசலாம் செல்லம்ஸ்.

ஆசிரியர் : இளங்கோவன் கீதா

டிஸ்கவரி புக் பேலஸின் படி வெளியீடு.

விலை : ரூ.100/-

செ.விஜயராணிஇராசபாளையம்

Pin It