புத்தகத்தின் பெயர் : நம் நாட்டுப் பெண் அநாமிகா

ஆசிரியர்                       : ஷோபனா பன்னீர்செல்வன்

வெளியீடு                      : மணிமேகலைப் பிரசுரம்

விலை               : ரூ.75/-

மொத்த பக்கங்கள் : 128

மிக அழகிய முன் அட்டைப்படம். அனைவரையும் கவர்ந்திழுக்கும் தலைப்பு. நேர்த்தியான புத்தக வடிவமைப்பு. கண்களை உறுத்தாத அச்சுக் கோர்ப்பு என சகல லட்சணங்களுடன் இப்புத்தகத்தை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டிருப்பது வரவேற்பிற்குரியது. என்னைப் போன்ற தீவிர வாசிப்பாளர்களுக்கு மணிமேகலைப் பிரசுர வெளியீடுகளைத் தேடித்தேடி வாசிப்பதில் அப்படியொரு அலாதி இன்பம். அதை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. நான் சிறுவயதாக இருக்கும் போதிலிருந்து எனக்கும் மணிமேகலைப் பிரசுரத்திற்கும் அப்படியொரு தொடர்புண்டு. இதில் கிடைக்காத புத்தகங்களே கிடையாது என்று சிலாகித்துக் கொண்ட நாட்கள் பலவுண்டு என்றே சொல்லலாம்.

“நம் நாட்டுப் பெண் அநாமிகா” என்ற பெயரில் ஷோபனா பன்னீர்செல்வன் அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை வாசித்தவர்களிடமிருந்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏற்கெனவே ஏராளமான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஒவ்வொரு சிறுகதைக்கும் அற்புதமான தலைப்புகள், கதாப்பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பெயர்கள், ஆங்காங்கே மிளிரும் கவிதை வரிகள். என அனைத்தையும் ஒட்டுமொத்தக் கலவையாய் நூலாசிரியர் முதல்முறையாய் முயற்சித்திருக்கிறார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் தன் கதை மற்றும் கட்டுரையின் மேல் கொண்டிருக்கும் அதீத தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படுகிறது..

இந்நூலின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றபோதும், தமிழக வரலாற்றிலேயே ஏன்! இந்திய வரலாற்றிலேயே, முதன்முறையாக தாய் தந்தையரின் ஆசியுரை, நூலாசிரியரின் என்னுரை, நான்கு அணிந்துரை, இரண்டு வாழ்த்துரை, ஒரு விமர்சனம், நூலாசிரியரின் நான்கு நன்றியுரை, என்று எதையும் விட்டுவிடாமல் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டி அவரவர் புகைப்படங்களுடன் கிட்டத்தட்ட 29 பக்கங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கி ஒரு சிறு நூலை வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறதென்றே குறிப்பிடவேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் பொறுமையுடன் வாசித்து முடித்து பெருத்த எதிர்பார்ப்புடன் உள்நுழையும் போதுதான் இந்நூலாசிரியரின் புத்தக வாசிப்பு அனுபவத்தையும் மற்றும் அவரது எழுத்தறிவின் முதிர்ச்சியையும் ஒருசேர உணரமுடிகிறது. இது சிறுகதைத் தொகுப்பா அல்லது கட்டுரைத் தொகுப்பா அல்லது வளர்இளம் பருவத்தினருக்கான அறிவுரைப் பெட்டகமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

புத்தகத்தின் ஆரம்பம் முதலே தாய் மகனுக்கு ஆற்றும் அறிவுரை, ’நம்மால் நிச்சயம் முடியும்’ என்ற தலைப்பில் இன்றைய இளைஞர்களின் செயல்பாடு, ஒரு கற்பனையான கிராமத்தின் செயல்வடிவம், ஒரு முதிர்கன்னியின் காதல், மகள் எழுதிய கடிதத்திற்கு தாய் எழுதும் அறிவுரைக் கடிதம், ஆங்காங்கே கவிதை வரிகளுடன் கூடிய உணர்வுகளின் வெளிப்பாடு, நல்லதொரு கதைக்கருவுடனும் நகரும் ’முத்துச் சிதறல்கள் என்ற ஒரு சிறுகதை!’, திருமணம் முடித்த கையோடு வேலைநிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்ட கணவனை நினைத்துப் மனைவிபடும்பாடு என்று முதல் பாகம் நிறைவடைகிறது.

இரண்டாம் பாகமான கட்டுரைத்தொகுப்புக்குள் நுழையும் போது அனுப்புநர் பெறுநர் என்றொரு விண்ணப்பக் கடிதமே வரவேற்கிறது. இதை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் நூலாசிரியருக்கு எழுந்திருப்பதை மறுக்கமுடியாது. அடுத்தடுத்த கட்டுரைகளும் கட்டுரையாய் இல்லாமல் ஓரங்க நாடகமாகவும், இடையிடையே ஆங்கில சொல்லாடலுடன்கூடிய உரையாடல்களுடனும் நகர்கிறது,

ஆங்காங்கே தேடிப்பிடித்துச் சொல்லவேண்டிய நல்ல விசயங்களுக்கு நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், வழிநெடுகிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள், இடையிடையே சம்பந்தமில்லாமல் இடைஞ்சல் செய்யும் கவிதைவரிகள், தொய்வுடன் நகரும் கதைக்கரு, கவிதையா கட்டுரையா அல்லது ஓரங்க நாடகமா என புரிந்துகொள்ள முடியாவண்ணம் ஏற்பட்டிருக்கும் ஏராளமான பலவீனங்களை நூலாசிரியர் சற்று நிதானமாய் தவிர்த்திருக்கலாம்.

ஒருசிறந்த நூலுக்கான இயல்பை எட்டாமல் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பொருள் புரிபடாமல் நகரும் முழுமை பெறாத வரிகள் இந்நூலின் தரத்தை இழந்துவிட்டதோ என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது.

நூலாசிரியரின் வேகமும் விவேகமும் கட்டுக்கடங்கா காட்டாறாய் வெளிப்பட்டபோதும் அவரது வாசிப்பு மேன்மேலும் பலப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. எழுத்துவரிகள் இன்னும் முதிர்ச்சி பெறவேண்டும். சிறந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெறவேண்டும் என்பதே என் விருப்பமும்கூட.

- வே.சங்கர்

Pin It