அருமையான, மிக அருமையான நூல் தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”.

இருங்கள், முக்கியமான ஒரு செய்தியை சொல்லிவிடுகிறேன்.

உங்களுக்கு “சீனாவின் முற்றுகையில் இந்தியா” என்றொரு நூலை நினைவிருக்கிறதா? 2009-இல் ஈழ இன அழிப்பை இந்தியா முன்னின்று நடத்திக்கொண்டிருந்த நேரம்.

ஏன் இந்தியா முன்னின்று நடத்தியது என்று சொல்கிறோம்?

thozhar balan bookஇலங்கையின் மீது அரசியல் செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடம் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தவோ, அல்லது மட்டுபடுத்தவோ இந்தியாவால் மட்டுமே முடியும். காரணம் இந்தியாவில் உள்ள தமிழக மக்களும் இந்த மக்களிடையே செல்வாக்கு செலுத்துகிற ஆளும்வர்க்க அரசியல்வாதிகளும் ஆவர்.

இங்குள்ள மக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இயல்பான சமூக உறவுகள் உள்ளன. ஆகவே ஒருவரின் நிலை இன்னொருவர் மீது தாக்கத்தை செலுத்தும். இந்த தாக்கத்தை இந்திய ஆளும்வர்க்கம் தவிர வேறு யாரால் பயன்படுத்த முடியும்?

எப்படி இந்திய ஆளும்வர்க்கம் பயன்படுத்துகிறது?

எப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்நிலையே அதற்கான முக்கிய காரணியாகும். இங்குள்ள மக்களின் வாழ்நிலை என்பது இந்திய கட்டமைப்போடு முழுதாய் முரண்பாடுகிற தன்மையில் இல்லை. அது பேரம் பேசி தக்கவைத்துக் கொள்ளும் நிலையிலே இருப்பதால் மக்கள் இந்திய கட்டமைப்போடு பேரம் பேசுகிற அரசியல் தலைமைகளை சார்ந்தே உள்ளனர். இந்த அரசியல் தலைமைகள் (தேர்தலில் நிற்காத வாய்ச்சவடால் தலைமைகள் உட்பட) அனைத்தும் இந்திய கட்டமைப்பினால் கொழுத்து வளரும் ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஆவார். இவர்கள் ஒருபோதும் தமது வர்க்க நலனின் பொருட்டு இந்திய கட்டமைப்பிற்கு எதிராக போக மாட்டார்கள்.

இந்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தித்தான் இலங்கையின் மீது இந்தியா செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக நடித்து இலங்கை அரசைப் பணிய வைத்தது. அதன்மூலம் விரிந்தப் பொருளாதார நலனை அடைகிறது. இந்த பொருளாதார நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாக ஈழ விடுதலை இருப்பதால் அதை நசுக்கவும் செய்தது. அதன் மூலம் இன்னும் கூடுதலான பலனை அடைகிறது.

எவ்வளவு பலன்கள் தெரியுமா?

அதை நமது ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற நூலிலிருந்தே பார்ப்போம்.

 • இந்தியா ஆண்டொன்றுக்கு 3950 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறது.
 • நாமெல்லாம் சிங்கள வெறியன் என சொல்லுகிற இராஜபட்சேவின் சொந்த மண்ணான கொடவாயாவிலுள்ள கனிம வளங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு தாரைவார்க்கப் பட்டுள்ளது. (சிங்கள வெறியன் இந்திய விசுவாசியாக இருப்பதை பரிசீலியுங்கள்)
 • அதேபோல் சிங்களப்பகுதியான கிரிக்கந்தையின் கனிமவளங்களும் இந்தியாவிற்கே அற்பணிக்கப்பட்டிருக்கிறது.
 • இலங்கையின் கனிம வளங்களை ஆய்வு செய்ய “கல்யாணி ஸ்டீல் கார்ப்பரேசன்” என்ற இந்திய நிறுவனத்திற்குத்தான் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 • 996 ஏக்கரிலான பலாலி விமான நிலையம் இந்திய விமானப் பயன்பாட்டிற்கு மட்டுமென அடிமை சாசனம் செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் பல நூறு ஏக்கர்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 • திரிகோண மலையில் 675 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலம் இந்தியாவின் கையிலுள்ளது. இங்கு சிங்கள அதிகாரிகளுக்குக்கூட அனுமதி கிடையாது.
 • சம்பூர் அனல்மின் நிலையத் திட்டம் இந்தியாவிற்கு. இது வசதிமிக்க துறைமுகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கும் மின் நிலையத்திற்கும் இடையிலான தனி பயன்பாட்டிற்கு விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
 • இலங்கை முழுவதற்கும் 60 ஆண்டு எரிபொருள் தேவையை நிறைவேற்றும் சக்தியுடைய மன்னார் கடற்பகுதி எண்ணெய் படுக்கைகள் இந்தியாவிற்கு.
 • எண்ணெய் விநியோக ஒப்பந்தம் முழுவதும் இந்திய நிறுவனமான ஐ‌ஓ‌சி–க்கு வழங்கப்பட்டுள்ளது.
 • காங்கேசன் துறைமுகமும் சிமெண்ட் ஆலையும் இந்தியாவிற்கு.
 • கடலுக்கடியில் குழாய் அமைத்து மின்விநியோகம்.
 • இரயில் பாதைகள் அமைக்கும் பணி.
 • மோட்டார் சைக்கிள், ஆட்டோ, பேருந்து மற்றும் சுமையுந்து, மருந்து என அனைத்துப் பொருட்களும் இந்திய தயாரிப்புகள்.
 • இலங்கை கடற்பகுதியில் இந்திய மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி. (படகுகளுக்கு தடை என்பதன் பின்னாலுள்ள சூட்சுமம் அறிக)
 • அப்பல்லோ உள்ளிட்ட இந்திய மருத்துவமனைகள்.
 • இவையெல்லாவற்றையும் இன்னும் தீவிரப்படுத்த வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு என்னும் எட்கா (ETCA) ஒப்பந்தம் திணிப்பு.

163 பக்கங்கள் கொண்ட நூலில் கிட்டதட்ட 24 (63 முதல் 87 வரை) பக்கங்களில் “இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீடு” என்ற தலைப்பில் தோழர் பாலன் இதை புள்ளிவிவரங்களோடு விவரித்துள்ளார்.

சரி, நாம் பிரச்சினைக்கு வருவோம். இப்படி இலங்கையில் மேலாதிக்கம் செய்யும் இந்தியாவைக் காப்பாற்றத்தான்  2009-இல் சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா என்றொரு நூலை இந்திய அரசு ஆதரவாளர்கள் கொண்டுவந்தனர்.

எதற்கு?

அதை அப்புறம் பார்ப்போம். இப்போது ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற நமது நூலுக்கு வருவோம்.

சமீபத்தில் ஒரு தோழர் முகநூலில் தோழர் தமிழரசனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். வங்கி கொள்ளை, இரயில் பாதை தகர்ப்பு போன்றவை எல்லாம் ஒருபோதும் புரட்சிகரப் பாதையாக முடியாது என்பது விமர்சகரின் வாதம். விமர்சகர் தீவிரமான ஈழ விடுதலை ஆதரவாளர்; விடுதலைப் புலிகளின் பக்தர்.

அந்த விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் தோழர் பிராபகரனும் ஆரம்பத்தில் இயக்கத் தேவைகளுக்கு என்ன செய்தனர் தெரியுமா? கொள்ளையடித்தனர். தோழர் பிராபகரன் தனது சகாக்கள் சிலருடன் குரும்பசிட்டி என்ற பகுதியில் வட்டித்தொழில் நடத்தும் ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு வெளியே வரும்போது வெளியிலிருந்த தொழிலாளர்கள் இவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கற்களால் தொடர்ந்து தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். வேறுவழியின்றி பிராபாகரனும் தோழர்களும் தங்களது துப்பாக்கியால் இரண்டுத் தொழிலாளர்களை கொன்றுவிட்டே தப்ப முடிந்திருக்கிறது.

அதேபோல விடுதலைப் புலிகளின் முதல் குப்பி கடித்த தோழர் சிவகுமாரும் யாழ்பாணத்தில் புதூர் வங்கியில் கொள்ளையடிக்கும்போதுதான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டார். வேறு வழியின்றி குப்பி கடித்து அவர் மாவீரரானார்.

புலிகள் மட்டுமல்ல, ஈழ விடுதலை இயக்கங்கள் பெரும்பாலும் இயக்க செயல்பாடுகளுக்கு இத்தகைய பணம் கைபற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. அது வங்கிகள் மட்டுமில்லாது அடகு பிடிப்பவர்கள், வட்டித்தொழில் புரிபவர்கள், பெட்ரோல் நிலையங்கள், தனியார் வீடுகள், கோயில்கள் என வசதிபடைத்த எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவையனைத்தும் ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற நூலில் உள்ளவை. நூல் முக்கியமான பல செய்திகளைச் சொல்கிறது.

தோழர் தமிழரசன் இரயிலுக்கு குண்டு வைக்கவில்லை. இரயில் பாதையில் குண்டு வைத்து தகர்த்தார். அதை சுவரொட்டி மூலம் உலகுக்கு தெரியப்படுத்தியதோடு, பக்கத்திலிருந்த இரயில் நிலைய அதிகாரிக்கும் தெரிவித்துவிட்டார். அதன் மூலம் அந்த பாதையில் இரயில்களை அனுமதிக்க வேண்டாமென்று அறிவுறுத்தி விட்டார். அந்த அதிகாரியும் மேலிடத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலிடம் உளவுத்துறையின் வழிகாட்டலில் அந்த தகவலை அமுக்கியதோடு, அந்த பாதையில் இரயில்களை அனுமதிக்கும்படி கட்டளையிட்டது. அதன் மூலம் விபத்து நடக்கவும் மக்கள் பலியாகவும் அதை அடிப்படையாகக் கொண்டு தோழர் தமிழரசனையும் அவரது இயக்கத்தையும் அழிக்க திட்டம் தீட்டியது.

அதுபோலவே விடுதலைப்புலிகள் இயக்கத்தவரை அழிக்க இந்திய உளவு நிறுவனமான ‘ரா’ இன்னொரு ஈழ இயக்கத்திற்கு ஆயுதம் வழங்கியிருக்கிறது. ஆனால் ஆயுதம் பெற்ற இயக்கம் சக இயக்கத்தவரை கொல்வதை விரும்பவில்லை. அதேநேரத்தில் அதை செய்யாதிருந்தால் தாங்கள் உளவுத்துறையால் கொல்லப்படுவோம் என்ற உண்மையும் தெரிந்திருந்தது. ஆகவே, தாங்கள் தப்பி செல்வதற்கு முயற்சித்தனர்.

அய்யோ! நான் சதி அரசியல் பேசுகிறேன்.

மன்னிக்கவும் நானல்ல, நூலின் வாயிலாக தோழர் பாலன் சதி அரசியல் பேசுகிறார்!

ஆனால், அரசு சதி செய்வதில்லையென்று நமது மதிப்பிற்குரியத் தோழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

தோழர் தமிழரசைனை இந்திய அரசு சதி செய்துதான் கொன்றது என்று அழுத்தம்திருத்தமாக ஆசிரியர் நூலில் பதிவு செய்கிறார். ஒருமுறை அவரது நெருங்கிய ஆதரவாளர் மூலம் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்தது; இன்னொரு முறை அவர் வந்து செல்கிற இடத்தை உளவாளி மூலம் மோப்பம் பிடித்து சுட்டுக்கொல்ல முயற்சித்தது என்று விபரங்களை பதிவு செய்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்ல தோழர் தமிழரசனோடும் அவர்போன்ற இயக்கத்தவரோடும் இணைந்து ஈழ விடுதலையை முன்னெடுத்த தன்னையும் தமது அமைப்பின் சகத்தோழரான நெப்போலியனையும் ஈரோஸ் என்னும் அமைப்பு மூலம் கொலைசெய்ய முனைந்தது ரா என்றும்; அதில் தோழர் நெப்போலியன் பலியானதையும் அவர் விளக்குகிறார்.

அரசு போராளி இயக்கங்களில் பலவீனமானதை கைக்கூலி இயக்கமாக மாற்றும் என்பதோடு, கைக்கூலி இயக்கங்களை புதிதாக உருவாக்கவுமான சதிகளைச் செய்யும் என்பதே வரலாறு. இந்திய அரசு கைக்கூலி இயக்கங்களை உருவாக்குவது ஈழத்தில் மட்டுமல்ல இப்போது தமிழ்நாட்டிலும் அவ்வாறு கட்டியுள்ளது என்பதுதான் உண்மை.

என்ன ஆதாரம்?

இப்போது நாம் தொடங்கியப் பிரச்சினைக்கு வருவோம். நாம் இந்திய அரசின் ஆதரவாளர்கள் சீனாவின் முற்றுகையில் இந்தியா என்றொரு நூலைக் கொண்டுவந்ததைப்பற்றி பேசினோமல்லவா? அந்த நூல் ஈழ ஆதரவாளர்களை திசைத்திருப்பவும் அவர்களிடம் போலி ஈழ ஆதரவு இயக்கங்களைக் கட்டவுமே கொண்டுவரப்பட்டது.

இதனால் அரசு சாதித்தது என்ன?

போலி ஈழ ஆதரவு இயக்கங்கள் மக்களுக்கு அரசு மீதிருந்த கோபத்தை ஏர்டெல், இந்து பத்திரிகை என தனிப்பட்ட நிறுவனங்கள் மீதான தற்காலிக கோபாமாக மாற்றி வடித்தன. நாளடைவில் ஈழத்திற்கென நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்ற நிலைமையை உருவாக்கிவிட்டன.

எப்படி?

ஈழத்திற்காக எந்தவொரு முயற்சியை எடுப்பதாக இருந்தாலும் அது இந்திய அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எடுப்பதாகும். ஆகவே அதை எதிர்கொள்ள நாம் பலம்பெற வேண்டும். அதற்கு தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியத் துணைக்கண்டம் தழுவிய போராளி இயக்கங்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

ஆனால், போலி ஈழ ஆதரவு இயக்கங்கள் என்ன செய்தன? இனவாத அரசியல் பேசி, சகோதர தேசிய இனங்கள் மீது வெறுப்பை கட்டமைத்தன. அதன் மூலம் உண்மையில் ஈழத்தை மீண்டும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

சொல்ல மறந்துவிட்டேனே! சதி என்று எதுவும் கிடையாது, போலி ஈழ ஆதரவு இயக்கங்கள் மீதான விமர்சனத்தைப் பரிசீலிக்கக்கூட மாட்டோமென அடம்பிடித்த நமது பெருந்தன்மைமிக்க தோழர்கள் ஒரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள். அதாவது ஈழ இன அழிப்பிற்கு அடிப்படையான காரணம் இந்திய அதிகாரவர்க்கத்தில் செல்வாக்கு செலுத்தும் மலையாளிகளின் சதிதான் என்று போலி ஈழ ஆதரவு இயக்கங்கள் சொல்வதை மட்டும் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நூல் இப்படி...

நமது சமகால அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ளத் துணையிருப்பதோடு, தோழர் தமிழரசனை தத்துவம், அரசியல், அமைப்பு, நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் அறிமுகம் செய்கிறது. சாதி ஒழிப்பிற்கும் வர்க்கப்போராட்டத்திற்குமான இணைப்பையும் சகோதர தேசிய உறவான ஈழ மக்களுக்கு இங்குள்ள மக்கள் இயக்கங்கள் செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையையும் இந்தியா தமது ஆளும்வர்க்க நலனிலிருந்து ஈழத்திற்கு ஒருபோதும் ஆதரவாக நடந்துகொள்ளாது என்ற உண்மையையும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை சக தேசிய இனங்களின் ஆதரவோடே வெற்றிபெற முடியும் என்பதையும் தோழர் தமிழரசன் முன்வைத்ததை பெருமையோடு நூல் விளக்கப்படுத்துகிறது.

தோழர் தமிழரசனின் மூலமாக தமிழக அரசியலை பேசுவதுபோலவே ஈழ அரசியலையும் நூல் தெளிவாக முன்வைக்கிறது. நான் தொடக்கத்திலேயே சொன்னதுபோல் அருமையான, மிக அருமையான நூல் தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”.

வெளியீடு       : தோழர் பதிப்பகம்

தொடர்புக்கு     : 00447753465573

                  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- திருப்பூர் குணா

Pin It