11ம் ஆண்டில் கீற்று!! கட்டுரையை படித்தேன். உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி தோழர். ஒன்று இரண்டு வரிகளில் அக்கட்டுரையின் கீழேயே வாழ்த்து பதிவு செய்துவிட்டு சென்றுவிடும் பணி அல்ல நீங்கள் செய்திருப்பது. எனவேதான் ஒரு வாழ்த்து மடல்.

பொதுவாக சமூகப்பணியில் இருப்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், இயக்கம் நடத்துபவர்கள் என்று யாராக இருந்தாலும் 99 சதவிகிதம் பேர் அதை மட்டுமேதான் பணியாக செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வருமானத்திற்காக ஒரு முழு நேர பணியாளராகவும் இருந்துகொண்டு, காலையும் மாலையும் இப்படி சமூகப்பணி செய்வது என்பது சாதாரண விசயமே அல்ல. முழு நாளும் வேலைபார்த்துவிட்டு மீண்டும் மாலையில் மடிக்கணினியை வைத்துக்கொண்டு பலமணிநேரம் செலவிடுவதென்பது சாதாரண வேலை இல்லை. எந்த அளவிற்கு அது உடல் உளைச்சலையும், மன உளைச்சலையும் தரும் என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், வெறும் உடல் உழைப்பு சார்ந்த வேலை என்றால் கூட அது உடலுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். ஆனால், மடிக்கணினியை நாள் முழுவதும் பார்த்து வேலை செய்வது எவ்வளவு உடல் உபாதைகளை உண்டுசெய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல இது "சொகுசு" அல்ல, "முற்றும் முழுவதும் உடல் மற்றும் மனநலக் கேடு". சொகுசு என்று நீங்கள் கூறுவது உங்களின் பெருந்தன்மை. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு செய்யும்பொழுது, நீங்களே குறிப்பிட்டிருப்பதைப் போல, குடும்ப உறவுகளுடன் நேரம் செலவு செய்யமுடியாமல் போவது குடும்பத்தில் உறவுகளிடையே எவ்வளவு பெரிய இறுக்கத்தை ஏற்படுத்தும் (முக்கியமாக துணைவியார்) என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

இவற்றையெல்லாம் தாண்டி பதினொரு வருடங்கள் தடையில்லாமல் நீங்கள் உங்கள் உழைப்பை கீற்றிற்கு செய்திருப்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது தோழர். சமூகப்பணியில் ஈடுபடுபவர்களுக்காவது அவ்வப்போது அங்கீகாரங்கள் கிடைக்கும் (துண்டறிக்கையில் பெயர், புகைப்படம், அனைவராலும் அறியப்படுவது என்று பல) எனவே அவர்களால் அந்த அங்கீகாரம் கொடுத்த மகிழ்ச்சியுடன் மீண்டும் தொடர்ந்து பணி செய்ய முடிகிறது. தக்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய சோர்வை நிச்சயம் ஏற்படுத்தும். ஆனால், திரைமறைவில் நீங்கள் செய்த பணிக்கு உங்களுக்கு தக்க அங்கீகாரம் கிடைத்திருக்காவிட்டாலும், எந்த எதிர்பார்ப்புமின்றி, சோர்வின்றி தொடர்ந்து இத்துனை ஆண்டுகள் பணி செய்திருப்பது பெரிய பாராட்டுதலுக்குரியது தோழர். உண்மையிலேயே உங்களை மனதார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.

உங்களின் இந்தப்பணி எவ்வளவு பேருக்கு எவ்வளவு அறிவை புகட்டியிருக்கிறது என்பதை எண்ணுகிறேன். இந்த அளவிற்கு தமிழில் என்னை எழுத வைத்ததே கீற்று செய்த பெரிய சாதனை என்றுதான் கூறவேண்டும். பெண்ணியம், தலித் அரசியல், தந்தை பெரியார், அம்பேத்கர் என்று பலப்பல விசயங்களை ஒரே இடத்தில் அறிந்துகொள்ள எனக்கு வாய்ப்பைக் கொடுத்தது கீற்றுதான். எனவே உங்களுக்கு நான் பெரிதும் கடமைபட்டுள்ளேன் தோழர். எவ்வித கருத்தியலும் இல்லாத ஒருவர் ஆரம்பப்புள்ளியில் இருந்து எளிதாக கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் துவங்க வேண்டியது கீற்றில்தான். அப்படித்தான் எனக்கும் கீற்று கற்றுக் கொடுத்துள்ளது. எண்ணிலடங்காதவர்கள் என்னைப் போலவே கீற்றின் மூலம் பயன்பெற்றிருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை தோழர்.

அறிவைப் புகட்டுவதோடு கீற்றின் சிறப்பு நின்றுவிடவில்லை. அறிவை, செய்திகளை, சிந்தனைகளை, பரிமாறிக்கொள்ள பல சிந்தனையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பெரிய மேடை அமைத்துக் கொடுத்ததில் கீற்று ஒரு சிறப்பான முன்னோடி. எப்போதுமே சிறு பத்திரிக்கைகள் நடத்துபவர்களால் அதற்கென்று தனியாக வலைதளத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும். அந்தக் குறையை முற்றிலும் நீக்கிய பெருமை கீற்றையே சாரும். இது சிறு பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு பெரிய வாசகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாது என்பதே உண்மை. இவ்வளவு பெரிய பிரசுரிக்கும் மேடையை, மிகச்சிறியது முதல் பெரிய இதழ்கள் வரை எவ்வித பாகுபாடும் இல்லாமல் கீற்று பிரசுரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கீற்றின் இவ்வனைத்து அம்சங்களும் ஒரு வாசகனுக்கு இலவசமாக கிடைக்கின்றது என்பது எவ்வளவு பெரிய சிறப்பு!

கீற்றின் பாதையில் சில முரண்பாடுகள் இருந்ததையும் மறுக்க இயலாது. கீற்றை முடக்க பல வித சதிகளும் அரங்கேறின. அப்போதும்கூட மிக நேர்மையாக, எதிர் எதிர் கருத்துக்களை, கடுமையான விமர்சனங்களைக் கூட மூடி மறைக்காமல் அப்படியே வெளியிட்டது கீற்றின் சிறப்பு. எப்படியாகினும் அவற்றையெல்லாம் கடந்து இப்போது பதினொன்றாம் ஆண்டில் கீற்று கால் பதித்திருப்பது அதன் நேர்மைக்கு கிடைத்த வெற்றியே!!

இவ்வளவு சிறப்பான பணியைச் செய்துவிட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை தியாகம் செய்துவிட்டு, "நான் ஒன்றுமே செய்யவில்லை" என்று மிகத் தாழ்மையாக நீங்கள் அக்கட்டுரையில் பதிவு செய்திருப்பதுதான் உச்சம். உங்களின் இப்பணி இன்னமும் நீண்ட நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை நன்றிகளை உரித்தாக்குகிறேன் தோழர். உங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், குறிப்பாக உங்கள் துணைவியாருக்கும் என் வாழ்த்துக்கள்!!

- தேன்மொழி

Pin It