ஹைக்கூ ஒரு புதுமையான கவிதை வடிவம். ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்குத் தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்குப் பல செல்லப்பெயர்கள் உண்டு. சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்து மாறுபட்டது ஹைக்கூ. மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.

கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூக். கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.

ஹைக்கூ எளிமையானது இனிமையானது. இந்த எளிமைதான் ஹைக்கூக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது. கவிதை எல்லோருக்கு மானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் மிகுதி. அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் 80களுக்குப் பிறகுதான் தமிழில் ஹைக்கூத் தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 30 ஆண்டுக்கால வரலாறுதான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது என்றாலும் அச்சப்பட நாம் யார்? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.

கவிஞர் அவ்வை நிர்மலா, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியப் பணியோடு பல நூறு கவிஞர்களையும் பேச்சாளர்களையும் மாணவியர்களிலிருந்து உருவாக்கி வளர்த்த பெருமை அவருக்குண்டு. இவர் சிறந்த கல்வியாளர், ஐந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மட்டுமன்றிப் பிரஞ்சு, இந்தி, தெலுங்கு, மராட்டி முதலான மொழிகளைப் பயின்றவர். கவிதை, நாவல், சிறுகதைகள், நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ச்சியாக நூல்களை எழுதி வெளியிட்டு வருவதோடு மிகச்சிறந்த ஆய்வாளராகவும் திகழ்பவர். அவ்வையார் கல்லூரியில் நான் சில மாதங்கள் பொறுப்பு முதல்வராகப் பதவிவகித்த காலங்களில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து அவர் ஒருங்கிணைந்;து நடத்திய கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் அவரின் ஆளுமைத் திறனுக்குத் தக்கதோர் சான்றுகளாகும்.

கவிஞர், அணுத்துளி என்ற இந்தக் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைப் பொதுவில் சென்ரிய+ என்றழைப்பது பழக்கம்.. சென்ரிய+ என்பது சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் பல சென்ரியூக்களும் சில ஹைக்கூக்களும் உண்டு. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஹைக்கூக் கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை விரும்புவது இல்லை. தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் கவிஞர் அவ்வை நிர்மலாவும் தமது கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.

அணுத்துளி:

இந்நூல் இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணைச் செய்திகளையும் பாடவும் செய்கிறது சாடவும் செய்கிறது. கவிஞர்களுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது. அவர்கள் எதையும் சாடலாம், பாடலாம்.

• ஒவ்வொன்றாயத் தேடி
சில்லறைகள் சேர்ந்த உண்டியல்
ஹைக்கூ நூல்

வீட்டிலிருக்கும் உண்டியலில் அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் காசுகளை ஒவ்வொன்றாய் இட்டுச் சேமிப்பதைப்போல் ஹைக்கூக் கவிதைத் தொகுதிகளிலும் அவ்வப்போது எழுதிய கவிதைகளை ஒவ்வொன்றாய் இட்டு நிரப்பித் தொகுப்பாக்குகின்றோம் என்பதனை இக்கவிதைச் சுட்டுகிறது. ஹைக்கூ கவிதைகள் ஒவ்வொன்றும் வேறுவேறு சூழல்களில் வேறுவேறு மனநிலைகளில் எழுதப்படுகின்றன என்பதனால் இத்தகு தொகுப்பிலுள்ள கவிதைகளை நாவல் படிப்பதுபோல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுதல் கூடாது. ஒவ்வொரு கவிதையாகப் படித்து அறிந்து உள்வாங்கி அனுபவித்தல் வேண்டும்.

இந்திய அரசியல், இன்றைய கவிஞர்களிடம் படும்பாடு உண்மையில் பரிதாபகரமானது. அரசியல் ஒரு சாக்கடை, படித்தவர்களும் பண்பாளர்களும் அதன் பக்கம் போகவேகூடாது. அதுகுறித்து வெளிப்படையாகப் பேசவும் கூடாது என்றிருக்கும் சராசரி இந்தியப் பொதுப்புத்திக்குள் கவிதைகள் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து உயிர்வாழ்கின்றன. இன்றைய கவிஞர்களுக்கு அரசியல் விமர்சனங்கள் தண்ணீர் பட்டபாடு. கவிஞர் நிர்மலாவும் இத்தொகுதியில் இந்திய அரசியலை கவிதைச் சவுக்கெடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார். எத்தனை படைப்பாளிகள் விளாசி என்ன பயன்? கடைசியில் நாம்தான் ஒதுங்கிப் போகவேண்டியிருக்கிறது. கீழ்க்காணும் கவிதைகளைக் கவிஞர் நிர்மலாவின் அரசியல் சாடல்களுக்குச் சான்றாகக் காட்டலாம்.

• நாளைய கொள்ளைக்கு
இன்றைய இலஞ்சம்
ஓட்டுப்பணம்

• தர்க்கமிடும் மக்களுக்குத்
தற்காலிக வாயடைப்பு
இலவசங்கள்

• ஈழத் தமிழரின்
ஓயாத் துயரம்
இந்திய அரசியல்

• இந்திய வாகனத்தில்
எத்தனையோ டயர்கள்
ஜாலியன் வாலாபாக்

• ஆட்சி மாற்றம்
மக்களுக்குக் கட்டிக்கொடுக்கிறது
ஆகாசக்கோட்டை

இவை உதாரணங்கள் தாம். தொகுப்பினுள்ளே மிகப்பல கவிதைகள் இதே தொனியில் இன்றைய இந்திய அரசியலை விமர்சனம் செய்கின்றன.

வாழ்க்கை குறித்த அச்சம் மனிதர்களை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கின்றது. இந்த அச்சம்தான் சோதிடமாக, வாஸ்துவாக, குறிகேட்பதாக, மூட நம்பிக்கைகளாக, கடவுள்களாக நம்மைச் சூழ்ந்து நம்வாழ்க்கைத் தீர்மானிக்கும் அசுரசக்திகளாக வலிமை பெறுகின்றன. கவிஞர் நிர்மலா பகுத்தறிவுச் சிந்தனையாளர், இத்தகு அச்சங்களிலிருந்து விலகியவர். பூனைக் குறுக்கே போனால் ஆகாது என்ற நம்பிக்கை நம்மிடையே நெடுங்காலமாக நிலவிவருகிறது. இந்த நம்பிக்கையை ஒட்டியது பின்வரும் கவிதை.

• காலையில் கண்ணில்பட்ட
மனிதனைப் பழிக்கிறது
அடிபட்ட பூனை

பூனையைப் பழிக்க நமக்கு உரிமை இருக்கிறபோது, காலையில் எதிர்பட்ட மனிதனின் அபசகுணம் குறித்து அடிபட்ட பூனை ஏன் பழிகூறக்கூடாது? என்று கவிஞர் நையாண்டி செய்கிறார்,

அணுத்துளி என்ற இத்தொகுதிக்குள் ஜப்பானிய ஹைக்கூவை நினைவுபடுத்தும் சில கவிதைகளும் உண்டு. இத்தகு ஹைக்கூக்கள் இயற்கை தரும் பரவசத்தில் நம்மைக் கரையச் செய்வன. பின்வருவன ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை பாNஷh கவிதைகளை நினைவுபடுத்தும் சிறப்புடையன.

• விரல் நுனிகளில்
கசியும் கொம்புத்தேன்
புல்லாங்குழல்

• உழவனின் வியர்வைக்குத்
தலைதாழ்ந்து வணக்கம்
நெற்கதிர்

கவிஞர் அவ்வை நிர்மலாவின் அணுத்துளி நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மைக் கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நிறைவாகக் கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.

• வெடிக்கக் காத்திருக்கும்
கன்னிவெடி
கவிதை

நல்ல சமூக அக்கறையோடு படைக்கப் பட்டிருக்கும் அணுத்துளி கவிஞர் அவ்வை நிர்மலாவின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு. நல்ல தமிழ் நூல்களைப் போற்றிப் பாராட்டும் தமிழுலகம் இந்நூலையும் உவந்து ஏற்கும்.

Pin It