வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த, அந்த வனமும் நீண்டு நெடிந்து பரந்திருந்தது. விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது. ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், ‘காடுகொன்று நடாக்கிய’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது. மலைகளை ஒட்டியிருந்த சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது. வந்தேறிகள் அத்தோடு நிற்கவுமில்லை. குன்றுகளில் புகலிடம்தேடி இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது மலைத்தாரம் (புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை தொடர்ந்து நிகழ்த்தியது. அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே இலக்கியங்கள் பாடின. இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள் அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக்கு ஏற்றுமதியானதை தொல்லியல் சான்றுகளோடு பறைசாற்றுகிறது.

lakshmanan's book sappe kokaluஅதற்குப்பிறகும் காலனிய காலத்திலும் 1800 க்குப்பிறகும், தேயிலை, புகையிலை காப்பி தேக்கு என நவீன மலைத்தாரங்களுக்காக இம்மலைமக்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட துயரம் வனமேலாண்மை என்ற பெயரால் இன்றுவரை தொடர்கிறது.

மெக்கன்சி சுவடிகளும், ஜான்சலிவன் குறிப்புகளும், ஜேம்ஸ் வில்கின்ஸ் பிரிட்டீஸ் மேனுவல்களும் கோயமுத்தூர் கெஜட்டீஸ்ளும் இம்மலைகளின் மீதும் இம்மலைமக்களின் மீதும் திணித்த வன்முறைகளை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கொங்கர் தலைவன் என போற்றப்பட்ட பல்வேறு மன்னர்கள் தொடங்கி இன்றைய மாப்பியாக்கள் வரைக்கும் அதற்கு சாட்சியாக இருப்பதை பல்வேறு இடங்களில் லட்சுமணன் நமக்கு உணர்த்திக்கொண்டே போகிறார்.

தோற்றவர்களின் வரலாறுகள் பாடப்பெறுவதில்லை... வன்முறைகளின் மூலமும் அடக்குமுறைகளின் மூலமும் வென்றவர்களுடைய வரலாறுமட்டும் இதிகாசமாக இலக்கியமாக பாடப்பெறும் என்கிற அவநிலையை மாற்றி ஆதி தொல்குடியினரான இருளர் என்ற பெயரை சமூக இலக்கிய வரலாற்று தளங்களில் உரக்க ஒலிக்கச்செய்யும் பணிகளில் ஒடியன் கவிதை தொகுப்பும் சப்பெ கொகாலும் அசாதரணமான பணியை செய்திருக்கிறது என்பது மிகையில்லை.

வருங்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் தலித் இலக்கியம், பக்தி இலக்கியம், சூழல் இலக்கிய வகைகளின் தொடர்சியாக பழங்குடி இலக்கிய வகையில் லட்சுமணின் மேற்கண்ட படைப்புகள் முன்னத்தி ஏராக இருக்கும்.

பூவிலியர் , மாவலியர், காவிலையர், வேட்டுவர், வேடர், குரும்பர், குன்றவர், நாகர், எயினர் பல்வேறு தொல்பழங்குடியினர் கோவை சார்ந்த கொங்குநாட்டில் வாழ்ந்தனர் என்ற குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் கிடைக்கிறது. இன்றைய கோவை மாவட்டத்தின் மேல் கொங்கில் இருளர், காடர், மலசர், முதுகர் என நான்கு பழங்குடியினர் இன்றுவரை வாழ்ந்துவருகிரார்கள். இவர்களுள் கோவை மாவட்டத்தின் தொல் பழங்குடியினராக இருளர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கலாம், என்று காப்பாசியர் டாக்டர் மகேசுவரன் தெரிவிப்பதை மனதில் கொள்ளவேண்டும்.

தமிழ்நாடு பழங்குடிமக்கள் சங்கத்தின் அட்டவணையின் கீழ் உள்ள முப்பத்தி ஆறு பழங்குடியினர்களுள் பதினான்கு இனங்கள் கொங்குப்பகுதியில் வாழ்ந்துவருகின்றனர். இதில் ஆறு இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றது. அதில் முதலிடத்தில் உள்ளது இருளர் இனம் . 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இவர்கள் எண்ணிக்கை 10598 இவர்கள் சிறுவானி வெள்ளியங்கிரி சோழக்கரை ஆனைக்கட்டி பாலமலை உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதி எனப்படும் குடியிருப்புகளில் வாழ்ந்துவருகின்றனர். சாடிவயல் சீங்கபதி போரத்தி பொட்டப்பதி சின்னாம்பதி தூவைப்பதி என இப்பகுதிகளில் சில குப்பே சம்பே வெள்ளகெ கரட்டிக கொடுவே புங்க குறுநகே பேராதர குப்பிளி உப்பிளி வெள்ளே ஆறுமூப்பு என 12 குலங்கள் இவர்களிடையே உள்ளது.

இருளான நேரத்தில் பிறந்ததால் இருளர் என இவர்கள் வாய்மொழி கதைகள் கூறினாலும், இவர்களின் அடர்ந்த கரிய நிறம்தான் இவர்களுக்கு இப்பெயர்வர காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இவர்களின் இனப்பெயருக்கு ஏற்றார்போல கரிய நிறம் உடையவர்களாகவும் குட்டையான உருவமும் சற்று தடித்த உதடுகளும் கருமையான தலைமுடியும் கொண்ட இவர்கள் ஆஸ்திரேலிய இனக்குழுவகையினர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவாரை என்ற ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்த கண்டத்துண்டு ஆசிய நிலப்பரப்பில் மோதியதால், இந்தியாவின் மேற்கு பீடபூமி பகுதியில் ஏற்பட்ட ஏற்றத்தால், தற்போதைய மேற்கு தொடர்சி மலை உருவாகி இருக்கலாம் என்று மியாமி பல்கலைகழக புவியல் ஆய்வாளர்கள் பேரன் மற்றும் ஹாரிசன் ஆகியோர் கருதுகின்றனர்.

மேற்கு தொடர்சி மலை இருளர்களின் வேட்டை நடன பாடலும் திராவிடப்பழங்குடிகள் என அறியப்பட்ட ஆஸ்திரேலிய பழங்குடிகளின் வேட்டை நடனமும் ஒத்திருப்பதை தம் தொடர்கள ஆய்வின்போது ஆசிரியர் கண்டறிந்ததையும் குறிப்பிட்டதையும் நாம் நினவில் கொள்ளவேண்டும். மத்திய இந்தியாவின் கோண்டு சுமத்திரா தீவுகளின் பிரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அபார்ஜின் பழங்குடி வரிசையில் மேற்கு தொடர்சிமலைகளின் இருளர்களும் ஆதி திராவிட பழங்குடி மக்களே என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

இவர்கள் 1600 கி மி தூரமும் 120937 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு விரிந்து 39 கானுயிர்காப்பகங்களும் 5000 வகையான தனித்துவம் மிக்க இங்கே மட்டும் வளரக்கூடிய தன்மையுடைய அபூர்வ தாவரங்களும் 134 வகையான பாலூட்டிகளும் 508 பறவை இனங்களும் 325 வகை அரிய உயிரினங்களும் வாழும் பகுதிகளையும் கிருஷ்ணா கோதாவரி வைகை குந்தியா என்ற ஆறுகளின் பிறப்பிடமாகவும் உயிர்ப்பிடமாகவும் உள்ள மேற்கு தொடர்சி மலையையும் அந்த மலையை சார்ந்த பகுதிகளின் மைந்தர்கள்.

இருளர் மொழியிலேயே வந்த லட்சுமணன் முதற்படைப்பு ஒடியன் இலக்கிய மேற்தட்டு அறிவு ஜீவிகளின் பிடரியைப்பிடித்து உலுக்கியது. ஆனாலும் கனத்த மெளனமும் புரிதலின் சிரமமும் காரணமாகக்காட்டப்பட்டது. அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

"எனக்கு அறிமுகமான இருளர் பழங்குடிகளிடம் விசயங்களை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்துவதற்கல்ல மேலும் அவர்களிடம் கேட்டதை கேட்டபடி எழுத்துவடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைமுறையைக்கொண்ட பழங்குடிகளின் சிந்தனைப்போக்கை தமிழ்படுத்தலாம் ஆனால் அந்த உணர்வுகளை அவர்களின் மொழியின்றி பதிவு செய்ய முடியுமாவென்று எனக்கு தோன்றவில்லை இது தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது பழங்குடிகளுகென்று மொழிகள் இருக்கிறது அவை நமது தமிழ்போலவே அன்பையும் வெறுப்பையும் நேசத்தையும் வளமையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும் ஆழமும் கொண்டவை மேலும் அழிந்து வரும் அம்மொழியைகாக்கும் ஒரு கடமை நம்மிடம் இருக்கிறது"

ஒடியன் கவிதைத்தொகுப்பிலிருந்து, இருளர்கள் மொழியில் தூங்கு என்பதை ரொங்கு எனவும், உரல் உலக்கை என்பதை ரல்லு என்றும் லக்கேத்தண்டு என்றும், இறங்கு என்பதை றாங்கு என்றும் வழங்குவது அகரம் இகரம் குறைந்த தமிழ் சொற்கள் போலவே உள்ளது விளங்கும் அழைத்துவா –ன்பதில் அகரம் கெட்டு லெத்துவா என்று ‘ழை’ கெட்டு ‘லெ’யாகவும் திரிந்து லெத்துவா என்றாகிறது. கூப்பிடு தூங்கு என்ற நடைமுறை தமிழைக்காட்டிலும் அழை உறங்கு என்ற பண்பட்ட தமிழின் சாயல் இம்மொழியில் இயல்பாக புழங்குவது சார்தணமானதுதானா?

''இதாவே பெண்ரீ'' என்பது இருளப்பெண்களை குறிக்கும் சொல் இதனை அம்மா பெண்டிர் எனக்கொண்டால் தகப்பனுக்கு அம்மான் என்ற அடிப்படையில் பிறந்து, அம்ம என்றும் அம்மான் என்பதன் அடிப்படையில் பிறந்து அம்ம என்றும், அண்னனுக்கு தமையன் என்பதிலிருந்து வந்த அய்யா என்றும், அக்காருக்கு தமக்கை என்பதிலிருந்து அக்கேச்சி என்றும் புழங்குவதிலுள்ள வேர்ச்சொல்கள்... இவர்கள்தான் கொங்கு நாட்டின் ஆதிதொல் பழங்கால தமிழர்கள் என்பதற்காக சாட்சியாக மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு இருள பகுதியிலும், ஊர்மூப்பன், மண்ணுக்காரன் குறுதலை வண்டாரி குருவன் என ஐந்துபேர் பட்டம் பெற்று ஊராட்சி செய்தது ராஜ ராஜசோழன் பட்டையங்களில் உள்ளது.

லட்சுமணன் தனது இடவிடாத பத்தாண்டுகளுக்கும் மேலான சவாலான களப்பணிகளால் சப்பே கொகாலுவை தந்துள்ளார், அதுவும் இதுகாறும் பழங்குடிகளின் வாழ்வியலை பண்பாட்டை சலிப்பூட்டும் கட்டுரைவடிவிலும் குறிப்புகள் வழியிலும் பார்த்துவந்த நமக்கு அதைத்தாண்டி கலைவடிவமாக தந்துள்ளார் இது தமிழ் இலக்கியத்துக்கு புதிதான வகையினதாகும்

சப்பெ கொகாலுவில் துண்டு மல்லிகை தொடங்கி வெள்ளிங்கிரி சாமியோ வரைக்கும் 45 இருளர்களின் பாடல்களில் சிறு சிறு புனவுகளின் மூலம் பழங்குடிகளுக்கான வரலாற்றை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார்.

சப்பே கொகாலு… குலப்பெருமைக்காக புதைக்கப்பட்ட பல்வேறு நாட்டார் மரபு குலசாமி வழிபாட்டுக்கதையை போன்ற பாடலில் துவங்கி மல்லன் மல்லி இருளர்களின் தொன்மக்கதைகளைச் சொல்லி ஆதிதாய்தெய்வ இயற்கை சார்ந்த வழிபாட்டுக்கதைவழி கடந்து தந்தை வழிபாட்டுக்கு போகும் காரையன் மெருகனின் வைணவக் கிளை கதையோடு நின்று காரமடையும் கரட்டிகளி குகையும் (வெள்ளிங்கிரி) அந்நியமாகிப்போவதுடன் முடிவடைகிறது.

இந்த ஒன்று முதல் நாற்பத்தைந்து பாடல்களுக்கு இடையே இருளர்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகால வாழக்கை அனுபவப்புதையல்களை வலிகளை வன்முறைகளை களவு வாழ்க்கை இன்பங்களை சமயச்சடங்குகளை இன்னும் பல்வேறு தளங்களை மிகவும் நுட்பமான கள விரிவுகளுடன் சொல்கிறார்.

மசாறுக்குருவி ஆரம்பித்து பிருக்கி செம்பூத்து தோல்பக்கி பசிலி பாறு சகுணாக்குருவி தொட்ரு ஆகிய காட்டுபறவையினங்கள்
குத்தன் குல்லன விருகன் குந்திரிக்கே பெருநரி போன்ற காட்டு விலங்கினங்கள்
நேரமரம் காகே டாகு சுன்றிப்பூ செரகுச்செடி வெச்சா கந்தமரம் போன்ற காட்டு மரங்கள்....
ரியா கசங்கு கவாலைக்கசங்கு வள்ளிகசங்கு காட்டுகிழங்கு வகைகள்....
இது போன்ற வனம்சார்ந்த மிகவும் நுட்பமான கலைசொற்களை தேர்ந்த களமாடிகளால் மட்டுமே கையாளமுடியும்.

லட்சுமணன் இந்த கலைசொற்களைகொண்டு இருளப்பழங்குடிகளின் மொழி அகராதி ஒன்றையும் அளிப்பாரேயானால் அது இம்மக்களின் இயறகைப்பயன்பாயன்பாட்டு அறிவையும் மொழியினையும் அறிவதோடு தமிழ் இலக்கிய அறிவுசார் தளத்தில் மூன்றாவது அதிர்வையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆத பூத ஆத்தா வை படிக்கிற நொடியிலேயே ஏனோ ஆதி பகவானை நினைவுக்கு வந்து போகிறது.

ஆதி பழங்குடிகளின் மக்களின் பன்றிவேட்டை பற்றிய களவிவரனை நுட்பம் நேரிடையான படக்காட்சிகள் போன்றுதான் அமைத்திருக்கிறார் கேசவரெட்டியின் சாகித்யாஅகதாமி விருது பெற்ற தெலுங்குச்சிறுகதை அவன்காட்டைவென்றான் போலவே இதுதான் தமிழின் முதல் பன்றிவேட்டை குறித்த மிகச்சிறந்த நுட்பமான பதிவு என்று நினைக்கிறேன்.

பேரையன் கல்வெட்டு- இதை எந்த ஒரு காரணத்துக்காகவும் சமரசத்துக்காக்வும் எளிதில் கடந்துபோகமுடியாத அற்புதமான பதிவை செய்துள்ளார் பேரையன் என்ற மூப்பன்தான் பேரூரை ஆட்சி செய்ததாக இருளர்களிடத்தில் ஒரு பாரம்பரியக்கதை நிலவி வருகிறது மேலும் அவர்களுடய குலமான பேராகரகள் பேரமூப்பனின் வாரிசுகள் என்ற நம்பிக்கை இன்றும் அவர்களிடத்தில் வேரூன்றிஉள்ளது. சோழன்பூர்வபட்டயமும் அவ்வாறே சொல்கிறது. பேரூர் தலபுராணம் கொஞ்சம் மாற்றி பேரூரில் இருந்த பேரமூப்பனின் பட்டியில் ஒரு நாள் மாட்டின் கல்பட்டு புற்றில் இருந்து ரத்தம் வந்ததாகவும் அதை போய் பார்த்தபோது பட்டீஸ்வரர் காட்சி யளித்தாதாகவும் கூறுகிறது. லட்சுமனன் இந்த தொன்மங்களையெல்லாம் இணைத்து அற்புதமான புனைவின் மூலம் அவர்களின் கடந்த தலைவனை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார்

இவரது புனைவில் அந்த புற்று கைப்பற்றப்பட்டு அங்கு கோவில் எழுப்பியதாகவும் பேரையன் தனது குடிகளை கூட்டிகொண்டு மேற்கே சென்றுவிடுவதாகவும் இருளர்களின் நனவிலியில் இருக்கும் வரலாற்றுத்துணுக்கை அனாவிசயமாக தொட்டுப்போகிறார். இருளர்களின் இடப்பெயர்வு அத்தியாயம் இங்கிருந்தே துவங்குகிறது.

சோழன் பூர்வப்பட்டயமும் கொங்குமண்டல சதலமும் கொங்கு தேசராசாக்கள் கதையும் மேன்மை கொள் சைவநெறி விளங்க வெகு வீரமாக பதிவு செய்துள்ளார். செவனன் - சேவூர். சூரன் - சூலூர், இதுபோலவே பல்லன் அவினன் மன்னி -அன்னூர் கீரன்-கீரனூர் நடுவன்-நடுவன்பதி கோவை-கோவன் துடியலூர்-துடியன் கவையனூர்- கோயில்பாளையம் – என சைவம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி தனது பெருந்தெய்வங்களுக்கு கோவில்களைக்கட்டியது. இன்றுவரை மேற்கூறிய இடங்களில் உள்ளசிவன்கோவில்கள்வாயிலாக அறியலாம்.

இதன் உச்சகட்டமாக பழங்குடியின் தாய் தெய்வம் வந்தேறிகளின் குலதெய்வமாக்கப்பட்டு கோவையின் காவல்தெய்வமாக்கப்பட்ட குருதி தோய்ந்த வரலாற்றை கோவன்பூர்வப்பட்டயமாக காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.. சோழன்பூர்வப்பட்டயம் என்னும் குருதி தோய்ந்தவரலாற்றை மறுத்து, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு கோவன்பூர்வப்பட்டயமாக காட்சிப்படுத்தியுள்ளார். இது பூர்வகுடிகள் யார் என்பதை உரைப்பதாக உள்ளது.. இந்த உண்மையினை பெருங்கோவிலாக்கப்பட்ட ராஜ கோபுரம் அபிடேகம், நான்குகால பூசைகள் என ஆடம்பரமான நகரின் மையத்திலுள்ள இக்கோவிலின் ஓரத்தில் வழிபாடுகள் குறைந்துபோய் அமைதியாய் நடந்த கோரங்களின் மெளனசாட்சியாய் தன் சொந்த பழங்குடிகளை இழந்து, இழந்த பிள்ளைகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கிற ஆதி கோணியம்மன் என்ற பெயரில் உள்ள அந்த தொல்குடியினரின் தாய் தெய்வத்தின் ஆன்மா மட்டுமே ஒத்துக்கொள்ளும் சோழர்கள்36 சிவாலயங்களைகொங்குநாட்டின்நொய்யலாற்றங்கரையில் இவ்வாறே கட்டினார்கள் என பல ஆவணங்கள் கூறுகிறது

அன்னியமாகிப்போன கோணியம்மன் குறித்த இவர்களின் ஆதங்கத்தை இவர்களுடைய மொழியிலேயே கோணையக்க என்ற கவிதையில் தனது ஒடியன் தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.

இருளர்கள் பூர்வீகமாக வாழ்ந்து பின்பு அடக்குமுறையால் இழந்த ஊர்களும் பற்றிய சிறுபதிவாக கோவன்பூர்வ பட்டயத்திலேயே கோவமூப்பன் நாடுலயா துவங்கி கணுவாய் தடாகம் வேடபட்டி மாங்கரை ஆகியவற்றை நரியனின் குரலாக ஆவணப்படுத்தியுள்ளார். இதே கோவை குறித்த, கோணியம்மன் கோவில் குறித்த ஆங்கிலேயர்களின் பதிவுகளை (Recordk)களைபார்ப்போம்

கிபி 1800 ஆம் ஆண்டு மதராசிலிருந்து புறப்பட்ட பிரான்ஸிஸ் புக்கனன் ( 1762-1829) அதே ஆண்டு அக்டோபர் 28 அன்று இப்போது கோயமுத்தூர் என அழைக்கப்படும் பகுதியினை அடைந்தார் இனி புக்கனனின் பதிவிலிருந்து

" கோயமுத்தூர் எனப்படும் இவ்வூரில் வேளாளர் என்ற பிரிவினர் உள்ளனர் இவர்களின் முன்னோர்கள் மலையடிவாரத்தில்குடியிருந்தனர் இவ்வூர் பகுதி அப்போது பெரும் வனமாக இருந்தது மலசர்கள் என்ர முரட்டு மலைவாசிகள் இப்பகுதியில் குடியிருந்தனர் இவர்களின் குலத்ய்வமாகிய கோணியம்மாவிர்கும் ஒரு கோவில் இருந்தது அக்கோவில் இன்றும் உள்லது அந்த ஊரின் பெயர் கோயம்பதி ….(Coimpuddi) ….(Coimpuddi) குறித்து Alexander read 1880 குறிப்பிடும்போது each qurry or disrtric was divaided into hoblies consisiting of an equal number of grams or villages under which were several putties or cottages Baramahal recorsds) page 139)

சிக்கதேவராயன் 1673-1704) காலத்திய நாட்டின்படி மிகச்சிறிய கிராமம் பட்டி என்று அழைக்கபடுகிறது. பேரூர்பதி மூப்பன் பேரையனின் மாட்டுப்பட்டி சோழர்களின் ஆதிக்கத்தில் பேரூர் பட்டீஸ்வரன் கோவிலக்கப்பட்டு பேரையனையும் அவர்களது குடிகளையும் பேரூருக்கு மேற்கே விட்ட்டியடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மை வரலற்றை பேரையன் கல்வெட்டில் குறிப்பிடப்படுவது இங்கு நினைவு கூரத்தக்கது)

"இப்போதுள்ள இந்த ஊர்த்தலைவரின் மூதாதையர் அந்த மலைவாசிகளின் அனுமதியைப்பெற்று இவ்வூருக்கு வந்து வசிக்கலாயினர் பின்னர் அவ்வேளாலர் தலைவன் கனவில் கோணியம்மன் தோன்றி தனது கோவிலை விரிவுபடுத்தி ஒரு பூசாரியை நியமித்தா கட்டளையிட்டதாகவௌம் அப்படி செய்தால் தலைவரின் அதிகாரம்கூடுஜ்ம் எனவும் கேட்டதாக (cotegara) காளியப்பன் என்று அத்தலைவரின் பெயரை மாற்றவும் சொன்னதாகவும் தெரிகிறது" A journey erom madras through the countries of myshore caraha and Malabar – Francis bauchanan 28/10/1800)

ஆக ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதையும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு கருணையுடன் இடத்தை கொடுத்த பூர்வீக மக்களின் மடத்தை பிடுங்கியதையும் புக்கனின் பார்வையிலும் விளங்க முடியும்.

"இப்போது ஓலையாள் எழுத ஆர, ம்பித்தான் கொங்கர்கள் பதியிலிருந்த காடுகளை வெட்டி விதைக்கதொடங்கினர் குப்பர்கள் படி நாட்டுக்கும் (சத்தியமங்கலம் )கல்கட்டிகள் புறமலைநாடு (நீலகிரி) நோக்கியும் நகர்ந்தார்கள் அவர்களுடைய கோணமாகாளி கோணியம்மன் ஆகியிருந்தாள் அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெகுதூரம் மேற்கே வந்துவிட்டார்கள். அரசவைப்புலவன் செவ்விக்கரையன் கோவமூப்பனின் பெயரையும் மூலைமுடுக்கிலிருந்து எடுத்துவிட்டு கோசர்களையும் கோவையயும் சம்பந்தப்படிக்கொண்டிருந்தான்"

என்ற லட்சுமணன் வரிகள் இருளரின் இருண்ட வரலாற்றை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது

இவ்வாறே இருளர்களின் சிறு தெய்வமான காளிகுகை வெள்ளியங்கிரி சிவன்கோவிலாக்கப்பட்டது முதல் மருதமலை முடிய ஆள்பவர்களோடு வந்த சைவம் மிகப்பெரிய அதிர்வை தொல்பழங்குடி இருளர் வாழ்விலும் நிகழ்த்தியது. சப்பெ கொகாலுவின் கடைசிப்பாடலான பரிபாட்டில் சைவ வைணவ ஆதிக்கத்தால் இருளர்களின் பண்பாட்டில் அசைவினையும் அந்த அசைவில் சிவனும் பெருமாளும் இணைந்த வகைகளையும் காணமுடியும்.

இந்நூலின் முதற்பாடல் துண்டு மல்லிகை இருளர்களின் தொன்ம தெய்வமான பொன்னான் மல்லி கதையில் ஆரம்பிக்கிறது. இடையில் பல்வேறு பண்பாட்டு அசைவுகளை சொல்கிறது இறுதியில் நிலவுடமையின் அழியாட்டத்தில் விளைந்த பெருந்தெய்வங்களின் வரிசையில் இருளர்களின் தாய் தெய்வங்களை இணைதத பரிபாட்டில் முடிகிறது. இது தற்செயலாக ஆசிரியர் நிகழ்தியவை அல்ல, நுட்பமான கண்ணோட்டத்துடன் மிகச்சிறந்த வரலாற்றுக்கட்டமைப்புடன் கூடிய ஆவணம் என்றால் மிகையில்லை.

ஆள்பவர்களோடு வந்த சைவ சமயம் நிகழ்ந்திய கோரத்தாண்டவத்துக்கு சற்றும் குறைவைக்காமல் கீழே இருந்து அல்லது வெளியிலிருந்து வந்த வைணவம் சமணம் கிருத்துவம் உள்ளிட எல்லாமதங்களும் ஏதோ ஒரு விதத்தில் இருளர்களுக்கு இடையூராகவே இருந்து வருவதை

ஒடியன் தொகுப்பில்
பதி பதியா பஜனே போட்டே
இப்போ வந்துகொணு பேசுகே
ஏசுக்காரே வருகினான்னு......

என்று தொடங்கும் அக்கவிதையில் இவர்களின் குல தெய்வங்கள் தவிர்த்து கீழே இருந்து வந்த எல்லா தெய்வங்களும் இவர்களுக்கு வந்தேரி அந்நியர்கள்தான் என்ற கவிதைவழி விளங்கும்

கரட்டியம்மனே கெணத்துல போட்டு
காரமடே ரங்கனே வெச்சே....

சைவம்போல் அல்லாமல் வைணவம் தன்னை கொஞ்சம் நெகிழ்த்திக்கொடுத்து இருளர்களின் பண்பாட்டு விழுமியங்களை தொன்மங்களை தெய்வங்களை தனக்குள் விழுங்கியது.

இந்திய தத்துவங்களில் பூர்வமீமாம்சம், இடையறாத வேள்விகளை முக்கியப்படுத்தும்; வைதீகம் சார்ந்த தூய நெறி, பிராமணர்களின் வேள்வியை மூட்டி கிரியைகளை செய்வதெல்லாம் உலகம் நலமாக தொடர்ந்து இயங்குவதற்கு வழி செய்கிறது, என வாதிடும். இதன் எதிர் நிலையில் பழங்குடி/ நாட்டார் சமூக/ அவைதீக சமய மரபை உள்வாங்கிய வைணவத்தின் தொடக்கம் என்பது இனக்குழுமரபுகளையும் அவைதீகமான நாட்டார் வழக்காற்று மரபுகளையும் கடந்து வந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விருஷ்னி இனக்குழு மரபுகள் இருந்த காலத்தில் ஏகாம்சா என்ற தாய்தெய்வ பெருந்தேவதையின் துணைக்கடவுளார்களாக சங்கர்ஷனனும் (பலராமன்) வாசுதேவனும்(கிருஷ்ணன்) இருந்தார்கள். விருஷ்னி இனக்குழு தந்தைவழி சமூகமாக மாறும் கட்டத்தில் தனிசெல்வாக்கு பெற்ற தெய்வங்களாக மாற்றினர். இவர்களின் வீரக்கதைகள் நாட்டார் இலக்கியமாக உருமாற்றமடைந்தது வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறை தெய்வத்துள் வைக்கப்படும் என்பது போல சாதரண மக்களும் வீரதீரச்செயல்கள் மூலம் இதிகாச புருசனாக உயரலாம் என்ற நாட்டார் வைணவ கருத்துருமூலம் கிருஷ்ணன் மகாவிஷ்ணுவானான் இவ்வாறே அவைதீக /நாட்டார்/பழங்குடிமரபின் கிளைதான் கரிமடை காரைமூப்பன் காரமடை அரங்கநாதன் - துளசிலாம்பா கதை இதுவும் பரிபாட்டு பாடலில்தான் பதிவாகியுள்ளது

பழங்குடி பெண்ணான துளசிலாம்பாவை காரமடை ரங்கநாதன் கள்ளத்தனமாக மனைவி ஆக்கி அவளையும் வைதீக மனைவி லட்சுமிக்கு பயந்து கோவிலைவிட்டு வீட்டு அட்டாலியில் ஒளித்து வைத்து அவளை வைதீக நாசியார் கண்டுபிடித்து அவளையே கட்டிக்கோ நான் எதுக்கு உனக்கு என கோபித்துக்கொண்டு பெட்டதா மலைக்கு வந்துவிடுகிறார் அரங்கநாதன் துலசிலாம்பாவைக்கட்டிக்கொண்டு நாச்சியாரையும் சமாதனப்படுத்திவிட்டார் என்ற வாய்வழிக்கதையை பதிவு செய்துள்ளார்
இதுதான் மிகப்பெரும் பண்பாட்டு சிதைவை இருளர் வாழ்வில் ஏற்படுத்திய கட்டம்.

“பின்னே ராமத்துக்கு நடுவே செகாப்பு எச்சாதிருந்து வந்தது “ என்ற குறிப்பு அவைதீக நாட்டார் பழங்குடிதன்மையும் / வைதீக வைணவமும் கலந்து நாட்டார் வைணவமானது குறித்த லட்சுமணனின் பதிவு மிக நுட்பமானது ( வைதீக வைணவ மரபிலும் திருமண் என்ற நாமத்துக்கு இடையில் இடப்படும் ஸ்ரீசூர்ணம் என்ற குங்குமக்கோடு இலக்குமியைத்தான் குறிக்கிறது )

அதுக்கு முன்னால இந்த ரங்கனையெல்லாம் நம்தாளுகா சீந்தியதே இல்லை ரங்கன் நம்ம துள்சிலாம்பாவை கல்யாணம் செய்து நமக்கு மச்சான் ஒறவு வந்த பிந்துக்குதா அவருக்குந்து ஒரு கிராக்கியே வந்ததுலா “ என்று பூரடகிழவ்னின் மனசாட்சியாக ஒலிக்கும் இந்த சொல் இருளர்கள் இழந்துபோன நிலத்தையும் நிலத்தில்வாழ்ந்த பெசாதுகளையும் குறித்த தொடர்கேள்வியை நமக்குள் எழுப்புகிறது. இவ்வாறே பாலமலையையும் ஆள்பவர்களோடும் ஆழ்வார்களோடும் (ஹொய்சால விஜயநகர) வந்த வைணவமும் அவர்களின் வைணவ நாட்டார்தன்மையை விதைத்தது

“சிவனே பிரம்பிறிது இல்லை என ஆதால் சிரம் துணிக்கஉவந்தனன் சோழன் என மாறுவேடமாய் ஓடி வந்து கவன்றிடி ராமாநுஜன் தனைத்தேற்றியும் காத்தளித்த மவனகைக் கொங்கு பிராட்டியாரும் கொங்குமண்டலமே” அது என்று கொங்குமண்டலசதகம் குறிப்பிடும் ஆரும், அரசமதமான சைவத்திற்கு எதிராக வைணவ மதமாற்றத்தை சைவ சமய வெறியனான இரண்டாம் குலோத்துங்கனின் ஆணையை ஏற்க மறுத்து காவி உடை களைந்து வெள்ளையாடை உடுத்தி ராமனுஜர் திருவரங்கத்திலிருந்து தப்பிச்சென்று கொங்கு மண்டலத்தின் கொல்லிமலை கடந்து மேற்கு தொடர்சி மலைவழியாக கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து 12 ஆண்டு காலம் பிட்டிதேவன் என்ற விஷ்ணு வர்த்தனனை சமண சமயத்திலிருந்து வைணவத்துக்கு மாற்றி குலகுருவாக மாறியதாகவும், வழியில் அவரை உபசரித்ததாகவும் வைணவர்கள் நம்பும் இந்நிகழ்வுகள் பழங்குடி மக்கள் இன்று உள்ள மேற்குத்தொடர்சிமலையின் அடிவாரப்பகுதிகளிலேயே நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கி பி 1116 ஆம் ஆண்டில் தகடூர்(தர்மபுரி) அதியமானிடமிருந்து கொங்கு மண்டலத்தை சாளுக்கியரின் உதவியுடன் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தன் கைப்பற்றினான் .சோழனின் ஆளுகையில்லாத பகுதிகளில் சைவ சமயத்துக்கு எதிராக, சைவ சோழப் பேரரசின் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களான பழங்குடிமக்களையும் போர்க்குடியினரான காடவர் ( வன்னியர்) கள்ளர் மரவர் போன்ற சோழனின் படைவீரர்களையும் மக்கள் சமயம் என்ற பெயரில் திரட்டி சமய அரசியல் யுத்த நடவடிக்கையை இராமனுஜர் இப்பகுதியிலும் நிகழ்த்துகிறார்.

துலசிலாம்பா காரமடை அரங்கன் போன்ற வைணவ நாட்டார் மரபு வைணவக்கதை, இனக்குழு இரட்டையர்களான ஆந்திராவின் மேற்குமலைத்தொடரின் தென்பகுதியில் வாழும் செஞ்சு பழங்குடி மக்கள் கடலோரப்பகுதிகளில் வாழும் ஏனாதிகள் மத்தியில் வேறுவிதமாக புழக்கத்தில் உள்ளது. செஞ்சுக்களும் ஏனாதிகளும் ஒபிலீசா என்ற நரசிம்மனின் தீவிர பக்தர்கள் ஒரு செஞ்சு பழங்குடிப்பெண்னை அஹோபிய மலை நரசிம்மன் மயக்கி வயப்படுத்தி திருமணம் செய்துகொள்கிறான் பிறகு அவளை செஞ்சுலட்சுமி ஆக்கிவிடுகிறான் அதிலிருந்து செஞ்சுக்கள் அவரை தங்கள் மருமகனாக ஏற்றுக்கொண்டு தொழ ஆரம்பிக்கிறார்கள் என்ற ஒரு தொன்மம் செஞ்சுக்களிடம் உள்ளது

விஷ்னு நரசிம்மனுக்கும் செஞ்சுலட்சுமிக்குமிடையே நிகழும் காதல் பாட்டு வடிவில்
நரசிம்மன் பாடுகிறான்
தங்கப்பெண்ணே வடிவழ்கே
உனைப்போல் இங்கே யாருண்டு
மயக்கும் உனது முகவழகில்
மயங்கி மறுகி நானிங்கே
காமன் சிததிதால் நிலையாக
கல்லாய் சமிந்து நிற்கிறேன்
பெண்னே நீயும் ஏற்காமல்
ஏனோ விலகிச்செல்கிறாய்

பதிலாக செஞ்சு பழங்குடிப்பெண் பாடுகிறாள்

நீ யார் எனக்கு விலகிச்செல்
என்னிடம் மரியாதை காட்டு
அன்றேல் எந்தன் கூர் அம்பின்
ருசியை அறியப்போகின்றாய்
முண்டக்கண்ணா! சடைமுடியா!
கோரப்பல்லா! குண்டையா!
உன்னைக்கண்டு பயமில்லை
ஓடிப்போ இக்கணமே
என்ற சுவையான பாடலாக ஆந்திர நாடார் வழக்காற்றியல் பதிவு செய்துள்ளது.

வேதாந்த தேசிகர் காஞ்சி நகரை விட்டு மனவருத்தம்கொண்டு கொங்குநாட்டின் மேற்கு தொடர்சி மலையடிவார நகரமான சத்தியமங்கலத்தில் குடியேறி பரமபங்கம் என்ற வைணவ மதமாற்று நூலை இயற்றியதை “படிபுகழ்தேசிகர் கச்சியின் நொந்து ….” என்ற கொங்கு மண்டல சதநூலின் வழியே அறியலாம்.

சப்பெ கொகாலின் ஒன்பதாவது பாடலான கொடலி நுவ்வையில் வீணியான நேரியும் வீணனான விருகனும் முதன் முதல் சந்தித்து ஆதி தொல்குடியின் களவுமுறையில் இருவரும் மனதாலும் உடலாலும் கலக்குமிடமான முனிகொரை (சமணமுனிவர்களை – முனி- என்பது வழக்கு) பிழைக்கு அஞ்சி பெரியகுடைபோல விரிந்திருந்த மல்லாம் பாறைக்கு கீழே விருகனும் நேரியும் நடுங்கியபடியே நின்றிருந்தனர் …

கள்ளி மரத்தை தட்டிவிட்டு பரளிப்புதருக்குள் புகுந்துபோய் அங்கே கிடந்த பலகை (படுகை) சம்ணமுனிவர்கள் படுக்கை பாறையில் வெகு நேரம் தன்னை மறந்து கிடந்தார்கள். ஊசிகாடு குய்யில் (நீர் தேங்கிய பாறைப்பகுதி) தேங்கியிருந்த தண்ணீரை அள்ளி என்ற நூலாசிரியர் வரிகளும் நிச்சயம் அது குகைப்பகுதி சமணமுனிவர்கள் வாழ்ந்த பகுதி என்பது தெளிவாகிறது.

கொங்குநாட்டில் சமணம்தான் நீண்ட காலமாக வழக்கில் இருந்திருக்கிறது கி மு 4 ஆம் நூற்றாண்டு அளவிலேயே சமணம் தென்னிந்தியாவை நோக்கிப்பரவியது தெற்கே மைசூர் மநிலத்தில் உள்ள சிரவனபெலகுலாவில் (ஸ்ரவன வெள்ளைகுலம்) சமணர்களின் தலைமைப்பீடமாக விளங்கியது அங்கிருந்து 8000 சமணமுனிவர்கள் விசாகாச்சாரியார் என்பவர் தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்தனர் அவ்வாறு வந்தவர்கள் கொங்குநாட்டின் மேற்குதொடர்ச்சி மலைகளின் வழியாகவே வந்திருக்க வேண்டும். தற்போதும் மைசூர் லிருந்து சத்தியமங்கலம்வரை வரும் நெடுஞ்சாலையை நினைவில்கொண்டால் எளியதாக இருக்கும்.

இவர்கள் தொல்பழங்குடிமக்களின் வாழ்விடமாகிய மேற்குத்தொடர்சி மலைகளின் பாறைக்குகைகளிலேயே தங்கி சமயப்பணி ஆற்றியிருக்க வேண்டும். குன்றுரை தவசியர் என சங்க இலக்கியமும் இவர்களைத்தான் கூறுகிறது வணிகப்பெருவழிகளும் பெருவழித்தங்கலும் இம்மலைகளின் வழியேயும் மலைஅடிவாரத்தையும் ஒட்டியே அமைந்திருக்கிறது இப்பெருவழிகளில் இன்றும் சமணசமய தடயங்களை காணமுடியும்.

கி பி முதல் நூற்றாண்டில் கொங்குபகுதியை ஆண்ட இரெட்ட குலமன்னன் கோவிந்தராயன் என்பவன் . அரிஷ்டண்ணன் என்ற சமண முனிவர்க்கு பூமியை தானம் அளித்த செய்தி ஒன்று பதிவாகியிருக்கிறது இந்த பூமி கொங்கணிவர்மனால் பெஸ்திக்கு அளிக்கப்பட்டது. பெஸ்த்தி என்பது கோவில் பூசாரியைக்குறிக்கும் அந்த கோவில் பூசாரியான அரிஷ்டண்னன். தன்னுடைய குரு பிரஞாபனாசாரி என்றும் ஸ்ரீகாரே விருஷமூலத்தில் வசிக்கிறவன் என்றும் குறிப்பிடுகிறான் ஸ்ரீகாரேவிருஷமூலம்என்பது இப்போதைய காரமடையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது காரமடையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்றும் பெருமளவு இருளர்கள் அடர்தியாக வசிப்பதையும் இத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

கி பி ஏழாம் நூற்றாண்டுவரை இருளர் உட்பட பழங்குடிமக்கள் சமண வணிகர்கள் இடையே சமுதாய வாழ்வு தொடர்ச்சியுடன் நடைபெற்று வந்திருக்கிறது கங்கர்கள் ஆட்சியிலிருந்து மேற்குத்தொடர்சி மலை பகுதிகள் விடுபட்டவுடன் சமணத்தொடர்பு அறுந்துபோயிறுக்கவேண்டும் சமணவணிகர்கள் இல்லாததால் இம்மலைபிரதேசங்களில் இருந்த பழங்குடிமக்கள் இங்கு இருந்த உயர்நிலை மக்களைச்சார்ந்து அடித்தொழிலில் புரிந்த நிலையில் இருந்து விடுபட்டதாகக் கொள்ள முடியும்.
இந்நிலையில்தான் சோழப்பேரரசின் ஆதிக்கமும் சைவ சமயமும் புதிய கீழ்நாட்டு மக்கள் குடியேற்றமும் வேளாண்மையும் அறிமுகப்படுத்தப்பட்டதை சர்க்கார்சாமக்குளம் காலா காலேஸ்வரர் தலவரலாற்று கல்வெட்டு கூறுகிறது

புலால் மறுப்பு சமண சமயத்துக்கே உரியது. வைதிகபிராமணர்கள் உட்பட அனைத்து வர்கத்தவரும் புலால் உன்ணும் பழகத்தவராகவே இருந்துவந்திருக்கிறார்கள் சமண சமயத்தின் தாக்கத்தாலேயேதான் ஊணுண்ணாமையைக் கடைபிடித்தனர் என்பது வரலாற்றுச்சான்று..பெளத்தமும் ஆசீவகமும் புலால்மறுப்பை அவ்வளவாக கடுமைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லின் மாகொன்று வென்ணினைத்தேடி விளிம்படுத்த
பல்லினர்க்கும் படுகடற்பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்லதொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே
(சமணகாப்பியம் சீவக சிந்தாமணி)

வில்லெடுக்கும் வேட்டை சாதியினரை இழிகுலத்தோராக கருதி இத்தகையோர் மறுபிறப்பிலும் உயர்குலத்திற் பிறக்கமாட்டார்கள் என கூறுவதன் மூலம் பழங்குடிமக்களின் பண்பாட்டு நிலையை கேள்விக்குள்ளாக்கியது. தொல்லியல் இலக்கியச்சான்றுகள் தவிர்த்து இருளப்பழங்குடி மக்களின் வாழ்வியலில் சமணத்தாக்கம் குறித்து தொடர்ந்து பழங்குடிமக்களுடன் இயங்கும் லட்சுமணன் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களாள்தான் அதிகம் சொல்லமுடியும் என கருதுகிறேன்

இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்களாய்
கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும் பார்க்கும்
காட்டுகளாய் வாழும் சிவலும்- குறும்பூழும்
கூட்டுகளாய்க் கொண்டுவைப்பார்
(சமணநூல் நாலடியார் பார்க்க 123)

காட்டில் உள்ள பறவைகளைப் பிடித்து கூட்டிலடைப்பவர்கள் மறுபிறவியிலேயே பிறரின் அடிமைகளாய் காலில் விலங்கிடப்பட்டுகரும்புக்கொல்லலையில் இருக்கவேண்டும் என்று கொத்தடிமையை நியாயப்படுத்துவதும் சமணமே

"தேவாலயம்
பள்ளி
கல்லூரி
என தாங்கள் மலைப்பகுதிகளில் வளரும் காங்கிரீட் மரங்களாய் நிறையும் கட்டிடங்களைப்பார்த்து என்னாதுக்கு இது என்று கேட்ட இருளனை எல்லாம் ஏசு சாமிக்கு என சமாதானப்படுத்தினான் மன்னார்காட்டு ஜார்ஜின் மகன் தாமஸ்

ஆராதனைப்பாடல்கள் எல்லாம் ஏசு சாமிக்கு
புனித நீராடல்களெல்லம் எல்லாம் ஏசு சாமிக்கு
பெரிய கூட்டத்தின் குடிப்பெயர்வு எல்லாம் ஏசு சாமிக்கு

என இருந்த இருளன் தன்னுடைய நக்குபதியைவிட சமயத்தின் பெயரால் ரட்சிக்கவந்தவர்களின் பகுதி அதிகரிக்க அதிகரிக்க தன்னுடைய பூர்வீக நிலத்தை இழந்து கொண்டனின் மகன் தோண்டையும் சேமனின் மகன் கூடனும் தங்கள் கூட்டத்தோடு இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள்.

தங்களுக்கான சொகுசுக் கட்டிடங்களுக்காக ஆராய்சியாளர்கள் அபகரிப்பாளர்களுக்காக பல்வேறு அற்பக் காரணத்தைச்சொல்லி இருளர்களின் பட்டாவை மணியகாரன் ரத்து செய்தபோது தோண்டையின் மகன் உரியனும் கூடனின் மகன் சாத்தனும் மிச்ச குடிகளைகூட்டிகொண்டு இன்னும் மேற்கில் போகாமல் எல்லம் எதற்கு என்று இப்போது இருளர்கள் உணர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்தார்கள் என்று ஒற்றை வரியில் சின்ன நம்பிக்கையை விதைத்துப் போகிறார்.

அதே போல சமயத்தின் பிண்னனியில் நிகழ்ந்த நவீன வன்முறையை சொல்லும்போது

அட்டப்பாடிக்கல்வெட்டில்

"இதே போல் ஒரு நாள்தான் மன்னார்காட்டுக்கு மேற்கில் இருந்து ஜேக்கப்பும் வந்தான் அவன் சிலுவையோடு வரவில்லை பைபிளோடும் வரவில்லை விவசாயம் செய்யும் ஆசையிலும் வரவில்லை அவனுக்கு வேறு ஏதோ நோக்கம் இருந்தது"
என்ற வரியின் உள் அர்த்தம் அடுத்தவரியிலேயே இப்போது அந்த இடம் மட்டுமல்ல எல்லா நிலங்களும் வந்தவர்கள் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது.

ஒரு கூட்டத்துக்கு ஜேக்கப்பும் ஒரு கூட்டத்துக்கு தூரனும் தலைவனாக இருந்தார்கள். இரண்டு கூட்டங்களும் ஒற்றுமையாய் போட்டி போட்டுக்கொண்டும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டும் அந்தப்பகுதி முழுக்க சுழன்றாடியது. இருளர்களும் குறும்பர்களும் முடுகர்களும் தொடுசியைவிட்டு இன்னும் தள்ளி மொக்கைக்கு வந்து வேட்டையாடியும் காடுபடுபொருள்களை சேகரித்ததும் போக மீதி நேரங்களில்பாறைப்பதியில் தாங்களுக்கு தெரிந்த வகையில் விவசாயம் செய்து பிழைதிருந்தார்கள்.

ஆக மீண்டும் சமயத்தின் கூட்டோடு கீழ்நாட்டு நிலவுடமையாளர்களின் கோரப்பல் இருளர்களின் வாழ்வை மேலும் கிழித்தெரிந்திருக்கிறது

கடையேழு வள்ளல்கள் எனப்படும் குறு நில மன்னர்களும் தங்கள் குருஞ்சி நிலமாகிய மலையும் மலையை சார்ந்த பகுதிகளில் கிடைக்கும் யானை மருப்பு( யானைத்தந்தம்) மிளகு ஏலம் இலவங்கப்பட்டை சந்தனம் போன்ற பொருட்களை அயல்நாட்டு வணிகர்களுடன் வணிகம் செய்தனர் தங்களின் குடிகளாகிய மலைவாழ்மக்கள் திரட்டித்தரும் மதிப்புமிக்க இப்பொருட்களை கள்ளைக்கொடுத்து பெற்ற செய்தியினை சங்கத்தமிழர் வணிகம் நூலில் மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
வேந்தர்களின், குறு நில மன்னர்களும் தங்கள் ஏற்றுமதிக்கு ஈடாக கிரேக்கத்திலிருந்தும் உரோமாபுரியிலிருந்தும் மதுவையும் ஆடம்பரப்பொருட்களையும் இறக்குமதி செய்தனர். யவனர்தன்கலம் தந்த இந்த தேன் கமழ் தேறலை புலவர்களுக்கு வயிறுமுட்ட ஊற்றினர் பார்பனப்புலவர்கள் கூட மன்னர்கள் அளித்த இறைச்சியையும் யவனப்பெண்கள் ஊர்றித்தந்த வெளிநாட்டுமதுவையும் உண்டு களித்து இம்மன்னர்களின் பெருமையினை வானளாவப்புகழ்ந்து பாடல்களாக எழுதித்தள்ளினர். இப்பாடல்களின் வழியேதான் நாம் பண்டைய மன்னர்களின் பெருமையினை அருமையினை அறியவேண்டிய நிலையிலிருக்கிறோம் அப்பாவி ஏழைப்பழங்குடிகள் தாங்கள் திரட்டிய விலைமிக்க பொருட்களை கொடுத்துவிட்டு எலியையும் முயலையும் வேட்டையாடியும் காய்கனிகளையும் பறித்தும் உண்டு பசியாறினர்.

இந்த மேற்குதொடர்சிமலை செல்வங்களாகிய யானைகளையும் தேக்கு கடம்பு மரங்களையும் அரணாகப்பாதுகாத்த பழங்குடி மக்களை ஒடுக்கியே நெடுநல்யானை அடுபோர்செழியனாகவும்(அகநானூறு 149:7-11) விரிதிரை பெருங்கடல் வளைத்த இவ்வுலகில்( குறுந்தொகை 101:1)உடை திரைபரப்பிற் படுகடல் நாவாய் ஓட்டிய வேல்புகழ்குட்வ"னார்கள் (பதிற்றுப்பத்து 46:10-13)

சோழர்களின் யானைப்படைக்கும் பிற இன்றியமையாத யானைகளை பிடிப்பதற்காகவே செவனனை, நடுவனை வீழ்த்தி பல்லனிடம் வந்தபோது யானையைப்பிடிப்பது தெய்வகுத்தம் என்ற பல்லனை வன்முறையால் சரிக்கட்டி காட்டுயானையை பிடிக்கும் முறையை லட்சுமணன் விவரிக்கும்போது கண்முன்னே கானகம் விரிகிறது அதி நுட்பமான தொடர்கள ஆய்வினால்மட்டுமே விளையக்கூடிய வார்த்தை சொல்லாடல் மிக்க பகுதிகளில் இதுவும் ஒன்று குழியில் விழுந்த நிறைமாத யானையை மன்னன் படையில் சேர்க்காமல் காப்பாற்றிய அரச குத்ததுக்காக பல்லனை (தற்போதைய பல்லடம் ஊரையும் அவன் மகன் அவினனை( தற்போதைய அவினாசியயும் இவ்விரு இருளர் தலைவர்களையும் அழித்து காடுகொன்ற குருதி படிந்த வரலார்றை அவரின் வரிகளில் படிக்கும்போது இதயம் அதிர்ந்துதான் போகிறது.

தூமன் என்ற பழங்குடி ராஜாவை ( எந்த ராஜவையும் ஏற்காத இருளர் மக்கள் யானையை மட்டும் ராஜாவாக ஏற்றுக்கொள்கின்றனர்) அது இரவில் போட்ட லத்தியை அதன் வாசம்கொண்டே தேடிச்செல்லும்போது இடையில் ஈரப்பதம் கலந்த மக்கிய இலைகளின் வாசம் “ என்ற வாசகங்கள் நிச்சயம் நினைவில் காடுமட்டுமே கொண்ட மனிதனாக இருப்பவர்களாலேயே எழுதமுடியும் கீழ்நாட்டு வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்ட ஒண்டியானையின் ஆ…அ……….ஆ வேவெவெ….. பிளிறல் வனம்சார் எழுத்துகளின் உச்சம் குண்டடிபட்டு சாய்ந்து வீழ்ந்து கிடந்த ஒண்டியை பார்த்து துயரமும் இயலாமையும் ஒருசேர கையெடுத்துக்கும்பிட்டு"கடாவுளே நேமெல்லாம் இருக்கும்போதே நினாக்கு இசா ஒரு நெலா வந்துச்சே" எனக்கதறி “ நித்து பேத்து பிதிரு இனி பொழைக்காக்கிலே வெண்ணெட்டையா போவே “ என்று சாபம்விட்டு தூமனின் மனநிலை தவறுவதான சித்தரிப்பு நிச்சயம் இவனும் யானைக்காக வீழ்ந்துபட்ட பல்லன் அவினனின் மரபுத்தொடர்சிதான் என்பதை லட்சுமணன் உறுதிப்படுத்துகிறார்.

இத்தகைய இருளர் பூமியில் இன்று மேற்குதொடர்சிமலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இருபதுக்கும் மேல் உள்ளன இவையனைத்தும் யானைகளின் பாரம்பரிய வலசைப்பாதையை ஆக்கிரமித்து நிற்கின்றன ஆதிகாலம் தொட்டு இன்றுவரை பழங்குடிகளின் மேல் கோரைப்பல்லை பாய்ச்சும் அனைத்து சமய நிறுவனங்கள்தான் இதில் அதிகம்.

மூப்பனின் பேத்து சிவம்மாளும் மருதியும் பாறைப்பதியில் காத்திருக்கும்போது

நல்லா வெலைந்தா நான்கு மூட்டை கிடைக்கும்
ஹே பந்தி வந்து உழுதால் ஒருமூட்டை கொரையும்
அச்சாந்தா மான் வந்து திந்தா ரெண்டு மூட்டை கொரையு
ஆளு காவல்காத்தால் எல்லாம் கெடைக்கும்
நிலத்தை உழு ஏர் வந்துவிட
காடே மனெ கடமெ செம்ம திந்தது போக எமக்கும் கொஞ்சம் கொடு கடாவுளே

நிச்சயம் பகுத்துண்டு பல்லுயிர் வாழ் இவர்களுக்கு தேவையில்லை. கீழ்நாட்டிலிருந்து வந்தேரிய ஜார்ஜும் தூரனும் நோகாமல் நோம்பிகும்புடுவது அதிர்வலைகள்

பழங்குடிகள் வாழ்வில் மலைகள் மொக்கே என்றழைக்கப்படுகிறது மலைப்பாறைகளை துண்டு மல்லிகையில் பாறையாகி தெய்வமாகிப்போன மல்லி பொன்னான்) வணங்குபவர்கள் குகையினையினையே ஆதிமனிதர்கள் தாயின் கருவறையாக கண்டிருக்கவேண்டும் பாறை அல்லது குகை ஓவீயங்கள் மட்டுமே பிற சான்றுகளைவிட மானிடவரலாற்றை அறிய உதவுகிறது சடங்குகள் அக்காலத்திய விலங்குகள் பறவைகள் தாவரங்கள் அன்றாட வாழ்வியல் ஆகியவற்றை அறிய உதவும் தடயமாக உள்ளது 25000 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்காவின் குகை ஓவியம் ஒன்றில் விலங்கு உருவங்களாக மனிதர்கள் உள்ளனர் இவர்கள் விலங்குதோல் போர்த்திய ஆவேசியாக இருந்து தம் மக்களின் வேட்டைகள் நன்றாக அமைந்திட வழிகாட்டுபவர்களாகவும் இருப்பர் இந்த வழிகாட்டு அறிவை வேறு தளத்துக்கு கொண்டு சென்று ஆவேசம் அடைவதன் மூலம் பெறுகின்றனர் (attering the state of consciousness ) கூட்டு இசைமூலம் அல்லது சடங்குகள் மூலம் இவை நிகழ்ந்தப்பட்டிருக்கவேண்டும் இந்த இறை ஆவேச நிலைஉடன் பாரம்பரியமான அறிவும் இணையும் போது அன்றாடம் கிடைக்கவேண்டிய வேட்டைக்கான குறிப்பும் வாய்ப்பும் அந்தக்கூட்டத்துக் கிடைக்கும். எந்த இனக்குழு கூட்டத்தின் இரைஆவேசி சிறப்பாக செயல்படுகிறதோ அந்தக்கூட்டம் நன்றாகப்பெருகும் வலிமையானதாக மாறும் என்ற மானுடவியலார்களின் கருத்திருக்கு ஏற்ப துனிசனும் ஆவேசமடைந்து மழைபொய்த்துப்போய் வேட்டை கிடைக்காமல் கொலைப்பசியில் கிடக்கும் தனது கூட்டத்திற்காக பெருவேட்டை ஒன்றை பெற மருளாடுகிறான்.

தனது கழுத்திலிருந்த யானைதந்ததை சுண்ணாம்பு மண்ணில் முக்கி எடுத்தான் கொஞ்சம் லக்கேசாறும் பிசினும் கலந்த சாறை அதில் பிழிந்து தள்ளடிபோய் அந்த பெருக்கப்பதி மானை வரைந்துவிட்டு திரும்பிவந்தௌ உட்கார்ந்தான் இரும்புகாலத்தில் வரைந்ததாக கருதப்படும் பாறை ஓவியங்களை இன்ன இன்ன பொருட்களைத்தான் வைத்து வரைந்திருக்கவேண்டும் என்ற பாறை ஓவியங்கள் குறித்த தொழில்நுட்பசெய்தி அளவிடமுடியாதது.

கூட்டத்தின் மற்றவர்களும்அவர்கள் பங்குக்கு ஏதோ ஒன்றைப் பாறையில் வரைந்தார்கள். சில மனித உருவங்களாக இருந்தன. சில அம்பாக இருந்தன. கூட்டத்தின் வயதான கிண்டன் போய் ஆளை வரைந்து விட்டு தடுமாறியபடி வந்து அமர்ந்தான். துனிசன் மீண்டும் கிழக்கை குறிக்கவும் பெசாதுகள் கைவிடாது என்பதற்கு அடையாளமாக சூரியனை வரைந்தான். மந்திரக் கூச்சலும், விலங்குகளை விருந்துக்கு அழைக்கும் பாடலும் தொடங்கியது. அது மெதுமெதுவாய் உச்சம் தொட்டு பிறகு மிதமாகி நின்றுவிட்டது.

இப்போது அவர்கள் தனது வேட்டையின் திசையையும் வேட்டையாடப்பட வேண்டிய விலங்கையும் ஏறக்குறைய முடிவு செய்திருந்தார்கள்.இனி அதுவாகவே வந்து அடிக்கச்சொல்லி அவர்கள் முன்னால் வந்து நின்றாலும் நிற்கும்.- என்ற லட்சுமணனின் வார்த்தைகள் இன்றைக்கும் கி மு 300 யை சார்ந்தவையாக ஆய்வாளர்கள் கருதும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைந்த மேற்கு மாவட்டங்களை கோயமுத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நீலகிரி – மேற்குதொடர்சிமலை அடிவாரத்தில் உள்ள தொல்பழங்கால ஓவியங்களிலும் செய்தியாக உள்ளது.

உடுமலை மூனாறு மறையூரின் 15 அடி உயர செவ்வண்ண கொற்றவையை சுற்றி நூற்றுக்கணக்கான மான்களும் யானைகளை வசப்படுத்தும் மந்திர நடனம் குறித்த கோவை வெள்ளருக்கம்பாளையம் பாறை ஓவியங்களும் (இன்றும் மான்பாடு ‘ என்ற மானை வசப்படுத்தும் நடனப்பாடல் வழக்கத்தில் உள்ளது வெள்ளரிக்கோம்பை , எழுத்துக்கல் கீழ்கோத்தகிரியின் கரிக்கியூர் கோவையின் பதி மலை குமிட்டிபதி ஓவியங்கள்)கி மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேட்டைகாரன்மலை ஓவியங்கள் பாலமலை கோவனூர் பாறை ஓவியங்கள் மருதமலை பாறை ஓவியங்கள் பாலமலை கோவனூர் பாறை ஓவியங்கள் மருதமலை ஆனாமலை மாவடைப்பு புளியங்கண்டி பாறைகுகை ஓவியங்ளை வரைந்தவர்களையும் வரைந்தமைக்கான காரணத்தையும் தெள்ளிதெளிவாக இந்த புனைவுகதையின் மூலம் லட்சுமணன் விளங்கவைக்கிறார்.

தொல் பழங்குடிகளின் முதல்வீட்டு விலங்காகிய நாய்க்கும் ( தொல் பழங்குடிகளின் ஈமக்குழிகளில் நாயின் எழும்புகளும் கிடைத்துள்ளது )பாகம்பிரிப்பது, சாதிப்பாகுபாட்டால் பொன்னானை வேட்டைக்குழியில் தள்ளி மூடுவது, பேரூர்பதியின் ஈஸ்வரன் கோவிலுக்கு தேர்பார்க்கப்போன பொன்னி நரசாம்பதி வெள்ளச்சி என பழங்குடி பெண்களின் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை...

ஒரே குலத்தை சேர்ந்தவர்களிடையே நிகழும் பாலியல் அத்து மீறலுக்கான தண்டனைனையாக புளிய மிளாரால் அடித்து சாணிக்கூடையை சுமந்து ஊரைசுற்றி வருதல்.. போன்ற தண்டனைகள் அவர்களுக்குள்ளேயே இருந்தும் செவனனும் குரும்பியும் கொல்லப்படுவது வேறுகாரணங்களுக்காகத்தான் என்று அந்த பாடலை மறுத்து நிறுவுவது, , நரசாம்பதி என்று இன்றும் உள்ள குளத்தை மையப்படுத்தி வீரகேரளத்தில் நடக்கும் பூசைகாலங்களில் இருளர்களுக்கு முதல்மரியாதை கொடுக்கும் முறையினை ஊடறுத்து ஆய்வினை மேற்கொள்வது கொங்கருக்கு வித்தைகாட்டி வள்ளி கிழங்காக மாறுதல், செம்பூத்தை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட தெக்குமலைப்பிரபு, கார்டன்துரை வருகை, சொடங்கன் வரலியின் காதல், நஞ்சிக்காக நடுவன் பறை குளித்தல், அடர்வனத்தில் நடக்கும் மரக்கடத்தல், சீரங்கன் கொலை, எட்டிக்காயினை அரைத்து ஊஞ்சனின் வாயில் ஊற்றி கொல்லப்பட்ட ஊஞ்சனின் இறப்புச்சடங்கு, நேரி வீணியான சடங்குகள், பொன்னு வேலை செய்வதன் மூலமாக தனக்கான துணையைதேர்ந்தெடுக்கும் கோஞ்சன் பாம்பைக்கண்டால் ஏன் கெட்ட சகுனமாக கருதுகிரார்கள் என்பதற்காக உண்மையைத்தேடிக்கட்டமைக்கப்பட்ட வேடர்களின் குலக்குறியான வெண்நாகப்பாம்பு அவரைக்காய் சும்மா இருந்தால் முளைக்காது அதை கொத்தி காத்து வருகிற உழைப்பிற்க்கு ஒரு மதிப்பை அறியும் குப்பிலிகன், என தாய்வழி சமூகத்தின் மிச்சமாக எச்சமாக உள்ள இருளப்பழங்குடிகளின் வாழ்வியலை தந்தை வழிசமூகமாகிப்போன கீழ்நாட்டு வந்தேரிகளான நாம் அனைவரும் வாசிக்கும்போது பக்கத்துக்கு பக்கம் வெட்கமைடைவதை தவிர வேறு வழியில்லாமல் போகிறது.

மடலேறு பட்டணப்பாலை, காளி, பரிபாட்டு, இருளஞ்சுவடி தணுக்கன் தினை என்ற சங்கப்பாடல்களயொட்டிய தலைப்புகள் ஆதி தொல்குடிகளின் சமூகவாழ்வியலைக்கண்டுதான் வந்தேரியவர்கள் (வெகு விரைவில் தந்தை வழிமுறையினராக வந்தேறிகள் இவ்வழக்கினை கடைபிடிப்பது இல்லை) ஆனால் பழங்குடிகளிடம் இன்னும் அதன் கூறுகள் அழிந்துவிடவில்லை மறைக்கப்பட்ட இருளர்களின் வரலாறை வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சியாகத்தான் இவ்வாறு தலைப்பிட்டுள்ளார் என்று உணரமுடிகிறது.

பீமந்தேனி படிக்கும்போது நிச்சயமாக நாமும் தேனியாவோம் அல்லது பீமன் கைப்படும் தனடையாகிப்போகிறோம் தேனீக்கள் உட்காரும் பூவைவைத்தே தொடுதியா கோலனா வெரியனா (தேனின் வகைகள் ) என அவன் அடுக்கும்போது படிக்கும் நமக்கும் இறக்கை முளைத்துவிடுகிறது. இருளரின் தேன்வேட்டை தர்மம் நிச்சயம் நம்மை மயிர் கூச்செரிய வைக்கிறது. பதிகளின் அருகில் காணப்படும் தொல்பழங்கால ஓவியங்களில் கூட தேன் எடுக்கும் தொழில்சார் ஓவியங்கள் பதிவாகியுள்ளன"இச்சா வாமி தொடுதி பறந்துகொந்திருக்கினா" என்று நாகி பீமனை அழைக்கும்போது நாமும் பீமனை பின்தொடர்ந்து போவதைப்போன்ற பிரம்மை நமக்கு ஏற்படுகிறது பீமன் தேனீக்களை அது பறக்கும் திசையை வைத்தே தேன்கூட்டை கண்டறியும் நுட்பம் தமிழ்பழங்குடி மக்கள் இலக்கியத்தில் சாத்தியம் அதை நமக்கு லட்சுமணன் காட்சிப்படுத்தியுள்ளார்.

பின்ணிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களின் நேர்முகங்கங்கள்தான் இப்பாடல்களை தொகுக்கும் முயற்சிக்கு தூண்டுகோலாய் இருந்தது என்று கூறியிருக்கிறார். கதைப்பாடல்கள் வடிவத்தை ballad என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு இவ்வடிவமே பின்னாளில் காப்பியங்கள் (EPIC) என்ற வடிவமாகிறது விர்ஜிலின் இனியட் ஹோமரின் இலியட் ஒடிசி யாக உலகின் மிகச்சிறந்த காப்பியமாக மாறியது இவ்வாறே ஆதி தொல்சமூகத்தின் குலக்கதைப்பாட்டுகள் இவ்வாறே நீண்டகாலமாகவே நினைவில் நிறுத்தப்படுகிரது வீரக்கதை மரபாக நட்டாரியலின் ஊற்றுக்கண்ணாக விலங்கும் இதுபோன்ற கிரேக்க காவியம் இலியட்டை பாடிய ஹோமர் கூட ஒரு தொழில்முறை வீரக்கதை பாடகர்தான் (BARD) இதப்போல்; சப்பெவும் மல்லனும் மல்லியும் பொன்னானும் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை இவ்வீரக்கதைகளை பாட்டுகளை கொடுத்த தோழர் கவிஞர் லட்சுமணனும் ஒரு BARD-டே..

சப்பே கொகாலும் இலியட் ஒடிஸியைப்போல ஒரு EPIC என்றால் மிகையில்லை.

Pin It