கவிஞன் தான் அனுபவித்த உணர்வுகளை சொற்களால் காட்சிப்படுத்தி கவிதையைப் படிக்கும் வாசகனையும் உணரச்செய்கிறான் என்பதே கவிதை குறித்த என் அபிப்பிராயமாகும். சமுகத்தின் இன்பம் மற்றும் பயன்பாட்டிற்காக வாழ்வில் தான் சந்தித்த உணர்வுகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதை கவிஞர்கள் தங்கள் நோக்கமாக கொள்கின்றனர். இதன் அடிப்படையில் மகிழ்ச்சி, கோபம், துன்பம், ஏக்கம், போன்ற தனி மனித உணர்வுகள் கவிதைகளில் காட்சிப் படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இல்லாத சொற்களையும் மிதமிஞ்சிய அலங்கார வார்த்தைகளையும் வெறுமனே அடுக்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் கவிதைகளை விட யதார்த்தத்தில் எளிமையாக கிடைக்கும் நிகழ்வுகளையும் சொற்களையும் உடுத்திவரும் கவிதைகள் அதிக அளவில் வாசகனைச் சென்றடைகின்றன. கலை கலைக்காகவே படைக்கப்பட்டாலும் அன்றாட அறிவியல் உண்மைகளுடன் நெருக்கமாக உறவாடினால் படைப்புகள் வாசகனால் மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்படுகின்றன.

வேலைக்குப் போவதற்காக அன்று வழக்கம்போல காலையில் சன்னலோர பயணக் கனவுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். திருவண்ணாமலை செல்லும் அரசுப்பேருந்தில், முகப்பு கண்ணாடிக்கு பின்புறத்தில் தோழர் க.ராமஜெயம் வழக்கம் போலவே உட்கார்ந்தபடி வந்தார். திரவியம் தேடும் ஓராண்டு கால தொடர் பயணத்தில், அபூர்வமாக அவருக்கு அருகில் உட்காரும் வாய்ப்புக் கிட்டியது.

"வெற்றிகரமாக என்னுடைய முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்துவிட்டது" என்ற புத்தாண்டு செய்தியைச் சொன்ன தோழர் 'பிறிதொரு பொழுதில்' என்று பெயரிடப்பட்ட அந்த கவிதைத் தொகுப்பை என் கையில் திணித்தார். அட்டைப்படம் அழகாக இருந்தது.

இலக்கிய ஆர்வலர், நண்பர், கவிதைகளின் காதலர் முதலிய காரணங்களைத் தாண்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீந்தக் கிடைத்த கவிதைநதி என்பதால் உடனடியாக குதூகலத்துடன் நதியில் இறங்கிவிட்டேன். நவீனம் என்ற ஆரவாராம் ஏதுமின்றி எளிய மக்கள் மொழியில் நதி நகர்ந்து கொண்டிருந்தது.

காதல்வாழ்வில் எஞ்சிய இளம்பிராயத்து ஈரஞாபகங்கள், பெருமூச்சுகள், கோபங்கள், தினசரி கடந்து போகும் யதார்த்த நினைவுகள் என்பதான இன்னபிறவெல்லாம் என்னோடு நதியில் நீராடின. வெய்யிலைத் தவிர வேலூரில் எல்லாமே வறட்சி என்ற காரணத்தால் முக்கால் மணிநேரம் போவது தெரியாமல் ஒரே மூச்சாக நீந்திமுடித்து பெருமிதத்துடன் நிமிர்ந்தேன்.
நீந்துகின்ற வாசகனின் முகம் பார்த்தபடி நதிக்கரையில் அமர்ந்திருந்த தோழர், " கவிதைகள் குறித்த உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் தோழர்“ என்ற சொற்களை உதிர்த்துவிட்டு இறங்குமிடம் வந்ததால் விடைபெற்று இறங்கிப் போனார்.

வாசிப்பை மறந்து போன மந்தையில் ஒருவனாகியுள்ள எனக்கு வேலை,பயணம், தூக்கமென்ற சராசரியான தினசரி நிகழ்வுகளுக்கு நடுவில் விமர்சனம் எழுத நேரம் எப்படி கிடைக்கும்? அடடா! பேருந்திலேயே தோழருடைய கைகளைப் பற்றி 'தொகுப்பு அருமை' என்று விமர்சனத்தை எளிமையாக முடித்திருக்கலாமோ என்ற நினைப்பு வந்து போனது.

'பிறிதொரு பொழுதில்' தொகுப்பை முன்னும் பின்னுமாக மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்தேன். வாசித்து முடித்த கவிஞனின் மன உலகத்தில் உடனடியாக என் நினைவில் பளிச்சிடும் வரிகளை சுட்டிக்காட்டலாம் எனத் தோன்றியது.

"ஆள்தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வளைந்து நெளிந்து
குழைந்தே காரியம் நடக்க
அப்புறம் என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு"

என்ற உண்மையின் பதிவு சட்டென கண் முன்னே வந்து நின்று கேள்வி கேட்டது.

நிலங்கள் வெவ்வேறு என்றாலும் வானம் பொதுதானே! சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் கேட்க நினைத்து மறந்த கேள்வியை கவிஞர் கேட்டிருக்கிறார்.. விடை கிடைக்குமா கிடைக்காதா என்ற வாசகனின் தேடலில் தம்மளவிலாவது உண்மையானவனாக இருக்க வேண்டுமென்ற சிந்தனையை இக்கேள்வி அவனுக்குள் விதைத்து விடுகிறது என்பதை மறுக்க இயலாது.

இளம்பிராயத்து காதலியை ஒரு மழை நாளில் சந்திக்க் நேர்ந்து , அழுகாச்சி முகத்தை துடைத்துக் கொண்டு, அவ்வப்போது வெறுமனே அசை போட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போல எத்தனையோ நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன்.

"மழை நனைத்த முகத்தை
துடைத்துக் கொண்டோம்
கண்ணீரையும் சேர்த்து"

என்று எழுதி கவிஞர் நினைவூட்டுகிறார். மீண்டு வரும் காதலியின் முகம் உடலையும் மனசையும் சிலிர்க்க வைக்கிறது. இதுதானே கவிதை தரும் யதார்த்தம்!.

அதே மழைதினத்தில் காதலியிடம் மேற்கொண்ட உரையாடலின் சுருக்கம் கவிஞரின் கவிதைத் தொகுப்பிற்கு தலைப்பாகியும் உள்ளது.

"சந்திப்புகளின் உச்சத்தில்
ஒருவருக்கொருவர்
என்றானோம்
நீ
ஒருவருக்கு
நான்
ஒருவருக்கு
என்றான பிறிதான பொழுதில்
சந்தித்துக் கொண்டோம்
ஒன்றுமில்லாமல்..."

கழுத்தை நெறிக்கும் இம்முடிச்சுடன்தான் நமது காலை விடிகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? நெகிழ்ச்சியளிக்கும் காதலை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு மகிழ்ச்சியளிக்கும் மனைவியிடம்,

"எப்படி சொல்ல
அவளிடம்
உன்னை காலங் காலமாய்
சமையலறையிலேயே
வைத்திருக்கிறேன்
என்று"

ஆதங்கப்படும் கவிஞரின் மனதில் நீதிமிக்க மனித சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது.

"எல்லாம் கேடு
என்ற போதும்
அரசாங்கம் விற்றால்
நல்ல சரக்கு
அடுத்தவன் விற்றால்
கள்ளச் சரக்கு"

என்ற சுட்டிக்காட்டலில் உளியைப் பிடிக்கின்ற கை தெரிகிறது.

"யாருக்காகவும் இல்லை
என்றாலும்
நட்டுவை தோட்டத்தில்
பூச்செடிகள்
வந்து போகும்
வண்ணத்துப் பூச்சிகள்" என்று இவர் எழுதியிருக்கும் வரிகளில் இயற்கை அளிக்கும் புலன் இன்பம் இலவசமாக கிடைக்கிறது.

பேருந்தை விட்டு இறங்க வேண்டிய கட்டாயம் வந்தபோதும் தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவுப் பரப்பில் அரும்பிய வண்ணமிருக்கின்றன.

அந்நியப்படாத எளிய மொழியுடன் வாசகனின் மனதெங்கும் அலைந்து திரியும் கவிதைகளை தொகுப்பு முழுவதும் க.ராம்ஜெயம் படைத்துள்ளார் என்பதை அவரிடம் அடுத்த சந்திப்பின்போது சொல்லிவிட வேண்டும்.

- கி.மூர்த்தி

Pin It