ஒருமுறை, நான் எழுத்தாளர் ம.ந.ராமசாமியைச் சந்தித்தபோது புதுக்கவிதை பற்றிப் பேச்சு வந்தது. அவர், “நான் கவிதையே படிப்பதில்லை. அதைப்பார்த்தாலே பக்கத்தைப் புரட்டி விடுவேன்”. என்றார். இதே கருத்தை பலரும் சொல்லும் அளவிற்கு பல கவிதைகள் அதிருப்தி அளிக்கின்றன. ஆனாலும் இதையும் மீறி நல்ல கவிதைகள் - தொகுப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

 மகுடேஸ்வரன் எழுதிய ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ தொகுதியைப் படித்தவுடன் மன நிறைவு ஏற்பட்டது. அதை வாசகர்களுடன் பகிர்;ந்து கொள்ளவே இக்கட்டுரை.

 இப்புத்தகத்தில் சிறியதும் பெரியதுமாய் 54 கவிதைகள் மனிதநேயம், ஏழைகளின் பால் தோழமை, எளிமை, நேர்த்தியான கட்டமைப்பு, மனித மனஆய்வு போன்ற இயல்புகளால் அமைந்தவை.

 ‘யுக புருஷன்’ கவிதை, பூட்டுக்களைப் பழுது பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது. மொழி நடையில், காட்சிப்படுத்துதல் சிறப்பாக அமைந்துள்ளது. மனக்காயத்தை மூடி மறைத்துக்கொள்ளும் வித்தை தெரிந்தவனாகவே அந்தத் தொழிலாளி காணப்படுகிறான். அவனே இங்கு யுக புருஷனாகக் கவிஞரால் மேன்மைப் படுத்தப்படுகிறான். ஏழ்மையின் கொடுமை அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. இத் தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக நான் இதை நினைக்கிறேன்.

அவன்
இருபது ரூபாய் சம்பாதித்ததும்
அல்லது ஒரு சம்பாத்தியமும் இல்லாமல்
எழுந்து செல்கிற மனத்தினன்
என்ற வரிகள் அவன் மன ஆரோக்கியத்தைக் காட்டுகிறது ‘கௌதம முனியின் சாப நிழல் காண்பீர்’ என்ற வரி தொன்மக் குறிப்புடன் அவன் இயலாமையை தெளிவுபடுத்துகிறது.

 ‘போதனைகளின் பொன்மொழிகளின்
 பொய் காண்பீர்’
என்ற கவிஞர் கூற்று தொழிலாளியின் பாலுள்ள மனித நேயத்தை அறைந்து சொல்கிறது. கதைப் பண்புள்ள கவிதையிது!

‘தென்றல்’ என்று தொடங்கும் கவிதையின் வடிவம், ஒன்றன்கீழ் ஒன்றாய் இரண்டு முக்கோணங்கள் நிற்பதுபோல் உள்ளது. தேவையற்ற முயற்சி. இதில் புதுமை ஏதும் இல்லை. ஒரு சருகு உதிர்கிறது. அதில் இருக்கும் எரும்பு அதை வாழ்வின் மகத்தான பயணமாகக் கருதுகிறது. இதுவே கவிதையின் கரு.

‘செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை’ என்ற கவிதை
 பஞ்சுக் குப்பை
 மண்டிய தலை
 அரிக்கிறது

என்று தொடங்குகிறது. அப்பெண்ணின் ஏழ்மை கவிதைக்குள் வந்துவிடுகிறது.
 அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

என்ற வரிகளின் நயம் ரசிக்கத்தக்கது. மிக எளிமையான நல்ல கவிதை இது. இதில் அவசியமான சொற்கள் மட்டும் இருப்பதால், கவிதையில் ஒரு நேர்த்தியான கட்டமைப்பு அமைந்து விடுகிறது.

‘ராங் நம்பர்’ போன்ற சாதாரணக் கவிதையும் இத் தொகுப்பில் உண்டு.
 ‘கடைசி அணைப்பு’ காதலை மையப்படுத்தும் ஒரு சோக சித்திரம். பிரிந்துபோன காதலர்களுள் இது ஆண் கூற்றில் அமைந்துள்ளதா? அல்லது பெண் கூற்றில் அமைந்துள்ளதா? என ஒரு சந்தேகம் எழுகிறது. இருதரப்புகளையும் நியாயப்படுத்தும் சாத்தியக் கூறுகள் இக்கவிதையில் உள்ளன. கவிதை ஓர் அழகான படிமத்துடன் தொடங்குகிறது.

 ‘ஞாபகத்தின் மண்பானைக்குள்
 உன் முதல் அணைப்பில்
 உதிர்ந்த விதைகளை
 பத்திரமாய் வைத்திருக்கிறேன்’
ஒரு நல்ல குறியீடும் இக்கவிதையில் காணப்படுகிறது.

 ‘மருதத்தில் வளமில்லையென்று
 நீ ஒதுங்கிய இடம்
 பாலை’
என்ற வரிகள் அவனுக்கோ அல்லது அவளுக்கோ மணவாழ்க்கை சரியாக அமையவில்லை என்ற தகவலைத் தருகிறது. அவனோ அவளோ நினைத்தால், மிகவும் பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலையைக் கவிதையின் கடைசி வரிகள் புலப்படுத்துகின்றன.

 ‘…………..இம்மாலையில்
 ஒன்பது வாசல்களிலும்
 ஜீவ திரவம் ஒழுகிவிட்டது
 இன்னும் தாமதமாகி விடவில்லை’
மனத்தின் கனத்தை

 ‘நினைவுகளும் நிராசைகளும்
 உறைந்தே இருக்கின்றன’
என்ற வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. எளிய சொற்களால் காதல் பிரிவை அழுத்தமாகச் சொல்லும் நல்ல கவிதையிது.

‘நாடோடி’ என்ற சிறு கவிதையும் நன்றாக இருக்கிறது.

 ‘என் ஒரே சொத்து
 ஓரிடம் நில்லா மனது’
என்றும்
 ‘என் ஒரே பற்று
 என் கால்கள்’
என்ற வரிகள் நாடோடியின் திக்கற்ற நிலையைச் சொல்கிறது.

பின்னட்டையில் உள்ள ‘கனிவு’ கவிதை, ஒரு கனியைப் பற்றியது. அற்புதமாக இருக்கிறது. கனியும் எதிர்காலம் யூகத்தில் வரிசைப்படுத்தப்படுகிறது.

 ‘பொத்தி மறைத்துப்
 போற்றியிருந்த இலைகள் இரண்டும்
 உதிர்ந்து விட்டன
 மறை விழந்து
 அம்மணமாகிவிட்டது’

என்ற வெளிப்பாட்டில் காணப்படும் துல்லியம் ரசிக்கத்தக்கது.

 ‘கண் விழிகள் சில
 உமிழ் நீரொழுகக் கண்டிருந்தன’
என்பதில் கனி சற்றே எட்டாத உயரத்தில் இருக்கிறது என்ற தகவலை உள்ளடக்குகிறது.

 தலைப்பில்லாக் கவிதை ஒன்று…
 ‘ஆட்டுக்குட்டிகள்
 முதுகு தேய்த்துரச உதவட்டும்
 என் கல்லரைச் சுவர்’
என்ற கவிதையில் செத்தும் உதவக் காத்திருக்கும் சீதக்காதி மனம் தெரிகிறது. ‘என்னருகில் யாருமற்ற பொழுது’ ஒரு தற்சார்புக் கவிதை! தன் மனஆய்வு, முன் வைக்கப்படுகிறது.

 ‘நமக்குள் நம்மை அறியாமல்
    துருவ குணங்கள்
 புகுந்துவிட்ட’
என்ற வரிகள் பொதுவான மனித இயல்பு பற்றிய கணிப்பாக இருக்கிறது. ‘நான்’ கவிதை ஒருவரின் நிறைவேறாத ஆசையைச் சொல்கிறது. எதிர்காலத் திட்டங்கள் எல்லாமே நடந்து விடுவதில்லை என்ற யதார்த்தம் சுட்டப்படுகிறது.

 ‘ஒரு சாவி கூட இல்லை’ என்ற கவிதை யாரும் இருவரை எழுதாத கருப்பொருள் என்றே நினைக்கிறேன். நம்மிடம் சாவி என்ற ஒன்று இல்லாவிட்டால் பூட்டில்லை, தாழ் இல்லை, கதவு இல்லை, அறையில்லை, ஓர் இடம் இல்லை என்று கவிதையில் தகவல்கள் அடுக்கப்படுகின்றன. மிக எளிய கவிதை. ஆனால் எல்லா சொற்களும் அவசியமானவை!

 ‘மழை’ கவிதையில் ஒரு நல்ல நயம்…
 ‘சற்றே பிரசவ நெகிழ்வடைகின்றன
 கருவானின் இடுப்பெலும்புகள்
 கேட்க முடிகிறது
 அதன் வலிக்கதறல்களை!

என்ற வரிகளில் மழையின் ஓசைக்குக் காரணம் சொல்கிறார் கவிஞர். புதுமையான சிந்தனை. அதன் வழி ஒரு நல்ல படிமம்! புத்தகத்தின் தலைப்பு இக்கவிதையில் உள்ளது. ‘என் குட்டி இளவரசி’ யில் பாசம் பொங்குகிறது.

 ‘அவன் பிய்த்து உதிர்க்காத பலகாரங்களை
 எறும்புகளும் தீண்டவில்லை’ என்பது நல்ல வெளிப்பாடு.

 ‘என் குட்டி இளவரசியின் முன்
 சேர்த்த சொத்துகள் எல்லாம்
துரும்பு என இன்று உணர்ந்துவிட்டேன்’.
என்றதில் பிள்ளைப் பாசம் உச்சம் பெறுகிறது.

 ‘மரண தண்டனை’ விரக்தியில் தோற்றுப்போன ஒருவனின் வெறும் வாழ்க்கையைக் காட்டுகிறது. தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன் கூற்றாக இக்கவிதை அமைந்துள்ளது.

 ‘நான்
 காற்றைப்போல்
 பயணத்தைத் தவிர
 வேறெதையுமே செய்யவில்லை’

என்ற வரிகள் வாழாமல் போன ஒருவனின் சோக கீதமாக ஒலிக்கிறது.

முடிவாக, மகுடேஸ்வரன் கவிதைகள் அவற்றை அவர் நடத்திச் செல்லும் விதத்தால் சிறப்பு பெறுகின்றன. அமுதசுரபி, ஆனந்த விகடன், உயிர்மை, கல்கி, கணையாழி, கவிதா சரண், தின மலர், தூரல், தை, நடுகல், புதிய காற்று, புதிய பார்வை ஆகியவற்றில் வெளியானவை. தொகுப்பு நிறைவு தருகிறது. எனவே கவிதை வாசகர்கள் அனைவரும் இத் தொகுப்பைப் படித்து ரசிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.

Pin It