படைப்பிலக்கியம் என்பது அந்தந்த காலக்கட்டத்தின் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகின்றன. ஏற்கனவே சமூகத்தில் ஊறிப்போன கோட்பாடுகளிலிருந்து விலகாமல் அவற்றைச் சார்ந்தும் ஆதரித்துமாய் படைக்கப்படுகிறவை ஒரு வகை. களையப்பட வேண்டிய நெறிமுறைகளை, தவறான நம்பிக்கைகளை, திருத்திக் கொள்ள வேண்டிய வழக்கங்களை அக்கறையுடனும், அங்கதம் கலந்தும் சுட்டிக்காட்டுபவை ஒரு வகை. இரண்டாவது வகையில் வெற்றி கண்டிருக்கிறது யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ சிறுகதைத் தொகுப்பு.   மற்றுமொரு செய்தியாக நாம் கடக்க நேர்ந்த நிகழ்வுகளையும், புரையோடிக் கிடக்கும் சமூக சீர்க்கேடுகளையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் சித்தரிக்கிற கதைகள் மனதில் வலியையும், நம் இயலாமை குறித்த குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

2003 முதல் 2011 வரையில் எழுதப்பட்டு, பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்த பனிரெண்டு கதைகளும் கால வரிசையின்படியே தொகுக்கப்பட்டுள்ளன.  தற்போது ஊடகவியலாளராகச் செயலாற்றும் கதாசிரியர், வட மாநிலங்களில் செய்தியாளராகப் பணியாற்றிய சமயத்திலேயே மக்களை நெருக்கமாகப் படிக்கத் தொடங்கியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். அனுபவங்களையும், எண்ணங்களையும் படைப்பிலக்க ரீதியில் எழுதினாலே காலத்துக்கும் அவை நிலைத்திருக்கும் என்கிற இவரது நம்பிக்கையில் எனக்கும் உடன்பாடு உண்டு.

மனதை மிகவும் பாதித்த கதை ‘துரைப்பாண்டி’. நாம் காண நேரும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளிகளின் பின்னாலும் என்னென்ன வேதனைகளோ என எண்ண வைக்கிற கதை. வலுவில்லாத சட்டங்களால் நாட்டில் இவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. துயரும் தீர்வதாகத் தெரியவில்லை. மும்பையில் இட்லி விற்கும் பதினொருவயதுப் பாலகன் துரைபாண்டியுடன் கதைசொல்லிக்கு மலருகின்ற இயல்பான நட்பு நாட்பட நாட்பட நெருக்கமாகிறது. வேலைபார்க்கிற இடத்தில் கிடைத்த அடியும், வைக்கப்பட்ட சூடும் தாங்க முடியாது போகிற ஒரு கட்டத்தில் தன் அம்மாவுக்கு கடிதம் எழுதித் தரக் கேட்டுக் கொள்கிறான். “அழுது விடக் கூடாது. அது அவனையும் பாதிக்கும் என்பதால் கட்டுப்படுத்திக் கொண்டு, அவனது வார்த்தைகளை எழுத்துக்களாக உருமாற்றினேன்..” என்றவாறே ‘அன்புள்ள ஆத்தாவுக்கு...’ என ஆரம்பித்து ‘அன்பு மகன் துரைப்பாண்டி’ என முடிகிற கடிதம் நம்மைக் கலங்கச் செய்து விடுகிறது. இதுபோல மாட்டித் தவிக்கும் எல்லாக் குழந்தைகளுக்காகவும் மனம் பரிதவிக்கிறது. அந்தப் பரிதவிப்புடனேயே நாம் நின்று போய்விடுவதையும் எந்த வகையிலும் இவர்களுக்கு உதவ முடியாது போகிற கையாலாகாதத் தனத்தையும் சுட்டிக்காட்டுகிற கதையின் முடிவு, கசப்பான உண்மை.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் மத, இன, மொழி, சாதியை முன் நிறுத்தி நடக்கிற கலவரங்கள் கலக்கத்தைத் தந்தாலும் கடந்து போகிறோம் நேரடியாகப் பாதிக்காத வரையில். ஆனால் அவற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் மிச்ச வாழ்க்கை எப்படி அந்த ஆறாத ரணங்களை உயிர் உள்ளவரை வலியோடு சுமந்து கொண்டேயிருக்கின்றன என்பதைச் சொல்லுகிறது, த்ரில்லர் கதையாக ஆரம்பித்து, சுவாரஸ்யமாக நகர்த்தப்பட்டு, இறுதியில் உலுக்கிப் போடும் ‘கடந்து போதல்’! பாலியல் ரீதியான வன்முறையைத் தைரியமாக மோதி எதிர்கொள்ளும் பள்ளி மாணவி ஜெயாவை முன் நிறுத்துகிற ‘பாரதியின் ஒரு பாட்டு’ நம்பிக்கையை நம்முள் விதைக்கிறது. மும்பைப் பின்னணியில் அவளது குடும்பச் சூழலையும் விவரிப்பது சிறப்பு.

கோட்டி முத்து’ போன்ற அப்பாவி மனிதர்களை உலகம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது, அவர்களுக்கென்று ஒரு மனமும் வாழ்வும் இருப்பதை எவ்வளவு சுலபமாக மறந்து போகிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது முதல் கதை. புரிந்து கொள்ளப்படாமல், மதிக்கப்படாமல் போகிற இந்த ஆன்மாக்களின் பரிசுத்த அன்பைச் சுட்டிக்காட்டி ஆதங்கத்துடன் நிறைவுறுகிறது கதை.

அந்தந்த நாளின் பிரச்சனைகளைச் சமாளிப்பதே பெரிய சவாலென வாழும் எளிய மனிதரின் வாழ்வைக் கண்முன் கொண்டு வருகிறது ‘பொம்மை’. ஊரிலிருந்து வரும் தன் தம்பிக்கு விருந்து வைக்க மனைவி கடன் வாங்கி வரச் சொல்ல, நாள் முழுக்க மூச்சுத் திணறும் பொம்மை உடைக்குள் புகுந்து கடைக்கு வருவோரைக் குதூகலிக்க வைக்கிற வேலையிலிருக்கும் பன்னீருக்கு கடன் கேட்க வேண்டிய நெருக்கடி. ஐநூறு ரூபாய் தர மறுக்கும் சேட், படா சாப்பின் பிறந்ததினத்துக்கு கொடை வசூலிக்க வந்த கும்பலிடம் கட்டுக்கட்டாகப் பணத்தை இழக்கிறார். என்ன நிகழ்ந்தாலும் எளிய மனிதரிடத்தில் முதலாளிகள் காட்டுகிற நியாயங்கள் மாறுவதில்லை. ‘விடிவெள்ளி’ சிறுகதை, புகுந்த வீட்டினரால் பணம் கேட்டு சித்திரவதை செய்யப்படும் மூத்த மகள் குறித்த ஆட்டோ ஓட்டுநரின் கவலையைப் பேசுகிறது.

ஆசிரியரின் பிறந்த மண்ணான இராமேஸ்வரத்தின் பின்னணியிலும் சில கதைகள். மீன் பிடித்தொழிலே பிரதானமாய் இருந்த அந்தச் சிறிய கிராமம், ‘தண்ணீர் தேசம்’ ஒன்பது வருடங்களில் முற்றிலுமாய் மாறிப்போய் விட்டிருக்கிறது.  ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்ள நண்பரின் வீட்டில் ஒரு சொம்புத் தண்ணீர் கேட்க, ஒரு சொட்டுத் தண்ணியில்லை என வீட்டுக் குழந்தை கடைக்கு அனுப்பப்பட, அது வெளிநாட்டு பெப்சியோடு வந்து நிற்கிறது.

காணாமல் போன மகனுக்காக இராமேஸ்வரத்திலிருக்கும் அனுமாருக்கு ‘வேண்டுதல்’ செலுத்த வருகிற தம்பதியரின் நம்பிக்கையையும், அவர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டியின் பிழைப்பு குறித்தும் நகரும் கதை, குருக்கள் வழிகாட்டியிடம் வைத்த வேண்டுதலுடன் முடிகிறது.

ஐந்தாம், ஆறாம் வகுப்பில் இருக்கையில் நான் படித்த பள்ளியின் விடுதியில் பேய் உண்டென்றும் அது இரவில் என்னென்ன செய்ததென்றும் உலவிய கதைகளை அப்பட்டமாக நம்பிய காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது ‘பேய்வீடு’. இரசித்து வாசித்த கதை.

தலைப்புக் கதை ‘சாமியாட்டம்’. நுண்ணிய அவதானிப்புடனான விவரணைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. இதுபோன்றதான நம்பிக்கைகளைச் சாடும் கதையோ என நினைக்கிற வாசகர், எதிர்பாராத முடிவில் திகைத்து, சமூகத்தின் மாறாத மனப்போக்கின் மேல் அதிர்ச்சி அடைவது உறுதி.

ஒவ்வொரு கதையும் சமூகத்தின் வெவ்வேறு பக்கங்களைத் திறந்து காட்டுகின்றன.  எந்த இடத்திலும் எந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தீர்வையும் எடுத்து வைக்காமல் நிதர்சனத்தைத் தன் போக்கில் சொல்லிச் செல்கின்ற விதத்திலேயே கதைகள் சிந்திக்க வைக்கின்றன.

*
பக்கங்கள்: 126; விலை: ரூ. 70;
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்;
கிடைக்கும் இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
தொலைபேசி எண்கள் : 9940446650
இணையத்தில் வாங்கிட: " டிஸ்கவரி புக் பேலஸ் "
**

'சாமியாட்டம்’ பாலபாரதியின் முதல் சிறுகதைத் தொகுப்பென்றாலும் மூன்றாவது நூலாகும். முதல் வெளியீடு ‘இதயத்தில் இன்னும்’  (2000) என்கிற ஹைக்கூ தொகுப்பு. இரண்டாவதாக நூலான ‘அவன் - அது - அவள்’ (2011) நாவல் திருநங்கைகளின் வேதனைகளையும், நேர்கொள்ளும் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தி, அவர்கள் மீதான சமூகத்தின் பார்வையையே மாற்றி, தங்களுள் ஒருவரென உணர வைத்ததற்காகப் பெரிய அளவில் பேசப்பட்ட நாவல்.

ஆட்டிசம் - ஒரு புரிதல்’  வெளியாகிறது , ஆசிரியர் கொண்டிருக்கும் சமூக அக்கறையின் அடுத்த வெளிப்பாடாக நான்காவது நூல்,  30 மார்ச் 2013 சனிக்கிழமையன்று மாலை 4.30 மணிக்கு, தியாகராயர் நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில். பதிப்பகம் பாரதி புத்தகாலயம். ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்காக மட்டுமின்றி, சாதாரணக் குழந்தைகளின் பெற்றோரானாலும், ஆட்டிசத்தின் பாதிப்பறியாமல் தங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்களை ஒதுக்கி விடாமல் இயல்பு வாழ்க்கையை வாழவழிசெய்யவும் உதவ வேண்டும் என்கிற எண்ணத்துடன் வெளிவருகிற இந்நூலின் உயரிய நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவோம்! இயன்றவர்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள்!

***

- ராமலக்ஷ்மி

Pin It