கவிதையைக் குறித்து ஏராளமான கருத்துக்கள் உண்டு. ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொன்றோடு முரண்பட்டு நிற்கும். கருத்துக்கள் முரண்பட்டிருந்தாலும் கவிதைத் தன் பாதையில் பயணித்துக் கொண்டேயுள்ளது. 'கவிதையை எழுதி மக்களுடன் கண்குலுக்கி இதயம் கனக்க வைப்பதில் கவிதையை எழுதி இருண்மைச் சிறையில் கைதியாய் வைப்பதில் ஒரு சில நேரங்களில் உடன்பாடும் முரண்பாடும் உடையவன் நான் என்னும் கருத்தினை உடைய கவஞர் பிச்சினிக்காடு இள’;கோவின் கவிதைத் தொகுப்பு 'இரவின் நரை'.

கவிதை, கதை, கட்டுரை, பாடல்கள் என படைப்பில் பல வகை உண்டு. படைப்பு எதுவாயினும் படைப்பிற்கு அவசியமானது மொழி.மொழியே அனைத்துக்கும் மூலம் மொழியை வைத்தே எழுதப்பட்டுள்ளது முதல் கவிதை.

சொல் உன்னுடையது
கவிதை என்னுடையது என 'மொழி'யிடம் பேசியுள்ளார். ஒரு படைப்பாளராக தன்னை தன்னம்பிக்கையுடன் முன்னிறுத்தியுள்ளார். எனினும்

என் கவிதையின்
உயிர் நீ என மொழியைப் பெருமைப் படுத்தியுள்ளார். மொழி இன்றி இலக்கியம் இல்லை என்கிறார்.

'பயணம்' கவிதையிலும்

என் பேனா நடக்கக் கற்றதும்
அதற்கு அழகு தந்ததும்
மொழிதான் என்கிறார்.

பொதுவான 'மொழி'யைப் பற்றி எழுதினாலும் தொகுப்பின் நிறைவுக் கவிதையில் 'தமிழ்தான் முகவரி' என்கிறார்.

தமிழின்றி நமக்குத்
தனியொரு முகவரியா? என வினாவை எழுப்பி தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.

எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதுவர். 'புனைப் பெயர்' என்னும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். 'புல்லா' குழல்' குறித்து கவிதை இயற்றியுள்ளார். வாசகர்களை வாசிக்கச் செய்துள்ளார்.

பலவீனத்தை
ஒட்டைகள் என்பார்கள்.
பலமே எனக்கு
ஓட்டைகள்தான் என 'புல்லாங்குழல்' பேசுவதாக உள்ளது,. புல்லாங்குழலின் பலத்தை அறியச் செய்துள்ளார். 'தண்டனை' யும் புல்லாங்குழல் கூறுவதாகவே உள்ளது. தலைப்பு வேறாயினும் கவிதைகள் ஒன்றையே மையப்படுத்தியுள்ளது.

இரவு வெளுத்தால் பகல். கவிஞர் பகலை 'இவின் நரை' என்கிறார். நல்ல கற்பனை . இரவிற்கும் பகலுக்குமான இடைப்பட்ட காலத்தைக் கவிதையாக்கியுள்ளார்.

உலகம் தூங்கினால்
எப்படி உணரும்? என வினா எழுப்பியுள்ளார். விடியலை உணரச் சொல்கிறார்.

ஒருவன் கவிஞராவதற்கு பல காரணங்கள் இருக்கும். முக்கியமானது 'காதல்'. காதல் பலரைக் கவிஞர் ஆக்கியுள்ளது. கவிஞர் ஆவதற்குக் காதல் 'கிரியா ஊக்கி' என்கிறார்.

நீ
நீயாகத்தான் இருக்கிறாய்
என்னைத்தான்
'கவிஞன்'
என்கிறார்கள் ஒரு காதலால் ஒருவருக்குக் கிடைக்கும் பட்டமே கவிஞர் என்பதாகும். கவிஞருக்குக் கிடைத்துள்ளது. காதலால் கவிதை உலகிற்கு ஒரு கவிஞர் கிடைத்துள்ளார். 'இரவின் நரை' யில் காதல் கவிதைகளும் உள்ளன.

பருவத்தே பயிர் செய் என்பது பழமொழி. பருவம் என்பதைக் காலம் எனவும் கொள்ளலாம். 'காலம்' கவிதையில்
காலத்தில் பயிர் செய்தாலும்
நம்மை
அறுவடை செய்வது காலம்தான் என்று தத்துவம் பேசியுள்ளார். காலமே எதையும் தீர்மானிக்கும் என்கிறார். காலமே சிறந்த மருந்து என்பதை நினைவுக் கூர்ந்துள்ளார். காலத்தை பலவாறாக எழுதியுள்ளார். இறுதியாக காலத்தை வெல்வோம் என்கிறார்.

'எளிமை' எப்போதுமே அழகானது. எளிமைக்கு என்றுமே வரவேற்பு உண்டு. எளிமையே என்றும் நிரந்தரானது. 'எனிமை'யைக் குறித்து 'எளிமை' யாகவே எழுதியுள்ளார்.

சிக்கனச் சிரிப்புக்குக்
கலகலப்பைக் காட்டிலும்
கௌரவம் அதிகம் என்கிறார். எளிமைக்கே மதிப்பு மிகுதி என்று உணர்த்தியுள்ளார் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளும் 'எளிமை'யாகவே உள்ளது என உறுதியாகக் கூற முடியும்.

'நட்பு' என்பது விட்டுக் கொடுப்பது. ஒளிவு மறைவு இல்லாதது. உண்மைக்கு இலக்கணமானது. பாசாங்கு அற்றது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையரோடு நல்ல 'நட்பு' முடிந்து விட்டது.

நமக்கிடையில்
இடைவெளி என்பது
நதியாய் இருக்கையில்
நட்பு என்றொரு
பாலம் தேவையா?

'நட்பு' மூலம் வினா எழுப்பியுள்ளார். நட்புப் போலியாகி விட்டது என்கிறார் நட்பு இதய பூர்வமாய் இணைந்து இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

'அசரீரி' ஒரு குறிப்பிடத்தக்கக் கவிதையாக உள்ளது. கவிஞர்கள் மளிதர்களை பலவிதமாக விமரிசனம் செய்கின்றனர். சாடுகின்றனர். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு விதமாய்க் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் கவிஞர் கவிஞர்களையே விசாரணைக்குட்படுத்துகிறார். காரணம் கவிஞர் என்பவரும் மனிதரே என்கிறார். ஒரு கவிஞராக இருந்தும் கவிஞர்களை விடவில்லை எல்லோரும் மனிதர்களாகவே இருக்க வேண்டும் என்கிறார். கவிஞருக்குக் கேட்ட 'அசரீரி' வாசகருக்குள்ளும் கேட்கவே செய்கிறது.

ஒரு பறவை
பறந்த படியே
மரமில்லை (பொன்.குமார்) என்னும் ஒரு ஹைக்கூவை நினைவுப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது 'மனசு கனமாகி' கவிதை. ஒவ்வொரு மரத்தின் பெயரையும் அதன் ஒவ்வொரு இருப்பிடத்தையும் சொல்லி அவைகள் வெட்டப்பட்டு விட்டன என்கிறார். இறுதியாக
பறவைகள் எங்கே
பசியாறும்?
பறவைகள் எங்கே
இளைப்பாறும்? என வினாக்கள் எழுப்பியுள்ளார். பறவைகளுக்காக வருத்தப்பட்டுள்ளர். மனசைக் கனக்கச் செய்துள்ளார். ஆனாலும்....
அது முளை விடுவதும்
இலை விடுவதும்
ஒரு
பௌர்ணமி அழகுதான் என
'விருட்சம்' கவிதையில் மரத்தின் அழகை ரசித்துள்ளார்.
மதங்களைக் காட்டிலும்
மரங்களை நம்புங்கள் என 'ஆகாயம் பச்சை'யில் அறிவுறுத்தியுள்ளார். மதம் எப்போதும் அழிவையே தரும். மரமோ என்றுமே மனிதனுக்கு நன்மையே பயக்கும். மதம் வேண்டாம் என்பதும் வரவேற்கக் கூடியதே.

மனித வாழ்வு மகத்தானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வலைக்குள் சிக்கியுள்ளனர். விடுபட முயன்றாலும் விடுதலைப் பெறமுடியாத நிலையே தொடர்கிறது.
விட்டு விடுதலையாக
விழைந்தாலும்
முடியாத
மாய வலை என்கிறார். கவிதையின் தலைப்பு 'மாயச்சிறை'. வலை என்றாலும் சிறை என்றாலும் விடுபட முடியாது என்று உணர்த்தியுள்ளார். கவிஞருக்கு கவிதையே சிறை, வலை. விடுபடுதல் சிரமம். எனினும் 'கவிமனம்' கவிதையில்
உழைப்பின் பரிமாணம்
எதுவெனினும்
என்
உள்ளக் கவிமனம்
களைக்காது என்கிறார். கவிமனத்தின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு கவி”னுக்கு அவனே கடிதம் வடிவில் எழுதப் பட்ட கவிதை 'என்றும் அன்புடன்.' கவிலையை விடு. கடந்ததை மற என நம்பிக்கையூட்டியுள்ளார்.

நல்லவர்களை அப்பாவி என்பர்.கவிஞர் 'அமைதி'யை அப்பாவி என்கிறார்.
தோட்டாக்கள்
துளைக்கலாம்
குண்டுகள்
வெடிக்கலாம்
நிலைப்பதென்னபோ
நீதான் என 'அமைதி'யைப் போற்றியுள்ளார். அமைதியே வெல்லும். நிலைக்கும் என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.

கவிஞருக்கும் சிங்கப்பூருக்கும் தொடர்பு உண்டு. சிங்கப்பூரில் வசித்தவர். வாழ்ந்தவர். இத்தொகுப்பில் மூன்று கவிதைகள் சிங்கப்பூரைப் பற்றியதாயுள்ளன.
விமானங்களின்
வேடந்தாங்கல்
கட்டடக் கவிதைகளின்
தொகுப்பு என ஒரு கவிதையில் 'சிங்கப்பூர்' ஐக் காட்சிப்படுத்தியுள்ளார். கருத்தைக் கவர்ந்துள்ளார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவனின் கவிதை முயற்சி வரவேற்பிற்குரியது. சொல்ல வேண்டியதை சுவைபட சொல்லியுள்ளார். எழுத வேண்டியதை எளிமையாக எழுதியுள்ளார். கவிதைக்கும் கவிஞனுக்கும் நேர்மை அவசியம். 'இரவின் நரை'யிலுள்ள கவிதைகள் நேர்மையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பூடகம் இல்லாமல் பாசாங்கு இன்றி கவிதைகள் வாசிப்பவனோடு எளிதில் நட்பு கொண்டு விடுகின்றன. வடிவமைப்பு புதுக்கவிதைக்கு ஏற்றதாக உள்ளன. கவிமனம் கொண்டவர் என்பதைக் கவிதைகள் சாட்சியளிக்கின்றன. பாடுபொருளில் கவிஞர் கவனம் செலுத்தினால் கவிதை உலகில் வெற்றிப் பெறுவார் என்பது திண்ணம். அதற்கு 'இரவின் நரை' நல்ல தொடக்கமாக உள்ளது

-பொன்.குமார்

Pin It