"என் கவிதைகள் தொகுப்பாக வெளி வருகின்றன என்ற பெருமிதத்தைத் தவிர எனக்குச் சொல்ல வேறொன்றுமில்லை'' என்னும் கிருஸ்ணப்ரியாவின் அறிவிப்புடன் வந்திருக்கிறது 'வெட்கத்தில் நனைகின்ற. . . ' தொகுப்பு. கவிதைகள் குறித்து கவிஞர்கள் பேசுவதை விட பிறர் பேசுவதே சிறப்பு. கவிதைகள் எதை, எப்படி, ஏன் பேசியுள்ளன என்று அறிய முடியும்.

இளமையில் காதலிப்பது முழுக்க மனம் சார்ந்தது அல்ல. முதுமையில் வெளிப்படுவதே மெய்க் காதல். வயதான பிறகே கணவன் மனைவியின் உறவு பிடிபடும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு வெளிப்படும். ஆசை புலப்படும். 'ஆசை' என்னும் முதல் கவிதை தாத்தா பாட்டி மீது வைத்துள்ள ஆசையைக் குறித்து பேசுகிறது. "என் மேல் அவருக்குக் கொள்ளை ஆசை" என்று பாட்டியின் கூற்றைக் கூறி அந்த கணத்தை நினைத்துப் பார்க்கச் செய்கிறார்.

ஒவ்வொரு முறையும்
புரியாமல் யோசிக்கிறேன்
ஆசைக்கான அர்த்தத்தை

என்று கவிஞர் யோசிக்கிறார். யோசிக்கச் செய்கிறார். அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். 'மரண வாக்கு மூலம்' கவிதையும் பாட்டியை வைத்தே எழுதப்பட்டுள்ளது. மரணத் தருவாயில் இருக்கும் போது பாட்டி சின்ன சாமி தாத்தாவோடு தொடர்பில்லை என்று புலம்புவதாக எழுதியுள்ளார். பெண்களை சமூகம் தவறாக பேசுவதைக் குறிப்பிட்டுள்ளார். அது எந்தளவிற்கு பாதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

'அபிசேகம்' ஒரு பெண்ணியப் பார்வை. புதுமைப் பார்வை. பெண் தெய்வங்களை ஆண் அர்ச்சகர்கள் குளிக்க வைக்கிறார்கள். ஆடை அணிவிக்கிறார்கள், அலங்காரம் செய்கிறார்கள். ஒரு பெண்ணாக கவிஞரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்னதான்
கல்லாய் நீ நின்றாலும்
அர்ச்சகர்கள் ஆண்களாயிற்றே

என்று வருந்துகிறார். கல்லாக பார்த்தால் கலக்கம் வேண்டியதில்லை. தெய்வமாக பார்க்கும் போதே கூச்சம் ஏற்படுகிறது. கவிஞர் தெய்வமாக பார்த்துள்ளார். ஒரு பெண்ணாக பார்த்துள்ளார். கவிஞரின் பார்வையை கவிதை உலகம் பார்க்கும். பேசும், 'அரங்கேற்றம்' கவிதை பெண்ணியம் தொடர்பானது. ஒரு பெண்ணின் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் எல்லாமே ஓர் அறைக்குள் தனிமையிலேயே முடிந்து விடுகிறது அல்லது முடிக்கப் பட்டு விடுகிறது என்கிறார். மற்றவர்களுக்காகவே பெண் வாழ வேண்டியுள்ளது என்கிறார்.

சுற்றுலா என்பது புதிய இடங்களைக் குழுவினருடன்,குடும்பத்தினருடன் சென்று தரிசிப்பது. ஆனால் இது 'அசல் சுற்றுலா' அல்ல என்கிறார். பள்ளி நண்பர்களை, பழகிய நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே 'அசல் சுற்றுலா' என்கிறார். அதுவே கவிஞரின் விருப்பமாகவும் உள்ளது. பழைய நட்புகளுக்காக 'உங்களுக்கும் இப்படித்தானா?' கவிதையில் ஏங்கியுள்ளார். இரண்டிலும் ஒரு மனைவியாகவே பேசியுள்ளார்.

ஒரு தாய்மையின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளது 'அந்த 90 நாட்கள்'. கவிஞர் குறிப்பிடும் அந்த 90 நாட்கள் அரசு அலுவலகத்தில் பெண்களுக்கு வழங்கப் படும் பேறு கால விடுப்பாகும். அந்த 90 நாட்களில் ஓர் அரசு ஊழியரின் நிலையையும் பற்றாக் குறை வரவு செலவு திட்டத்தில் வாழும் ஒரு குடும்ப நிலையையும் ஒரு பெண்ணனின் நிலையையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆயினும் ஒரு தாயாக உயர்ந்து நிற்கிறார். பின்னர் வாய்ப்பின்றி போகும் பேறு காலத்தை முழுமையாக அனுபவிப்போம் வா என்று சிசுவை அழைப்பது நெகிழ்த்துகிறது.

என்றேனும் வரலாம்
எல்லாக் கருவறைகளும்
பெண் சிசுவுக்காய்க்
காத்திருக்கும் காலம்

'எதிர் பார்ப்பு' என்னும் இச் சிறு கவிதையும் தாய்மையயே கூறுகிறது. பெண் என்பவள் தாய்மை அடைந்தே ஆக வேண்டும் என்கிறார்.

இருவேறு நிலைகளை எடுத்துக் காட்டியுள்ளது 'அர்த்தமிழக்க வைக்கும் கைகள் '. வயிறு நிறைய வகை வகையாக சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது பசிக்காக ஒரு சிறுவன் கையேந்தினால் சாப்பிட்டவன் மனநிலை என்ன பாடுபடும் என விவரித்துள்ளது.

அத்தனை சந்தோக்ஷங்களையும்
அர்த்தமற்றதாக்குகின்றன
பசியென்று கையேந்தும்
சின்னஞ்சிறு கைகள். . .

இது இன்றைய நிலை. இந்தியாவின் நிலை. இருப்பவனுக்கு மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கிறது செல்வம். இல்லாதவனுக்கு தொடர்ந்து இல்லாத நிலையே ஏற்படுகிறது. இருவருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை என்று கவிஞர் கந்தர்வன் எழுதி எல்லோருக்கும் விடுமுறை நாளானாலும் பெண்களுக்கு மட்டும் இல்லை விடுதலை என்கிறார். 'எனக்கான காற்று' தொகுதியில் கவிஞர் ஏ. ராஜலட்சுமியும்

'எனக்கு' கவிதையில்
உனக்கு ஞாயிறு விடுமுறை
எனக்கு?

என வினா எழுப்பியுள்ளார். இதே தொனியில் இதே பாணியில் கவிஞரும் 'அரூபப் புலம்பல்கள்' கவிதையில் ஞாயிறு அன்றும் பெண்களுக்கு ஓய்வில்லை என்கிறார்.

வீடு மொத்தமும்
தொலைக் காட்சி, அலை பேசி என்று
தன்னைப் புறக்கணிப்பதைப்
பொறுத்துக் கொள்ளவியலாமல்
தேம்பும் ஞாயிறு
பார்க்கத் தவறுகிறது
விடுமுறை நாளின் விசேக்ஷ சமையலுக்காக
சமையலறையில் கட்டப் பட்டிருக்கும்
அவளை

ஞாயிற்றுக் கிழமை என்பது அனைவருக்கமான விடுமுறை நாள். ஆனால் வீட்டுப் பெண்மணிகளுக்கு மட்டும் விடுமுறை இல்லை,மற்ற நாள்களை விட கூடுதலாகவே பணியாற்ற வேண்டி உள்ளது. கவிஞரும் பெண்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். பெண்களக்கு விடுதலைக் கிடைக்கும் வரை இது போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். பெண் விரும்பும் 'ஆசையாய் ஒரு நாள் ' என்று வரும் என்று வேண்டியுள்ளார். ' நானும் நீயும்' கவிதையும் பெண்ணியம் பேசியுள்ளது. ஆண்களைச் சாடியுள்ளது. பெண்கள் கலவி சுகத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்கிறது 'அந்த இரவுகள் அப்படித்தானிருந்தன'. அதிலும் ஆண்கள் லாபம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாத விலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை என மாத விலக்குக் குறித்து கவிஞர் கனிமொழி எழுதி இருந்தார். இது பொதுவானது. அடுத்து கவிஞர் ஆவெண்ணிலா

தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
சந்தித்தாற் போல்
அதிர்கிறது மனசு

என்று அதன் அவஸ்தையை எழுதியிருந்தார். கவிஞர் 'கசிவின் பயம்' என மாத விலக்கு பற்றி எழுதியுள்ளார். மாத விலக்கு காலத்தில் பெண்கள் படும் அவஸ்தையை, எதிர் கொள்ளும் சிக்கல்களை வரிசைப் படுத்தியுள்ளார். மாத விலக்குக் கவிதைகளிலேயே இக் கவிதை முக்கியமானதாகும்.

நாற்பதைக் கடந்து
நாலைந்து வருடமாகியதில்
எப்போது வருமோ இது
என்று பயந்துதான் நகருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்

மாத விலக்குக் கவி்ஞருக்குள் ஏற்படுத்தியுள்ள பயத்தின் வெளிப் பாடாகவே வெளிப் பட்டுள்ளது.

வர வேண்டிய நேரத்தில்
வரா விட்டால்
வந்து விடுகிறது பயம்

என்னும் பொன்.குமாரின் கவிதையை நினைவுக் கூரச் செய்தது, பொதுவானது எனினும் மாதவிலக்குக்கும் பொருந்தும் . 'கறைகள்' கவிதையும் மாத விலக்கையே முன்வைத்துள்ளது.

இந்தியாவின் கல்வித் திட்டம் ஆங்கிலேயன் காலத்தில் ஏற்படுத்தப் பட்டதாகும், மாணவர்களை மனப் பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றவே செய்கிறது. கவி்ஞர் 'அழுக்கான படிப்பு' என்கிறார். விளையாட்டுடன் கூடிய படிப்பே அவசியம் என்கிறார். கல்வித் திட்டத்தையும் விமரிசித்துள்ளார்.

பெண்கள் பூப்பு அடைவது இயற்கை. ஆனால் விவரம் தெரியாத வயதிலேயே வயதுக்கு வருவது கொடுமை. பூப்பு நன்னீராட்டு விழா நடத்துவது தேவையற்றது.

விழா முடிந்து நடக்கும்
அன்னதானத்திற்காய்
வெளியே காத்திருக்கும் தொகுப்பு
பசித்த பிள்ளைகளின் நடுவே
ஓடி விளையாடுகிறாள்
பாவாடைச் சிறுமியாய். . .

பருவம் அடைந்தாலும் 'அவளும் சிறுமியாய்' ஆகவே உள்ளாள் என்கிறார்.

வருடந் தோறும்
அவளுக்கு
வயது வருகிறது.
அந்த வருடம்தான்
அவள் வயதுக்கு வந்ததாய்
அவள் அம்மா கூறினாள் என்று கவிஞர் மு. மேத்தா எழுதியதை நினைவூட்டுகிறது. சிறு வயதில் பூப்பு எய்தும் சிறுமிகளுக்காக வருந்தியுள்ளார்.

'வெட்கத்தில் நனைகின்ற' என்னும் இத் தொகுப்பு பெண்ணியம் பேசிய அளவிற்குக் காதலையும் பேசியுள்ளன. காதல் என்பது வெளிப் படுத்தாத நிலையிலேயே உள்ளது. வெளிப் படுத்தவும் விருப்பம். ஆனாலும் தயக்கம்.

ஆம் என்ற என் பதிலுக்காயத்
துடிக்கும் ஆண் மனசுக்கும்
சொல்லக் கூடாதென்று
பிடிவாதம் பிடிக்கும்
பெண் மனசுக்கும்
நடுவில்
அமர்த்தலாய் இருந்து
நமட்டுச் சிரிப்பை உதிர்க்கிறது
நம் காதல்,,,,

இப்படியாக எண்ணற்ற காதல் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

கவிஞர் கிருஸ்ணப்ரியாவிடம் பெண்ணியச் சிந்தனைகளே மிகுந்துள்ளன. கொஞ்சம் காதல் நிறைய பெண்ணியம் என்னும் அளவில் தொகுப்பு அமைந்துள்ளது. பெண்ணியத்திலும் பெண் மொழி மிகுதி. பெண் உடல் மொழிக் குறைவு. ஆனாலும் கவி மொழி நன்று. எளிமையான மொழியிலேயே கவிதைகளை கட்டமைத்துள்ளார். அனுபவ வெளிப் பாடாகவே அனேகக் கவிதைகள் உள்ளன. பெண்ணின் பல நிலைகளிலிருந்தும் எழுதியள்ளார். பல நிலைகளையும் எழுதியுள்ளார். பெண்ணியக் கவிஞர்கள் வரிசையில் கவிஞர் கிருஸ்ணப்ரியாவிற்கு நிச்சயம் ஓரிடமுண்டு. பெண்ணியத் தளத்தையும் தாண்டி பொதுத் தளத்திலும் இயங்கியுள்ளார். அது தொடர வேண்டும். " கிருஸ்ணப்ரியாவிடம் இன்னும் பல மாறுபட்ட தனித்துவமான அனுபவங்கள் இருக்கின்றன. அவை எதிர் காலத்தில் வெளிப் படும். அப்போது அவர் மீது இன்னும் கூடுதலான கவனம் குவியும் " என பதிப்புரையில் கவிஞர் சுகன் குறிப்பிட்டது மெய்யெனவே கவிதைகள் உணர்த்துகின்றன. கவிஞர் சக்தி அருளானந்தம் ஒரு நல்ல நவீன ஓவியர். அவரின் ஓவியங்கள் கவிதைத் தொகுப்பைக் கனப் படுத்தகின்றன.

ஏற்றுக் கொண்ட
அத்தனை அவதாரங்களையும்
கச்சிதமாய் முடித்து விட்டு
துங்கப் போகும் முன்பாக
சமையலறைத் தொட்டியைத் தேய்த்துக் கழுவுகையில்
எச்சங்களோடு சேர்ந்து நழுவி விழுகின்றன அசதியில்
என் கவிதைக்கான வார்த்தைகள்

என்று 'எச்சங்களோடு விழுந்த வார்த்தைகள்' கவிதையில் எழுதியுள்ளார், அசதியில் விழுந்தவை எனினும் அசலாக உள்ளன. அசத்தலை ஏற்படுத்துகின்றன. அதிர்வைத் தருகின்றன.

Pin It