கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் - முதல் பதிப்பு திசம்பர் 2010
நேசமித்ரன்

உயிர்மை பதிப்பகம்

பிரத்யேகமான மொழி ஒன்று வசப்படும் நிலை என்பது ஒரு கவிஞனுக்கு இன்றியமையாதது. அவ்வாறு ஒரு மொழி வசப்பட்டே ஆகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கவிதைகளை உருவாக்கம் செய்ய விழைவது பல நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். ஆனால் தனக்கென தனித்த வார்த்தைக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டு கவிதைகளைக் கிட்டத்தட்ட கல்லெறிவது போல எறிய வருகிறார் நேசமித்ரன்.

செயற்கை என நமக்கு வாய்த்திருக்கிற எந்த ஒரு பொருளையும் அதன் அர்த்தங்களிலிருந்து தத்தெடுத்து அலங்காரம் இல்லாத இயல்பான முன் வைத்தல்களின் மூலமாய் அவற்றினுள் பொதிந்து கிடக்கக் கூடிய இருண்மையை அதன் விகாரத்தை காட்சிப்படுத்துகிறார்.

நேசமித்ரன், கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் என்னும் தனது முதலான தொகுப்பினை வெகு சிலருக்கான தனது கவிதைகளை கொண்டு நிரப்பியிருக்கிறார். இவரது கவிதைகளின் உள்ளே ஒரு மாயம் இருக்கிறது. அந்த மாயம் வெகு இயல்பானதாக வழக்கமாக வழங்கப்படுகின்ற மாயத்திலிருந்து விலகி நிற்கிறது. அந்த மாயம் புனைவுகளின் மூலமாக ஒரு மொழியைக் கிளர்த்திக் கீழ்தள்ளி அதனைப் பலவாறு கலைப்பதன் மூலம் இதுவரை எழாத அல்லது எழுப்பப்படாத கவிதைகளை வெளிக்கொணர்கிறது.

கண நேரம் விலகினாலும் வாசகனைப் புறம்தள்ளி வெகு தூரம் சென்று விடக்கூடிய கவிதைகளாக நேசமித்ரனின் எழுத்துக்களைக் கருத வேண்டியிருக்கிறது. வாசகன் என்ற ஒரு பதத்தை மிகுந்த மேதமைக்குப் பின்னதான வாசிப்பை எதிர்நோக்க கூடிய எழுத்துக்களிவை. எப்பொழுதாவது மட்டுமே கிடைக்கப்பெறுவது தான் அதன் இயல்பான வெளிப்பாடு. அந்த வெளிப்படல் இவரது கவிதைகளுக்கு முன் அவசியமானவையாக இருக்கிறது.

படிமங்கள் நேசமித்திரனிடம் செல்லப்ராணிகளைப் போன்றே கிறங்குவதை இந்த தொகுப்பு முழுவதிலும் நாம் உணர முடிகிறது.

நிலா மிச்சமிருக்கும் கடல் தியானத்திலிருக்கிறது (குறுஞ்செய்தி)

உறக்கத்தில் தந்த முத்தங்களின்
நேயம் உடல்தானம் கொடுத்த ப்ரேதமாய்
வாழத்துவங்குகிறது
தனித்தனியாகவும் ஒன்றாகவும்

(திசை பிரித்தல்)

இதை சமகாலத்தில் ஒரு முறையும் இறந்த மற்றும் எதிர்காலங்களில் வெவ்வேறு விதங்களாகவும் பொருத்த முடிவது அசாதாரணம் தான்.

நேசமித்திரன் அதிர்வுகளற்று தான் எழுதும் எல்லாவற்றையும்  கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல விடுவிக்கிறார். ப்ரம்மராஜனின் சில கவிதைகளில் இதே மாதிரியான அனுபவம் நமக்கு கிடைக்க கூடும்.ஆனால் நேசமித்ரன் மனனம் செய்த அதிசயங்களை கவிதைகளினுள்ளாக நிகழ்த்திப் பார்க்க தலைப்படுகிறார்.

யானையின் மரணச் சடங்காய்
மீதெறிந்தபடி இருக்கிறது மின்னல் கிளைகள்
கருந்தாள் ஒட்டிய கண்ணாடிப் பக்கங்கள்
உடைந்தபடி இருக்கும் கடலில்
கர்ப்ப காலத் தொப்புள் நிலா சுமந்து

(ஆகாயத்தில் உறைந்திருக்கும் கடல்)

அகத்திரையின் சகல அடுக்குகளிலும் பன்முக விரிவாக்கமடையும் தரிசனம் மிக்க வரிகள். நேசமித்திரன் சுயபேட்டிகளை, அளவற்ற காமத்தை, வன்புணர்வை, அதீதமான உணர்வுகளை ஒருபோதும் கவிதைக்குள் அனுமதிக்க கூடாது என்ற முன் தீர்மானத்துடன் எழுத வந்திருக்கிறார். இவை எல்லாமும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ஆனால் அவரது கவிதைகளில் முன் சொன்னவற்றை விட அதிர்வுகளைத் தான் ஏற்படுத்துகிறார். தனது  தனிப்பட்ட மொழியின் துணை கொண்டு.

பழமைக்கும் புதுமைக்கும் என கட்டமைக்கப் பெற்றிருக்க கூடிய எல்லா எதிர்பதங்களுக்குமான பொதுப்புள்ளி ஒன்றை உருவாக்கி அதை தனக்கான வெளியாக மாற்றிக்கொள்கின்றன நேசமித்ரனின் கவிதைகள்.

ப்ரமிட்,சலஃபன் ஃபோட்டோ, வெப்காம், தெர்மகோல், க்ளோனிங், பாராசூட், ப்ரெய்லி, கொலாஜ், டெரகோட்டா, ரோபோட், போன்சாய், வைப்பர், ட்ராகன், பியானோ, ஸ்டெராய்டு, பைனாகுலர், ஸ்டென்சில், கார்பன், செல்ஃபோன், மைக்ரேன், ப்லோரொசெண்ட்


மேற்சொன்னவைகள் எல்லாமும் மேற்கத்தைய நாகரீக மொழிக்குச் சொந்தமான வார்த்தைகள். இவற்றை தமிழ்படுத்துவதல்ல தனது நோக்கமென்ற வகையில் இவை அனைத்தையும் அதனதன் இயல்பான வருகை எங்கனம் நமது மொழிக்குள் நிகழ்ந்ததோ,எவ்வாறு எந்த வித்யாசமுமின்றி நாம் அனைவரும் மேற்சொன்ன சொற்களை நம் மொழியினை ஒத்த உணார்வோடு பொருத்தி இருக்கிறோமோ அதே மாதிரியான இயல்பான எழுச்சிகளை ஏற்படுத்தி இத்தனை பதங்களையும் நேசமித்திரன் கவிதைப்படுத்துகிறார்.

வனம் எரியும் பாம்புகளின் பாதைகள் எனும் கவிதையில்

கவுச்சிக்கு நெருங்குகின்றன நாய்கள்
கருக் கலைந்து பெருகித் துடைத்த
பிண்டங்களுடன்  கூடிய
உதிரப் பஞ்சுக்கு

மேற்சொன்னதை நாம் பலமுறை கண்டும் கடந்தும் இருக்கக்கூடிய காட்சி தானென்றாலும் நேரடியாக மனசிலறையும் வரிகள் காணும்பொழுதெல்லாமும் கிட்டிவிடாத பெருவலியொன்றை இடம்பெயர்ப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

காலுறைகள் திருடுபவன் என்னும் இத்தொகுப்பின் கடைசிக்கவிதையின் முற்று வரிகள் நேசமித்திரன் கையிலெடுக்கும் மொழிவன்மையைப் பறைசாற்றுகின்றன.
கூடும் இரு ஆண்களை நிழலாக்குகின்றன
ஈரிலைத் தாவரத்தின் கிளைகள்


செலஃபோன் புல்வெளி என்னும் மற்ற ஒரு கவிதை நம்மை நிறுத்தக்கூடிய ஒற்றைப்புள்ளி கவனத்திற்குரியது.

புதைக்க வெட்டிய குழியில் சல்லிவேர் சடை
சூழப்படுத்திருக்கும் அயல்தேச மகள் வரும் வரை
பால்மடி இறங்கிய செம்பழுப்பு நாய்

துக்கத்திற்கடுத்த காத்திருத்தலின் அபத்தமும் அதைக்கடக்கும் வரையிலான பாவனைகளும் அற்றுக் கிழித்தெறியப்படுகின்றன இவ்வரிகளில்.

ப்ரேத முத்தம் என்னும் கவிதையில்

புதைத்த பிறகும் வீட்டில் மிச்சமிருக்கிறது
இறந்தவன் வாசனை

எப்படி மறுக்க முடியும்..?

மூன்று சக்கர நாற்காலியின்
பெடல் சக்கரத்திற்கு  சொட்டிய எண்ணை
தேய்ந்த பற்களில் இருந்து வழிகிறது

என்னும் வரிகள்(ப்ராயம்)வதை என்னும் உணர்வுச்சத்தில் நம்மை நிறுத்துவது சொல்லத்தக்கது.

இந்த தொகுப்பின் மிக முக்கியக் கவிதைகளுள் ஒன்று தான் "காய மாதவம்".

காயங்கள் ஆற்றும் செவிலிப்பெண்
மாதவம் செய்து கொண்டிருக்கிறாள்
தெய்வங்கள் புகைப்படமாகிவிட்ட உலகில்

நேசமித்ரன் கடவுள் என்னும் நம்பிக்கையைத் தகர்க்க தலைப்படும் கணத்தை மிக அலட்சியமாக அதே நேரத்தில் சொல்லுறுதியுடன் அணுகுகிறார். இந்த கவிதையில்  செவிலிப்பெண்ணை எடுத்து விட்டு வேறேதையுமே பொருத்திப் பார்க்க இயலாது இருப்பது தான் இதன் ஒருமை.

நேசமித்திரன் தன் பெயருக்கேற்ப எளிமையான அன்பை முன்வைக்கிற கவிதைகளை இனி வரும் காலங்களில் எழுதக்கூடும். வசீகரமான மொழி கைவரப்பெற்றதாலேயே சிறந்த பங்களிப்பை நிகழ்த்தி விடவேண்டுமென்ற வேகமும் அவசரமும் கொஞ்சமும் இன்றி முதலில் தனக்கென ஒரு கவிதை வெளியை உருவாக்கிக் கொண்டு அதனுள் இருந்து சொற்களைக் கோர்த்தும்,கலைத்தும் கவிதைகள் செய்து கொண்டிருக்கும் நேசமித்ரன் அறிவியலையும் மொழியின் ஆதிப்பழமையையும் இயல்பாக உறவாடச்செய்து ஆச்சர்யப்படுத்துகிறார் தனது கவிதைகளில்.இவரது சொற்கூட்டங்கள் மிகுந்த நீளங்களையும் அதற்குத் துணையாக செயற்கை நம் வாழ்வில் திணித்து வைத்திருக்கும் படிமங்களையும் அதீதமான வினைபுரிதல்களுக்கு உட்படுத்துகின்றன..

கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்--அதிர்ந்து கொண்டே இருக்கும் நிசப்தம்

Pin It