விண்ணைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது இந்த விண்கலம். என்னைச் சுற்றி வெள்ளை நிறத்தில் வேற்று கிரகவாசிகள். நடுவில் அமர்ந்திருக்கிறேன் நான். அமர்திருக்கிறேன் என்றா சொன்னேன். இல்லை அமர்த்தப் பட்டிருக்கிறேன். கடத்தப் பட்டிருக்கிறேன். முதன் முதலாய் பூமியிலிருந்து விண்வெளியின் ஏதோ ஒரு கிரகத்திற்கு கடத்தப்படும் முதல் மனிதன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமைதான்.

 நான் தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கியவாதி. இதுவரை மூவாயிரத்து இருநூற்று இருபத்தாறு பக்கங்களில் ஒரு குறுநாவலும், தலா ஐயாயிரத்து சொச்ச பக்கங்களில் இரண்டு நாவல்களும், மேலும் டெரா பைட் கணக்கில் கவிதைகளும் (எல்லாம் இணையத்த்தில் எழுதியது எனவேதான் டெரா பைட் கணக்கு.) இலக்கிய உலகிற்கு என்னாலான ஒரு சிறு பங்கு.

 விண்கலம் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. சுற்றி எல்லாரும் புது சுவற்றுக்கு வெள்ளை அடித்ததுபோல், ஜெகன் மோகினி படத்து பிசாசுகள் போல அப்படி ஒரு வெள்ளை நிறத்தில் அமர்ந்திருந்தார்கள். முதலில் வாகனத்தில் உறிஞ்சி போடப்படும்போது இது ஏதோ சக இலக்கியவாதி மோகனபுத்திரகிருஷ்ணனின் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். இதைப் படித்தால் அவன் தன்னை வேரு வெட்டித்தா பாராட்டிவிட்டார் என தனது இணையதளத்தில் போட்டுவிடுவான். அதற்காக முழுமையும் சொல்லி விடுகிறேன். அவன் எழுதுவது அனைத்தும் குப்பை. இருந்தாலும் இவ்வளவு குப்பைகளையும் மாங்கு மாங்கு என எழுதும் ஒருவனையும் இலக்கியவாதி என்று தானே ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாம் தமிழ் இலக்கியத்தின் தலைஎழுத்து.

 பாருங்கள் இவர்கள் விண்வெளிக்கு என்னை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் தமிழ் இலக்கிய சூழல் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னை யார் புரிந்து கொள்கிறார்கள். எனது புத்தகம் மறுமையில் வெறும் பதினோரு ரூபாய்க்கு டவுன்லோட் பண்ணக் கிடைக்கிறது. அப்படி இருந்தும் யாரும் வாங்கவில்லை. என் வீடு கேஸ் அடுப்பில் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கிய பூனை கரோமுரோ தூங்கிக் கொண்டிருக்கிறது. கராமுரா பற்றி எட்டாயிரம் பக்கங்களில் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்குப் போனதும் வெளியிடுகிறேன்.

 வீட்டுக்குப் போவேனா? சார்த்தரிலிருந்து சாரு வரை உலகத்தின் மொத்த இலக்கியங்களை கரைத்துக் குடித்த ஒருவனை, அவனது மூளையை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவார்களா வேற்றுகிரக வாசிகள்? அறுத்து ஆராய்ந்து விட மாட்டர்கள்? இன்று தான் எனது கடைசி நாள். இவர்களை என்னை எந்த கிரகத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. அநேகமாய் பூமிக்கு அருகிலிருக்கும் ஏதாவது கண்டுபிடிக்கப்படாத கிரகமாய்த்தான் இருக்கவேண்டும். ஏனெனில் எனக்கு யாரும் ஆக்சிசன் குழாய்கள் மாட்டவில்லை என்றாலும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.

 சுற்றி நான்குபேர். ஜெகன் மோகினி பிசாசுகளேதான். வாகனத்தில் சுவஸ்திக் குறியை சுருக்கியதுபோல் ஏதோ வரைந்து வைத்திருக்கிறார்கள். அவர்களது சிம்பல் போலும். தொலையட்டும். என்ன செய்வார்கள்? பெரிதாய் பயந்து கொண்டிருக்க, அந்த கிரகத்தில் பூமியின் இலக்கிய சேவைக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அனுப்பிவிட்டால் நன்றாக இருக்கும். நாம் நினைப்பது எங்கே நடக்கிறது?

 எனது இணையதளத்தை இரண்டு லட்சம் பேர் பார்க்கிறார்கள். சரி விளம்பரம் மூலம் சம்பாதிக்கலாம் என Google-Adsense இணைத்து வைத்து இரண்டு மாதம் கழித்துப் பார்த்தால் மூன்று ரூபாய்தான் சேர்ந்திருந்தது. கிளிக்கினால்தான் காசு என அப்புறம்தான் சொல்லித்தந்தது ஒரு பிரகஸ்பதி. நானும் மாங்கு மாங்கு என கிளிக்கி இரவு மூன்று மணிக்கு படுக்கப் போகும்போது 98 டாலர் சேர்ந்திருந்தது. அப்பாடா எனப் படுத்து மறுநாள் பார்த்தால் Account Blocked. அதே போல் இந்த கதை ஆகவேண்டும். 

 வாகனம் நின்று விட்டது. இவர்களது ஆய்வுக் கூடம் போலும். என்னைத்தவிர இன்னும் சில மனிதர்களும் இருந்தார்கள். அனைவரும் தோல் உரிக்கப்பட்டு பச்சை நிறத்தில். நில்லுங்கள்! ஒரு வேளை இது மரணமா? நான் இறந்து விட்டேனா? என் உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்களா? இவர்கள் எமதூதர்கள்? இது சொர்க்கமா நரகமா? எப்படி இருந்தாலும் இலக்கியத் தொந்தரவு இருக்காது. எனது படைப்புகளை யாரிடம் சொல்வது? யார் படிப்பார்கள்?.

 அதிக அளவில் மனிதர்கள் இருப்பது ஒரு வகையில் நல்லது. பலவகையில் கெட்டது. நம்மிடமே இலக்கியம் கற்று நம்மையே நாறடிப்பார்கள். இப்படித்தான் வைத்தியக்காரன் என்ற பெயரில் பதிவெழுதும் ஒருவனுக்கு சின்ன வயதில் டீ காபியெல்லாம் வாங்கிக் கொடுத்து பிரஞ்சு இலக்கியத்தை அறிமுகம் செய்தேன். இன்று அவன் என்னையே திட்டி பதிவெழுதுகிறான். ஒரு குரு பக்தி வேண்டாம்? எனது குருவை மானாவாரியாக கெட்ட வார்த்தைகளில் நான் திட்டுகிறேன் என்றால் நான் தனிப்பிறவி அய்யா! இதற்காகத்தான் சாதாரண ஜந்துக்களிடம் நான் தொடர்பு கொள்வது கிடையாது.
 
 “எங்கே இழுத்துக் கொண்டு போகிறீர்கள் விடுங்கள்.. இன்றிரவிற்குள் “போர்னோவும் ஜூஜூவும்” நாவலை முடித்து பாலவழுதிக்கு அனுப்பவேண்டும் விடுங்கள்.”

 என்னுடன் வந்தவன் அவர்கள் கிரகத்தின் தலைவரிடம் சொன்னான். தமிழில்!

“டாக்டர் ரொம்ப முத்திடுச்சு! ஷாக் ட்ரீண்மெண்ட் கொடுத்துப் பாக்கலாம்!”

- லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It