வானம் மப்பும் மந்தாரமுமாய் காட்சியளித்தது. மாலை சாய்ந்திருந்த வேளை, நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் புஷ்பம் காலனி பெரியவர்கள், மழை வரப்போவதாய் குறிப்பறிந்து தத்தம் வீடுகளின் முன்பாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வீட்டிற்குள் விரட்டிக்கொண்டிருந்தனர். விளையாட இடம் கிடைத்த தோரணையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கூதற்காற்றின் மத்தியில், அனிச்சையாய், பழக்கப்பட்ட வழியில் தானே நகரும் கால்களுக்கு உடலைத் தந்துவிட்டு, எங்கோ எதிலோ தொலைத்துவிட்ட நினைவுகளைத் தேடக் கூடத் திராணியின்றி சோர்வாய்க் காலனித் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தான் நந்தா.

lady_236மெல்ல நடந்து, தரை தளத்திலொரு வீட்டில் கட்டிப்போடப்பட்டிருந்த நாய் இவனைப் பார்த்ததும் வாலாட்டியதை கவனியாமல், தளர்வாய்ப் படியேறி முதல் மாடி வந்தான். அவன் எதிர்பார்த்தபடி அவன் வீட்டுக்கதவு தாழ் போடப்படாமல் வெறுமனே சாத்தியிருந்தது அவன் சோர்வை இரட்டிப்பாக்கியது. இன்னதென்று புரியாத வகைக்கு ஒரு வித ஆயாசம் நந்தாவின் மனதை சூழ்ந்துகொண்டது.

இரண்டு மூன்று நாட்களாக மஞ்சு சரியில்லைதான். வீட்டை சரிவர கவனிப்பதில்லை. குழந்தைக்காவது சாப்பாடு கொடுத்தாளா? குழந்தை சாப்பிட்டாளா? நந்தா அவசரமாய் கதவை மூடி உட்புறமாய்த் தாழிட்டுவிட்டு, ஐந்து வயது பெண் பிரமிளாவின் ரூம் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். அவள் வீட்டுப்பாடங்கள் செய்தபடிக்கு, திறந்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தின் மீது எச்சில் வழிய, குப்புற படுத்தபடி தூங்கிவிட்டிருந்தாள். நாளை ஞாயிற்றுக்கிழமைதான். அதனால் தூங்கட்டும். அவசரமில்லை என்பதாய் பிரமிளாவின் ரூமை பொத்தினாற்போல சாத்திவிட்டு வந்து ஹாலில் சோபாவில் உட்கார்ந்தான். ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. தான் ஃபேன் போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஹாலில் யாரும் இல்லாமல் எத்தனை நேரம் ஃபேன் ஓடிக்கொண்டிருந்ததோ தெரியவில்லை? நந்தா ம்ச் என்றவாறே ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடி சோபாவில் சாய்ந்து, ஷூக்களிடமிருந்து லாவகமாய் கால்களை விடுவித்துக்கொண்டு டீபாயின் மேல் சாக்ஸ் மூடிய கால்களை நீட்டிச் சாய்ந்தான்.

லேசாகத் தலை தூக்கிப் பார்த்தபோது மஞ்சு ரூமில் ஒருக்களித்துப் படுத்திருந்தது ஹாலிலிருந்தே தெரிந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் நடந்தது முதல் முறையாக. அப்போது தான் நந்தாவுக்கும் மஞ்சுவுக்கு திருமணம் நடந்திருந்தது.திருமணமான இரண்டாவது மாதத்திலொரு நாள் இதே போல வீடு சரிவர ஒழுங்கு செய்யப்படாமல், மஞ்சு ரூமில் படுக்கையில் ஒருக்களித்துப்படுத்திருந்தாள். அவள் கைகளைக் குறுக்கே மடித்துக் கட்டியிருக்க, கைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையே தங்க நிற‌ ஃப்ரேம் போட்ட சட்டத்தில் தியாகுவின் புகைப்படம். அந்த தங்க நிற ஃப்ரேம் அவளின் கண்ணீரில் நனைந்திருந்தது. நந்தா சற்றே அருகே சென்று கவனிக்கையில் அந்த சட்டம் தியாகுவின் புகைப்படத்தைத் தாங்கியிருந்தது. அவள் அன்னேரம் தூங்கியிருந்ததால், நந்தா கவனித்ததை அவள் கவனித்திருக்கவில்லை.

தியாகு மஞ்சுவின் முதல் கணவன். அடுத்த தெரு மஞ்சுவை நந்தா உருகிஉருகி காதலித்துக்கொண்டிருக்க, மஞ்சுவின் மனதை கல்லூரித்தோழன் தியாகு படிக்கத்தொடங்க, அது காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்திருந்தது. பிரமிளாவிற்கு இரண்டு வயதிருக்கும்போது பிரமிளாவின் அப்பா தியாகு ஒரு கார் விபத்தில் மரணமடைந்திருந்தான். இரண்டு வயது பிரமிளாவுடன் மஞ்சு இருபத்தினான்கு வயதிலேயே தனிமரமானது கேள்விப்பட்டு நந்தாவுக்கு இருதயமே நின்றுவிடும் போலிருந்தது.

இளம் விதவையாகி இருந்தாள் அவன் இதயம் திருடியவள். பெண் உணர்வுகளின் குவியல். உணர்வுகள் பெண்ணை ஆளாதிருக்கும் நேரம், அவள் மரணம் மட்டுமே. அவள் மட்டும் என்ன விதிவிலக்கா? பெண் எனும் வீட்டின் ஜன்னல்கள் திறக்கப்பட்டால் பிரவேசிக்கும் காற்று அவளின் எதோவொரு உணர்வுடன் மட்டுமெ பிரவேசிக்க முடிகிறது. அது தென்றலாவதும், புயலாவதும் அந்த உணர்வைச் சார்ந்தே அமைகிறது. உணர்வுகளை ஆளக் கற்கவில்லை அவள். உணர்வுகளால் உருப்பெற்றிருக்கிறாள். வெறும் முலைகளும், பிருஷ்டங்களுமே பெண்னென பார்க்கும் உலகத்தில் அவளை வல்லூறுகள் குறிவைக்கலாம். தென்றலும் புயலும் ஒரு முறையின்றி அவள் ஆழ்மனதில் அவளயுமறியாமல் பலவந்தமாய் மையம் கொள்ள முயற்ச்சிக்கலாம். அதனால் அவள் மாசடையலாம். இதுபோன்ற தருணங்களில் அவளுக்கு காவல் தேவை. மஞ்சுவிற்கும் அது தேவை. மஞ்சுவை உணர்வுகளால் மட்டுமே பார்த்திருந்தான் நந்தா. உணர்வுகளோடு மட்டுமே அவளை காதலித்திருந்தான்.

அவன் அவளுக்கு காவல் இருக்க முடிவு செய்தான். ஓடிச்சென்று வாழ்வளித்தான் தன் கனவு தேவதைக்கு. வல்லூறுகள் அலையும் மயானத்தில் அரிதான பூ அவளுக்கு அழகியகுடையானான். மஞ்சுவின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தான். மஞ்சுவின் குழந்தையை தன் குழந்தையாய்ப் பார்த்துக்கொண்டான். பிரமிளா மட்டுமே தனது ஒரே குழந்தை எனவும் முடிவு செய்துகொண்டான். மஞ்சுவின் மேல் கொண்ட அத்தனை வருட காதலில் கனிந்த பாசம் மொத்தத்தையும் மஞ்சுவின் மேல் பொழிந்தான். மஞ்சுவே அவனின் எல்லைகடந்த பாசத்தில், அன்பில் திக்குமுக்காடிப்போனாள் .

அன்று தியாகுவின் புகைப்படத்தைக் கட்டியபடி ஒருக்களித்துப் படுத்திருந்ததைப் பார்த்ததுமே தோன்றியது, மஞ்சுவால் தியாகுவை மறக்கமுடியவில்லை. இப்போது இந்த மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

நந்தா மீண்டும் ஒரு முறை படுக்கை அறையைப் பார்த்தான். மஞ்சு அதே நிலையில், ரூமில் ஒருக்களித்துப் படுத்திருந்தது தெரிந்தது. கொஞ்சம் எக்கிப் பார்த்தபோது, அவள் இருகைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையே அதே தங்க நிற ஃப்ரேம் போட்ட சட்டம். நந்தாவுக்கு புரிந்துவிட்டது. அவளால் இன்னும் தியாகுவை மறக்க முடியவில்லை. தளர்வு அவனை மெல்ல படரத் தொடங்கியிருந்தது. அவள் எத்தனை நேரம் இப்படி தியாகு நினைவாய் படுத்திருக்கிறாளோ? சாப்பிட்டிருப்பாளா? தலை வலித்திருக்குமோ? ஒரு டீ போட்டுக்கொடுத்தால் எழுந்து உட்கார்வாளோ? அல்லது, வேண்டாவெருப்பாய் ஆனால், எனக்காக‌, சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாய், என்னைப் பொய்யாய் சமாதானம் செய்யவாவது எழுந்து உட்கார்வாளோ? அவன் கனவு தேவதை, காய்ந்த சருகாய்க் கிடப்பது அவனால் ஜீரணிக்கமுடியவில்லை.

அவளை எழுப்பவும் தயக்கமாய் இருந்தது. மூன்று வருடத்திற்கு முன்பு, மறுமணமான இரண்டாவது மாதத்தில், அவள் இப்படி ஒருக்களித்து படுத்திருக்கையில், அவளை எழுப்பப் அவள் அம்மா போனபோது, தியாகுவை மறக்கமுடியவில்லை என்பதாயும், தியாகுவின் காதலுக்கு தான் அருகதையற்றவள் என்பதாயும், தியாகு அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது என்பதாயும் அவள் அழுது அரற்றிய குரல் இன்னமும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் அவளை எழுப்பினால், அப்படி அவள் அழுது அரற்றி தன் மனக்கஷ்டத்திற்கு, சோகத்திற்கு வடிகால் தேட அவளுக்குத் தேவைகள் இருக்கலாம். ஆனால், தன்னைப் பார்த்துவிட்டு, தன் முன்னே அப்படி வெளிப்படுத்தத் தயங்கி, அவ்வேதனையை அவள் அவளுக்குள்ளேயே ஆழத்தில் புதைக்க முயற்சிக்கலாம். அல்லது என் முன்னே எனக்கான வாழ்க்கைத்துணைவியாய் இருப்பதாக பொய்யாய், தன் துக்கத்தைத் தனக்குள்ளேயே மறைத்து, ஒரு தோற்றமளிக்க அவள் யத்தனிக்கலாம். அப்படி நடந்தால், என் மனதை நோகடிக்க வேண்டாமென்கிற கரிசனத்தில் அவள் சாதாரணமாக எப்போதும் போல் நடந்துகொள்ள முயற்சித்தால், அது அவளின் இயல்பை விட்டு திரிந்ததாக இருக்குமோ? அவளின் அந்த நேர துக்கத்துக்கான வடிகாலை அவள் தானாகவே பெற்றிட, தானே ஒரு தடைக்கல்லாகிப் போய்விடுவோமோ?

அவள் இயல்பு தன்னால் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது. எந்த நிலையிலும் அவள் அவளாகவே இருக்கட்டும். அவளின் முழுச்சுதந்திரத்தையும் அவளே ஆளட்டும். அவனைப்பொறுத்தவரை இது ஒரு அற்பணிப்பு. மஞ்சுவிடம் அவன் கொண்ட காதலுக்கு அற்பணிப்பு. மஞ்சு என்கிற தன் காதலை, அது எவ்வாறு இருந்ததோ, அதை அவ்வாறே ஒரு சின்ன சிதைவோ மாற்றமோ இன்றி அல்லது விரும்பாமல் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தான் அவன். அவனைப் பொறுத்தவரை இறையும் காதலும் ஒன்றுதான். இறைவனிடத்தில் தன்னை அப்படியே உள்ளது உள்ளபடி அற்பணிப்பது போல, 'நீ உருவாக்கிய நான், உன்னில் ஒரு சிறு துளி நான், உன்னையன்றி நான் இல்லை, நீ பார்த்து என்ன செய்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள சித்தமாயிருக்கிறேன், என் சகலமும் உன்னுடையது, உன் பின்புலம் இல்லாமல் என்னிடம் எதிவும் இல்லை, உன்னிடம் என்னை அற்பணிக்கிறேன்' என்பதாக‌ மஞ்சுவுடனான காதலுக்கும் தன்னை அப்படியே அற்பணித்திருந்தான். அவளுடனான காதலில் முழுமையாக நனைந்திருந்தான்.

'உன்னிடம் அன்பு செய்யவே நான் பிறந்திருப்பதாய் உணர்கிறேன். உன்னிடமிருந்து எனக்கேதும் வேண்டாம். உன் விருப்பமாய் நீ எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள நான் தயார். நீயும் என்னையே நினைக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஆனால், உன்னையே நினைத்திருக்க எனக்கு நானே நிர்பந்திக்கவும் எனக்கு பிடித்தம். உனக்கென எப்போதும் இருப்பேன். நீ விரும்பும் தூரத்தில் இருப்பேன். உன்னையே நினைத்திருப்பேன். உன் சலனம் என் கவலை. உன் சந்தோஷமே என் குறிக்கோள்.' என்பதாய் அவளைத் தனக்குள்ளே பூஜித்திருந்தான்.

அவள் வாடிக்கிடப்பது அவன் மனதை வாட்டியது. கண்களில் கண்ணீர் முட்டியது. அவளின் அப்போதைய நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகிறது. அது அவளின் மனதை கசக்கிப்பிழியும் உணர்வுகளின் வடிகால். அது அப்போதைக்கு அவளுக்கு மிகவும் தேவை. தன்னுடைய தலையீடு அவளின் தவத்தை கலைக்கலாம். ஒரு செயற்கையை தோற்றுவிக்கலாம். அதை அவன் விரும்பவில்லை. அவளாகவே அதைவிட்டு வெளியே வரட்டும். பெருமூச்சொன்றை பிரசவித்தபடி எழுந்தான். மெளனம் அவனைச் சுற்று எங்கும் நிறைந்திருந்தது.

மதியம் சமைக்கப்படவில்லை. இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவளுக்கு உணவு தேவைப்படலாம். தன் குழந்தையாகிப்போன, தியாகுவின் குழந்தை பிரமிளா பசியோடிருப்பதை அவள் தாயுள்ளம் சகியாது. உணவு தயார் செய்தால் அவளுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணியவாறே உடைமாற்றிவிட்டு, சமையற்கட்டிற்குள் நுழைந்து, அவளுக்கு மிகவும் பிடித்தமான வெண்டைக்காய் சாம்பார் வைக்கத் தொடங்கினான். அங்கு பெட்ரூமில், மஞ்சுவின் கைகளுக்கும் நெஞ்சுக்கும் இடையில் அந்த தங்க நிற ஃப்ரேமில் நந்தாவின் புகைப்படம் அவளது கண்ணீரில் நனைந்துகொண்டிருந்ததையும், யாரும் எழுப்பாமல், அவள் மனம் ' நந்தாவின் காதலுக்கு தான் அருகதையற்றவள் என்பதாயும், நந்தா அளவிற்க்கு ஒருவரை காதலிக்க முடியாது' என்பதாயும் அரற்றிக்கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை. நந்தாவுக்கு அது தேவையுமில்லை.

 - ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It