அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடந்த சொத்துப் பிரிவுச் சண்டை, ஒரு குடும்பத்தின் வரைபடத்தையே மாற்றிவிட்டது.
அண்ணன் தனக்குப் பிரித்துக் கிடைத்த வயலில் வீடு கட்டிக் கொள்ள முடிவு செய்தார். அந்த வயல், அவர்கள் தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், அடுத்த ஊரில் இருந்தது.
ஊர் வேறு; மனிதர்கள் வேறு. பழக்கப்பட்ட முகங்களுக்குப் பதிலாக, பெயர் தெரியாத முகங்கள்.
அந்த வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த நாட்களில் சங்கர் இரண்டு, மூன்று முறை மட்டுமே அங்கு சென்று வந்திருந்தான்.
முதுநிலைப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்த சங்கருக்கு, அந்தப் புதிய ஊர் இன்னும் முழுமையாகப் பழகவில்லை. படிப்பு, கல்லூரி, நண்பர்கள் என்று அவனுடைய உலகம் தனியாக இருந்தது.
அப்படித்தான் ஒரு நாள், கட்டுமானப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் அவனிடம் வந்து,
“நீங்க யாரு? இங்க வீடு கட்டுறீங்களா?” என்று கேட்டான்.
“ஆமா. எங்க அப்பா கட்டுற வீடு.”
“சரி… சரி.”
அவ்வளவுதான். அந்த அறிமுகம் அன்றைக்கு அங்கேயே முடிந்தது.
அந்த மனிதனின் பெயர் குலோத்துங்கன் என்பது பின்னர்தான் சங்கருக்குத் தெரிந்தது.
வீடு கட்டி முடிந்தது. புதுமனை புகுவிழா நடந்த அன்று, எதார்த்தமாகக் குலோத்துங்கனையும் சங்கர் அழைத்திருந்தான்.
அவன் வந்தான்; வீட்டைப் பார்த்தான்; சாப்பிட்டான்; சில நிமிடங்கள் பேசினான்; பிறகு கிளம்பி விட்டான்.
அடுத்த நாள் கடையில் இருவரும் மீண்டும் சந்தித்தார்கள்.
“என்ன தம்பி, இங்கதான் இருக்கீங்களா?”
“ஆமா.”
“என் தோட்டம் கொஞ்சம் தூரத்துல இருக்கு. அங்கதான் போறேன். வர்றீங்களா?”
சங்கர் தயங்கவில்லை.
“சரி, போகலாம்.”
கடையிலிருந்து சிறிது தூரம் வரை மட்டுமே சாலை இருந்தது. அதற்குப் பிறகு பாதை மாறியது. இரண்டு பக்கங்களிலும் நெல்வயல்கள்.
பச்சை என்பது ஒரே நிறமல்ல என்பதை அந்த வயல்வெளி அன்றுதான் சங்கருக்குக் கற்றுக் கொடுத்தது.
இளம் நாற்றுகளின் பச்சை, வளர்ந்த நெல்லின் பச்சை, வெயிலில் மினுங்கும் இலைகளின் பச்சை என ஒவ்வொன்றும் தனித்தனி நிறம்.
வரப்பின் ஓரங்களில் முளைத்திருந்த சிறு புற்களும் காற்றோடு தலையசைத்தன.
வெயில் இருந்தாலும், காற்றில் வெப்பம் தெரியவில்லை. அது வயல்வெளியைத் தழுவியபடி இதமாக வீசியது.
நெற்கதிர்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் மெல்லிய சத்தம், தொலைவில் கேட்கும் மாட்டுமணி, எங்கோ ஒரு பறவையின் கூச்சல்... அந்தப் பாதையில் மனிதர்களின் சத்தம் மட்டும் இல்லை.
சங்கருக்கு அந்த அமைதி பிடித்துவிட்டது.
சிறிது தூரம் நடந்த பிறகு, குலோத்துங்கன் அவனை ஒரு தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றான்.
அது ஒரு சிறிய ஃபார்ம் ஹவுஸ் (Farmhouse).
அதைச் சுற்றி மாமரங்கள், தென்னை மரங்கள், வேப்பமரம் எனப் பல மரங்கள் வட்டமிட்டிருந்தன. மரங்களுக்கிடையே இருந்த இடங்களில் சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருவர் அமர்ந்து பேசுவதற்கும், மதிய வெயிலில் சாய்ந்துகிடப்பதற்கும் ஏற்ற இடம்.
மாமரத்தின் கீழ் சில உதிர்ந்த இலைகள் சிதறிக் கிடந்தன. சங்கர் அவற்றைப் பார்த்தான். சுத்தமாகப் பெருக்கப்படாத அந்த இலைகள்கூட அந்த இடத்துக்கு ஒரு இயற்கையான அழகைக் கொடுத்திருந்தன.
“நல்ல இடமா இருக்கு அண்ணே.”
குலோத்துங்கன் சிரித்தான். “இங்க வந்தா மனசே வேற மாதிரி இருக்கும் தம்பி.”
அன்று சிறிது நேரம் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். குலோத்துங்கன் தண்ணீர் குடித்தான்; சங்கர் குடிக்கவில்லை.
பேச்சுக்கிடையில் குலோத்துங்கன் கேட்டான், “நீங்க குடிப்பீங்களா?”
“எப்பவாவது… காலேஜ்ல நண்பர்களோட.”
“அப்படின்னா, இன்னைக்கி ராத்திரி இங்க வந்து உட்காரலாம், சாப்பிடலாம், கொஞ்சம் குடிக்கலாம்.”
சங்கர் பெரிதாக யோசிக்காமல், “சரி அண்ணே” என்றுவிட்டான்.
அந்தச் “சரி”யின் பின்னால் இவ்வளவு பெரிய இரவு ஒன்று இருப்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
அன்றிரவு எட்டு மணியளவில் சங்கர் வீட்டில் கொஞ்சமாகச் சாப்பிட்டான்.
“நண்பன் வீட்டில் படிப்பு சம்பந்தமா கொஞ்சம் வேலை இருக்கு. லேட் ஆகும்… காலையில்தான் வருவேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
வழியில் குலோத்துங்கனை அழைத்துக் கொண்டான். இருவரும் மதுபானக் கடைக்குச் சென்று, வாசனை குறைவாக இருக்கும் மதுவை வாங்கிக் கொண்டார்கள்.
பிறகு இரவு இருளுக்குள் வயல்வெளிப் பாதையில் நடந்தார்கள். மொபைல் போனின் சிறிய வெளிச்சம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்டியது.
பகலில் பார்த்த அதே வயல்வெளி; ஆனால் இரவில் அது வேறு உலகமாக இருந்தது.
பகலில் பச்சைக் கடலாகத் தெரிந்த நெல்வயல்கள், இப்போது கருமையான சுவர்களைப் போல இருபுறமும் நின்றன. காற்று வீசும்போது நெற்பயிர்கள் அலைபோல் அசைந்தன.
மொபைல் வெளிச்சம் சில அடிகள் வரை மட்டுமே சென்றது. அதற்கு அப்பால் இருள்.
“பகல்ல பார்த்த இதே இடம்தானா இது? இருட்டுல எல்லாமே வேற மாதிரி தெரியுது,” என்றான் சங்கர்.
“அதுதான் தோட்டத்தோட அழகு,” என்றான் குலோத்துங்கன்.
சிறிது நேரத்தில் ஃபார்ம் ஹவுஸை அடைந்தார்கள். சங்கர் காலணியைக் கழற்றிவிட்டு சிமெண்ட் தளத்தில் அமர்ந்தான்.
மேலே வானம், சுற்றிலும் மரங்கள், தொலைவில் எங்கோ ஒரு நாய் குரைத்தது. மற்றபடி இரவு அமைதியாக இருந்தது.
பாட்டில்கள் திறக்கப்பட்டன; பேச்சுகள் தொடங்கின.
“என்ன படிக்கிற?”
“முதுநிலை.”
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
“இன்னும் இல்ல.”
“பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களா?”
“ஆமா.”
குலோத்துங்கன் சிரித்தான். “இவ்வளவு சொத்து இருக்கே… உங்களுக்கே இன்னும் பொண்ணு செட் ஆகலையா?”
சங்கரும் சிரித்தான். “அதெல்லாம் அமையணும் அண்ணே.”
சில கேள்விகள், சில சிரிப்புகள், சில தேவையற்ற பேச்சுகள். மதுபோதை மெதுவாக இருவரின் பேச்சையும் மாற்றிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் குலோத்துங்கன் சங்கரின் தொடையில் கை வைத்துத் தடவினான்.
சங்கர் உடனே விலகி அமர்ந்தான். “அண்ணே… இப்படியெல்லாம் செய்யாதீங்க. எனக்குப் பிடிக்கல.”
“அப்படியெல்லாம் இல்ல தம்பி.” குலோத்துங்கன் மீண்டும் கை வைத்தான்.
இந்த முறை சங்கரின் முகம் மாறியது. “கைய எடுங்க.”
அவன் குரலில் இருந்த தயக்கம் கோபமாக மாறத் தொடங்கியது.
“என்ன தம்பி?”
“தொடாதீங்கன்னு சொல்றேன்ல!”
குலோத்துங்கன் எழுந்தான். எதுவும் சொல்லாமல் இருளை நோக்கி நடந்தான். சில நொடிகளில் அவன் மொபைல் வெளிச்சத்தையும் கடந்து மறைந்து விட்டான்.
சங்கர் தனியாக இருந்தான். அந்த நொடியில் போதை சற்றே விலகி, பயம் முழுவதுமாக அவனைப் பிடித்துக் கொண்டது.
‘இவன் யாருன்னே எனக்குத் தெரியாது. ரெண்டு, மூணு தடவை பழக்கம் இருந்ததுக்காக இப்படி இரவுல தனியா வந்துட்டேனே!’
சுற்றிலும் மரங்கள், இருள், தொலைவில் தவளைகளின் சத்தம், இலைகள் உரசிக்கொள்ளும் ஓசை. ஒவ்வொரு சத்தமும் சங்கரின் மனதில் வேறொரு அர்த்தத்தை உருவாக்கியது.
‘குலோத்துங்கன் ஏதாவது எடுத்துக் கொண்டு வந்துவிட்டால்? கத்தி? கம்பி? எதுவாக இருந்தாலும்? நான் இங்கே சிக்கிக்கிட்டேனோ?’
அந்த எண்ணமே அவனுக்குள் குளிரை ஓடவைத்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு குலோத்துங்கன் திரும்பி வந்தான். அவனைப் பார்த்ததும் சங்கரின் பதற்றம் இன்னும் அதிகமானது.
குலோத்துங்கன் அவனருகில் வந்து, “தம்பி, என்ன போயி அப்படி நினைச்சிட்டே?” என்றான்.
சங்கர் அமைதியாக இருந்தான்.
“தூரமா போயி தம் அடிச்சுட்டு வந்தேன்.”
“பரவாயில்லை. ஆனா நீங்க கைய வச்சது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்குப் பிடிக்கல.”
குலோத்துங்கன் சிரித்தான். “சரி தம்பி.”
சில நொடிகள் அமைதி. பின்னர் அவன் சங்கரின் முதுகில் கை வைத்தான்.
சங்கர் உடனே எழுந்தான். ‘இவன் திருந்தவே மாட்டானா?’
“நான் கிளம்புறேன்.”
“இவ்வளவு சீக்கிரமா?”
சங்கர் பதில் சொல்லாமல் நடக்கத் தொடங்கினான். குலோத்துங்கன் அவனைத் தடுத்து நிறுத்தினான். சங்கர் அவன் கையைத் தட்டிவிட்டு விலகினான்.
அடுத்த நொடி அவன் ஓடத் தொடங்கினான்.
“தம்பி!” குலோத்துங்கனும் பின்னால் ஓடினான்.
“வராதீங்க!”
“நில்!”
“என்கிட்ட வராதீங்க!”
சங்கர் வரப்பை நோக்கி ஓடினான்.
“அப்படி நினைக்கிறியாடா?” என்று குலோத்துங்கன் பின்னால் கத்தினான்.
“ஆமாண்டா! இனிமே என்கிட்ட பேசாத!”
போதையில் தடுமாறியபடி சங்கர் ஓடினான். வரப்பை விட்டு அவன் கால் நெல்வயலுக்குள் இறங்கியது. சேறு அவன் கால்களைப் பிடித்தது. ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவனுக்குப் பின்னால் வந்த குலோத்துங்கனின் கால் வழுக்கி, சேற்றுக்குள் விழுந்தது. சங்கர் அதைக் கவனிக்கவில்லை; அவன் ஓடிக்கொண்டே இருந்தான்.
வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்து, அருகிலிருந்த தண்ணீர்த் தொட்டியில் கைகால்களை அலம்பிக் கொண்டான். பிறகு ஒருமுறை திரும்பிப் பார்த்தான், குலோத்துங்கன் வரவில்லை.
சங்கருக்குச் சற்று நிம்மதி. ஆனால் வீட்டுக்குச் செல்வதற்கும் பயம்.
‘இப்போ வீட்டுக்குப் போனால் என்ன சொல்வாங்க? இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கோம். இப்படியொரு விஷயம் நடந்திருக்குன்னு தெரிந்தால்? நானும் ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டேன்?’
அவன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அந்த ஊரின் பழைய பேருந்து நிலையக் கட்டிடத்துக்குச் சென்றான். ஒரு மூலையில் அமர்ந்தான்.
சிறிது நேரம் கழித்துப் போதை குறைந்தது; பயம் மட்டும் மிச்சமிருந்தது. அந்த இருட்டில் அவன் தன்னைத் தானே விசாரித்துக்கொண்டான்.
‘புதிதாகப் பழகுபவர்களிடம் இவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கக் கூடாது. குடிக்க அழைத்ததற்காகப் போகக் கூடாது. அதுவும் இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குத் தனியாகச் செல்லக் கூடாது. இறுதியில், என்ன ஆனாலும் பரவாயில்லை… வீட்டுக்குப் போயிடலாம்’ என்று முடிவு செய்தான்.
வீட்டுக் கதவைத் தட்டியபோது அம்மா திறந்தார்.
“சாப்பிட்டியாடா?”
“சாப்பிட்டேன்.”
அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் சங்கர் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.
வீட்டில் வளர்த்த நாய் வழக்கம்போல் அவன் அறைக்குள் வந்து அவனருகில் படுக்க முயன்றது. ஆனால் சங்கரின் முகத்தை மோந்தவுடன் திடீரெனப் பின்னால் சென்றது. கதவருகில் நின்று குரைத்தது. மீண்டும் உள்ளே வந்து சங்கரை மோந்தது; மீண்டும் வெளியே சென்று குரைத்தது.
அம்மா ஓடிவந்தார். “என்னடா இது?” நாயை வெளியே அழைத்துச் சென்று கட்டிவைத்தார்.
அந்த நேரத்தில் அப்பாவும் வந்தார். வழக்கமாக சங்கரைப் பார்த்தவுடன் ஏதாவது பேசும் அப்பா, அன்று அவனைப் பார்த்தார். சில நொடிகள் அமைதியாக நின்றார். ஒன்றும் சொல்லவில்லை; அமைதியாக வெளியே சென்றார்.
அந்த மௌனம் சங்கருக்கு ஏதோ ஒன்றைச் சொன்னது. ஆனால் அவன் கண்களை மூடிக் கொண்டான்.
காலை எட்டு மணிக்கு எழுந்த சங்கர், சோபாவில் வந்து அமர்ந்தான்.
“அம்மா… டீ போடுமா?”
அம்மா சமையலறையிலிருந்து வந்தார். அவனை ஒரு நிமிடம் பார்த்தார்.
“குடிப்பியா?”
சங்கரின் முகம் இறுகியது.
அம்மா மெதுவாகச் சொன்னார்: “உங்க அப்பாவோட முப்பது வருஷமா வாழ்றேன். இதுவரைக்கும் அவருக்கு இந்தக் குடிப்பழக்கமே இருந்ததில்லை.”
சங்கர் தலைகுனிந்தான்.
“ஆனா நீ குடிச்சிட்டு வந்திருக்க.”
“அம்மா…”
“எப்ப இருந்து?”
சில நொடிகள் அமைதி.
“காலேஜ்ல இருந்து.”
அம்மாவின் முகம் மாறியது. “என்கிட்ட சொல்லவே இல்ல?”
“சொல்லணும்னு நினைப்பேன். ஆனா… நம்மளே மாட்டிக்க வேணாம்னு நினைச்சு சொல்லாம விட்டுட்டேன்.”
“இனிமே?”
சங்கர் உடனே பதில் சொல்லவில்லை.
“கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிறேன்மா.”
அம்மா அவனைப் பார்த்தார். “நீ குடிக்கவே மாட்டேன்னு சொல்லல இல்ல?”
சங்கர் அமைதியாக இருந்தான். அம்மா டீயை அவன் முன் வைத்துவிட்டு வேலையைப் பார்க்கத் திரும்பினார்.
அன்று மாலை அப்பா வேலை முடித்து வந்தார். சங்கரை அழைத்தார், “உட்காரு.”
சங்கர் உட்கார்ந்தான். அப்பா சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நாங்க பெற்றோர்களா உனக்கு என்ன செய்ய முடியும்?”
சங்கர் அமைதியாக இருந்தான்.
“சாப்பாடு போடலாம்; நல்ல துணி எடுத்துக் கொடுக்கலாம்; படிக்க வைக்கலாம்; உடம்பு சரியில்லன்னா பார்த்துக்கலாம்.”
சிறிது நேரம் இடைவெளி.
“சின்ன வயசுல எது நல்லது, எது கெட்டதுன்னு சொல்லிக் கொடுக்கலாம்.”
அப்பா சங்கரை நேராகப் பார்த்தார். “ஆனா நீ இப்ப முதுநிலைப் படிச்சு முடிக்கிற வயசுல இருக்க. இனிமேல் நாங்க உனக்குப் பின்னாடி நின்னு எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.”
சங்கர் தலைகுனிந்தான்.
“உன் உடம்பு உன்னோடது. உன் வாழ்க்கையும் உன்னோடது. அதை எப்படிப் பார்த்துக்கணும்னு முடிவு செய்ய வேண்டியது நீ.”
அப்பா எழுந்து சென்றார். அந்த வார்த்தைகளில் கோபம் இல்லை; அதுதான் சங்கருக்குப் பெரிய தண்டனையாக இருந்தது.
மறுநாள் கல்லூரிக்குச் செல்வதற்காகச் சங்கர் பேருந்து நிலையத் திண்ணையில் நின்று கொண்டிருந்தான். அப்போது எதிரே குலோத்துங்கன் வந்தான்.
சங்கரின் இதயம் ஒரு கணம் துடித்தது.
குலோத்துங்கன் சிரித்துக்கொண்டே, “அன்னைக்கு ஓடிட்டியா? அப்படி நினைச்சுட்டியா?” என்று கேட்டான்.
சங்கர் அவனை நேராகப் பார்த்தான். “ஆமா, அப்படித்தான் நினைச்சுட்டேன்.”
குலோத்துங்கன் சற்றே முகம் மாறினான். அவன் சற்றே நெருங்கி வந்து, “இந்த ஊர்ல நான் யாருன்னு தெரியுமா? எனக்கு இங்க நிறைய பேர் தெரியும்,” என்றான்.
சங்கர் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அன்று இரவு இருந்த பயம் அவன் முகத்தில் இல்லை.
“யாரெல்லாம் தெரியும் என்பது எனக்குத் தேவையில்லை அண்ணே.”
குலோத்துங்கன் சற்றே திகைத்தான். “என்ன சொல்ற?”
“நீங்க இந்த ஊர்ல எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி. எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியும்.”
“என்ன?”
“நான் ‘தொடாதீங்க’ன்னு சொன்ன பிறகும் என்னைத் தொட்டீங்க. அது தப்பு.”
குலோத்துங்கனின் முகம் இறுகியது. “அதுக்காக, அதை இவ்வளவு பெரிய விஷயமா எடுத்துக்கிற?”
“எனக்கு அது பெரிய விஷயம்தான்.” சங்கரின் குரல் அமைதியாக இருந்தது. “இனிமேல் என்கிட்ட பேசாதீங்க. பேச வேண்டிய அவசியமும் இல்லை. அதுதான் நல்லது.”
குலோத்துங்கன் சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு ஓடிப்போன அதே சங்கர்தான் இப்போது அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தான். ஆனால் அவன் முகத்தில் இருந்தது பயமல்ல; தன் எல்லையைத் தானே காத்துக் கொள்ளும் தெளிவு.
பேருந்து வந்து நின்றது. சங்கர் படிக்கட்டில் ஏறினான்; திரும்பிப் பார்க்கவில்லை. சீட்டில் உட்கார்ந்து, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.
அதே வயல்வெளி, அதே பச்சை, அதே வரப்புகள்.
பகலில் அவை எவ்வளவு அழகாகத் தெரிந்தன! ஆனால் அந்த இரவில், அதே வரப்புகள் அவனைப் பயத்தில் ஓட வைத்திருந்தன.
பேருந்து வயல்வெளியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. சங்கரின் கண்கள் அந்த வரப்பிலேயே இருந்தன.
அன்று இரவு அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய ஒரே வார்த்தை நினைவுக்கு வந்தது: “தொடாதீங்க.”
அந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அதைச் சொன்ன பிறகும் அவன் ஓட வேண்டியிருந்தது.
பேருந்து வளைவில் திரும்பியது. வரப்பு கண்களிலிருந்து மறைந்தது. சங்கர் கண்களை மூடிக் கொண்டான்.
சில எல்லைகளைத் தாண்டக் கூடாது—வயல்களில் மட்டுமல்ல, மனிதர்களுக்குள்ளும்!
- மா.அன்பரசு