கீற்றில் தேட...

காதை பின்னோக்கி சரிச்சிருக்கற நாயின் அழகு... ஜடையைத் தூக்கி முன்னாடி போட்டுக்கற பெண்ணிடம் உண்டு.

நண்பன் அவனூருக்கு கூட்டி வந்திருக்கிறான். குன்னூர் பக்கம் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஒரு ஊர். சின்ன ஊருக்குள் ஒரு குட்டி திருவிழா. என்ன ஒரு நூறு நூத்தம்பது வீடு இருக்குமா என்ற நேற்றைய இரவு நிலவுடன் இருந்த போது பேசிக் கொண்டார்கள். ஆனாலும் எல்லாரும் ஒன்னும் மண்ணுமா இருப்பவர்கள்.

காலையில் சீக்கிரமாகவே எழுந்து குளித்து தயாராகி... காலை உணவும் உண்டு விட்டு கோயில் பக்கம் சென்று நின்ற போது.... வந்து போயி... போயி வந்திருக்கும் பெண்கள்... கண்களில் குளிர்ச்சியை வார்த்தார்கள். கோயில் நோம்பி என்றாலே... ஊருக்குள் புது வித காற்று ஊடுருவி விடும். கோயிலுக்கு எதிரே நிற்கும் பழைய புளிய மரமெல்லாம் புத்தாடை போட்டுக்கொண்டது போல புது வித சிலுசிலுப்பில் தோன்றும்.

துடைத்து வைத்த அழகில் கோயில் சுவர்கள். தோகை விரித்த வனப்பில் ஊர் தெருக்கள்.

ஆடு மாடுகளுக்கும் கொண்டாட்டம். மனுஷங்களுக்கும் கொண்டாட்டம். நாய் பூனைகளுக்கு கூட கொண்டாட்டம் தான். கோழி வாத்து சேவல் என அண்டா குண்டா பானைக்கு கூட கொண்டாட்டமோ கொண்டாட்டம். செய்ய வேலை இருக்காது. ஆனால் நிற்க நேரமிருக்காது நோம்பி நாளில். கிணற்று மேட்டில் நின்று பேசுவதும்... கோயில் திண்ணையில் அமர்ந்து . பூஜைக்கேத்த பூக்களும்... கலை கட்டியது ஊர்.

காலையிலேயே கவிதை பார்.. என நண்பன் காட்டிய திசையில் கொத்து மலர் மொத்தமாய் பூத்தது போல தேவதைகள்.

"காதை பின்னோக்கி சரிச்சிருக்கற நாயின் அழகு... ஜடையைத் தூக்கி முன்னாடி போட்டுக்கற பெண்ணிடம் உண்டு"

எப்படியும் மறந்து போகும். ஆனாலும் ஒரு முறை சொல்லிக் கொண்டான் சுசி.

சிறு பிள்ளைகளுக்கான கடைகளில் பீப்பியும்... சிறு சிறு விளையாட்டு சாமான்களும்... சொப்பு பாத்திரங்களும்... வாங்குவோர் வாங்கினார்கள். இளம் பெண்களுக்கான சோப்பு சீப்பு கண்ணாடி... பவுடர் பொட்டு என மினுக்கும் அழகு சாதனங்கள்... பளபளத்து வசீகரித்துக் கொண்டிருந்தன. ராட்டினத்தில் சித்திரம் சுற்றுவது போல ஒரு கூட்டம் விளையாடிக் கொண்டிருந்தது. மறு கூட்டம் விளையாட... சிலை போல காத்திருந்தது. ஆளுக்கொரு பால் ஐஸை வாங்கி சூப்பிக் கொண்டே வேடிக்கை பார்ப்பது... வேலை வேலை என்று இறுகக் கட்டிய கயிறை அவிழ்த்துக் கொண்டு திரிவது.

சுசியின் மனதுக்குள் பகலை முழுங்கும் வானம். நண்பன் ராஜ்க்கு நெற்றியில் தொடர் புன்னகை.

ஊர் மக்களின் உள்ளத்தில் ஒளி உண்டாகிவிட்ட தருணத்தை நோம்பி நாளில் உணரலாம். கைகளை அவ்வப்போது தெரிந்தவர்களுக்கு காட்டிக் கொண்டிருந்தான் நண்பன் ராஜ். சுசிக்கு சுதந்திரம் சொக்கு பொடி போட்டது. மனதுக்குள் ஆனந்த துள்ளல். இதயத்தில் ஆழ சுவாசம்.

எங்கோ சுழன்ற சுசியின் பார்வை ஒரு திசையில் சட்டென நின்றது. திக்கென அவன் கண்களில் ஒருவித தடுமாற்றம்.
அவள் தானா... தூண் மறைவில் இன்னும் அழுந்த மறைந்தபடியே கூர்ந்து பார்த்தான்.
அவள் தானா... அவளே தான். அவளா...!

அவ எப்பிடி இங்க..?

*
காலையில் இருந்தே வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் காகங்களின் கரைதல் புது விதமாகப் படுகிறது

ரோஸ்மேரிக்கு பார்வை இல்லையே தவிர... உள்ளே எண்ணத்தில் ரேகைகள் ஓடுகின்றன.

இந்த வீட்டை ரோஸ்மேரியின் அப்பா ஜான் ஏன் வாங்கினார் என்று கேட்காதவர் இல்லை. அப்படி நினைத்த நேரத்தில் இந்த வீட்டுக்கு சென்று விட முடியாது. தூரத்தில் இருந்து பார்த்தால்.. கோபுரம் போல தெரியும் காட்சி வனப்பில் உச்சியில் வீற்றிருக்கும் கருங்கல் வீடு. மேலே செல்ல நடந்துதான் ஆக வேண்டும். அத்தனை உயரத்துக்கு வண்டி ஏறாது. குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு நடராஜா சர்வீஸ்தான். அது அவருக்கு பழகி விட்டது. ரோஸ்மேரிக்கு வெளியே செல்ல வழியும் இல்லை. விழியும் இல்லை. வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு உச்சியில் இருக்கும் பிள்ளை அவள். ரோஸ் கலரில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்திருப்பார். பார்க்கவே உச்சியில் முளைத்த பஞ்சுமிட்டாய் வேலி போல இருக்கும். பார்க்கப் பார்க்க ஆசையாய் இருக்கும். ரசனைக்காரரா என்றால் அது தெரியாது. ஆனால் ரம்மியமானவர் ஜான். அவருண்டு அவர் வேலையுண்டு. ஓய்வு நேரங்களில் வீட்டின் முன்பிருக்கும் திண்ணையில் அமர்ந்து பைபிள் படிப்பார். அவர் இருக்கும் இடமே ஒரு தியானக் கூடமாக மாறி விடும்.

தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஜீஸசே இறங்கி வந்து அமர்ந்திருப்பதாக தோன்றும். அப்படி ஓர் அற்புதமான வடிவத்தில் அவரின் வாழ்வு ஒரு மெல்லிய வானோடை. காற்றுக்கு பஞ்சமே இல்லாத உச்சி அது. மற்ற வீடுகளில் மோதும் காற்று இவர்கள் வீட்டில் பாடும்.

அப்பா வழக்கம் போல சர்ச்சுக்கு போயிருக்கிறார். வரும்போது மட்டானோ சிக்கனோ எடுத்து வருவார். அதற்கான முன் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவளுக்கு மனதுக்குள் என்னவோ ஓர் இருள். கண்களில் இல்லாத இருள் மனதில் வரும் போது தான் அவள் கலக்கமடைவாள். அவ்வப்போது நெருடி நெருடி ஆனாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். வந்து கதவோரம் நின்று பொதுவாக பார்த்தாள். அவள் முன்னே விரிந்து கவிழ்ந்து அப்படியே கீழிறங்கும் ஊர் கட்டட முக்கோண இறக்கம் ஒரு காட்சிப்பிழை போல இருந்தது. அவளால் உணர்வுகளால் இதுவரை கேட்ட விவரங்களைக் கொண்டு இந்த நிலப்பரப்பை உள் வாங்கி விட முடியும்.

"ச்சு... ச்சு..." என கைகளை காற்றில் அசைத்து போதும்... எதிரே அமர்ந்திருக்கும் காகம் எழுந்து நகரவில்லை. காகத்தின் குரலில் செய்தி இருப்பது போலவே ஒரு வண்ணம் உதிர்ந்து கொண்டிருந்தது.

சாம்பல் பூத்த நிலத்தில் நிலைகொள்ளாத பாதங்கள் யாருடையது. கண்களை அழுந்த மூடி திறந்து கொண்டாள். மறந்தாற்போல பார்வைக்கு ஏங்கும் ஒவ்வொரு முறையும் அப்படி செய்வது இயல்பு

ஏன் இத்தனை ஈக்கள் மொய்க்கின்றன என்றும் அனிச்சை... மனதை விசிறிக் கொண்டே இருக்கிறது.

"என்ன ரோஸி.... அப்பா சர்ச்சுக்கா...." கீழ் வீட்டு ரஹமத் கேட்பது நன்றாக கேட்கிறது. ஆனாலும் இடையே குரலை உடைத்துக் கொண்டு காகத்தின் சிறகடிப்பு. மேகம் மூட்டமாக இருக்கிறது என்பதை முகத்தில் படும் அதன் கவிழ்தலைக் கொண்டே உணர்ந்து கொண்டாள். திண்ணையில் அமர்ந்து வெங்காயம் உரித்தபடியே எதிரே நெடுந்தூரத்துக்கு நினைவுகளை விட்டு யோசித்துக் கொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க வந்து ரோஸி டீ போடு எனும் அப்பாவின் குரலுக்கு காத்திருக்கும் இந்த நேரம் மிக கடினமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

சுவற்றுக் கடிகாரத்தை தட்டும் டிக் டிக் இதயத்திலும்.

*
"என்னடா என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்க" என்ற சுசிக்கு படபடப்பு ஜிவ்வென ஏறியது. அவன் கண்கள் சற்று தூரத்தில் இடுப்பில் குழந்தையோடு நிற்கும் சோனு மீதே புரண்டு கொண்டிருந்தது.

"எனக்கென்னடா தெரியும். இது எங்க சின்ன ஆயா ஊரு. இங்க வந்தே ரெண்டு வருஷம் இருக்கும். அவளை இங்க கட்டி குடுத்துருக்காங்கனு இப்பதான் தெரியுது...." விஷயம் சேகரித்துக் கொண்டு வந்த ராஜ் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

யாரோ நம்மை ஊடுருவிப் பார்ப்பதை இயல்பாக உணர்ந்த சோனு... அவளையும் அறியாமல் மெல்லத் திரும்ப.. அதற்குள் இருவரும் தூணுக்கு பின் நன்றாக மறைந்து கொண்டார்கள். சுசியின் கண்களில் கால கலங்கள்.

"அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல. அப்புறம் என்ன.. ஃபிரியா விடு. நாம நோம்பிக்கு வந்திருக்கோம். அத என்ஜாய் பண்ணு. அத விட்டு.." சொல்லி கொண்டிருக்கும் போதே..."ஐயோ அவ இங்க வராடா..." என்று சுசியை இழுத்துக்கொண்டு கோயில் மறு வாசல் பக்கம் ஓடினான்.

மனதுக்குள் பல வகையான ஓட்டம். கொஞ்சம் காலமாக எதை மறந்து இருந்தானோ.. யாரை நினைக்க கூடாது என்று இருந்தானோ அவளே இப்போது இத்தனை அருகே இருக்கிறாள். என்ன விதமான கட்டம் இது. காலத்தின் கையில் இளிச்சவாயன் சிக்கிட்டா இப்பிடித்தான் போட்டு பாக்குமா. கையில் இருந்த சோளக் கதிரை கடிக்காமல் காற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எதிரே இருந்த சிறு குளத்தில் அலை அலையாய் அவஸ்தை.

நினைவுகளைப் போல கொடூரன் வேறு யார். அலை அலையாய் வந்து போவதை விட ஆளை முழுக்கும் ஆழ்கடல் நினைவென்றால் நம்பலாம். சுசிக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. விட்டு வெகு தூரம் சென்று பிறகும் மினுக்கும் நட்சத்திரத்தை துடைத்தெறியவே முடியாதா. வானம் வசப்பட்ட பிறகும் பகல் கண்ணை கூசுகிறது. இரவு மண்ணை கிளறுகிறது.

"மச்சான் நான்தான் சொல்றேன்ல... இந்தா..." என்று கடலை மிட்டாயை நீட்டினான். எப்படியாவது அவனை நார்மலாக்கி விட வேண்டும் அவனுக்கு.

வாங்கி விட்டான். ஆனால் அதை என்ன செய்வது என்பது போல பார்த்தான். இருந்தும் இல்லாமல் இருக்கும் உடல். இருக்கே என்ன செய்ய எனும் உயிர். குழம்பித் தவிக்கும் ஒத்திகையற்ற உருவகத்தை உள் வாங்கவும் முடியாது. வெளி தள்ளவும் முடியாது.

"ஐயோ இந்தக் காதல விட்டொழிங்கடா... நல்லாருப்பீங்க..." தலையில் அடித்துக் கொண்டான் ராஜ்.

என்ன கருமம் இது.... சோனு... பொரிக் கடையில் நின்று கடலை வாங்கி கொண்டிருக்கிறாள். கண்ணுல பட்டு தொலைச்சா என்னாகறது. சட்டென எழும்பி வேகமாய் அங்கிருந்து நழுவி ராட்டினம் சுழலும் இடத்துக்கு சென்றார்கள். நண்பர்களுக்குள் மௌனம். நம்பிய எதுவும் கூட இல்லை போன்ற பாவனை சுசியிடம்.

"இந்த ட்ரிப் சொதப்புச்சுடா" என்றான் ராஜ். "ஒன்னு பண்ணு... நீ ஊருக்கு கிளம்பு. அப்பதா சரியாவ.."

"அதெப்பிடி... இவ்ளோ தூரம் எங்க ஊருக்கு வந்துட்டு வீட்டுக்கு வராம போவாங்க...!"

திக்கென இருவருமே திரும்பினார்கள். கையில் குழந்தையோடு.. வெள்ளை வெளேரென செம்பட்டை தலையில்... நீள் சதுர முகம் சரிந்து பார்க்க... குட்டி கண்களில் அத்தனை சிரிப்பு. சோனு முகம் பூரித்து நின்றாள்.

"யாரோனுதா பாத்தன்.. அப்றம் பாத்தா....நீ....ங்க. ஒரு நிமிஷம் ஆ....டி போய்ட்டேன்.. எங்க ஊருக்கு எப்பிடி.. என்னைய தேடிட்டா... வந்தீங்க..." அதே பேச்சு. அதே இழுவை. அதே சிரிப்பு அதே துரு துரு.

எதிர் பார்க்கவே இல்லை. இப்படி நேருக்கு நேராக வந்து நிற்பாள் என்று. என்ன ஏதென்று யோசிப்பதற்குள் கையில் குழந்தையை திணித்து விட்டு.. "எந்திரிங்க வீட்டுக்கு போலாம்" என்று சொல்லியபடியே நடையைப் போட்டாள்.

கையில் குழந்தை. அவளை குட்டியாக்கி செய்தது போலவே இருக்கிறது. அது வாயில் எச்சிலை ஒழுக்கி கொண்டு ங்கே ங்கெவென என்னவோ பேசி.. ஊ.. ஊ... ஓ என்று கழுத்தில் சரிந்து ஐயோ என்ன மாதிரி இதை ஏற்றுக் கொள்வதென்றே தெரியவில்லை. அவள் நடந்து கொண்டிருக்கிறாள். செய்வதறியாது குழந்தையை தூக்கியபடியே அவள் பின்னால் நடக்கும் சுசிக்கு பேச்சும் எழவில்லை. மூச்சும் திணறுகிறது. குழந்தை வேறு... கொழுகொழுவென இத்தனை கனமாக இருக்கிறது. இதயத்தில் இன்னும் கொஞ்சம் கனத்தை தூக்கி வைத்தது போல.

*
மழை வரும் போல இருக்கிறது. மனதுக்குள் சூழ்ந்த மேகத்தில் எப்போதோ மழை ஆரம்பித்திருந்தது. யாரிடம் சொல்லி விடுவது.

"ரோஸி வெளிய இருந்தீன்னா வீட்டுக்குள்ள போய்டு... ஒரு பாம்பு சுத்திட்டு இருக்காம்...கீழ் வீட்டுல சொல்றாங்க" என்று ரஹ்மத் கீழிருந்து கத்துவது கேட்கிறது. உள்ளே கருக்கென்று ஊர்ந்த வழுக்கலை அச்சத்தோடு யோசித்தாள். அப்பா வழக்கமாக அமரும் திண்ணையை ஒட்டி ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு முடிந்தளவு சத்தம் போடாமல் சென்றது. சென்று பக்கத்தில் இருந்த தோட்டத்திற்குள் நுழைந்து கொண்டது. அவளுக்கு உணர முடிந்தது. வேகமாய் வீட்டுக்குள் வந்து கதவை நடுக்கத்தோடே தடுமாறி தவித்து அடைத்துக் கொண்டாள். வீட்டுக்குள் இருந்து வவ்வால்கள் வெளியே அடித்து பிடித்து சிதறுவதாக வந்த கற்பனையைக் கண்களை இறுக மூடி அடைத்தாள்.

முடிவில்லாத ஒரு பாலத்தில் நடந்து கொண்டே இருப்பதாக உணர்ந்த காட்சி கோர்வையை அவள் நெற்றியில் வேகம் வேகமாய் அழிக்க முயற்சித்தாள். பார்வை அற்ற சிந்தனையில் காட்சி பிம்பங்கள் நாலா பக்கமிருந்தும் வந்து வந்து மோதுவது... கத்த வேண்டும் போல தூண்டியது. வீடே திரும்பி இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறதோ. மனதுக்குள் கோணல் மானல் வரைபடம்.

அப்பாவுக்கு லேண்ட் லைனில் இருந்து போன் அடித்தாள். மறுமுனையில் ரிங் அடித்துக் கொண்டே இருந்ததே தவிர எடுக்கவில்லை. வீட்டைச் சுற்றும் காகம் மீண்டும் வாசலில் அமர்ந்து கரைந்தது. ஜன்னல் வழியே புகுந்த பூனை உள்ளேயும் குதிக்காமல் வெளியேயும் குதிக்காமல் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தது.

பூனையின் நிழல் வீட்டுக்குள் விழும் இடத்தில் அவள் நடந்த போது பூனைக்கு கருக்கென்றிருக்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டது.

*
"என்ன சோனு... ஒரம்பரை வந்துருக்காங்க போல"

பக்கத்து வீடு அல்லோலகல்லோலப்பட்டது. கிராமத்து அம்சமே இதுதான். பக்கத்து வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அடுத்தடுத்த வீடுகள் கொண்டாட்டத்தோடு எட்டி எட்டி பார்ப்பார்கள். இனம் புரியாத சந்தோசம் எங்கும் எங்கெங்கும் வீதி எங்கும் சடுதியில் பரவி விட்டது.

"நான் சொல்லிருக்கேன்ல... சுசீந்திரன்... அவுங்க தான்.. இவுங்க.. அவுங்க பிரென்ட் ஆயா வீடு இங்கதான் இருக்காம்.. நோம்பிக்கு வந்திருக்காங்க. நான்கூட யாரோனு பாத்தன். பார்த்தா இவுங்க. அப்டியே என்னவோ மாறி ஆகிடுச்சு.. இங்க வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம எப்பிடி..."

சொல்லிக்கொண்டே சுசியை அமர வைத்தாள். ராஜ்க்கு என்ன செய்வதென்றே புரிபடவில்லை.

ஒரு பழைய காதலி மாதிரியா பேசறா.. என்ன இவ.. நிஜமாவே பேசறாளா.. நடிக்கிறாளா... அவனும் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். என்னமோ பொண்ணு பார்க்க வந்த மாதிரி ஆளாளுக்கு கிசுகிசுவில் பேசிக் கொள்வதும்... எட்டி எட்டிப் பார்ப்பதும்.. அட நல்லவங்களா இருக்கறதுலயும் ஒரு நியாயம் வேண்டாமா... குடுத்த காபியை குடிக்கலாமா வேண்டாமா என்று திருதிருவென பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ்.

"வாங்க வாங்க என்று சொல்லிக்கொண்டே வந்தவர் சோனுவின் கணவர். நல்லாருக்கீங்களா.. நோம்பி நாளுமா வந்திருக்கீங்க. இன்னைக்கு நம்ம வீட்டுலதான் விருந்து.. இருந்து சாப்ட்டுட்டு தான் போகணும்... சோனு கவனி" என்றபடியே அவர் வெளியே சென்று விட.. சோனுவின் குழந்தை மீண்டும் அவனிடம் வருவதற்கு தாவிக் கொண்டிருந்தது.

அப்பப்போ கிச்சனில் இருந்து வெளியே வரும் சோனு அவன்அருகே அமர்ந்து கொண்டாள். அதே சிரிப்பு. அதே வெகுளி பார்வை. அதே வெட்கம்.

வீட்டுல மாப்ள பாக்கறீங்க... வந்து பேசுங்க என்று அவள் பக்கம் அவ சரியாதான் இருந்தா. சுசிதான் செட்டில் ஆகணும் செத்து போகணும்னு வசனம் பேசி காலத்தை கடத்தினது.

"ம்ம்ம்... புள்ளைக்கு பேர் என்ன தெரியுமா.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நாஸ்தென்கா தான். குல சாமிக்கு முன்னால வெச்ச பேரு துர்க்கா. ஆனா நான் நாஸ்தென்கானு தான் கூப்பிடுவேன்."

பேசிக்கொண்டே நாஸ்தென்காவுக்கு தலை முடியை ஒதுக்கி விட்டாள். அவள் முடி கிச்சன் ஹரிபரியில் கலைந்திருந்தது.

எப்படி இத்தனை சுலபமாக வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள். கலங்கும் கண்களை முடிந்தளவு இறுக்கி இறுக்கி பிடித்தபடியே இருந்தான். எப்படி எதிர் வினை ஆற்றுவது என்று தெரியவில்லை. இங்கிருந்து கிளம்பினால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது.

வேலை எப்படி போகுது.. கல்யாணம் குறித்து வீடு குறித்து எல்லாமே பேசுகிறாள். குழந்தையிடம் அவனைக் காட்டி... அய்யயோ மாமான்னு எப்பிடி சொல்ல... என்று நாக்கை கடித்தபடி பெரியப்பா டா என்றாள்.. கண்கள் விரித்து... கன்னம் உப்பி.

சட்டென்று திரும்பி அவளைப் பார்க்க அவள் குழந்தையை கொஞ்சுவதில் கவனமாக இருந்தாள். சுற்றி இருந்தவர்கள் வெட்கத்தில் சிரித்தார்கள். ராஜ்க்கு தலை சுற்றிக் கொண்டு வருகிறது.

"போய்டலாம்டா. சோத்துல விஷம் வெச்சிட போறானுங்க..." முனகினான்.

*
ரோஸ்மேரி... மறுபடியும் போன் அடித்தாள். மறுமுனையில் அப்பா எடுத்து விட்டார். ஆழ்ந்த மூச்சில் அத்தனை நேரம் இருந்த படபடப்பு இன்னும் வேகமாய் ஆனது.

"எங்கப்பா இருக்க. ஏன் இவ்ளோ நேரம்...?" என்றாள். கோபத்துக்கும் பாசத்துக்கும் இடையே தடுமாறியது சத்தம்.

"வந்தர்றேன் வந்தர்றேன்" என்றவர் என்னாச்சு ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு என்பதாக காதுகளை உன்னிப்பாக்கினார்.

"என்னவோ மாதிரி இருக்குப்பா.. சீக்கிரம் வா" என்றாள். இதய துடிப்பு இயல்பாய் இல்லை.

அப்பாவிடம் பேசிய பிறகும் நெஞ்சுக்குள் என்னவோ படபடப்பு. ஒரு பக்கம் ஆசுவாசம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் ஆகாய வெளி ஓட்டையென உணர முடிகிறது. பகல் நேர காற்று சூடு கொண்டிருந்தாலும்.. உச்சியில் அதன் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. வாசலில் மோதும் காற்றின் குரலில் கிசுகிசுப்பு. வீட்டுக்குள் உருளும் இருளின் ஜுவாலையை இப்படி இத்தனை பக்கத்தில் அவள் இதுவரை உணர்ந்ததில்லை.

திடும்மென கூட்டமாக வந்து இறங்கி ஏறிய தோரணையை வாசலில் சுழன்று கொண்டிருக்கும் ஒற்றைக் காகம் கொண்டிருந்தது.

"கருமம்.. ஏன் இங்கயே சுத்திட்டுருக்கு..." வாய் விட்டே அரற்றினாள். தூரத்தில் எங்கோ கசியும் பாட்டு... என்ன வரியென புரிபடாமல் இருப்பது அவஸ்தை. நெஞ்சுக்குள் புதிதாக ஒரு கனம் ஏறியதை உணர்ந்தாள். சோபாவில் அமர்ந்து தலையை விரித்து சிக்கெடுத்துக் கொண்டே டிவியை ஆன் செய்தாள். செய்திகளில் என்னென்னவோ உளறல்.

சிக்கன் வந்தால்... சடடவென குழம்பு ஆகி விடும். மற்ற சில்லறை வேலைகளை எல்லாம் தயாராக்கி வைத்திருந்தாள்.

*
கூட்டும் பொரியலும் அப்பளமும் பாயசமுமாக... சோற்றை அள்ளி அள்ளி வைத்தாள். ஏதோ மாப்பிள்ளை விருந்து மாதிரி... இலை போட்டு சுடு சோறும் காய் குழம்பும்... வீட்டுக்குள் வரிசையாக அமர்ந்து ஐயோ பார்க்க பார்க்க ராஜ்க்கு தலைசுற்றல் நிற்கவே இல்லை.

என்ன ஒரம்பரையாரே.. வெக்கப்படாம சாப்புடுங்க. சோனு சமையல்... பிரமாதமா இருக்கும்.

சோனு சும்மாவே வீதிக்கே விருந்து வெப்பா.. ஒரம்பரை வந்தா விடுவாளா...- அன்பு குரல்கள் அளாவின.

தொண்டையை அடைக்கும் துக்கத்தை சோறு கொண்டு சோறு கொண்டு உள்ளே தள்ளினான்.

வேக வேகமாய் சோற்றை அள்ளி அள்ளி வாய்க்குள் போட்டான். இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். தாகம் தாகமாய் இதயம் சொன்னது.

சாப்பாட்டுக்கு பின் எல்லாரும் சேர்ந்து கோயில் கடைவீதிகளில் நடக்க.. திருவிழா ஜம்மென்று போய்க் கொண்டிருக்கிறது.

ராத்திரிக்கு இருங்க... காலைல போலாம் என்றாள். கண்களில் மினுக் மிட்டாய்கள். குழந்தை கையில் குச்சி மிட்டாய்.

இல்ல சோனு.. கிளம்பனும். வேலை இருக்கு.. என்றான்.

குரலில் பட்டும் படாத வெயில் காற்று. அப்படியே ஓரமாய் நின்றவர்கள்... வண்ண வண்ண உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். நோம்பி வீதியில் கோயில் திடலில் நடமாடும் மனிதர்களை பார்க்க பார்க்க பரபரவென இருந்தது. ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை ஆனந்தம். திருவிழா நாளில் வந்து அமர்ந்து கொள்ளும் உடல்மொழி வாழ்நாள் முழுக்க இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும். கோயில் திடலில் பறை அடி வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. சாமி கும்புடுகிறவர் கும்புட.. கும்பிட்டு நகர்ந்தவர்கள்... அடி சத்தத்துக்கு தலையாட்டி உடல் கூட்டி குதூகலம் கொண்டிருக்கிறார்கள். சில பொடியன்கள் அடிக்கு தக்க ஆடிக்கொண்டிருக்க.... பார்க்க அத்தனை அழகாக இருக்கிறது. திருவிழா கலை கட்டுவது இதுதான்.

கவனம் தானாகவே அடி விழும் பக்கம் திரும்பி விட... சுசி அவர்கள் அடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதோ பறை அடித்த நினைவு.

பறையைப் பற்றியிருக்கும் இடது கையின் லாவகம்... குச்சி கொண்டு பறை தோலில் லாவகமாடும் வலது கை விரல்கள். அவன் கண்களில் புத்தொளி. இதயத்தில் தோம் தோம்.

"ஏய்... புடும்பா.... கொஞ்ச நேரம் இவங்ககிட்ட குடு. நல்லா அடிப்பாங்க.." என்றாள்... அவன் பறையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டு கொண்ட சோனு.

ஏய்.. என்ன... இது என்று தடுமாறி நிலை கொள்வதற்குள் அவன் தோலுக்கு இடம் பெயர்ந்திருந்து பறை. சட்டென உடலில் உஷ்ணம் கூடியது. மூச்சை பலமாக இழுத்துக் கொண்டான். ஆசையாய் பறையின் முதுகை தடவினான்.

முதலில் சிறு தயக்கம்.. சிறு தடுமாற்றம் இருந்தாலும்... மெல்ல மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மெல்லமாக ஆரம்பித்தவன் அப்படியே இறங்கி அடிக்கத் தொடங்கினான். உள்ளே இருந்த என்னவோ விடுபடுவதாக இருந்தது. வேகம் கூடியது. அடி அடி என ஆதி அடியின் சத்தம் இடியாக இறங்கிக் கொண்டிருந்தது. சட்டென கூட்டத்தில் இருந்து சலசலப்பு. ஆளாளுக்கு அங்கும் இங்கும் அலைந்து களைந்து சேர்ந்து நகர.. நடுவே இரண்டு கையையும் தலைக்கு மேலே கோர்த்துக் கொண்டு உடம்பை வில்லாக வளைத்தபடியே ம்ம்ம்ம்.. ஹம்ம்ம்ம்..... என கண்களை திரட்டி நாக்கை துருத்தி... சோனு அங்கும் இங்கும் அலைபாய்ந்தாள்.

கண்ட கண்களுக்கு புரிந்து விட்டது. ஒதுங்கி வழி விட்ட குரல்கள் ஒருமித்தமாக கத்தின. "ஆத்தா இறங்கிருக்கா"

ஆத்தா இறங்கிருக்கா என்று ஆளாளுக்கு வழி விட... அவளின் ஆட்டம் கட்டுக்கடங்கவில்லை. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சுதியின் நேர்த்தி.. பிரமிக்கச் செய்தது. கவனம் அவள் பக்கம் திக்கென சென்றாலும்... அடித்துக் கொண்டிருக்கும் பறையை நிறுத்தவில்லை. சட்டென வேகம் குறைந்தாலும் அதே நொடியில் வேகம் கூடியும் விட்டது. அடி வெளுக்கத் தொடங்கி விட்டான். மற்ற ஆட்கள் அப்படி அப்படியே ஒதுங்கி நிற்க... சுசியின் பறையடியும் சோனுவின் சாமியாட்டமும்... ஊரே வேடிக்கை பார்த்தது.

படபடப்போடு அவள் கணவன் பார்க்க அவன் நெஞ்சில் இருக்கும் குழந்தை கண் கொட்டாமல் பார்த்தது. அக்கம் பக்கம் என எல்லாரும் கும்பிட்டபடி கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

பறையடிப்பவன் கண்களும்.. சாமியாடுபவள் கண்களும் நேருக்கு நேராய் சந்தித்த கணங்கள் சூடு நிறைந்தவை. அனல் காற்றில் அக்கினி சிதறல்கள் போல அவர்களின் தீர்க்கமும் மூர்க்கமும். உள்ளே அடங்கி அடங்கி குவிந்து கிடந்த தேக விடுதலையாக அந்த அடியும் ஆட்டமும் இருந்தது. கொப்பளித்துக் கொண்டிருந்த எல்லாமும் அடங்குவதாகப் பட்டது அவனுக்கு. அவளுக்கு மனதில் இருந்த இறுக்கமெல்லாம் வடிந்து கொண்டிருந்தது. வேர்த்து ஒழுகும் அவன் உடலில் நடுக்கம். ஆடி முடிந்த அவளில் அமைதி

சுற்றிலும் பேச்சு இல்லை. அனைவரின் அமைதியும் பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தது. அடித்தே செத்து விடுவான் போல. அவள் ஆடியே முக்தி அடைவாள் போல. அத்தனை வேகம். நிலத்தை பெயர்த்துக் கொண்டு உள்ளே போகும் வேகம் அவள் கால்களில். காற்றை பிளந்து கொண்டு இதயம் பேசும் வேகம் அவன் கைகளில்.

ஊர் பெண்கள் லு லு லு லு என குலவை இடத் தொடங்கி விட்டனர்.

அவள் கை பறையைப் பற்றியிருக்கும் அவன் இடது கையைப் பற்றிக் கொண்டு அடி அடி என்று கத்தி சரிந்த போது சிலர் ஓடி வந்து கைத்தாங்கலாக பிடித்தார்கள். கணவன் வாரிக்கொண்டான். அவள் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. சோர்ந்து சரிந்த அவனை ராஜ் ஓடிச்சென்று பற்றினான்.

"எதுக்குடா இவ்ளோ வேகம்... அவ எதுக்குடா இப்பிடி ஆடறா..." புரியாமல் கடவுளே என்று தலையை ஆட்டிக்கொண்டான் ராஜ்.

சுற்றி இருந்த கூட்டம் திருதிருவென விழித்து பொதுவாக கும்பிட்டுக் கொண்டது.

*
மணிக்கட்டுக்கு மேலே கையில் படிந்திருந்த சோனுவின் கை அச்சை பார்த்தபடியே அமர்ந்திருந்த கவனத்தை... பேருந்துக்கு பின்னிருந்து கிளம்பிய சத்தமும் கூச்சலும் திடுதிப்பென கலைத்தது.

என்ன நடக்கிறது என்று புரியவில்லை. டிரைவர் இறங்கி ஓடிக் கொண்டிருக்கிறான்.

என்ன ஏதென்று தெரிய எழுந்து கூட்டதோடு கூட்டமாக பின்னால் நகர... பேருந்து பின்னால் இருந்த கேட்டில் அடித்து மோதி இருக்கிறது. இடையே யாரோ மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கீழே இருந்து கூச்சலும் சத்தமும்.

வண்டிய முன்னால எடு... உள்ள ஆள் மாட்டிருக்கு. பொதுமக்கள் கத்துகிறார்கள். குன்னூர் பேருந்து நிலையம் அது. ரயில்வே கிராஸிங் பக்கம் இருக்கும் இரும்பு கேட் அது. ரிவெர்ஸ் எடுத்துவன் கேட்டோடு வைத்து சாத்திருக்கிறான்.

உள்ளே சிக்கிய ஆள்... பேருந்துக்கும் கேட்டுக்கும் இடையே நசுங்கி சரிந்திருக்கிறார். மூச்சுக்கு ஏங்கினாலும் உயிர் இருக்கிறது. பொதுமக்கள் வண்டியை தட்டுகிறார்கள். தள்ளுகிறார்கள்.

"டேய் வண்டிய முன்னாடி எடு... எடு..." கத்துகிறார்கள். டிரைவர்தான் ஓடி விட்டானே. நடத்துனரைக் காணவில்லை. ஆளாளுக்கு கத்துகிறார்களே தவிர அடுத்த நடக்க வேண்டிய ஒன்றையும் கைக்கொள்ள யாருக்கும் பிடிபடவில்லை. மூளை ஸ்தம்பிக்கும் இடம் இது. இதயம் துடித்தும் அர்த்தமில்லாத தருணம் இது. யோசிக்கவே முடியாத விபத்து நேரத்தை ஆளாளுக்கு அறுத்து கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிறுத்தி நிதானமாக இல்லாமவிட்டாலும்... அதே படபடப்பு இருந்தாலும் ஒரு கணம் அவனால் யோசிக்க முடிந்தது. வேகமாய் முன்னோக்கி ஓடி டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை முன் நோக்கி இயக்கி சற்று தள்ளி நிறுத்தினான். எல்லாருக்கும் அப்பாடா என்றிருந்தது. கண்களில் சுவாசம் கூடியது.

இடிபாட்டில் சிக்கியிருந்த மனிதர் அப்படியே சரிந்து விழுந்தார். அருகே சிக்கன் கவர் நசுங்கி சிதறிக் கிடந்தது. அவர் நெஞ்சு படக் படக்கென தூக்கி தூக்கி போடுகிறது. தலை கொஞ்சம் சப்பளிந்து உள் ஒடுங்கி இருந்தது. எங்கிருந்து ரத்தம் வருகிறது என்றே தெரியவில்லை. ஆனால் ரத்த சகதி. கூச்சலும் சத்தமும் இன்னமும் அதிகமானது.

ஆளாளுக்கு ஒதுங்கி திரும்பி அதிர்வில் ஆட்டம் கண்டார்கள். பார்க்கவே முடியவில்லை. யாரவது ஒருத்தங்க கவனமா இருந்திருந்தா கூட போதுமே... கூட்டத்தில் எழும்பிய சலசலப்பில் பயமும் பரபரப்பும்... ஒரு விபத்தின் வரைபடத்தை அங்கே வரைந்து கொண்டிருந்தது.

ஆட்டோவில் தூக்கி போட்டு ஆஸ்பத்திரி போயி...

*

வந்த போன் விஷயத்தை போட்டு உடைக்கையில் வைத்திருந்த சீப்பை உடைத்தபடி அப்படியே கீழே சரிந்தாள் ரோஸ்மேரி.

எனக்கு தெரியும்.. என்னவோ நடக்க போகுதுனு தோணிட்டே இருந்துச்சே.. ஐயோ அப்பா... - அழவும் முடியவில்லை. ஆழ் நெஞ்சில் கீறல் விட்டவள் போல அப்படியே கிடந்தாள். ரஹமத் இன்னும் சில பக்கத்து வீட்டு ஆளுங்கள் வந்து விட்டிருந்தார்கள்.

*
எல்லாம் முடிந்து விட்டது. தம்பி தான் கடைசிவரை கூட இருந்து எல்லாம் பார்த்துச்சு என்று ரஹமத்தின் அப்பா சொல்ல சொல்ல எங்கிருக்கிறான் என்றே தெரியாமல் கையெடுத்து கும்பிட்டாள் ரோஸ்மேரி. எப்படி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

ரஹமத் அப்பா.... இருங்க இப்ப வந்தரென் என்று அவரும் கீழே சென்று விட... அந்த உச்சி வீட்டில் ரோஸ்மேரி ஒரு பக்கமும் சுசி ஒரு பக்கமும் அமர்ந்திருந்தார்கள். காரணம் தேடும் காக்கா இல்லை. வந்து மோதும் காற்றும் இல்லை. அமைதி பேரமைதி.

ரோஸ்கலர் வீட்டில் ஊதா நிறம் சேர்ந்திருப்பது போல தூரத்தில் இருந்து தெரிந்தது காட்சிப்பிழையா... கானல் நுரையா தெரியவில்லை.

மனதுக்குள் சோனுவும் ரோஸ்மேரியின் அப்பாவும் மாறி மாறி வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ரோஸ்மேரி கனத்த மௌனத்தோடு வாசலை ஒட்டிய நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. அமைதியில் அந்த வீடு மிதப்பதாகப் பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தியானத்தில் அமர்ந்திருப்பாக அமர்ந்திருந்தார்கள். உலகமே அடைத்துக் கொண்ட இல்லாத சப்தம் அங்கே அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தது. கண்களற்றவளை பார்க்க என்னவோ போல இருந்தது. கண்களைத் திருப்பி தூரத்து வெளியில் கானலோடு விட்டான். வெறுமைக்குள் நீந்தும் அவளுக்கு கண்ணீரே துணை. அப்பாவின் கடைசி மூச்சை கண்டவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. காற்றில் எப்போதும் ஒருபக்கமாக முகம் தூக்கியே இருக்கும் கண்களற்றவளின் பாவனை தாங்கொணா சோகத்தில் தத்தளிக்கிறது.

நீண்ட நெடிய அந்தக் கடும் அமைதியை அவன் களைத்தான்.

"ஒரு ரெண்டு நாள் நான் இங்க இருந்துட்டு போகட்டுமா"

எதற்கோ காத்திருந்தவள் போல இதற்கு உடனே ம்ம்ம் என்றாள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் ஒரு காகத்தின் பார்வையில் அந்த ரோஸ் நிற வீடு அந்தரத்தில் மிதக்கும் நோவாவின் படகு போலவே காட்சியளிக்கிறது.

*

- கவிஜி