துருத்திச் சக்கரம் ஒரு லாவகமான சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. துருத்தி உலையின் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமிகளின் சாம்பலில் வெடிக்கும் தீக்கங்குகள் அங்கு கப்பியிருந்த இருளைக் கண்சிமிட்டிப் பார்க்கின்றன. வெந்து புழுங்கும் உலை அடுப்பின் முன்னால் உட்கார்ந்து நெருப்புத் துண்டை இடுக்கியால் எடுத்துப் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சி.

Knife தனக்கு ஒரு அருவாள் செய்ய வேண்டுமென்று முன்பணம் தந்து விட்டுப்போனவனின் இறுகிய முகம் அவளது கண்களில் நிழலாடியது. குஞ்சரமடை அருவாளைப்போல நீளமாகவும் அதேசமயத்தில் கருமந்துறை அருவாள் போல அகன்ற வெட்டு வாயுடனும் கணக்கான பதத்தில் அடித்துக் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்லச் சொல்ல அவளது மனதில் ஒரு வடிவம் கருவானது.

ஒரு மண்வெட்டி அடிக்கும் போதோ கடப்பாரைக்குக் கூர்வைத்துக் கொடுக்கும் போதோ அவளது மனம் எப்படி ஆனந்தத்தால் துள்ளுமோ, அதற்குச் சற்றும் குறையாத மனநிலையில்தான் அருவாள் அடிக்கும் போதும் துள்ளித் திரியும். இந்தப் பொருள் நல்ல காரியங்களுக்குப் பயன்படப்போகிறதா... கெட்ட காரியங்களுக்கா? நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிப்பது யார்? வேலியடைப்பிற்கா, மரம் வெட்டுவதற்கா? அல்லது ஒரு மனிதனின் தலையை சீவுவதற்கா என்பது குறித்தெல்லாம் அவளது கவனம் சிதறுவதில்லை. மாறாக ஜடமற்ற இரும்பாக உள்ள அந்தப் பொருளை அருவாளாக உயிரேற்றும் லாவகத்திலும் அது கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்ளும் அழகிலும் தனது எண்ணத்தை ஒருங்கு குவித்து தனது கைகளின் சொடுக்குகளை அற்புதமான கலையாக மாற்றுவதில் தேர்ந்த வேலைக்காரி. அவளைப் பொறுத்தவரை தனது கை நுட்பம்தான் பிரதானமானதே யொழிய அதற்குப் பின்னால் நிகழும் நிகழ்வுகள் அல்ல.

அந்த அருவாள் ஒரு வேலிக் கோணான் மரத்தை வெட்டுவதாகட்டும்; ஒரு மனிதனின் தலையைச் சீவுவதாகட்டும்; ஓரே வீச்சில் தனியாகக் கிடக்க வேண்டும். அதுதான் வேலுத்தம்பிக் கம்மாளனின் உருவாக்கமான ரஞ்சியின் சவால்.

துருத்திச் சக்கரத்தின் உருண்டை வடிவமான அச்சுப் பல்லில் சற்றைக்கொருமுறை கசியும் கிறீச் கிறீச் எனும் சத்தம் கொல்லுப்பட்டறையின் கனத்த இறுக்கத்தை நெகிழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு லய அசைவில் அதை சுற்றிக் கொண்டிருந்த சோலையம்மா, அச்சுக்கு விளக்கெண்ணெய் எற்றுவது குறித்து யோசித்தாள். அவளது கணவன் வேலுத்தம்பி இருக்கும்போது அவனுக்கு இது போன்ற கீச்சம் வந்தால் பிடிக்காது. தினமும் ஒரு விரல்கடையளவு எண்ணைய் விட்டுத்தான் வேலை செய்யவே உட்கார்வான்.

எண்ணைய் ஊற்றிவிட்டுப் பிறகு சுற்றலாம் என எண்ணியவாறே சக்கரத்தை நிறுத்தினாள். உலைக் கோலில் தீக்கங்குகளைத் தீண்டி விட்டுக் கொண்டிருந்த ரஞ்சி கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள். சட்டென முன்பு போலவே ஒரு லய ஒழுங்குடன் துருத்திச் சக்கரம் சுழல இரம்பித்தது.

வேலுத்தம்பியைப் போலவே இவளும் முன் கோபக்காரி. ரஞ்சியை இப்போதுதான் புதிதாய்ப் பார்க்கிறவள் போல தலையிலிருந்து பார்த்தாள். சேலைத் தலைப்பைச் சுற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு விறுவிறுப்பாக வேலை நடத்திக் கொண்டிருந்தாள். புஜங்களின் இயக்க அசைவுகளில் எடுப்பான மார்கள் ஏறிஏறி இறங்குகின்றன. கீக்கிரமாக இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும். இவளை யார் கட்டிக்கப் போகிறார்களோ...

செக்கச்செவேலென்று ஒளி பாய்ச்சியிருக்கும் அந்த நெருப்புத் துண்டை இடுக்கியில் பற்றி அடைகல்லில் வைத்துப் பதமாகத் தட்ட ஆரம்பித்தாள். கங்குகள் பளீர் பளீரெனத் தெறித்து விழுந்தன. அதன் தணல் அவளது கைகளைத் தீய்த்துத் தின்பது பற்றிய ஓர்மையில்லாமல் அந்த நெருப்புத் துண்டத்தைப் பதமாகச் சீர்படுத்துவதிலேயே கவனம் இருந்தது.

குறட்டில் பற்றிக் கொண்டு சுத்தியில் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அது நெகிழ்ந்து கொடுத்து இறங்குகிறது. ரஞ்சியின் கைகள் வலிமை வாய்ந்ததாகவும் கரடுமுரடாகக் காய்ப்பேறி இருப்பதும் அவளது கை விசையின் லாவகத்தில் எகிறுகிறது. நல்ல கம்மாளத்தி. சுற்றிலும் பறந்து கொண்டிருந்த சாம்பல் புழுதி அந்த ஓவியக் காட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக்கிக் கொண்டேயிருக்கிறது.

சோலையம்மா நீண்ட பெருமூச்சுடன் உலைத்துருத்தியைச் சுற்ற ஆரம்பித்தாள். அவளுக்குள் துடியாய் இறங்கியது உலோகத்தின் இசை. வேலுத்தம்பியின் கைவிசையும் இதே சுதிதான். இந்தக் கொல்லுப் பட்டறை வேலையெல்லாம் தனது கணவனோடு போய்விட வேண்டும், தனக்குப் பிறக்கும் குழந்தையைப் பெரிய படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்திற்கு அனுப்பவேண்டும் என்றெல்லாம் கோட்டைகள் கட்டினாள். வேலுத்தம்பியின் நினைப்பு வேறுவிதமாக இருந்தது. சாதியப்படிநிலையின் குலத் தொழில் சார்ந்த கருத்துக்களை முற்றாக நிராகரிப்பவனாக இருந்தாலும், தனது தொழிலானது குலத் தொழில் அல்ல, அது ஒரு சமூகப் போர் என்றும், அது சம்பந்தமாக அடிப்படை விஷயங்களைத் தனது குழந்தையின் கைக்கு மாற்றிவிட வேண்டும் என்றும் எண்ணினான்.

சின்ன வயசு ரஞ்சியும் ஒரு ஆண்மகவின் தன்மையோடு அய்யாவுடன் சரிக்குச் சமமாய் சம்மட்டி அடிக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உலோகத்தின் தன்மையையும், அதன் நிறம் மாறும் அழகியலையும் ஒரு தேர்ந்த ஆசிரியனின் தன்மையோடு கற்றுத் தந்தான். இறுகிப் போன அதன் பல்வேறு அடுக்குகளின் அடியாழத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டத்தை அவளது உள்ளங்கையில் பிடித்துக் கொடுத்தான். உலோகத்தின் தொடுகனத்தை வைத்து அது என்ன வகை இரும்பு என்பதை நுட்பமாக உணர்ந்து கொள்வான் வேலுத்தம்பி. சடுதியில் வளையக் கூடியதும், ஒரு நுட்பமான கை முறுக்கத்தில் நெகிழ்ந்து கொடுப்பதும், பதமான பக்குவத்துடன் உருக்கொண்டதுமான தேனிரும்பு என்பது, சன்னல் கம்பிகள், முன்வாசல் அடைப்புகள், கதவு நாதங்கிகள், நளினமாக அசைந்து கொடுக்கக் கூடிய வில்வண்டிப் பட்டாக்கள் (வில் வண்டி என்ற பெயர்க்காரணமே அந்த தேனிரும்பினால்தான் வந்தது) போன்ற வல்லிசான வீட்டு வேலைகளுக்கும், மண்வெட்டி, உலக்கைப்பூண், கம்பரகத்தி, கறுக்கருவாள், லாடம், அச்சாணி போன்ற விவசாய வேலைகளுக்கும் லகுவானது. மிகுந்த கடினத்தன்மை கொண்டதும், திரட்சியாய் உருக்கியதுமான எஃகு என்னும் உருக்கு, அருவாள்கள் அடிப்பதற்கும் கடப்பாரை, மாட்டுவண்டி இருசு, ஏர்க்கொழு, தண்டவாளப் பெட்டி என்கிற இரும்புப் பெட்டிகள் போன்றவை செய்வதற்கும் உகந்தது.

அதிலும் தேனிரும்பின் வகைளையும், உருக்கின் வகைகளையும் தரம்பிரிப்பதிலும் தேர்ந்த ரசவாதி அவன். உலை அடுப்பில் அவைகளைக் காய்ச்சிப் பதமாக்கும் பக்குவத்தில் வன்மை மிகுந்தவன். வேலை செய்யப் போகும் இரும்புத் துண்டத்தைக் கையில் எடுத்துப் பார்த்தாலே போதும், அது எப்படிப்பட்டது... அந்த வேலையை முடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்றான விஷயங்கள் அவனது உள்ளங்கையில் குமிழும். அதை அடுப்பு வாயில் வைத்து அதன்மேல் குமியாகக் கரித்துண்டுகளைப் பரப்பி வைத்து, ஒரு கண்மதிப்பில் நான்கைந்து கை நெல்உமிகளைக் குமித்து விட்டு சூடத்தைப் பற்ற வைத்து விட்டால் போதும், துருத்தியில் எழுப்புகின்ற உள்காற்று, மேலே வராமல் மூச்சுப் பிடித்து கரித்துண்டுகளைத் தணலவைத்து இரும்பைக் காய்ச்சி எடுக்கும் நுட்பத்தை நெல்உமிகள்தான் திறம்படச் செய்யும். இந்தக் காத்தடைப்பு வேலையில் உள்ளே கரி வெந்து உலோகம் புடம் போட்டிருக்கும். இந்த வேலை நுணுக்கத்தில் தேனிரும்புக்கு நெல்உமியை அதிகமாகவும், உருக்குக்குக் குறைவாகவும் போட வேண்டும்.

இந்தத் தொடர் செயல்பாட்டில் இரும்பு வெந்து பதமாகும். இந்தப் பதத்தின்போது ஒரு மிதமான உலோக வாசனை கொல்லுப் பட்டறையின் புழுதிக் காற்றில் மிதந்து வந்து மூக்குச் சப்பையில் ஏறும். அந்த ஒவ்வொரு வாசனையும் வேலுத்தம்பிக்கு அத்துபடி. அதேபோல சோலையம்மாவுக்கும் இந்தச் செயல்பாட்டில் பெரும் பங்கு உண்டு. அவளுக்குத் துருத்தி சுற்றும் லாவகம் இன்று நேற்று வந்ததல்ல; கொல்லுப்பட்டறை ஆரம்பிக்க உலைக்கு மேல் இரண்டடியில் சாமி கோபுரம் கட்டியதும் முதலில் மிகச்சின்னதாகத் தோல் துருத்தியில்தான் தொடங்கினார்கள். காற்றை இழுத்து இழுத்து வெளியே விடும் அழகில் கைவலி தெரியாது சொக்கிப் போயிருந்தாள். அடுத்து, கைத்துருத்தியாக மாறியது. தோல் துருத்தியில் காற்றை வலித்து வலியெடுத்த கைகள், கைத்துருத்தியின் சுற்றலில் வலியைத் தோள்பட்டை களுக்கு இடம் மாற்றின. இரவு அவளது தோள் பட்டைகளை அமுக்கிவிடும் அவகாசத்தில் சக்கரத் துருத்தியை நிறுவினான் வேலுத்தம்பி. ஒரு கைக்கடக்கமான இரும்பு நல்ல பதமாக தோல் துருத்தியில் எவ்வளவு வலியெடுக்கும், கைத்துருத்தியில் எவ்வளவு ஊளைச்சலாகும், சக்கரத்துருத்தியில் எவ்வளவு வாதையாகும் என்பதையெல்லாம் தனது தோள்பட்டையில் விண் விண்ணென்று தெறிக்கும் நெரியை வைத்து உணர்ந்து கொள்வாள்.

அந்தப் பதத்தில்தான் இறங்கிக் கொண்டிருந்தது ரஞ்சியின் ஓர்மை. ஒவ்வொரு முறையும் அவளது கையின் விசை இறங்கும் போதெல்லாம் அது வேறொரு வடிவமாக மாறுகிறது. அவளது அய்யா அவளை அப்படிப் போற்றி வளர்த்தினார். அவர் தனது உள்ளங்கையில் ஏற்றிச் சென்ற சூடு தணியாமல் கச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள். நெல்லறுப்புக் காலங்களில் கறுக்கருவாள் அடித்துக் கொடுத்தாள். பழைய அருவாள்களைத் துவைந்து கொடுத்தாள். மண்வெட்டி, கோடாரி, கடப்பாரை என விவசாயக் கருவிகளின் கூரில் ஆழ்ந்துபோய் நின்றாள். பக்கத்து ஊரில் போய் உமி மூட்டை எடுத்துக் கொண்டு வந்தாள். வேலையில்லாத நேரங்களில் ஒருமுறை லாடம் கட்ட லாடப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அதற்குரிய எல்லாவிதமான வழிகளையும் திறந்து விட்டது தனது குல தெய்வமான அங்காளம்மன்தான் என்று ரஞ்சியின் அம்மா பக்தியில் பொங்குவாள்.

ஆனால் ரஞ்சியின் அய்யாவுக்கு கடவுள் பக்தி இருந்ததில்லை. அவன் தாடிக்கார பெரியார் கட்சியைச் சேர்ந்தவன். ஒருநாள் விஷயம் தெரியாமல் வெளியூரிலிருந்து வந்த சோமசுந்தர ஆச்சாரியார் வாயைக்கெடுத்து மாட்டிக் கொண்டார்.

“என்னப்பா வேலு... நாம பாப்பானை விட ஒசந்தவங்கன்னு சித்தூர் அதாலத்துக் கோர்ட்டே தீர்ப்பு சொல்லியிருக்குது... நீ ஏன்னடான்னா பூநூல் போடாம கருஞ்சொக்கா போட்டுத் திரியறே...” என்றார்.

“வெங்காயம்... ஒலகத்திலே பூநூல் போட்டதனாலேயே ஒருத்தன் ஒசந்தவனாக முடியாது... அதேமாதிரி பூநூல் போடாததனாலேயே அவன் தாழ்ந்தவனாகவும் முடியாது...” என்று ஒரு பிடிபிடித்தான். “அது பூநூல் இல்லைய்யா... காலங்காலமா மனுசனுக்குள்ளிருக்கிற தீராத அழுக்கு. மொதல்லே போயி நல்லா குளிச்சிட்டு வாங்கய்யா... இல்லேன்னா வீச்சமடிக்கும்...”

சோமசுந்தர ஆச்சாரியார் வாயடைத்துப்போய் நின்றுவிட்டார். அவனது கருத்த சட்டையில் கொல்லுப் பட்டறையின் இரும்பு வாசமும், சாம்பல் புழுதியையும் மீறி நாத்திக வாசனை அந்த வட்டாரமெங்கும் அடித்தது. அந்தக் கட்டத்தில் வேலுத்தம்பியுடன் சிநேகிதம் வைத்துக் கொண்ட செங்கோடன், விவசாயக்கூலிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருக்கும் பெரிய பண்ணாடியின் லீலா வினோதங்களைச் சொல்லி, தனக்கு அருவாள்கள் அடித்துக் கொடுக்குமாறு எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வேலுத்தம்பி சிறிதும் செவி சாய்க்கவில்லை.

ஆனால், பெரியார், நாகம்மை இறந்தபின் மணியம்மையைக் கல்யாணம் கட்டிக் கொண்டது சற்றும் பிடிக்காமல் போய்விட்டது அவனுக்கு. பெரியார் கல்யாணம் செய்ததல்ல; அது அவர் சொந்த விஷயம். அதற்கு அவர் சொன்ன வியாக்கியானம்தான் அவனது கருத்துக் கோர்வைக்குள் பெரும் சம்மட்டி அடியாக விழுந்தது. தனக்குப் பிறகு கட்சியையும் கொள்கைகளையும் காப்பாற்ற இந்தத் திரண்ட தமிழ் சனங்களில் யாரையுமே நம்பாமல் தனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து அதன்மூலம் வரும் மனைவி என்கிற பந்தத்தை மட்டுமே நம்பியது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் போக்கு பிற்காலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ... அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். அடுத்தநாள் செங்கோடனை வரச் சொல்லி அருவாள்கள் அடித்துக் கொடுக்க ஆரம்பித்தான்.

சொல்லிவைத்தாற்போல ஒரே மாசத்தில் காவல்துறை அவனைப் பிடித்துக் கொண்டு போனது. அழகாக சோடிக்கப்பட்ட கண்ணியில் வீழ்ந்த விலங்கினையொத்த அவனது பார்வை. சோலையம்மாவுக்குக் கையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. அவர்கள் சொன்ன குற்றவியல் பிரிவுகள் புரியாவிட்டாலும், தன் கணவன் அடித்துக் கொடுத்த அருவாள்தான், பெரிய பண்ணாடியின் தங்கச்சியை முண்டையாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள். நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் சிறுமியைக் கூட்டிக் கொண்டு அலைந்தாள்.

வேலுத்தம்பிக்கு எல்லாமே மாறிப் போச்சு. அந்த மண்ணின் மணம், நிலக்காட்சியின் வெறுமை, அவன் உடுத்தியிருந்த ஆடையின் நிறம், உணவின் ருசி, பீடிப்புகையின் தணிச்சல், தண்ணீரின் சப்பையென எல்லாமே மாறிப் போய்விட்டன. அவனது பெயரும், அழைப்புப் பெயரும் மாறிப் பொழிவிழந்து போய்விட்டன. அவனுக்குப் பிடித்தமான வெய்யிலின் சூடு மாறிவிட்டது. ராப்பொழுதில் வசவசக்கும் காற்றின் ஈரப்பதமும் மாறிவிட்டது. நிலாவெளிச்சத்தின் வெதுவெதுப்பு, தலைக்குமேல் தொங்கும் மின்விளக்கின் மஞ்சள் ஒளிகொண்ட தூங்கு மூஞ்சி மரமாக மங்கிப் போய்விட்டது. வீட்டின் முகம், துயறுரும் கம்பிகளடைத்த ஒரு துண்டுநிலமாக மாறிப் போய்விட்டது.

இருந்தும், அவன் நாஞ்சியில் ஏறும் இயற்கையின் தீராத மணம் உலோகத்தோடு உலோகமாக மக்கிப் போகாமல் தப்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. நான்கு சுவர்களால் குறுக்கப்பட்ட அந்த இருட்செறிவை தன் கால்களால் கடைந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டவனாக நடக்க ஆரம்பித்தான். அவனது சாம்பல் பழுப்பேறிய கொல்லுப்பட்டறையின் முற்றத்தில் நடப்பது போல அவனது பாதங்கள் பல்கிப் பெருக ஆரம்பித்தன. அவனது கால்களில் அடைந்து கிடந்த பரந்த வெளி, அந்தத் துண்டு நிலத்திற்குள் நிலத்திற்குள் நிலமாய், விரிந்து கொண்டே போக ஆரம்பித்தது.

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான் வேலுத்தம்பி. அவனது காலடிகளின் ஒவ்வொரு எட்டிலும் மிதிபட்டது காலம். காலத்தின் ஒவ்வொரு துணுக்கையும் நடந்தே கழிக்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் நடந்தான். சமூகஅமைப்பின் மீது ஒரு காலடியையும், அரசியலமைப்பின் மீது மறுகாலடியையும் வைத்தான். அடுத்த காலடி சாதியப்படிநிலைகளின் மீது, அதற்கடுத்த காலடி சட்டங்கள், நீதிகள், நியாயங்கள்மீது, அதற்கடுத்த காலடி நில ஆண்டைகளின் மீது, ஆதிக்கத்தின்மீது, அதிகாரத்தின் மீதெனக் காலங்களற்று நடந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு எதிரில் குறுக்காக வேயப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளில் மணந்த தேனிரும்பின் மணம் அவனது ஓர்மைகளில் சூழ்ந்து கப்பியது. திடீரென ஒருநாள் காலையில் பதட்டத்துடன் சிறைக் கொட்டடிக்கு ஓடிவந்தார்கள் சிறை அதிகாரியும், தலைமைக் காவல் அதிகாரியும். அவர்கள் வந்து நிற்பதைச் சற்றும் கவனிக்காமல் தனது வெளியில் நடந்து கொண்டிருந்தான் வேலுத்தம்பி. சிறையறையில் வேலுத்தம்பியைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் இருவரும்.

அன்று அதிகாலையில் காவல் நிலையத்திற்கு, ‘பெரிய பண்ணாடியை வேலுத்தம்பி வெட்டிக் கொன்றுவிட்டான்’ என்று செய்தி வந்திருந்தது. உடனுக்குடன் வண்டியை எடுத்துக் கொண்டு இங்கு வந்து பார்த்தால் ஓதோ ஓரு மாயவெளியில் நடப்பது போல நடந்து கொண்டிருக்கிறானே... எப்படி நடந்தது இந்த மாயாஜாலம்? மண்டையில் ஙொய் என்று ரீங்காரமிட்டது.

ஒன்று இவன் தப்பித்துப் போய் அவரைக் கொன்று விட்டு மறுபடியும் இங்கு வந்திருக்க வேண்டும்; அதற்கு இம்மியளவும் சாத்தியமில்லை. அல்லது அவர்கள் பொய் சொல்ல வேண்டும்; அதற்கு முழுச் சாத்தியமிருக்கிறது என்று தனக்குள் முனகிக் கொண்டே வெளியேறினார்கள் இருவரும். சிறைக் கொட்டடியின் இருண்ட அந்தகாரத்தில் எத்தனையோ புதிர்களுக்கான விடுவிப்புகள் புதையுண்டு போனது போலவே, அந்த மாந்திரீக யதார்த்தத்தின் சூட்சுமக் காவியமும் தீராத புதிராக அந்தகாரத்துக்குள் புதைந்து போயிற்று.

அடுத்த சில நாட்களில் அவனது பேர் புகழடைய ஆரம்பித்தது. அவனது பேரைச் சொன்னால் கயவர்களும், ஆண்டைகளும், ஆதிக்கம் செய்பவர்களும் பம்மினார்கள். அவனைப் பற்றி நிறையக் கதைகள் கட்ட ஆரம்பித்தார்கள் கிராமியக் கதை சொல்லிகள். “நம்ம சுப்பரமணிப் பண்ணாடியிருக்காருள்ளே அவரு பொண்ணு கட்டின எடத்திலே அவுக மச்சாண்டாரு பெரிய ஞாயகாரர். ஞாயஞ்சொல்றதெப்பிடின்னா, எல்லாரையும் குதிரை சவுக்காலே அடிச்சித்தா ஞாயம் நடக்கும்; ஏழைபாளைகளே பெரிய அக்கரமம் பண்ணிட்டிருந்தாரு... போன அமாவாசையன்னிக்கி அப்பிடித்தா ஞாயஞ் சொல்ற எடத்திலேயே வந்து யாரோ வெட்டிப் போட்டுப் போயிட்டாங்களாம்... அது நிச்சயமா நம்ப வேலுத்தம்பியோட வேலைதான்...”

யாருக்காவது ஏதாவதொன்றென்றால், வேலுத்தம்பியிடம் சொன்னால் போதும் என்பது போன்ற படிமைகள் எங்கும் படிய ஆரம்பித்தன. போய் ஒருதடவை சிறையில் பார்த்து சொல்லி விட்டு வந்துவிட்டால் போதும் மிச்சத்தை வேலுத்தம்பி பார்த்துக் கொள்வான் என்று வெள்ளந்தியாகப் பேசியது கதைக்குரல். அவைகளை அந்தச்சுற்று வட்டாரம் முழுக்க சூறாவளியாய்ச் சுழட்டியடித்தது தென் மேற்குக் காற்று. ஏதாவது ஒரு வம்பு என்றால், “நான் கோயமுத்தூரு செயிலு வரைக்கும் ஒரு நடை போயிட்டு வாறேன்...” ஏன்று மிரட்டிய கிளைக்கதைகளும் நிறைய கைவசமிருக்கின்றன.

அடுத்த சில வருடங்களில் விடுதலையடைந்து ஊர் திரும்பிய வேலுத்தம்பி வீடு வந்து சேரவில்லை. வழியிலேயே பெரிய பண்ணாடியின் ஆட்கள் போட்டுத் தள்ளி விட்டார்கள் என்றும், இல்லை காவல் அதிகாரிகளே என்கவுண்டர் செய்து விட்டார்கள் எனவும், இல்லையில்லை அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்றும் பல்வேறு விதமான யூகங்களும், இன்னும் அதன் நீட்சியாக அதிஅற்புதம் வாய்ந்த கதையாடல்களும் அந்த வட்டாரத்தையே இன்னும் சூறாவளியாய்ச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன. சோலையம்மாவின் சுமங்கலிக் கோலத்தில் சேதி சொல்லியிருப்பாய் காற்றே என்று கொல்லுப்பட்டறையின் எதிரில் உள்ள பனைமரப் பொந்திலிருந்த கிளிகள் மூக்கோடு மூக்கு வைத்து பேசிக் கொள்கின்றன.

அருவாளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் மூக்குப் பகுதியைப் பதனப்படுத்த ஆரம்பித்திருந்தாள் ரஞ்சி. ஒரு சிற்பிக்கு சிலைசெய்து முடித்தவுடன் கண்திறப்பதுதான் கடைசி வேலை; அதேபோல, அருவாள் பூரணத்துவம் பெற அதன் மூக்கை வடிவமைக்க வேண்டும். அவளது கை விசை லாவகமாக இறங்கும் போது அய்யாவின் திருகி விடப்பட்ட மூக்கின் கொடுக்காவடிவம் அப்படியே அதில் இறங்குகிறது. வடிவமாகியிருந்தது அருவாள். அதை இப்படியும் அப்படியும் ஆட்டி வாகு பார்த்துத் திருப்தியடைந்தாள். அதன் வெட்டுவாய்ப் பகுதியில் கண்களை ஓட்டினாள்.

அவள் எப்பொழுதும் அருவாள் அடித்து முடித்தவுடன் அது குறித்து யோசிப்பாள்; அதுவரை அடக்கி வைத்திருந்த பல்வேறுவிதமான ஓர்மைகள் வெடித்துக் கிளம்பும். ‘அந்த அருவாளுக்கு ரத்தக்காவு கொடுத்து விட்டால் மீண்டும் அது கேட்காது’ ஏன்று தனது அய்யா சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வரும். ஒரு நிமிடம் கண்களை மூடி வேண்டிக் கொண்டு, அந்த வெட்டுவாய்ப் பகுதியில் தனது ஆள்காட்டி விரலை வைத்துக் கூர் பார்ப்பாள். அருவாளில் ரத்தம் சிலீரிட்டடிக்கும்.

ஞாபகத்துக்கு வந்த அந்தச் செயல்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அருவாளை வெறுமையுடன் பார்த்தாள். உலோகத்தின் தணல் அவளது உள்ளங்கையில் இறங்கியது. உலை அடுப்புக் கோபுரத்தின் முன் அதை இருகைகளாலும் தூக்கி வணங்கி விட்டு அடைகல்லின் மீது வைத்தாள் ரஞ்சி.

துருத்திச் சக்கரத்திற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்த அம்மா திரும்பி அவளைப் பார்த்தாள். தன்மேல் ஒட்டியிருக்கும் சாம்பலையும் இரும்புக் கசடுகளையும் தட்டி விட்டவாறே எழுந்த ரஞ்சி “அம்மா நான் குளிச்சிட்டு வாறே... சாப்பாடு எடுத்துவை...” என்று ஓடினாள்.

ஒரு அழகான அருவாள் உருவாகிவிட்டது; அதன் வேலை என்ன என்பதை நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது.

(நன்றி: உன்னதம் ஜூன் 2009)

- கௌதம சித்தார்த்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It