ஐயா! கங்காவைப் போலீஸ் கூட்டினு போய்ட்டாங்க."

"ஏன்?!"

"தெரிலீங்க, நீங்கதான் கொஞ்சம் போய் என்னா ஏதுன்னு வெசாரிக்கணும்."

கங்கா என் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவிலுள்ள சேரியில் வசிப்பவள். படிப்பறிவில்லாதவள். அப்பாவி, வெகுளி, உலகம் தெரியாதவள். அவள் சில சமயம் விசேச நாட்களில் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதுண்டு.

'அவளை எதற்குப் போலீஸ் பிடித்துக்கொண்டு போனது?! அவள் என்ன தப்பு செய்தாள்?'

அவசர அவசரமாக ஸ்கூட்டரை மிதித்தேன்.

நான் சென்று சேர்ந்த இடம் பள்ளிக்கூடம் போல் இருந்தது. எல்லோரும் வரிசையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

'ஒரு வேளை மதிய உணவோ?'

இன்னும் கொஞ்சம் நடந்தபோது ஒரு மருத்துவமனை வந்துவிட்டது. உள்ளே நோயாளிகள் அனைவரும் ஆ ஊ என்று முனகிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை அத்தனையுமே அவசர கேஸ்கள் போல.

கொஞ்சம் இடதுபுறம் நகர்ந்தேன். காவல் நிலையம் தென்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கங்காவையும் இன்னொரு பெண்ணையும் தன் புல்லட்டில் அடைத்துக் கூட்டி வந்திருந்தான்.

அவளை ஒரு மூலையில் உட்கார்த்தி வைத்திருந்தார்கள். நான் கிட்டே போனதும் என் கையைப் பிடித்துக்கொண்டு கரகரவென்று அழ ஆரம்பித்து விட்டாள்.

"நான் ஒரு தப்பும் பண்ணலீங்க!" நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அந்த இன்ஸ்பெக்டர் அவளை லாக்கப்பில் அடைத்தான்.

இதில் பெரிய அநியாயம் என்னவென்றால் அந்த லாக்கப்பில் ஆண்களும் பெண்களும் சேர்த்து அடைக்கப்பட்டிருந்தனர்.

அதுமட்டுமன்றி அங்கு ஒரு பெண் போலீஸ் கூட இல்லை.

விதி மீறல் பற்றி சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்க,

"அப்படித்தான், உன்னால ஆனதப் பாத்துக்க." என்று சொல்லிவிட்டான்.

லாக்கப்பில் இருந்த அவளிடம்,

"நீ ஒண்ணும் கவலப்படாத. நான் சீக்கிரமா ஜாமீன்ல எடுத்துர்ரேன்."

என்றேன்.

அவள் அழுதுகொண்டே தலையை ஆட்டினாள்.

வீட்டுக்குச் சென்று நெடிது சிந்தித்தேன்.

'இதில் மனித உரிமை மீறல் பிரச்சினை இருக்கிறது. சட்ட வரம்பு மீறல் இருக்கிறது. இவ்வளவு தைரியமாகப் பேசுகிறானென்றால் இவனுக்கு உள்ளூர் கோர்ட்களில் செல்வாக்கு இருக்கும். நாம் ஒன்றும் பண்ண முடியாது. ஹைகோர்ட்டில் யாரையும் தெரியாது. சுப்ரீம் கோர்ட்? அதுதான் சரி. ஒரு அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம். மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டால் மனு தள்ளுபடியாகாமல் காப்பாற்ற முடியும். ஒரு அவசர வெர்டிக்ட் பாஸாகிவிட்டால் பிறகு பிரச்சினை இல்லை. யோகேஸ்வரன் சாரைக் கேட்டுப் பார்க்கலாம். ஒருவேளை அவருக்கு நேரம் இல்லையன்றால் சின்னசாமி சார் அல்லது நெடுமாறன்...'

யோசித்துக் கொண்டிருக்கும்போதே அம்மாவின் குரல்...

"மணி 12 ஆகுது. இந்த நேரத்துல உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தை எல்லாம் தொந்தரவு செய்யாம பேசாம தூங்கு. எல்லாத்தையும் காலேல பாத்துக்கலாம்."

காலையில் எழுந்ததும் தலையில் அடித்துக் கொண்டேன்.

'அட எழவே! எஃப் ஐ ஆர் காப்பி வாங்க மறந்து விட்டேனே. என்ன செக் ஷனில் போட்டிருக்கிறான் என்று தெரிந்தால்தானே அதற்குத் தகுந்தாற்போல் பெயில் எடுப்பதோ அல்லது வேறு எதாவது செய்யவோ முடியும். சே! என்ன எழவுடா இது!'

மறுபடியும் அரக்கப் பரக்க ஸ்கூட்டரை மிதித்தேன்.

அங்கு பார்த்தால், பள்ளிக்கூடத்தில் ஒருவரையும் காணவில்லை. மருத்துவமனையில் சென்று பார்த்தால் டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர் எவரையும் காணவில்லை. பிணியாளர்களில் பாதிப்பேர் கட்டுகளைக் கழற்றி எறிந்துவிட்டு செம தூக்கம் போட்டுக் கொண்டிருந்திருந்தார்கள். மீதிப்பேரில் சிலபேர் சிக்கனைக் கடித்துக் கொண்டிருக்க சிலர் குவாட்டரை கிளாஸில் விட்டுக் கலந்து கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

'என்ன நடக்கிறது இங்கே?!'

போலீஸ் ஸ்டேஷனில் யாருமே இல்லை. லாக்கப்பும் திறந்திருந்தது.

அந்த நேரத்தில்தான் அந்தக் குரல் கேட்டது.

"என்னங்கடா நடக்குது இங்கே?!"

அங்கே ஓடிச்சென்று பார்த்தேன்.

கங்கா அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அகன்ற நெற்றிப் பொட்டுக் கலைந்திருந்தது.

வேறொருவன் கேட்டான்.

"ஏங்க என்ன ஆச்சு?"

"லாக்கப்புல இந்தப் பொண்ணையும் இன்னொருத்தனையும் ஒரே பாயில படுக்க வச்சிறுக்கானுங்க!"

கங்கா என்னைப் பார்த்த பார்வையில் கோபமிருந்தது. பயம், கழிவிரக்கம் என பல உணர்வுகள் கலந்திருந்தன.

அவள் விடு விடுவென அந்த இடத்தைவிட்டு அகன்று வேக வேகமாக சேரிப்பகுதிக்குள் சென்று மறைந்தாள்.

நான் பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

அந்தக் கட்டிடத்தைத் துண்டு துண்டாகப் பிரித்தெடுத்து வேன்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

'அடப்பாவி! அத்தனையும் சினிமா செட்டா?!"

நான் என் ஸ்கூட்டரில் மெதுவாக ஊர்ந்தேன்.

சேரிப்பகுதியைக் கடக்கும்போது, எங்கிருந்தோ ஒரு லவுட் ஸ்பீக்கரில் சினிமாப் பாட்டு கேட்டது,

"கத போலத் தோணும் இது கதயும் இல்ல இத கலங்காமக் கேக்கும் ஒரு இதயம் இல்ல..."

விர்.. விர்.. ரென்று சினி சர்வீஸ் வேன்கள் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தன.

கங்கா தேரே பாணீ அம்ருத் (ஓ கங்கையே உன் தண்ணீர் அமுதம்.)

- காசிகணேசன் - ரங்கநாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It