அத்தியாயம்-4

அந்தக் கனவுப் பிராணிகளில் ஒருவன்,

“தொடர்ந்து வரும் கனவினால் நான் மிரட்டப்படுகிறேன். அதிலிருந்தான விடுதலை?

அதை நான் விடுதலை செய்ய வேண்டும்.

எப்படி விடுதலை செய்வது?

அவிழ்த்துவிடுவதா? அல்லது அறுத்துவிடுவதா? அவிழ்த்துவிட்டால் மீண்டும் கட்டலாம். அறுத்துவிட்டால்! கட்டமுடியாதே... அப்படியானால், அடிமையான நான் மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தவேண்டும் என்றா நினைக்கிறேன்? என்னை நான் அடிமையாக்கிவிட்டேன். என்னை நான் என் எல்லாவற்றிலிருந்தும் அறுத்து எறிந்துவிட்டேன், அறுத்தெறிந்துவிட்டதால் அடிமையாகி இருக்கிறேன். அப்படியிருக்கையில் நான் எப்படி என்னை அடையாளம் காண்பது? என்னை நான் எப்படி விடுதலையாக்குவது? அல்லது எப்படி அடிமையாக்குவது? எதிலிருந்து அடிமையாக்கி எதிலிருந்து விடுதலைப் பெற்றுக் கொள்வது?

என்னை நான் ஒன்றும் செய்ய முடியாது. விடுதலையடைய முடியவே முடியாது, அடிமையாக்கிக் கொள்ளவும் முடியாது. என்ன நிலையில் இருக்கிறேன்? இப்போது இந்த ரிமிந்தகத்தில் ரிமிந்தகனின் ஆட்சியில் “நாளைய தினம் போருக்குப் போகவேண்டும்” என்ற கட்டளையைக் கேட்டுவிட்ட நான், என்ன செய்ய சேய்யவேண்டும்?”

Running man with fear சட்டென குனிந்து எழுந்து உடலை ஒரு சிலுப்பு சிலுப்பிவிட்டு மீண்டும் வீதியில் ஓடுகிறான். வழிநெடுக மனிதர்களும் ஆடு, மாடுகளும் மனித இனம் எது? மிருகயினம் எது? என்று வித்தியாசம் தெரிவிக்காமல் தூக்கத்தில் உருண்டு கொண்டிருந்தனர், உருண்டு கொண்டிருந்தன. அவையெல்லாம் அவனால் அவனோடு வாழ்ந்ததுதான் என்று நின்று யோசிக்க முடியாமல் அவனது புலன்களுக்கு அப்பாற்றபட்டு சிலையாய் நின்றுகொண்டிருக்கும் அந்த வீடுகள் போலவும், வீதியைப் போலவும், குப்பைத் தொட்டியைப் போலவும் இருந்தார்கள், இருந்தன. எல்லோரையும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டே இருந்தான். தான் இந்த மனநிலையோடு எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று மட்டும் அவனால் சிந்திக்கத் தோன்றியது. நின்றான்.

கால்களை தரையோடு ஒட்டவைத்து அல்ல... அது ஓடிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் மனதால். கால்கள் ஓடிக் கொண்டே இருக்க மனம் ஒருநொடி நின்றது. யோசித்தான். “தம்மை துரத்தி இந்த நிலைக்கு ஓடச்செய்தது...,!” எது என்று. தன்னை நோக்கி ஏவப்பட்டு வந்துகொண்டிருக்கும் “டுமீல் டுமீல்” துப்பாக்கிச் சத்தங்களும் சிறிது நேரத்திற்குக்குள் தனக்குப் பின்னால் வந்து விழுந்த தோட்டாக்களும்தான் தன்னை ஓடச்செய்தது என்பதை உணர்ந்தான்,

முதல் முறையாக தன் உடலோடு தொடர்புடைய அபாயத்தை வாய்விட்டு வெளிப்படுத்தினான், “ஐயோ!” என.
அவனைத் துரத்திக்கொண்டு நூறு நூற்றைம்பது துப்பாக்கி ஏந்தியவர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
“அவர்கள் அவனது எதிரிகளா? அவனை உணவு என்று எண்ணி வேட்டையாட, சுட்டுக்கொண்டே வருகிறார்களா? என்று யோசிக்க இடம் தரமால் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு காது இருக்கிறதா? கண்கள் உண்டா? செவிகள் கேட்குமா? மொத்ததத்தில் அவர்கள் மனிதர்கள்தானா...?.” என்றெல்லாம், நாம் வேண்டுமானால் தெருவோரத்தில் இந்த துரத்தப்படுவனுக்கும் துரத்துபவர்களுக்கும் தெரியாமல் மறைந்திருந்து யோசித்தபடி வேடிக்கைப் பார்க்கலாம்.
அவனால் அவன்...? அந்த நூறு நூற்றைம்பது தோட்டக்களுக்கிடையே தப்பித்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறான். அந்தத் தோட்டாக்களின் சப்தங்களைக் கேட்காமல் வீதியில் உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மிதித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறான்.

வெகுநேரத்திற்குப் பின் ஓட்டத்திற்குக் காரணமான ஒலி அடங்குகிறது. ஆனால் ஓட்டம் முடிந்தபடில்லை. அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் துரத்திக் கொண்டே அவனைக் கடந்து செல்கிறார்கள். அவன் குகையொன்றில் மறைந்தபின்னும். இன்னும் அவன் ஓடிக்கொண்டு தான் இருக்கிறான் என அவர்களும் துரத்திக்கொண்டே செல்கிறார்கள், அவனைத் தாண்டி சென்றபின்னும்.

குகைக்குள் உடலை மறைத்துக்கொண்டு வெகுநேரம் துப்பாக்கிக்காரர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறான் வெகுநேரம். தலைக்கும் வாலுக்குமான வெப்ப மாற்றத்தின் உச்சத்தை உணரும் வரை. வயிற்றிலிருந்து கால் பாதம் வரையிலான பாகங்கள் குகையின் குட்டையில் நனைந்திருக்க, தலை மட்டும் வெளியே வெய்யிலில் உலர்ந்து, வறண்டு பயத்தால் துப்பாக்கிக்காரர்களைப் பார்த்தபடி இருக்க, சட்டென காலை வெளியே இழுத்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து குட்டையை கவனிக்கிறவனுக்கு அதிசயம் அங்கே காத்திருந்தது.
வெளியில் வெளிச்சம் பிரகாசமாகக் காணப்பட்டாலும் குகையினுள் சன்னமாக இருள் சூழ்ந்திருந்தது. அந்த குட்டையில் தெரிந்த பிம்பத்தால் அவனது மனதுள் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நீரின் மேற்பரப்பில் அவனை இன்னமும் அந்த துப்பாக்கிக்காரர்கள் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் அவர்கள் ஏவிவிட்ட துப்பாக்கித் தோட்டக்களுக்கு இடையே வளைந்து வளைந்து லாவகமாகத் தப்பித்து, ஓடிக்கொண்டே இருக்கிறான். தனது ஓட்டத்தைக் தானே கண்டவனுக்குள் எண்ணற்ற எண்ணத்தளங்கள் ஒன்று மாற்றி மற்றொன்று எதை எதையோ எடுத்துச் சொல்ல விரிந்துகொண்டே இருக்கிறது.

எதைப்பிடித்து எதைக் கவனிக்க என்று குழம்பிப் போகிறான். அனைத்துத் தளங்களும் ஒன்றில் மற்றொன்று மேலேறி இரண்டு தனித்தனிக் காட்சிகள் ஒன்றாகி, பின் அவை மற்றொரு காட்சிக் குழுவோடு சேர்ந்து ஒன்றாகி......, இப்படியாக காட்சிகள் அனைத்தும் இணைந்து இறுதியாக வெள்ளைத்திரை மட்டும் மிஞ்சுகிறது. அலுத்துப்போய் உட்காருகிறான். அமைதி எங்கும் நிறைந்திருக்க தான் மட்டும் பரபரப்போடு இருப்பதை அறிகிறான். தன் அறியாமையை தானே கேலி செய்து கொள்கிறான். அசதியுற்று தரையில் சாய்கிறான். வெகுநேரம் குகைக் கூரையையும் குளத்தையும் பக்கவாட்டுத் தரையையும் பார்த்துக் கொண்டிருக்கிறான், சலிப்பில்லாமல். அவனுக்கு அப்படியிருப்பது இதுவரையிலான அனைத்து அசதியையும் போக்கும் விதமாக இருந்தது. வெகுநேரம் தானே தன் சூழலை உற்று உற்று பார்ப்பதாக இருந்தவன், தன் முதுகுத் தண்டு சங்கடப்படுவதை உணர்கிறான். புரண்டு படுத்து முதுகு சாய்ந்திருந்த தரையைப் பார்க்கிறான்.

இருட்டில் அப்படியொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் இருளோடு இருளாக தரையை கைவிட்டுத் துழாவுகிறான். ஏதோ கெட்டியான குச்சிபோன்ற ஒன்று இருப்பதை எடுத்தவன் குகைவாயிலை நோக்கிச் சென்று வெளிச்சத்தில் அது என்ன என்று பார்க்கிறான். பார்த்தவன் சடேரென, சற்று முன் இழந்த படபடப்பிற்குள், அதே வேகத்தில் புகுந்துகொள்கிறான். அது ஒரு பிணத்தின் கையெலும்பு என்பதால்.

நொடியும் தாமதியாமல் அந்த மண்ணையெல்லாம் நொடியில் அப்புறப்படுத்திவிட்டு முழுமையான ஒரு பிணத்தின் எலும்புக் கூட்டைக் காண்கிறான். அதிசயத்தைக் கண்டவன் போல் அந்த பிணத்தை உற்றுப் பார்க்கிறான். எலும்புகளுக்கிடையில் ஒரு தோல் பொட்டலம் இருக்க, எடுத்துப் பிரிக்கிறான். அதில் ஒரு வெண்தோலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க எடுத்து வாசிக்கிறான் இப்படியாக,

“இந்நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க என்று போரில் எதிரியின் தலையைக் குறிவைத்து ஓடிய எனக்கு எதிரியின் கண்களுள் மறைத்திருந்த மிருகத்தின் வெப்பக் காற்றையும் அதன் வீரியத்தையும் அறியமுடியாமல் இருந்ததுதான் என் உடல் வெந்து இப்போது இந்தக் குகையில் ஒளிந்து உயிரைவிடக் காரணமாகிறது. என் நாட்டில், இதோ! இந்தக் குகைக்கு வெளியே தெரியும் வெளியில், இன்னமும் போர் நடந்துகொண்டிருக்கிறது. எனது வீரர்கள், நான் அவர்களுடன் இருப்பதாக பாவித்து இன்னமும் போர் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ‘போரைத் தொடங்குங்கள்’ என கட்டளையை கொடுத்த நான் ‘போரை நிறுத்துங்கள்’ என்று சொல்லமுடியாமல் வாய் வெந்துபோய்கிடக்கிறது. இங்கே கண்ணீரை மண்ணோடு கலந்து எழுத்தாக எழுதுகிறேன். “போரை நிறுத்துங்கள்”

பிணத்தின் எழுத்தை வாசித்தபின் தோல்பையை மேலும் ஆராய்கிறான் வேறு ஏதாவது இருக்கிறதா என்று? அதில் ஒரு மட்கிய கயிறும் ஒரு தாலிப்பூணும் இருக்கக்கண்டு அதிசயித்து எலும்புக்கூட்டை நோக்கி,

“இதை எதற்கு உன்னோடு வைத்திருக்கிறாய்” என்று கேட்கிறான். எலும்புக்கூடு பொக்கை வாயோடு சிரித்ததேயன்றி பதிலேதும் சொல்லவில்லை. பின் எலும்புக்கூட்டை மண்ணிலிருந்து வெளியே எடுக்க முயற்சித்தவன் அந்த எலும்புக்கூடு எழுதியதாக இருந்த வார்த்தைகள் அனைத்தும் பொய்யானது என்பதைக் கண்கூடாகக் காண்கிறான். அந்த எலும்புக் கூட்டுக்குக்கீழே மேலும் சில எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டதும் பரபரவென்று எல்லா எலும்புக்கூடுகளையும் எடுக்கத் தொடங்குகிறான். அது முடிந்தபாடில்லை. எடுக்க எடுக்க பிணங்களாகவே வருகின்றன. அனைத்தும் உயிரோடு புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளாக இருக்கக்கூடும் என்றொரு அனுமானத்தை, நிஜம்தான் என்று பறைசாற்றுவதாக இருந்தது.

அங்கே வரிசையாக போர்வீரர்கள், மந்திரிமார்கள், வேளையாட்கள், பணிப்பெண்கள், ஆடுமாடுகள், கோழி மற்றும் ராணிமார்கள் என ஒரு ராஜாங்கமே அந்த முதல் எலும்புக் கூட்டிற்குக் கீழே புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் அந்த முதல் எலும்புக் கூட்டைத் தேட, மீண்டும் எலும்புகளைக் களைத்துப் பார்க்கிறான். அதனை அவனால் கண்டுபிடிக்கவே முடியில்லை. வெளியே பேய்காற்றும் பெரும் புயலுமாக இயற்கை தன்னை சீற்றத்திற்குள் ஆளாக்கிக் கொண்டது அவனது மனோநிலைக்கு ஒத்து. குகைக்குள்ளேயும் காற்று வீசுகிறது. மழையடிக்கிறது. அந்த விநோதமான மழை மேலிருந்து வருவதாகத் தெரியவில்லை. தரையோடு தரையாக பக்கவாட்டிலிருந்து, வலது புறத்திலிருந்து இடது புறத்திற்கு வீசுவதாக...

அவனும் எலும்புகளும் காற்றில் அலைகழிக்கப்பட, அங்கிருந்து எதிர்காற்றில் முச்சுமுட்ட ஓடுகிறான். பின் மலையின் நேர் பின்புறத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டு இயற்கையின் இந்த விநோதச் செயலை பயத்தோடு கவனிக்கிறான்.
மனம் இன்னமும் படபடப்பை அடக்கிக்கொள்ளவில்லை. சர்புர்ரென ரத்தம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. ரத்த நாளங்கள் வேகமான ரத்தப் போக்குவரத்தால் வீங்கி வீங்கி ஆங்காங்கே வெடித்து சதைகளை பிய்த்துக்கொண்டு சிதறியது. ஒரு தற்கொலை வீரனின் உடல்போல் அந்த பிரதேசம் முழுவதும் வெடித்துச் சிறதறியது உடல். அமைதி.

மெல்ல கண்விழிக்கிறான். பயத்தால் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. நடுக்கத்தோடு சுற்றும் முற்றும் பார்க்கிறான். ரிமிந்தகன் துரத்திச் சென்ற கழுகின் நிழல், ஒரு வீட்டின் கூரைமீது இப்போது நிஜஉருவத்தில் உட்கார்ந்திருந்தது.
கழுகையே பார்க்கிறேன். பூதாகரமாக இருந்தது. வளர்ந்துகொண்டேவும் இருந்தது. மிகப்பெரிதாக வளர்ந்த பின், கழுகு தன் பின்னால் உள்ள அனைத்தையும் மறைக்கக்கூடிய பெரிய ராட்சச கழுகாகத் தோன்றியது. அவனுக்குள் ஏற்பட்ட கொதிப்பும் அடங்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல அவன் சுயநினைவுக்கு வந்து கொண்டிருந்தான். கழுகு, அவனது பார்வைக்கு மட்டுமில்லாமல் அவனது உள்ளத்திற்குள்ளூம் தம் அஜானுபகுவான தோற்றத்தை ஏற்படுத்தியது. கையெடுத்து வணங்கினான். தலையைத் திருப்பிக்கொண்டது கழுகு.

மெல்ல அவன் எழுந்து மண்டியிட்ட நிலையில் அதனை நோக்கி,

“எப்போது வந்தாய்?”

“நீ கனவில் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பயந்து ஓடிக்கொண்டிருந்தாயே அப்போதே வந்துவிட்டேன்.”

“எனக்குத் தோட்டாக்கள் என்றால் பயம்.”

“எல்லோருக்கும் தோட்டாக்கள் என்றால் பயம் தான். இதுவரை இந்த உலகில் மாண்டுபோன உயிர்களின் எண்ணிக்கையில் பாதிக்குமேலானது, தோட்டாக்களை ஏவும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டபின் தான். எல்லாவற்றிற்கும் காரணம் அந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவன்தான். அவனைத் தேடித்தான் நான் வந்தேன்.”

“அப்படியா...?”

“ஏன் அப்படியா என்றுக் கேட்கிறாய்?”

“அந்தப் பாழாய்ப் போனத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவனே நான்தான். அதற்குண்டான தண்டனையைத் தேர்ந்தெடுத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் இந்த துப்பாக்கிச் சத்தங்கள் என்னைத் துரத்தாத கனவுகள் எனக்கு வராமல் இல்லை. என்னை நீ கண்டதாகச் சொன்ன நேரத்தின் போதும், நீ சொன்னது போல் தான் என்னைத் துரத்தும் தோட்டாக்களுக்குப் பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தபின்தான் அந்தக் கனவிலிருந்து விடுபட்டிருக்கிறேன்.”

“நீ கனவிலிருந்து விடுபட்டிருக்கிறாயா?”

“ஆமாம்.”

“அதை நீதான் சொல்லிக்கொள்ளவேண்டும்.”

“ஏன்? நான் இன்னமும் கனவிலிருந்து விடுபடவில்லையா?”

“உன்னை நான் எப்போது பார்த்தேன் என்று சொன்னேன்?”

“இப்படியாகப்பட்ட கனவின் ஒரு சம்பவத்தின் போது.”

“அப்படியானால் நான் உன் கனவில் வந்திருக்கிறேன்.”

“இருக்கலாம். ஆனால் உன்னை நான் பார்க்கவில்லையே.”

“நீ எல்லாவற்றையும் பார்த்திருக்க முடியாது. உனக்கு எதன்மீது கவனம் இருக்கிறதோ அதுதான் உனக்குத் தெரிந்திருக்கும். மற்றவை....”

“அப்படியானால் நான் கனவில் பயணிக்கும் போது உன்னைக் கவனிக்காமல் சென்றிருக்கிறேன்.”

“ஆமாம்.”

“இப்போது?”

“கனவின் ஒரு தொடர்ச்சியாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.”

“இதுவும் கனவா?”

“கனவின் கனவு.”

“கனவின் கனவு. பயங்கரமாக இருக்கிறது.”

“பயப்படும் விசயமல்ல கனவு.”

“பயமுறுத்தும் எல்லாம் கனவில் வந்து துரத்துகிறதே!”

"துரத்துவதெல்லாம் நீ. துரத்தப்படுவதும் நீ. நீ தான் உன்னைத் துரத்திக்கொண்டிருக்கிறாய். உன் தோட்டாக்கள் உன்னைத் துரத்துகிறது.”

“அவற்றை நான் ஏவவில்லையே?”

“அவை உன்னை நோக்கி ஏவப்படுகிறது.”

“எப்படி?”

“உன் தோட்டாக்கள் அவர்களிடம் எப்படிச் சென்றதோ அப்படி?”

“புரியவில்லை.”

“புரிந்திருந்தால் உனக்கு துப்பாக்கியைச் செய்யத் தூண்டிய கனவு வந்திருக்காது இப்போது அவை உன்னை துரத்தியிருக்கவும் இருக்காது. இப்போது அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டும் இருக்கமாட்டோம்.”

அவனுக்கு என்ன செய்வதென்றுத் தெரியவில்லை. அப்படியே மண்டியிட்ட நிலையிலேயே சோர்ந்து உட்கார்ந்து விடுகிறான். கழுகு அவனிடம்,

“ஏன் சோர்ந்து உட்கார்ந்துவிட்டாய்?”

“நான் ஒருபோதும் சோர்ந்துபோனதில்லை. பயத்தின் போதுகூட நான் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறேன். ஓடிக்கொண்டே. ஆனால் இப்போது உடலும் மனமும் வாடுகிறது. என் தவறினை நினைத்து வருந்துகிறேன். எதிரியைக் காணாமல் அவனது ஆயுதத்தின் ஒரு துகள்களால் இறந்தவர்களை நினைத்து மன உருகுகிறேன்.”

“சரி நீ மனம் மாறிவிட்டாய். இனி உலகம் ஒரு அமைதியான சூழலுக்குள் வந்துவிடும்...” என கிண்டலாக கழுகு சொன்னலும் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

“நான் என்ன செய்யவேண்டும். என்னால் செய்ய முடிந்ததைச் சொல் செய்கிறேன்.”

“நீ தான் உன்னால் முடிந்ததை எல்லாம் செய்து எல்லாவற்றையும் முடித்துவிட்டாயே. 1945 ஆகஸ்டு 6 திங்கள் திங்கட்கிழமையன்று வெடித்த நாசக்கார லிட்டில் பாய் அணுகுண்டுவரை தான் நீ கண்டுபிடித்தது உக்கிரமாக இருந்தது, பின் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று மட்டும் நினைத்துவிடாதே. தினம் தினம் கட்டிடங்கள் வெடிகுண்டுகளுக்கு தவிடுபொடியாகி ஆயிரமாயிரமானோர் சுதாரிப்பதற்குள்..., என்ன நடக்கிறது என்று யோசிக்க நொடியும் நேரமின்றி இறந்துபோயிருக்கிறார்கள் தெரியுமா?”

“மேலும் மேலும் என்னை சீரழிக்கிறாய்.”

“வேறு வழியில்லை. நீ செய்ததைச் சொல்கிறேன். அதைக் கேட்கக்கூட உன்னால் முடியவில்லையே!”

“சொல். சொல்லிச் சொல்லி சொல்லால் என்னைக் கொல்.”

அதன்பின் வெகுநேரம் கழுகு அவனிடம் எந்த வாக்குவாதமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவன் ‘கழுகு என்ன சொல்லப்போகிறதோ!’ என்று ஆவலோடு அதனைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏதாவது சின்ன அசைவு அல்லது சலசலப்புக் கேட்டாலே, தன்னை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு கழுகை கூர்ந்து கவனிக்கிறான். கழுகுக்கு அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பது தெரிந்திருந்தாலும் எதையும் சொல்லாமல், மிகச் சாதாரணமாக மேற்கு திசையையே பார்த்துபடி கழுத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தது அசைவற்று. அந்த அமைதி அவனைக் கொன்றது. வெகு நேரத்திற்குப் பின் அவன்,

“நீ யார்? அன்று நாட்டிற்குள் புகுந்து எல்லா மக்களையும் பார்த்து, ஏன் அப்படிப் பேசினாய்? பேசிச் சென்றபின் ஏன் ரிமிந்தகன் உன் நிழலைத் துரத்திக்கொண்டே ஓடினான்.”

“கேள்விகள் கேட்கப்படுவதுதால் மட்டுமே கேட்கப்படுபவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை”.

“இருக்கலாம். ஆனால் நான் கேட்பதுகூடவா?”

“யார் நீ?”

“உன்னால் என் கனவிற்குள் வர அனுமதித்த ஒரு உயிர்.”

“நீ என்னை அனுமதிக்கவில்லை நான் உன்னுள் தானாக உள்ளுள் விதைக்கப்பட்டிருக்கிறேன். நாளையதினம் இந்த சனத்திரள் போருக்குப் போகப் போகிறது. அது எந்த எதிரியைக் கொல்லப்போகிறோம் என்று தெரியாமல் கண்மூடிப் பயணிக்கப்போகிறது.”

“எதிரி தெரியாமல் போருக்குப் போகவில்லை.”

“அப்படித்தான் என்று வைத்துக்கொள். உனக்குத் தெரியுமா யார் எதிரி என்று?”

“என் மன்னனுக்குத் தெரியும். எனக்கு எதற்குத் தெரியவேண்டும். அவனுக்குத் தெரிந்தால் போதும்.”

“சரி சரி உன் மன்னனின் மீதான பக்தியை நீயே வைத்துக்கொள். ஆனால் நடக்ப்போவதென்னவா நான் உன்னுள் விதைத்திருக்கும் கேள்வியை நீ வெளிப்படுத்துவதைப் பொருத்துதான் அமையப் போகிறது.”

“என்ன கேள்வியை விதைத்திருக்கிறாய்.”

“அது உனக்கேத் தெரியும். அதை நீயே பலமுறை உனக்குள் கேட்டிருக்கிறாய். ஆனால் சரியான நபரிடம் சரியான சந்தர்ப்பத்தில் இன்னும் கேட்கவில்லை. கேட்கப் போகிறாய். அதற்காகத்தானே நான் வந்திருக்கிறேன். உன்னுள் என்றில்லை. இந்த உலகிலுள்ள அனைவரது மனதிலும் கேள்விகளை லிதைத்துக்கொண்டே வந்திருக்கிறேன். இப்போது உன்னுள்ளும். இதோ என் பணி முடிவடைகிறது. நீ தான் நான் விதைக்கவேண்டிய கடைசி நபர். போ. போய் உன் வேலையைக் கவனி.”

“நீ என்ன... எனக்குக் கட்டளை பிறப்பித்துக்கொண்டே இருக்கிறாய்?.”

“வேறு யார் கட்டளையிடவேண்டும்?.”

“நான்.”

“அதுதானே நடந்துகொண்டிருக்கிறது.”

“கழுகில்லையா....நீ”

“எப்படித் தெரிகிறேன்?”

“கழுகாக”

“அப்படியானால் கழுகுதானே!”

கழுகு சட்டென தன் இறகைவிரித்து படபடவென சிறகினை அடித்துக்கொண்டு ஒரு ராட்சச எலிகாப்படர் கிளம்புவதுபோல் கிளம்பி அவன்மீது புழுதியை வாரியிறைத்துவிட்டு புழுதி அடங்குவதற்குள் மறைந்துபோனது.
மெல்ல எழுந்து குகையைவிட்டு வெளியேறுகிறான். குகைக்குள் தான் கண்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் மன்னன், அவனது ராணிமார்கள், மந்திரி, சேனாதிபதி, பணியாட்கள், மக்கள் என அனைவரும் நிழலாக அவன் முன் அவனோடு புறப்படுவதை உணர்கிறான். தன் வீடுநோக்கி நடக்கிறான். அவையனைத்தும் அவன் முன் அவன் செல்லும் திசையில் செல்கிறது, அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்தவண்ணம். சிறிது நேரத்திற்கெல்லாம் இருள் அடர்ந்து எங்கும் மையிருட்டின் கருமை பரவிவிட, எல்லா நிழலும் கரைந்துபோய் நகரின் எல்லையிலிருந்த ஒரு ஒற்றை வெளிச்சத்தின் உதவியால் அவனுக்கு அவன் செல்ல வேண்டிய பாதைமட்டும் தெளிவாகத் தோன்றியது.

வீதியில் உறக்கத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் கடந்து வீட்டை அடைகிறான். அங்கே அடுக்களையில் அவன் தாய் மட்டும் உறங்காமல் அவனுக்காக காத்திருப்பவளாகக் காணப்படுகிறாள். அவனைக்கண்டதும்.

“செல்வமே!....!”

ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொள்கிறான்.

“அம்மா...!”

அவனது குரல் சப்தமாக கேட்க தாய் விழித்துக் கொள்கிறாள். அருகில் தன்னை இறுக அணைத்துக்கொண்டு தூக்கத்தில் பிதற்றும் மகனை வாஞ்சையாக தடவிக்கொடுத்தபடி அவனையே பார்க்கிறாள். அவன் தூக்கத்தில் இருந்தபடியே எதையோ எதையோ பேசுகிறான். கழுகு என்கிறான். துப்பாக்கி என்கிறான். துரத்துகிறார்கள் பயமாக இருக்கிறது என்கிறான். தாய் அவன் பேசுவதைக் கேட்க கேட்க மிகவும் மனமுடைந்துபோகிறாள். ஆர்ப்பாட்டமில்லாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தபடி இருக்கிறது. இதே போல் பல தாய்மார்கள் பல வீடுகளில் தம் குழந்தைகளும் கணவன்மார்களும் தூக்கத்தில் புலம்புவதைக் கேட்டு தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவர்களோடு வாழ்ந்த காலத்தில் எப்போது தான் தூங்கியிருக்கிறார்கள்?

*******************
மறுநாள் பொழுது விடிந்ததும் போருக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தும் மக்கள் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இருளடர்ந்த நகரின் வான்பகுதியில் மெல்ல ஆர்ப்பாட்டமில்லாமல் கழுகு, பறந்தபடி எல்லாவற்றையும் உற்றுப் பார்த்துக்கொண்டே வருகிறது. எல்லோரையும் மனதுள் பதித்துக்கொண்ட பின், நகரினை விட்டு விலகி எல்லையில் உள்ள மலைக்குச் சென்று அமர்ந்துகொள்கிறது. அங்கிருந்தபடி தன் எண்ணங்களை அந்த கருப்பு வானில் வெள்ளை உணர்வுகளாக எழுத்தத்தொடங்கியது எல்லா ஜீவராசிகளுக்குமாக,

“அன்பார்ந்த உயிரினங்களே! நாளை நடக்கப்போகும் பயணத்தின் முடிவில் போர் எற்படுவது உறுதி. அதில் யார் எதிரி என்பது தெரிந்துவிடும். அந்த எதிரியின் பலமும் பலவீனமும் உடனே தென்பட்டுவிடும். ஆனால் இந்த மூர்க்கர்களின் முட்டாள் தனத்தால் கடலில் எண்ணெய் கப்பல்களெல்லாம் பீரங்கித் தாக்குதல்களுக்கு உட்பட்டு சிதறி கடலின் மேல்மட்டம் எண்ணெய்யால் நிறையும். அது வாழ்வதற்கு ஏதுவாக இல்லாமல் போக அனைத்துக் கடல்வாழ் உயிரினங்களும் உயிரை நீத்து கொழகொழத்த திரவத்தில் மிதக்கநேரிடும். எத்தனை உயிர்கள்? எத்தனைக் கோடி ஆண்டுகள் தம்மை இந்த உயிர் சுமக்கும் உடலை அடைவதற்கு எடுத்துக்கொண்டன? இன்னவிதமான உடலின் அமைப்பில் இன்னவிதமான வண்ணத்தையும் அமைப்பையும் பெறுவதற்கு? அந்த ஜோனாதனின் சீகலும் இந்தச் சிக்கலில் தவித்தக் காட்சியால் உலகமே அதிர்ந்த உணர்வை எப்படி மறக்க முடியும்?

சூரியனைத் தொட்டுவிடத் துடித்த சீகல் “கீழே மிதப்பது என்ன?” என்று பார்க்க நேரிட்டபோது ஏற்பட்ட சோகம்தானே, உடலில் எண்ணெய் அப்பிக்கொள்ள மீண்டும் கடலில் இருந்து எழமுடியாத படிக்குச் ஆகிவிட்டது. இனி சீகலே இருக்காத ஒரு சூழலை எற்படச் செய்த, நாடுபிடிக்கும் நெருப்பு எண்ணத்தால் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எத்தனைப் பக்கங்களுக்கு அதிகரித்துவிட்டன தெரியுமா? அத்தனைப் பக்கங்களையும் படிப்போமோ! அதனைப் புரட்டவாவது நமக்கு நேரம் கிடைக்குமா? சொல்லுங்கள். சீகல்லின் மொரமொரப்படைந்த இறகுகள் பசிபிக் சமுத்திரம் முழுவதும் மிதந்தன. கன்னியாக்குமரி காக்கைகளுக்கும் வருத்தம். விவேகானந்தர் பாறைமீது நின்றுகொண்டு பயத்தோடு பாடின அந்தக் காக்கைப் பாடல்களை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? குறைந்தபட்சம் கேட்கவவாது முடியுமா? முயற்சியுங்கள். ஒரேயொருமுறை கேளுங்கள் போரின் வக்கிரத்தை உணரலாம்.

“நைல் நதிக்கரையோரம் நான்
பச்சைப் புதர்களின் மீது பறந்துகொண்டிருந்தேன்.
பாசிப் படிந்த குளங்களில் தோன்றிய
பாவிப்பயலின் குதர்க்கத்தை பார்க்க நேர்ந்ததே!.
வானுயரக்கட்டிடங்கள்
வசதியான வாய்க்கால்கள்
நெஞ்சுநிறைந்த பொய்யோடு
வருவோர் போவோர்க்கு விருந்துபடைத்தானே!
வீட்டுக்குத் திரும்பிய விருந்தினர்கள்
துப்பாக்கிகளையும் அணுகுண்டுகளையும்
இலவசமாகப் பெற்றுச் சென்றனரே!.
அடுக்களையில் உணவு செய்துகொண்டிருந்தாள் மனைவி
தட்டோடு வீட்டுமுற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்
கவிச்சை அற்றுப்போக கொதித்துக்கொண்டிருந்த ஆட்டுக்கறிகள்
இன்னும் அரைமணி நேரத்தில் தயாராகிவிடும் உணவு.
வந்தான் வீட்டுக்குள் வான்தொட்டக் கட்டிடங்களை
வாய்பிளந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு.
வாசலிலேயே வரவேற்றக் குழந்தையை
வாய்க்கு வந்தபடி வைதுவிட்டு
போதையற்றுப் போகாத நாற்றவாயோடு
நடுவீட்டில் பிரித்துப் போட்டான்
பொல்லாத உயிர்கொல்லிகளை.
நடுநடுங்கிப்போனவள் கேட்டாள்,
இதைக் கொண்டு என்ன சமைப்பதென்று.
அதற்கு அவன் சொன்னான்....
“இதனால் கொன்று சமைக்கப்போகிறோம் இனி...”என.
அதிர்ந்தவள் சிலையானாள்.
இன்னமும் அவர்களது குழந்தைகள்
வெறுந்தட்டோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன
சிதிலமடைந்த வீதிகளில்.
அவர்கள் இல்லாமல் போனபின்.
துப்பாக்கிக் கொடுத்தவனே
பொட்டலங்களை வீதியில் இரைக்கும் நிலைக்கு
மாறிவிட்ட விரக்தியில்
வற்றிய மார்போடு
விதைப்பதற்கு எதுவுமில்லாமல்
வெறுமனே கிடந்தது அந்நாடு.”

கழுகு தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறது சளைக்காமல். ஆனால் அதைப் பார்க்கத்தான் யாருமில்லை. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரது உடலும் நாளைய தினத்திற்குப் பிறகு எப்படி ஆகப் போகிறதோ அதைப்போல. சவங்களாக உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கழுகு எழுதியது இன்னமும் இந்த இருளேறிய கரும்பலகைகளில் வெள்ளையாய் தெளிவாக தெரிந்தது. ஒருவேளை இது நாளைக்கே அனைவருக்கும் தெரிய வரலாம். இப்போதைய வானைப்போல் இருளாக நாளையும் இருந்தால். ஆனால் இருள் வருவதற்குள் பகல் ஒன்று இருக்கிறதே. அவர்களுக்கு பகலில் கண்ணும் மண்ணும் ஒண்ணும் தெரியாதே. பகலில் கண் தெரிகிறது என்ற இறுமாப்பில் அவர்கள் ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொள்ளத்தான் போகிறார்கள். இருந்தாலும் நான் என் கடமையை செய்திருப்பது, போரை ஒருநாள் அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்பதற்காக என்று மனதைத் திருப்தி செய்துகொண்டு கழுகு மேலும் எழுதத் தொடங்குகிறது.

அப்போது அரண்மனையின் ஒரு அறையிலிருந்து ஒளி வருகிறது. அது மன்னன் ரிமிந்தகனின் அறை.

“இன்னேரத்தில் அவன் என்ன செய்கிறான்?”

“இப்போதுதான் அவன் ஏதாவது செய்யமுடியும். இப்போது அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்களே. அரக்க எண்ணம் படைத்தவர்கள் தமது இரை தூங்குபோதுதான் அதனைத் தாக்க திட்டம் போடுவார்கள். அல்லது அந்த தூக்கத்திலேயே அவற்றைக் கொன்று சமைத்துவிடுவார்கள். இறந்த உயிர்களும், தாம் தூக்கத்தில் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்.

ரிமிந்தகன் மெல்ல அந்த மஞ்சள் ஒளியில் சன்னலோரமாக வந்து நின்று, தூங்கிக்கொண்டிருக்கும் நாட்டைப் பார்க்கிறான். அவன் இதுவரையிலும் தூங்கவில்லை என்பது அவனது முகத்தில் தோன்றிய அலுப்பு காட்டிக் கொடுத்தது. தூரத்திலிருந்து அவனையே கவனித்துக் கொண்டிருந்த கழுகுக்கும் அவனுக்குமான ஒரு மாய தொடர்பு உயிர்ப்போடு இருந்துகொண்டுதான் இருந்தது. அதனைப் பார்க்காமலேயே உறங்கும் தன் மக்களைப் பார்த்துக்கொண்டே கேட்கிறான்.

“எனக்கெதிராக இப்போது எதைச் செய்துவிட்டு என்னை வேவு பார்க்கிறாய்?”

அதற்கு கழுகும் பதிலளித்தது, காற்றில் கலந்து எல்லாக் காதுகளுக்கும் கேட்கின்ற சொற்கோவையாக இல்லாமல் வெறும் அதிர்வு வழியாகவே தம் சம்பாசனையை ஒலி அலைவரிசையாக்கி ரிமிந்தகனுக்கு அனுப்பியது.

“உன்னால் வெற்றி பெற முடியாது ரிமிந்தகா? நீ வெற்றி பெற்றதே கிடையாது. எல்லாம் உன் முன் போரிட்டவர்களின் மயக்கநிலையின்போது அவர்களுக்கிருந்த சுதாரிப்பின்மையால் கைமாறியதுதான் உன் வெற்றி. அதனால் நீ உன்னை வெற்றி பெற்றவனாகவோ மேலும் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகிறவனாகவோ நினைத்துக்கொள்ளாதே.”

“அது என் கவலை. நீ ஏன் அக்கறை எடுத்துக்கொள்கிறாய்?”

“உன் கேள்விகளுக்கான பதில் நீயே.”

“அப்படியே இருக்கட்டும். எதைச் செய்துவிட்டு இப்போது என் முன் இருக்கிறாய்? இதற்கு என்ன பதில்”

“பதில் நீதான்”

“அப்படியா சரி. நீ எனக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டிருக்கிறாய் என்பது என் பதிலாக இருக்கிறது. சரியா?”

“உன் எந்த பதிலும் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் நீ செய்தது உனக்கு எதிராகத் தோன்றியிருப்பதால். தோன்றிய எதிரிடைகளை நீ வேண்டுமென்றே தொடர்ந்து செய்வதால்... ஆனால்....”

“என்ன?”

“உன்னால் இந்த முறை தோல்வியைக் காணநேரிடும்.”

“நான் வெற்றியைக் கண்டதே இல்லை. ஆனால் என்னிடம் தோற்றதாக வந்தடைந்தவர்கள் அனைவரும் என்னை வெற்றிகண்டவர்களாக இருந்தும் நான் தான் வெற்றி பெற்றேன் என்று சொல்லி, இன்னமும் எனக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். இந்த சூத்திரத்தின் அடிமனம் எனக்குள் எங்கே இருக்கிறது....? அதனால் தான் நான் இன்னமும் தலைவனாக உலா வருகிறேன்.”

கழுகு பதில் அளிக்கவில்லை.

“என்ன பதிலைக் காணோம்?”

“உன் அடுத்த செயலை எதிர்ப்பாக்கிறேன். அதனால்.”

“சரி நான் என்ன கேட்டாலும் நீ என்னை வேதனைப் படுத்திக்கொண்டேதான் இருக்கப் போகிறாய். போகட்டும். உனக்காவது நான் நேர்மையாக நடந்துகொள்ள முயற்சிக்கிறேனே! அடுத்த என் நடவடிக்கையைப் பார்.” என அவன் சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் செல்கிறான். சிறிது நேரத்திற்குப்பின் விநோதமான முறையில் தன்னை அலங்கரித்திருக்கிறான்.

உடனே கழுகு அங்கிருந்து பறந்து வெளியேறிவிடுகிறது. அவன் கழுகு சென்ற திசையையே பார்த்துக்கொண்டு,

“உன்னையும் நான் ஒருநாள் அடிமைப்படுத்துவேன்.” என சொல்லிவிட்டு மறைப்பில் வைத்திருந்த போர்ப்பறையை சுமந்துகொண்டு, அந்த இருளில் மெல்ல வீதிநோக்கி நடக்கிறான். வழிநெடுக்க மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அப்படியும் இப்படியுமாக புரண்டுகொண்டிருக்கிறார்கள். மெல்ல நடந்து, முன்பு ஒரு மரத்தின் மீது ஏறி பறையடித்து அனைவரையும் எழுப்பினானே அதே மரத்திற்குச் சென்று மீண்டும் அதில் ஏறி பறையை அடிக்கத் துவங்குகிறான். மக்கள் திடுதிப்பென்று தூக்கம் கலைந்து எழுந்து அவனை நோக்கி ஓடுகிறார்கள்.

அப்படி ஓடுபவர்கள். “தாம் தான் மன்னனை எழுப்பி போருக்குத் தயார் செய்து அழைத்துச் செல்வோம் என்றிருந்தோமே! இப்போது கேட்கும் பறையொலியால் விழித்திருக்கும் நாம், மன்னனும் விழித்திருக்கிறான் என்பதை ஊர்ஜிதம் செய்தோமா?” என ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டுக்கொள்ள, முடிவாக “அவன் எழுந்திருந்தாலும் எழாவிட்டாலும். நாம் அவனை எழுப்பும் துயிலெழுப்பும் பாடலைப் பாடுவோம்” எனச் சொல்லி பறையொலி கேட்கும் திசையை நோக்கி ஓடிக்கொண்டே அவனை எழுப்பும் பாடலை பாடிக்கொண்டே ஓடுகிறார்கள்.

பாடலின் வரிகள் முடிவடையவும் அங்கே ரிமிந்தகனே பறையடித்துக்கொண்டிருப்பதைக் காண்பதும் சரியாக இருக்க, அனைவரும் ஆச்சர்யத்தில் அதிர்ந்து உறைந்து போகின்றனர். ரிமிந்தகன் வாசிப்பதை நிறுத்திவிட்டு கீழே இறங்குகிறான். பின் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து,

“போர் துவங்கியாயிற்று. எதிரி நமக்காக காத்திருக்கிறான். என்னைத் தொடருங்கள்” என சொல்லிவிட்டு அவன் நகரை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறான். அனைவரும் அவனைத் தொடர்கிறார்கள்

-அரியநாச்சி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It