கருமேகங்களிலிருந்து கனமாக விழுந்து கொண்டிருந்தது மழை. சாலைகளை அறைந்துக் கொண்டிருந்த துளிகள் காற்றின் விசைக்கேற்ப ஊசல் ஆடியது.

இந்தக் காட்சிகளைத் தன் கண்களில் படம் பிடித்தபடி மழையோடு மழையானான் அகிலன். அகிலன் ஒரு புகைப்படக்காரன், புகைப்படம் எடுத்து ‘ஸ்டீவ் மேக்கரி’ போன்று அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்து, வாழ்க்கையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஊன்றி, சரித்திரத் தடத்தில் தன் ரேகையைப் பதித்து வெற்றியின் உச்சத்தைத் தொட்டு, இந்தப் பிறப்பின் அடையாளத்தை நிலைநாட்டும் எண்ணம், என்று எதுவுமே இல்லாமல், வாழ்க்கையை ரசிக்கும் ஒரு சராசரி மனிதன். புகைப்படம் என்பது அவன் வாழ்வின் உயிரோட்டமாக இருந்தது. எடுக்கும் புகைப்படத்தை அவன் வீட்டுச் சுவற்றில் மாற்றிக் கொண்டு தன் கண்கள் மூலமாக அதற்கு உயிர் கொடுத்து ரசிப்பது அவன் இயல்பு.

அவனுடைய சிறு சேமிப்பில் அவன் அமைத்துக் கொண்டது தான் ஒரு சிறு ஒளிப்பட நிலையம். தச்சு வேலைச் செய்யும் தன் தந்தையிடமோ அதன் மூலம் வரும் வருவாயில் குடும்பத்தை நகற்றும் தாயிடமோ அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

அன்று அவன் கண்கள் வாடிக்கையாளரை எதிர்நோக்கிய வண்ணமே இருந்தது.

மழைக்கு ‘ஈ’ கூட அவன் கடைக்குள் ஒதுங்கிய பாடில்லை .

மனிதன் கைபேசி பிரியனாகிவிட்டான், கூப்பிடும் தூரத்தைக் கூட இந்தக் கைபேசி நிரப்பிக் கொள்கிறது. தன்னிடம் இருக்கும் ஒளி வித்தைகளைப் பட்டுவாடா செய்து மனிதனிடம் ஒரு அங்கமாக நிலைத்துக் கொண்டது.

கைபேசியை விரும்பும் குழந்தைகளே இப்போதெல்லாம் ஜனிக்கிறார்கள். ஜனித்தவர்கள் கைபேசியில் மரணிக்கிறார்கள். ஊருக்கு இரண்டு புகைப்படக்காரன் இருந்தான், இப்போது ஊரே புகைப்படக்காரர்களாக மாறிவிட்டார்கள். இருந்தும் புகைப்படக் கருவியில், புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஒரு சிலரால் தான் அகிலனைப் புரிந்துகொள்ள முடியும்.

வலது கையில் கருவியை, உருவத்திற்கு நேராகப் பிடித்து. இடது கையில் ஒளிக்கு ஏற்ப வில்லை அளவுகளை மாற்றி ,வலது கட்டை விரலால் பொத்தானை அழுத்தும் போது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒளிக் குடை வெளிச்சத்தை விரித்துக்கொண்டு, நிற்கும் உருவத்தை அழகாக்கிப் போவது புகைப்படக் கலைஞனின் தனித்துவ வெற்றி.

புகைப்படம் எடுக்க யாரும் வந்தபாடில்லை.

பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது, கல்லாவைப் போல வயிறும் காலி .

எச்சிலை விழுங்கியவாறு வேட்கை தொடர்ந்தது.

நேரம் போய்க்கொண்டே இருந்தது, நம்பிக்கை தளர்ந்த சமயத்தில் ஒரு குரல் ஓங்கியது,

“சார் ...... குழந்தைக்கு ஒரு போட்டோ எடுக்கணும் ...…..” போன உயிரை மீட்டு எழுந்த வேகத்தில்.

“எடுத்துக்கலாம் சார் ......…”

குழந்தைக்கு வயது இரண்டை எட்டி இருந்தது.

தகப்பனிடம் குழந்தையைக் கொடுத்து, குழந்தையை உட்கார்ந்த வண்ணம் பிடித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அகிலன் தன் புகைப்பட அஸ்திரத்தை எடுத்தான். ஒளிக் குடையை சரிசெய்து விட்டு. ஒளிப்பாய்ச்சத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்...

வீல்... ல்ல்ல்ல்ல்........லென்று அழுக ஆரம்பித்தது குழந்தை.

‘அழக்கூடாது’ என்று கூறிய அகிலனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாததால்,

“இங்க பாரு ...” என்று கூறிய வண்ணம் தன் கருவியுடன் தயாரானான் …..

குழந்தை திரும்பவும் அலறியது...

புகைப்படக் கருவியை கீழே வைத்துவிட்டு, தன் கைகளால் சமிக்கைகள் செய்தான். நீண்ட நேர முயற்சிக்குப் பின், குழந்தைப் பற்கள் முழுவதும் தெரிந்தவாறு சிரிக்கத் துவங்கியது.

அப்படியே பின்னோக்கி நகர்ந்து தன் புகைப்படக் கருவியை கையில் எடுத்து வில்லைகளை உருட்டிக் கொண்டிருந்தான்.

திரும்பவும் குழந்தை சிணுக்கத் துவங்கியது,

குழந்தையின் தந்தையும் போராடித் தோற்றுக் கொண்டிருந்தார்.

இந்த முறை அகிலன் குழந்தையை தன் கையில் வாங்கிக் கொண்டான்.

அதற்கு வெளியில் மழையைக் காட்டினான், பாட்டுப்பாடினான், ஒரு கதைச் சொல்லினான்... கோமாளி சேட்டை செய்தான்…

பசி ஒருபுறம் காதை அடைக்க, சோர்வு ஒருபுறம் வேகத்தை குறைக்க,

ஒருவழியாய் குழந்தை அவனை ஏற்றுக் கொண்டது, இப்போது தந்தை இடம் போக மறுத்தது.

“இதோ அப்பா கிட்ட கொஞ்ச நேரம் உட்காரு... மாமா உனக்கொன்னுத் தரேன் ....” என்று கூறியவாறே. குழந்தையின் கவனத்தைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்டு குழந்தையைப் பார்த்த வண்ணமே புகைப்படக் கருவியை கையில் எடுத்தான்.

பேசிக்கொண்டே தன் புகைப்பட கருவியில் செயல்பட்டுக் கொண்டிருந்தான் .

குழந்தையும், அவனிடம் உதிரும் வார்த்தைகளில் அமைதியாய் போனது.

ஒளி வில்லைகளை சரி செய்தவன்… பொத்தானை அழுத்த கட்டைவிரலை கொண்டுபோனான்...

மின்சாரம் தடைப்பட்டது ...…

மழைக்குள் ஒதுங்கியிருந்த மின்னல் தரையிறங்கி ஒரு புகைப்படம் எடுத்துப் போனது.

- கார்த்திக் குமார்

Pin It