அமுதாவிற்கு அன்று முழுவதும் ஒரே பதட்டமாக இருந்தது, ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவேயில்லை. வாசலைப் பெருக்கி சுத்தம் செய்தவள், அவசரமாகக் குளித்து முடித்தாள். குளித்துவிட்டு தன் முகம் முழுவதும் அவளுக்குப் பிடித்த பிரத்தயேகமான முகக் கிரீமைப் பூசினாள். அந்தக் கிரீம் வாசனையாக இருந்ததே தவிர அவள் எதிர்பார்த்த மாதிரி அவள் முகத்தின் நிறத்தை மாற்றவில்லையே என கண்ணாடியிடம் பேசியவாறே அந்தக் கிரீமை நன்றாக அழுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்தாள். அதிலிருந்து ஏற்கனவே வெளியே எடுத்து எடுத்து அடியில் ஏதுவும் இல்லாமல் கொஞ்சமாக வந்தது. உடனே அழுத்தி அழுத்தி அடியிலிருந்து வெளியே தள்ளினாள். எவ்வளவுதான் வெளிவரும் ஒரு சமயத்தில் காலியான பிறகு காற்றுதான் வெளிவந்தது. உடனே கத்தினாள்…

"உன்னால இன்னைக்கு கூட ஒரு கிரீம் வாங்கித் தர முடியவில்லை … நேற்றே உன்னிடம் சொன்னேன்ல்லமா..." என்று முறைத்தாள்.

"இல்லடி அமுதா... நான் கடைப்பக்கம் போகல அதான்" என்று சொல்லிக் கொண்டே "இட்லி வெந்துவிட்டாதா?" என்று கொஞ்சம் அழுத்திப் பார்த்து தண்ணீரைத் தெளித்து இட்லித் தட்டை கவிழ்த்து துணியை இழுத்தாள். ஆவி பறந்தது. அழகாக இருந்தது இட்லி. கொஞ்சம் சூடாக இருந்ததால் தண்ணீரைத் தொட்டு எடுத்து வைத்துக் கொண்டே, "இன்னைக்கு இருக்கிறத வச்சி பூசிக்கோ. நேரம் ஆகிட்டே போகுது... மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க அமுதா" என்றாள் அம்மா.

முணுமுணுத்துக் கொண்டே பவுடரை எடுத்துப் பூசினாள்.

"அம்மா... இங்க வந்து கொஞ்சம் தலையைச் சீவி விடேன்" என்றாள் அமுதா…

"இருடி சாப்பாட்டு வேலை கொஞ்சம் முடிஞ்சுது. காப்பிக்கு பாலை கொஞ்சம் காய வைத்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று பாலை வடிகட்டினாள். அதிலும் சில தூசுகள் வடிகட்டியில் மிதந்திருந்தது. டக் என்று அதைக் கவிழ்த்து தட்டிக்கொண்டே "இதோ வரேன்டி" என்றாள் அமுதாவின் அம்மா ராணி.

"ம்... ம்... சீக்கிரம் வா" என்று சிலாகித்தாள் அமுதா.

வெளியில் கட்டியிருந்த மாடுகள் இரண்டையும் பக்கத்து வீட்டருகே மரத்தடியில் கட்டிவிட்டு வந்து விட்டார் அமுதாவின் அப்பா சுந்தரம்.

வீடு முழுவதும் பெருக்கி சுத்தம் செய்து அமைதியாக இருந்தது. எப்பொழுதும் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அன்று மாப்பிள்ளை வீட்டார் வந்துபோகும் வரை பாடவேயில்லை. அவர்கள் வீட்டு முகப்பில் கிடக்கும் செருப்புகள் அனைத்தும் வரிசையில் நின்றன. வரிசையாக நிற்பது செருப்புகளுக்கே ஆச்சரியம் தந்தது. வீட்டுத் தோட்டத்தில் கொடிக்கயிறில் தொங்கியிருந்த துணிகள் ஏதுவும் காணவில்லை. காலியாகக் கொடிக்கயிறு இருப்பது ஏதோ ஒரு மாதிரியாகத்தான் தெரிந்தது. அதில் துணிகள் காயும்போது மனிதர்களின் அளவிட முடியாத அன்பை சுமப்பதாகவே இருக்கும்.

செய்தித்தாள்கள் அயன் செய்தது போல் தன்னை மடித்து வைத்துக் கொண்டது.

வெளியில் சாப்பிட்டு கை கழுவ ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், ஒரு கை அலம்பும் ஜக்கையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார் சுந்தரம்.

"ஏங்க... போய் வாழை இலை கொஞ்சம் அறுத்து வாங்க..." என்று சொன்னாள் ராணி.

கத்தியை எடுத்துக் கொண்டு தோளில் துண்டோடு தோட்டத்திலிருந்த மரத்தில் நீண்ட முற்றிய இலைகளையும் கொஞ்சம் இளசான நுனியிலைகளையும் அறுத்து வந்த சுந்தரம் அப்படியே வீட்டு முற்றத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். "இன்னும் அரை மணிநேரத்தில் மாப்பிளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்து விடுவார்கள் சீக்கிரம்" என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டு வாசலின் உட்புறத்தில் உள்ள திண்ணையில் இலைகளைச் சிறிய அளவில் நறுக்கி வைத்தார்.

முற்றிய இலைகளின் பின்புறத்தில் உள்ள அடி மட்டையைக் கிழித்தெறிந்து அளவாக நறுக்கி அடுக்கி வைத்தார். என்றும் இல்லாத அளவிற்கு சுத்தமாக இருந்தது ஹால் முழுவதும். மனிதர்கள் சந்திக்கும்பொழுது இயல்பான தன்மையிலிருந்து சற்று நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதும் இயல்பிலிருந்து மாறி விடுவதும் தான் மனிதர்களிடம் நீண்ட நாட்களாக நடந்து கொண்டேயிருக்கிறது. அப்படி எல்லாம் எந்தவித நெருடலும் இல்லாமல் இயல்பாகத் தன்னுடைய துண்டைத் தன் மேல் போட்டுக் கொண்டே இரண்டு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டார். அதில் அமர்ந்து பார்த்தார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேல் விளக்கருகே ஒட்டடை சுருளாகத் தொங்கியது. அதை அப்படியே தன் கைகளால் பிடித்து இழுத்தவாறே அமுதா "ரெடி ஆயிட்டயம்மா?" என்றார்.

"இல்லை…ப்பா... இதோ கொஞ்ச நேரத்தில ரெடியாயிட்றேன்பா" என்றாள். தன் கண்ணிற்கு காஜல் இட்டுக் கொண்டு தன்னுடைய உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு உதட்டை ஈரப்படுத்தினாள். "அம்மா இங்க வாமா… தலையைச் சீவி விடு" என்று கத்தினாள்.

வெளியில் இரண்டு கார்கள் நிற்கும் சப்தம் கேட்டது. சுந்தரமும் அவர்களுடைய உறவினர் சிலரும் மாப்பிளை வீட்டாரை வரவேற்று உபசரித்தனர். மாப்பிளை ராம் சுருட்டை முடி, மாநிறம் ஐந்தே முக்கால் அடி உயரம், முறுக்கு மீசை அந்த அளவு அடர்த்தி இல்லை, போலீஸ் உத்தியோகம், வந்திறங்கி வீட்டைச் சுற்றிலும் பார்த்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். கருணையற்ற பார்வையாக இருந்தது ராமின் பார்வை. தன்னுடைய முகத்தைக் கைக்குட்டையால் சரி செய்துகொண்டு தலை முடியைக் கோதினார். தன்னுடைய சட்டைக் காலரை சரிசெய்து கொண்டு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி வளைய மறுக்கும் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே இருந்தார்.

பெண்கள் எவ்வளவு நேரம் கொடுத்தாலும் தாமதமாக அலங்கரித்துக் கிளம்புவது ஆச்சரியப்படுவதிற்கு இல்லை, ஒரு வழியாகத் தயார் ஆனாள் அமுதா. மாப்பிளை வீட்டிலிருந்து வந்த பெரியவர் ஒருவர் "பெண்ணை வரச் சொல்லுங்க, நல்ல நேரம் போவதற்குள் பெண்ணைப் பார்த்துவிடலாம்" என்றார். சுந்தரம் அவர் மனைவி ராணியைப் பார்த்து அமுதாவை அழைத்து வரச் சொன்னார்.

அமுதா முதலில் தண்ணீரை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து விட்டு உள்ளே போனாள். அடுத்தது கொஞ்சம் காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

கொடுத்துவிட்டு கதவருகில் நின்றாள். அவளை யாரும் உட்காரச் சொல்லவில்லை என்பது வருத்தமாகவே இருந்தது. சற்று நேரம் நின்றிருக்கச் சொல்லியவர்கள் அப்படியே உட்காரச் சொல்லியிருக்கலாம். உள்ளே செல்லுமாறு உத்திரவு வந்தவுடன் உள்ளே சென்றாள்.

"அப்புறம் எனனங்க மாப்பிளை... பெண்ணைப் பார்த்தாச்சு. வாங்க சாப்பிடலாம்" என்றார் சுந்தரம் தரப்பினர்கள்.

"இல்லை நாங்க முடிவை சொல்லிவிட்டுத்தான் கை நனைப்போம்" என்றனர் மாப்பிள்ளை வீட்டார்.

"என்ன ஏதுவாக இருந்தாலும் ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க. இது எல்லாம் பழைய சம்பிரதாயம்."

மனிதர்களைச் சந்திக்கும் தருணங்கள் அழகானவை. ஆனால் சில நேரங்களில் இப்படி ஆகிவிடுவதும் உண்டு.

"நாங்க வீட்டிற்குப் போய் கலந்து பதில் சொல்கிறோம்" என்று புறப்பட்டனர் மாப்பிள்ளை வீட்டார். அறுத்து வைத்திருந்த இலையின் தண்ணீர் முத்துகள் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்களை வழியனுப்பிவிட்டு, சுந்தரம் மட்டும் தனிமையில் தன்னுடைய தாடியை வருடிக் கொண்டே நாற்காலியில் உட்கார்ந்து தன் துண்டைத் தொடை மேல் வைத்தார். அவரின் உள் மனது அவரை அறியாமல் ஏதோ பேசிக் கொண்டே இருந்தது.

'எத்தனையோ மாப்பிளை பார்த்துவிட்டோம் ஒரு பெண்ணைப் பெத்து விட்டால் எவ்வளவு பாடாக இருக்கிறது. சரி எப்படியும் இந்த வருடத்திற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும்' என்று தன் இஷ்ட தெய்வத்தை வேண்டினார். ஆவணி மாதம் நடக்கிறது, எப்படியும் கார்த்திகை மாதம் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டே நாட்காட்டியைத் திருப்பினார். அந்த நாட்காட்டியின் தாள்கள் எவ்வளவோ புதிர்களைச் சுமந்தவாறே பிரிந்தது.

அமுதா மௌனமாகத் தன் அறையில் தன் அலங்காரங்களைக் களைத்தாள். எவ்வளவோ எதிர்பார்ப்பில் மனம் நொறுங்கி விடுகிறது. தன் இஷ்ட தெய்வத்தை எல்லாம் வேண்டினோமே, ஏன் இப்படி என்று யோசித்தவாறே தன் சங்கிலியைக் கழற்றினாள். அது அப்படியே தன்னுடைய முடியில் மாட்டிக் கொண்டு சிக்கலானது. ஏற்கனவே சிக்கலாக இருக்கும் மனதும் அதோடு சேர்ந்து விடவே, வெறுப்போடு இழுத்தாள். லேசாகத் தலை வலித்தது. சற்று சிரமத்திற்குப் பிறகு முடியிலிருந்து சங்கிலியை எடுத்தாள்.

இயல்பான உடை நைட்டிக்கு மாறினாள். முன்பை விட அழகாக இருந்தாள். தன்னை கண்ணாடியில் மீண்டும் சலிப்பாக ஒரு முறை பார்த்தாள். அலங்காரத் தோற்றத்தில் இருந்ததைவிட நைட்டி நல்ல நம்பிக்கை தருவதாக இருந்தது அவளுக்கு. விளக்கைப் போடாமல் அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

"வாமா… அமுதா கொஞ்சம் சாப்பிடு" என்றார் சுந்தரம்.

"நான் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சாப்பிடுகிறேன்" என்ற குரல் மட்டும் வந்தது.

அங்கிருந்த அனைத்து சாப்பாடுகளையும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு வந்தார் சுந்தரம். வளர்க்கும் நாய் ஒன்று அவர் பின்னால் எல்லோர் வீட்டிற்கும் சென்று வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் மட்டும் வீட்டிற்கு வைத்துக் கொண்டார். பழையபடி வீடு வீடாக இருந்தது. கொஞ்சமாகச் சாப்பாட்டை இலையில் வைத்தாள் ராணி.

"ஏங்க நீங்க சாப்பிடுங்க" என்றாள்.

இலையில் இருந்த நீர்ப் பருக்கைகளை கையால் தள்ளினார்.

மாப்பிளை வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சுந்தரம் எடுத்துப் பேசினார்.

"இல்லை... ஜாதகம் கொஞ்சம் ஒத்து வரவில்லை பிறகு பார்க்கலாம்" என்று கூறினார்கள். சுந்தரத்திற்குப் புரிந்து விட்டது. நிரகாரிக்க எத்தனையோ பதில்களைக் கேட்டவர். குள்ளமாக இருக்கிறாள், கருப்பாக இருக்கிறாள், வேலை செய்யும் பெண் தான் தேவை, படிப்பு சுமாராகத்தான் இருக்கிறது, கொஞ்சம் குண்டாக இருக்கிறாள் எனக் கேட்டு சலித்தவருக்கு இது பெரிய துன்பத்தைத் தந்தது,

"சரிங்க" என்று சொல்லிவிட்டு அப்படியே தொலைபேசியைத் துண்டித்து விட்டார். எப்பொழுதுமே சுந்தரம், மாப்பிளை மற்றும் அமுதா இரண்டு பேர்களின் ஜாதகப் பொருத்தம் பார்த்து விட்டுத்தான் வீட்டிற்கே மாப்பிள்ளை வீட்டாரை அழைப்பார். ஆனால் என்ன காரணம் என்பதை யூகித்துக் கொள்ள முடியாமல் பிறகு கேட்கலாமென யோசித்தவாறே ராணியைப் பார்த்தார்.

அவர்கள் வீட்டு நாய், இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே பார்த்திருந்தது. சாப்பிட கை வைத்த உணவைக் கோபமாக உதறிவிட்டு எழுந்து அவர் வளர்த்த நாய்க்கு அந்தச் சாப்பாடை இலையோடு வைத்தார். அந்த நாய் அந்த உணவைச் சாப்பிடாமல் நுகர்ந்து பார்த்தது. அப்படியே ஓடிச் சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டது. 

- ப.தனஞ்ஜெயன்

Pin It