'அரபு நாடுகளில் வசந்த காற்று வீசும்' என்று வேலைக்கு வந்தவருக்கு வெறும் வெப்பக் காற்று தான் மிஞ்சியது. ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் வேலை. குடும்பத்தைப் பிரிந்து சரியாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இரண்டே மாதங்கள் தான்... ஆனால் இரண்டு ஆண்டுகள் போல் இருந்தது. சிறுவயதிலிருந்தே வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசை சிறு துளியும் இல்லாதவர். ஊரில் தன்னுடைய மாப்பிள்ளை பவுன்ராஜின் உதவியுடன் ஏஜன்சி மூலமாகத் தான் விசாவும் வாங்கினார்.

"மச்சான், துபாய் போவதுக்கு ஒரு ஆள் விசா தாரேன்ன்னு சொல்லுதான், உங்களுக்கு முயற்சி பன்னுவோமா" என்றார் நாகதேவனின் நிலைமையை அறிந்த பவுன்.

"மாப்பிள்ளை, எனக்கு நம்ம ஊர விட்டு வெளிநாட்டு போவனும்னு ஆசை கிடையாது. என் காலமெல்லாம் நம்ம ஊருலயே போவட்டும்."

"மச்சான், அப்படி சொல்லாதீங்க... வெளிநாட்டுக்குப் போரும், கையில நாலு பைசா சம்பாரிச்சிட்டு ஊருக்கு வாரும். அதுக்கப்புறம் ஊருலயே இரும்."

சிறிது நிமிடம் அமைதியாக இருந்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

"மச்சான், நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க... நாங்க உங்க கூட இருக்கோம்" என்று ஆறுதலாகக் கூறினார் பவுன்.

"ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை, என் கூட இருந்தவன் எல்லாம் எனக்கு கஷ்டம்ன்னு வரும்போது ஓடிப் போயிட்டானுவ. நீங்க மட்டும் எனக்கு ஆதரவா இருக்கது எனக்கு சந்தோஷம் மாப்பிள்ளை" என்றார் பதிலுக்கு.

வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தாலும், தான் எவ்வாறு இங்கே வந்தேன்? ஏன் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து வந்தேன்? என்ற கேள்விகள் தினம்தோறும் அவரை துரத்திக் கொண்டே இருந்தன.

புதிதாக வந்திறங்கிய நாட்டில் எல்லாமே புதிதாக இருந்தது. அவர் வேலை செய்யும் நிறுவனம் வழங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார். வேலை நேரம் போக, ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவது, பாடல்கள் பாடுவது, கவிதை எழுதுவது இவைகள் எல்லாம் அவருக்குப் பொழுதுபோக்கு. ஆம்; அவர் ஓர் இலக்கிய மாணவர் கூட. பேசுவதைக் கூட கவிதையாய் எடுத்துரைப்பார். எழுதிய கவிதைகளை பாடலாய் பழைய மெட்டுக்களுடன் பாடுவார்.

துபாயில் வந்திறங்கிய சில நாட்களிலேயே 'புர்ஜ் கலீஃபா' கட்டிடத்தை தனது நோட்டுப் புத்தகத்தில் வரைந்து மக்களுக்கு அனுப்பி இருந்தார்.

"எப்போ அந்த பில்டிங்க நீங்க பாத்தீங்களா?" என்ற மகளின் கேள்விக்கு, "இல்லை, நான் தூரத்தில் இருந்து தான் பாத்தேன்!" என்று கூறினார்.

ஊரிலிருந்து குடும்பத்துடன் உரையாடும்போது மட்டுமே அவருக்கு மனதிலுள்ள கவலைகள் நீங்கி இருக்கும்.

இப்படியே சில நாட்கள் சென்று கொண்டிருக்க, ஒரு வார இறுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் நண்பருடன் வணிக வளாகத்துக்குச் சென்றிருந்தார். சமைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர் கூடவே இறைச்சியையும் வாங்கினார். வணிக வளாகத்தில் உள்ளே புதிதாக ஒன்றையும் கவனித்தார். அங்கு பன்றிக் கறிகளும் தனியாக ஓரிடத்தில் விற்பனை செய்யப்பட்டது. வளைகுடா நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் பன்றிக் கறியை உண்பதில்லை. ஆனால், பன்றிக் கறி உண்ணும் மக்களுக்கென தனியாக கடைகள் இருந்தது. இந்த நாடுகளில் இருக்கும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு பன்றி வளர்ப்பு என்பது சிரமமான காரியமாகும். அப்படியென்றால் இந்த பன்றி இறைச்சிகள் எல்லாம் வேறு எங்கோ ஒரு நாட்டில் வளர்க்கப்பட்ட பன்றிகளின் கறிகள்.

'சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் மக்களின் விருப்ப உணவு பன்றிக்கறி. அங்கு வளர்க்கப்படும் பன்றிகள் அவர்களுக்கே போதுமானதாக இல்லை. எனினும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது' என்பதை தனது இளமைக் காலங்களில் படித்திருக்கிறார்.

எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவருக்கு நினைவு ஏனோ ஊரிலேயே இருந்தது.

***

எழில் கொஞ்சும் தென் பொதிகை மலைத் தொடரில் கொறுவா மலையின் தென்புறம் குத்தபாஞ்சானும், வடபுறம் கொடுமுடி ஆறு ஓடிக் கொண்டிருக்கும். இயற்கை அழகோடு படர்ந்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம். சற்றே தெற்கு நோக்கி பார்த்தால் ஐநிலங்களில் ஒன்றான பாலை நிலப் பகுதியிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த கிராமம். கிராமத்து நாயகன் நாகதேவன் முதல் தலைமுறைப் பட்டதாரியாக படித்து வந்திருக்க வேண்டியவர். ஏனோ, சூழல் அவரை மேல்நிலைப் பள்ளி கல்வியோடு நிறுத்தி விட்டது.

அவர் கையால் வரைந்த இளையராஜாவின் ஓவியத்தை அப்பா போட்டோவுக்கு அருகில் வைத்திருந்தார். அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே இளையராஜாவும் இருந்தார். அவர் 1970 -களின் இளையராஜா ரசிகர். பலூன் பேகி பேண்ட், அதனுள் சட்டையை டக்இன் செய்து கொண்டு தான் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அப்படியே 'காதலன் பிரபுதேவா' போல் காட்சியளிப்பார். உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை அத்தனையும் அவர் கைக்குள் அடங்கும். இலக்கியத்தில் தனக்குள் ஏற்படும் கருத்துக்களை அவ்வப்போது காதல் துணைவியார் நாயகியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். விவாதமும் செய்வார்.

இலக்கியம், வரலாறு, தத்துவம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி படித்துக் கொண்டிருந்தார். DYFI இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சமூக சேவைகள், சமூகநீதியைக் காக்கும் போராட்டங்கள், எளிய மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் செய்து கொண்டிருந்தார். ஒரு முறை டெங்கு காய்சல் அதிகமாகிய சமயம், இரத்த தானம் முகாம் ஒன்றை ஏற்படுத்தி தன்னுடன் பயணித்த தோழர்கள் மூலம் 185 யூனிட் இரத்தம் வழங்கினார். அதற்கான சான்றிதழையும் வீட்டில் வைத்திருந்தார். தான் படித்ததை சக ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ள இளைய தலைமுறைக்கும் விரிவாக எடுத்துச் சொல்லுவார்.

காதல் துணைவியார் நாயகியும் இலக்கிய மாணவி தான். அவர் துப்பறியும் கதைகள், இரும்புக் கை மனிதர் மாயாவி மற்றும் வார இதழ்களின் இலக்கிய மாணவி. உள்ளூர் இலக்கியங்களைக் கற்றறிந்த நாயகிக்கு, உலக இலக்கியங்கள் ஏனோ ஒவ்வாமையைக் கொடுத்தது.

"ரஷ்ய இலக்கியத்தை தெரிஞ்சுக்கிட்டு நம்ம ஊர்ல நாம என்னத்தச் செய்ய?" இவ்வாறு தனக்குள் எழும் கேள்விகளை நாகதேவனிடம் கூறி விடுவார்.

"நீ சொல்வது சரிதான் நாயகி..." என்று தன்னால் முயன்ற அளவுக்கு விளக்கமளிக்க முயற்சிப்பார்.

நாயகி அதை ஏற்றுக் கொள்வதில்லை.

***

இளைஞனாக இருந்த பருவத்தில் இருந்தே நாகதேவனுக்கு ஒரு நல்ல உத்தியோகத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் தோன்றி இருக்கிறது. அவர்கள் பகுதியில் அப்போது பி.எஸ்.என்.எல் ஆரம்பித்த சமயம். சில ஊர்களுக்கு தொலைபேசிக்கான கேபிள் பதிக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. அதில் ஓர் ஒப்பந்த பணிக்காக தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார் நாகதேவன்.

இளைமைக் காலத்தில் கால்நடையாகப் பள்ளிக்கு சென்று வந்திருந்தாலும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் கேபிள் பதிக்கும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கினார். தொலைபேசி கேபிள்களுக்கு ஜாயின்ட் அடிப்பதற்குத் தேவையான சாதனங்களை தன்னுடைய சைக்கிளின் பின் கேரியரில் வைத்திருப்பார். பி.எஸ்.என்.எல் -ல் வேலை பார்த்ததால் என்னவோ அவ்வூர் மக்கள் அவரை 'அரசாங்க ஊழியராகத் தான் இருக்கிறான்' என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். 'தற்காலிக வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடைபெறுவது வழக்கம். பலமுறை இப்போராட்டங்களை பார்த்துக் கொண்டிருந்த நாகதேவனுக்கும் 'அதிகாரத்தைக் கேள்வி கேட்க வேண்டும்' என்ற சிந்தனையும் வந்திருக்கிறது.

தொலைபேசி இணைப்புக்கான கேபிள் பதிப்பு வேலை என்பது தற்காலிகமானது தான் என்றாலும், தோட்டங்களில் பருவ காலப் பயிர்களுக்கு ஏற்ப வேலைகளும் செய்வார். வாழை இழை வெட்டுவது, வாழைத் தார் வெட்டுவது, வாழைக் கன்று நடுவது, நெற் பயிரின் ஆரம்பப் பருவம் தொட்டு அறுவடை வரை வெவ்வேறு பணிகளை செய்து கொண்டு வந்திருந்தார். இந்த வேலைகளைச் செய்வது ஒன்றும் அவருக்கு கடினமாகத் தெரியவில்லை. இதில் போதிய வருமானமும் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும். எப்படியும் 'ஒரு சுய தொழிலை ஆரம்பிக்க வேண்டும்' என்ற சிந்தனை மனதுக்குள் அதிகம் ஓடிக் கொண்டிருந்தது.

அண்ணன் இம்மானுவேல் அவர்களின் மூலமாக கால்நடை வளர்ப்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்ட சமயம், திருநெல்வேலியில் கால்நடை முகாம்களில் கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த கால்நடை வளர்ப்புப் பயிற்சியின் கீழ் இரண்டு மாத காலப் பயிற்சி பெற்றார்.

முதலில் 'ஆடு வளர்க்கலாம்' என்றுதான் திட்டமிட்டிருந்தார். பயிற்சிகளும் முடிந்தது, அதற்கான சான்றிதழையும் வாங்கிக் கொண்டார். சுயதொழில் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு, தொடர்ந்து தான் செய்து வந்த தொலைபேசி கேபிள் பதிக்கும் ஒப்பந்தப் பணியில் வேலை செய்து கொண்டு வந்தார். இலக்கியம், பி.எஸ்.என்.எல் ஒப்பந்த வேலை, அரசியல், வயக்காடுகளில் வேலை, விளையாட்டு இவ்வாறே நாட்களும் கடந்து கொண்டிருந்தது.

சில மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு நாகதேவனைத் தேடி போஸ்ட்மேன் வந்திருந்தார். "நாகதேவன், உங்களுக்கு ஒரு பதிவுத் தபால் வந்தருக்கு, இதுல ஒரு கையெழுத்து போடுங்க" என்றார் மொகமது பாய். ஊரில் எல்லோரையும் அவருக்குத் தெரியும். அவரையும் எல்லோருக்கும் தெரியும்.

"அண்ணேன் வந்தா நல்ல செய்தியாத்தான் இருக்கும்" என்று தபாலை வாங்கிக் கொண்டு, "அண்ணேன் வாங்க நம்ம பெட்டிக்கடையில ஒரு கலர் குடிச்சிட்டுப் போகலாம்" என்றார் நாகதேவன்.

"இல்லப்பா நான் பக்கத்து ஊருக்கும் போகனும், கிளம்புதேன்" என்று கிளம்பிவிட்டார்.

"நாயகி... இங்க வா திருநெல்வேலியில இருந்து லெட்டர் வந்துருக்கு... இதப் பாரு" நாயகியிடம் லெட்டரைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.

'மதிப்பிற்குரிய நாகதேவன் அவர்களுக்கு, தங்களின் கால்நடை வளர்ப்பு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அபிசேகம்பட்டி கால்நடை முகாமில் ஓர் ஆலோசனைக் கூட்டம் வருகிற பத்தாம் தேதியில் இருக்கிறது. எங்களிடம் உள்ள கால்நடை வளர்ப்புக்கான கால்நடைகளை வாங்கிக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். விரைவில் வங்கியிலிருந்து தங்களுக்கான கடனைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று எழுதி இருந்தார்கள்.

அந்த மடலை பார்த்ததிலிருந்து நாகதேவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மறுநாள் பணிக்குச் செல்லாமல் தன்னுடன் வேலை செய்யும் நண்பருக்குத் தகவல் தெரிவித்து விட்டு நேராக திருநெல்வேலிக்குச் செல்ல திட்டமிட்டார். கால்நடை அலுவலகம் தெரிவித்திருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தவருக்கு, தனக்கு ஆலோசனைகள் வழங்கும் அருள் வாத்தியாரை சந்தித்து விட்டுச் செல்லலாம் என வாத்தியாரின் வீட்டுக்குக் கிளம்பினார்.

அவ்வப்போது தனக்கு நிதியுதவி தேவைப்படும் சமயங்களில் அருள் வாத்தியார் தான் அதிகம் உதவி செய்திருக்கிறார். அருள் வாத்தியார் எம்.எஸ்.சி (வேதியியல்) எம்.எட் கல்வியியல் படிப்பு முடித்துவிட்டு, அரசாங்க வேலைக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தார். ஏனோ அவரின் பணி நியமனம் மட்டும் தாமதமாகிக் கொண்டிருந்தது. அதுவரையில் வள்ளியூரில் சொந்தமாக டியூஷன் மற்றும் டுட்டோரியல் சென்டர் நடத்திக் கொண்டிருந்தார்.

வாத்தியாரைப் பார்த்ததும் "சார் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.. நல்ல வேலை நீங்க வீட்ல இருக்கிய" என்றார்.

"என்ன நாகதேவன்... ஏதாவது விசேஷமா? இன்னைக்கு நீ வேலைக்குப் போகலையா?" என்று அக்கறையுடன் கேட்டார் அருள் வாத்தியார்.

"சார் நான் சொன்னம்லா கால்நடை வளர்ப்பு பத்தி, அதான் அங்க இருந்து வீட்டுக்கு லெட்டர் அனுப்பி இருக்கானுவ, உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு உங்களைப் பார்க்க வந்தேன்" என்றார்.

"சரிடே, அப்புறம் நடக்க வேண்டிய வேலையைப் பாரு. முதல்ல திருநெல்வேலிக்குப் போய்ட்டு வா, மீதி எல்லாத்தையும் பேசுவோம், நான் இப்போம் டுட்டோரியலுக்குப் போறேன். சாயங்காலம் பார்க்கலாம்" என்றவர், நாகதேவனின் நிலைமையை அறிந்து,

"நாக தேவன் இந்தா இந்த நூறு ரூவாய கையில வச்சிக்க... உனக்கு ஏதாவது தேவைப்படும்." என்று நாகதேவனுக்கு கையில் பணத்தைக் கொடுத்தார்.

"வேண்டாம் சார்," என்று கூறியவர் "சரி தாங்க வச்சிக்கிடுதேன்" என்று பணத்தை வாங்கிக் கொண்டார்.

இருவரும் சைக்கிளில் வேகமாக பஸ் ஸ்டாண்டுக்குக் கிளம்பினார்கள். பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலேயே வாத்தியாரின் டுடோரியல் இருந்ததால் நாக தேவனுக்கும் மிகவும் வசதியாகப் போய் விட்டது.

சுயதொழில் ஆரம்பிப்பதற்காக பல திட்டங்கள் இருந்தாலும் அதனை வழிநடத்திச் செல்ல தனக்கு ஓர் ஆள் இல்லாதது அவருக்கு எப்போதுமே வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் வாத்தியார் அருள்செல்வம் மற்றும் அண்ணன் இம்மானுவேல் இவர்கள் பல அறிவுரைகளைக் கூறுவார்கள். அவர்கள் கூறுவது எப்போதுமே நாகதேவனுக்கு மேலும் ஆர்வத்தை கூட்டுவதாகவே இருந்திருக்கிறது. அவர்களுக்கிடையே வாதம் விவாதங்களுக்கு மட்டும் என்றுமே பஞ்சம் இருக்காது.

திருநெல்வேலி கால்நடை அலுவலகத்துக்கு வந்ததும் அதிகாரிகளுடன் சிறிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

"நாகதேவன் நம்ம கிட்ட இருந்த ஆட்டுக்குட்டி எல்லாம் உங்களுக்கு முன்னால் பதிவு செய்திருந்த நிறைய பேரு வாங்கிட்டுப் போயிட்டாங்க. இப்போ இதே திட்டத்துல வெள்ளைப் பன்னி நம்ம கிட்ட இருக்கு. 'லேண்ட்ரோஸ், டியூராக்' ன்னு ரெண்டு வகையில அது கிடைக்கும். பத்து, பதினோரு மாசத்துல அதெல்லாம் வளந்துடும். இந்த திட்டதுல நீங்க பன்னி வாங்கிட்டு போறீங்களா?" என்றார் கால்நடை அலுவலர் கடற்கறையாண்டி.

"இல்ல சார், நான் ஆடு வாங்கலாம் தான் வந்தேன்..! பன்னி வளக்கனும்னா அதுக்கு நிறைய செலவு பிடிக்கும் சார்" என்றார்.

"இல்ல, நீங்க வந்து பாருங்க... நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆள் கிட்ட ஒரு பன்னிப் பண்ணை இருக்குது. பாருங்க அது உங்களுக்குப் பிடிச்சிருந்தா வாங்குங்க, இல்லன்னா கொஞ்ச நாள் காத்து இருங்க. இதுலயும் நல்ல வருமானம் இருக்குது நாகதேவன். நாங்க குடுக்கிற வெண்பன்றியை நீங்க நல்ல வளத்துட்டீங்கனா அதை வாங்குவதுக்கு வியாபாரிகளை நாங்களே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம். எடைக்கு எடை போட்டு அங்கேயே பணத்தை தந்துருவாங்க" என்றார் கடற்கறையாண்டி.

"சரி" என்று கால்நடை வளர்ப்பு அலுவலர்களுடன் பன்றிப் பண்ணை இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள். வெள்ளைப் பன்றிகள் ஒவ்வொன்றும் இருநூறு கிலோ எடையில் வசீகரமாகவும், தடிமனாகவும் காட்சியளித்தது‌. நாகதேவன் மற்றும் அவரின் ஊர் நண்பர்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த நம்பிகோயிலுக்குச் சென்றபோது அங்கு ஒரு முறை காட்டுப் பன்றிகளை பார்த்திருக்கிறார். அந்தக் காட்டுப் பன்றிகளை போலிருந்தது அவர் பார்த்த வெள்ளைப் பன்றிகள். கால்நடை அலுவலர்கள் எடுத்துக் கூறிய விதமும் நாகதேவனுடைய மனதை எப்படியோ மாற்றி விட்டது.

"சார் இதை வளக்கதுக்கு தனி இடம் வேணும்மா? என்கிட்ட அவ்வளவு இடமும் இல்லை... பணமும் இல்லை சார்!" என்றார்.

"பேங்க்ல இருந்து உங்களுக்கு லோன் கிடைச்சுடும் நாகதேவன். நீங்க வேலையை ஆரம்பிச்சிடுங்க" என்று பன்றிகளைக் கொடுக்கும் முயற்சியில் லாவகமாக பதில் அளித்தார் கடற்கறையாண்டி.

'அலுவலர்கள் தன்னை மூளைச் சலவை செய்து விட்டார்களோ' என்ற எண்ணம் ஒரு புறத்தில் இருந்தாலும். பன்றிப் பண்ணையில் வளர்ந்திருக்கும் பன்றிகளைப் பார்த்தபின், 'பன்றி வளர்க்க வேண்டும்' என்ற முடிவில் தீர்மானமாக இருந்தார் நாகதேவன். ஆடு வாங்கச் சென்றவர் கையோடு பன்றிக் குட்டிகளை ஒரு டெம்போவில் வைத்து ஊருக்குக் கொண்டுவந்து விட்டார்.

பொட்டல் காட்டுப் பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு கால்நடைகள் வைத்திருப்பதில் எந்தவித சிக்கலும் இருந்திருக்கவில்லை. வயக்காடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கூடவே அவர்களது கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் வள்ளியூர் பகுதியில் கூடும் கால்நடைச் சந்தையில் அதனை விற்று, சிறிது வருமானம் பார்த்துக் கொள்ளலாம். 'முழுநேரமும் கால்நடையை வளர்த்தால் என்ன' என்ற சிந்தனை யாருக்கும் தோன்றியதில்லை. நாகதேவனுக்கு அச்சிந்தனை முழுக்க முழுக்க அவரது எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஊரில் யாருமே ஆரம்பித்திருக்காத ஒரு தொழில், உழைக்கும் வர்க்க மக்களே அதிகம் இருந்த ஊரில் சுய தொழில் ஆரம்பிப்பது என்பதே அவர்களுக்குப் புதிதான காரியம் தான்.

மொத்தமாக 12 பன்றிக் குட்டிகளையும் வாங்கி வந்தவர், வீட்டிற்குப் பின்புறம் சிறிய குடிசையை அமைத்து அதற்குள் அக் குட்டிகளை வளர்த்தார். வீட்டை விட்டு வடக்கு நோக்கி அமைந்திருக்கும் முள்ளுக்காட்டு இடம், பெரிய விளங்காட்டுப் பகுதியாக இருந்ததால் யாருக்கும் அவ்வளவு தொந்தரவாக இருந்ததில்லை. சின்னஞ்சிறிய குட்டிகள் பார்ப்பதற்கு பண்டாரகுளத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் காணப்படும் வெள்ளெலிகள் போல காட்சி அளித்தது. குட்டிகள் எல்லாம் பால் குடி மறவாப் பருவமாக இருந்தது.

'பன்றிகள் அமைந்திருக்கும் பண்ணையில் சுற்றிலும் காம்போவன்ட் அமைத்து, அதற்குள்ளே பன்றிகளுக்கு தனித்தனி அறைகள் வைத்து வளர்க்க வேண்டும்' என்பதுதான் கால்நடை அலுவலர்களின் நிபந்தனை. பன்றிகள் வளர்ப்பு என்பது ஆடுகள் வளர்ப்பது போன்று அல்லாமல் அதற்கென அதிகமாக தீவனமும் தனியாக இடமும் தேவைப்பட்டது.

வெண்பன்றி வளர்ப்புக்குத் தனியாக லோன் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து, அதற்கான நிதியை வாங்குவதற்கு வங்கியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்ததார். வங்கியில், வங்கிக்கடனுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கே நான்கு மாதங்கள் ஆகி விட்டது.

"நாகதேவன் உங்க பேங்க் லோன் அப்ளிகேஷன் இன்னும் அப்புரூவல் ஆகல. அடுத்த வாரம் வந்து பாருங்க சரியா" என்று வங்கி அலுவலர்கள் கூறியது அவருக்கு வியப்பளிக்கவில்லை.

எப்படியும் வங்கிக் கடன் கிடைத்து விடும், அதை வைத்து பன்றிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என தனக்குத் தெரிந்த நபர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கி வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

இரண்டு மாதங்கள் கடந்த பின் நாகதேவனுக்கு பன்றிகளைப் பராமரிப்பது என்பது மிகப் பெரிய வேலையாக இருந்தது. மூன்று வேளைகளிலும் அவைகளைக் குளிப்பாட்டி பராமரிக்க வேண்டும். பன்றிகளின் திடக் கழிவுகள் நெல், தென்னை, வாழை போன்ற விவசாயத்திற்கு நல்ல இயற்கை உரம் என கேள்விப்பட்ட உர வியாபாரி நாகதேவனின் மாமா அப்பாதுரை அதை மொத்தமாக வாங்குவதற்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆட்களை கொண்டு வந்து எடுத்துச் சென்றார்.

துணைவியார் நாயகியின் தம்பி இசையராஜா அவனது சைக்கிளில் வள்ளியூரில் இருக்கும் சில உணவகங்களிலிருந்து உணவுக்கு மிஞ்சிய காய்கறிகள், மீதமிருக்கும் உணவுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் சைக்கிள் பின் கேரியரில் வைத்து பன்றிகளுக்கு கொண்டு வருவான்.

"டிரிங்….டிரிங்...டிரங்…" என்று அவனது சைக்கிள் மணி அடித்து பண்ணைக்கு அருகில் வந்த உடனேயே, பன்றிகளுக்கும் தெரிந்துவிடும் 'தனக்கான உணவு வந்துவிட்டது.' என்று. "உர்…கர்...உர்….கர்…." என அங்கும் இங்கும் உணவுக்காக அலைந்து கொண்டிருக்கும்.

"ஏலே…. நம்ம ஊருக்கு சீமைப் பன்னி வந்துருக்கு.. வாங்க பாத்துட்டு வருவோம்" இவ்வாறு கூறிக்கொண்டே அவ்வூர் சிறுவர்கள், ஒரு விலங்கியல் பூங்காவைப் பார்ப்பது போல காலையும், மாலையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஊர் நெடுகிலுமுள்ள விளங்காட்டுப் பகுதிகளில் நாட்டுப் பன்றிகள் கூட்டம் அதிகமாக வலம் வந்து கொண்டிருந்தாலும், நாகதேவன் வளர்த்த வெள்ளைப் பன்றிக்கென ஒரு தனி மவுசு இருந்தது.

வங்கிக் கடன் பெறுவதற்காக வாரம் ஒரு முறை வங்கிக்கு ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். நாட்களும் கடந்தது தெரியவில்லை, பல வாரங்கள் கடந்தது. இப்போது மாதங்களும் கடந்து விட்டது. ஏழு மாத காலமாகியும் தனது லோனுக்காக அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. சொத்துகளே இல்லாத நாகதேவனிடம், சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் சிபாரிசு செய்ய சில நபர்களின் ஒப்புதல் வாக்குமூலம். 'அது தேவை, இது தேவை' என அலைக் கழித்துக் கொண்டிருந்தார்கள் வங்கி அலுவலர்கள். பன்றிகள் ஒருபுறம் வளர்ந்து பெரிதாகி விட்டது. பெண் பன்றிகள் அனைத்தும் கருவுற்ற நிலையில் குட்டி போடும் பருவத்தில் இருந்தது.

தற்செயலாக ஒருநாள் வங்கியிலிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது, 'தங்களுக்கான இரண்டு லட்சம் ரூபாய் கடனுதவி சற்று காலதாமதம் ஆகலாம்' என்று தகவல் தெரிவித்திருந்தார்கள்.

'இது நிச்சயம் தவறான தகவலாகத் தான் இருக்கும்... எப்படியும் தனக்கான வங்கிக் கடன் கிடைத்து விடும்' என்று வங்கிக்குக் கிளம்பினார். அங்கு அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வங்கியின் உள்ளே சென்று தனக்கு வந்திருந்த கடிதத்தை மேலாளருக்கு எடுத்துக் காட்டினார்.

"நாகதேவன், இப்போ இந்தக் கடனை நிறுத்தி வைக்கனும்ன்னு எங்களுக்கு உத்தரவு வந்திருக்கு."

"என்ன சார் சொல்றீங்க…!" என்றார் அதிர்ச்சியுடன். வங்கி மேலாளரின் பதில் இடியாகத் தலையில் விழுந்தது நாகதேவனுக்கு.

கடன் ரத்து என்ற செய்தியைக் கேட்டு படபடத்துப் போயிருந்த நாகதேவன் செய்வதறியாது வெளியே வந்தார். நேராக பஞ்சாயத்து போர்டுக்கு சென்று அடுத்த கட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கிளம்பினார். பஞ்சாயத்து போர்டு வாசலிலேயே அந்த சுற்றறிக்கை நகலையும் ஒட்டியிருந்தார்கள்.

"பண்ணைகளில் பன்றிகள் வளர்க்கத் தடை" என்பது மட்டும் கொட்டை எழுத்தில் இருந்தது. ஏற்கனவே பண்ணைகளில் வளர்ந்திருக்கும் பன்றிகளைக் கொன்று விடுமாறு சுற்றறிக்கையில் கூடுதலாக எழுதி இருந்தார்கள். பேரூராட்சியின் அறிவிப்புப் பலகையின் கீழே கடைசியில் இதை ஒட்டி இருந்தார்கள். என்ன காரணம் என்று விசாரித்தபோது தான் நாகதேவனுக்குத் தெரிய வந்தது, 'நிஃபா வைரஸ்' என்ற தொற்று நோய் வளர்ப்புப் பன்றிகள் மூலமாகப் பரவுகிறது. இதனாலேயே அவைகளைக் கொன்று விடுமாறு அறிக்கை விட்டு வந்தார்கள்.

வள்ளியூரில் இந்த செய்தியைக் கேட்டு நேராக கால்நடை அலுவலகத்துக்குக் கிளம்பினார். அபிசேகப்பட்டி கால்நடை வளர்ப்பு முகாமிலும் இதே அறிவிப்புகளை ஒட்டி இருந்தார்கள். நேராக உள்ளே சென்றவர் தன்னிடம் பன்றிகளைக் கொடுத்த அலுவலரிடம் சென்று விசாரித்தார்.

 "சார்….! என்ன சார் இந்த புது அறிவிப்பு, என் பிள்ளையப் போல பன்னிய வளர்த்து வந்தேன் சார். இப்போம் அதை எல்லாம் கொன்னு புடுங்கன்னு சொன்னா என்ன சார் நியாயம்" என்றார்.

"நாகதேவன் நாங்க ஒன்னும் பண்ண முடியாது, அரசாங்கத்திலிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கு, நாங்களும் கேள்விப்பட்டோம், உங்களோடு லோன் கேன்சல் ஆயிட்டேன்னு" அலுவலர்.

"இத நம்பி நான் வட்டிக்கு நிறைய பணம் வாங்கிவிட்டேன் சார்‌. வட்டிக்காரங்களுக்கு தெரிஞ்சிட்டுனா என் வீட்டுக்கு வந்துருவாங்க. நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்? இப்ப எல்லா பன்னியும் நல்ல வளந்துட்டு குட்டிப் போட ரெடியா இருக்குது சார். எல்லாத்தையும் மொத்தமா வித்தாக் கூட கிட்டத்தட்ட ரெண்டு, மூணு இலட்ச ரூபாய்க்கு விலை போகும் சார்" என்று தன்னுடைய நிலைமையை விவரித்தார் நாகதேவன்.

"எனக்குப் புரியுது நாகதேவன், உங்க நேரம் சரியில்லை….!"

"இந்த நேரத்தை நம்புறவன் நான் இல்லை சார்…. நான் என் உழைப்பை நம்புறேன்."

இப்படியே பேசிக் கொண்டிருந்தவர் நாகதேவனை சற்று வெளியில் அழைத்து வந்தார் கடற்கறையாண்டி.

"நான் சொல்லதை யாருகிட்டையும் சொல்லாதீங்க... நம்ம ஊர்லதான் பன்னிக்கு தடை இருக்குது. நீங்க வேணும்னா கேரளாவுக்குப் போய் அதை வித்துடுங்க. நாகர்கோவிலில் நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆள் இருக்காரு அவருடைய விலாசத்தை உங்களுக்கு நான் தாரேன். நீங்க அவரைப் போய் பாருங்க" என்று நாகதேவனுக்கு பன்றிகளை விற்பனை செய்ய ஒரு புதிய வழிமுறையைக் காட்டினார்.

அபிசேகபட்டி ஊரிலிருந்து கிளம்பிய நாகதேவனுக்கு, தான் வளர்த்து வந்த பன்றிகளை எப்படியாவது விற்பனை செய்து விடவும். வட்டிக்காரர்களுக்கு லோன் ரத்தாகிய விஷயம் தெரியாமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஊருக்குள் வந்தார்.

வீட்டில் துணைவியார் நாயகி பன்றிகளை மதியானம் குளிப்பாட்டி விட்டு அவைகளுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த போது நாகதேவனும் உள்ளே வந்தார். நாகதேவனின் முகம் வாடிப் போயிருந்தது.

நாகதேவனைப் பார்த்த நாயகி "என்னங்க என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார்.

"என்னத்த சொல்ல நாயகி பன்னி எல்லாத்தையும் கொல்லப் போறாங்களாம். அரசாங்கத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்திருக்கு. இந்த நேரத்துல லோன் வேற கேன்சல் ஆயிட்டு நாயகி!"

"என்னத்த சொல்லுதீங்க!"

"அதான் எனக்கே ஒன்னும் விளங்க மாட்டுக்கு. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓட மாட்டேங்குது."

"சரி இதை வாங்கதுக்கு ஒரு ஆள் கிடைக்காமலா போயிரும், கவலைப் படாதீங்க"

"ஆமா, அதான் அபிசேகப்பட்டியில அந்த ஆபீஸரும் சொன்னாரு‌, நாரோயில்ல ஒரு வியாபாரி இருக்கானாம். அவன்கிட்ட போய் எல்லாத்தையும் வித்துடலாம்ன்னு சொன்னாரு" என்றார்.

தனக்கான கடனுதவி ரத்து செய்யப்பட்ட தகவல் தனக்கு மட்டுமே தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் தனக்கு வட்டிக்கு கொடுத்த நபர்களுக்கும் இந்தத் தகவல் தெரிந்து விட்டது.

கால்நடை வளர்ப்புக்காக தனக்கு வரவேண்டிய வங்கிக் கடனை நம்பி வெளியில் வட்டிக்கு பணம் வாங்கிய நபர்களுக்கு இத்தனை மாதங்களும் வட்டியை சரியாக கட்டி கொண்டு வந்திருந்தார். மறுநாள் காலையிலேயே வீட்டுக்கு வெளியே வந்து நின்றிருந்தார் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்.

"என்ன நாகதேவன் எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வரவேண்டிய லோன் கேன்சல் ஆயிட்டுன்னு கேள்விப்பட்டேன். பன்னியை எல்லாம் பஞ்சாயத்து போர்டுகாரங்க கொல்லப் போறாங்க‌ போல?" என்றார்.

லோன் கேன்சல் ஆகிய விஷயம் இவருக்கு எவ்வாறு தெரிந்தது என்ற சிந்தனையுடன் வெளியே வந்தார். கடன் ரத்து ஆகியதைக் காட்டிக் கொள்ளாமல், லோன் தள்ளிப் போவதாக வட்டிக்காரர்களிடம் சொல்லலாம் என்று தான் நினைத்தார்.

"அண்ணாச்சி என் லோன் ஒன்னும் கேன்சல் ஆகல. கிடைக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும் அவ்வளவுதான். இன்னா பாருங்க எல்லா பன்னியும் நல்ல வளர்ந்துட்டு. இதை வித்து உங்களுக்குத் தர வேண்டிய பைசாவை நான் எப்படியும் தந்திடுவேன். நீங்க வீட்டுக்கு வர வேண்டிய அவசியமில்லை" என்றார்.

"அப்படியா! எனக்கு அதெல்லாம் தெரியாது, இப்ப என் நிலைமையும் சரி இல்லை. நீ இந்த வார்த்துக்குள்ள எப்படியாவது என் பணத்தைக் கொடுத்துடு" என்று வட்டிக்காரர் கறாராக அவரிடம் கூறி விட்டார்.

இந்த சம்பவங்கள் நடந்தேறி ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. வட்டிக் கடன் கொடுத்தவர்கள் நாகதேவனுக்கு தினம் தினம் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். தன்னிடம் இருக்கும் பன்றிகள், தான் வசித்து வந்த இடம் - இதைத் தவிர நாகதேவனுக்கு வேறொன்றும் கிடையாது. வட்டிக்காரர்கள் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் வீட்டை விற்று விடலாம் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

பேரூராட்சியில் இருந்து வந்த நபர்கள் நாகதேவனிடம் ஒரு நோட்டீஸும் கொடுத்து விட்டுச் சென்றார்கள். 'இன்னும் 10 நாட்களுக்குள் பன்றிகளை அகற்றிவிட வேண்டும். அல்லது நாங்களே உங்க வீட்டுக்கு வந்து அதைக் கொன்று விடுவோம்' என்று கூறி விட்டுச் சென்றார்கள். நிலைமை இன்னும் மோசமாகி கொண்டே இருந்தது. பன்றிகளை விற்பனை செய்ய வேண்டும். கடன்காரனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

பன்றிகளின் கொட்டகை மற்றும் தனது வீட்டோடு சேர்த்து ஐந்து சென்ட் நிலம் இருந்திருக்கும். வீட்டோடு சேர்த்து இந்த நிலத்தையும் விற்றுவிட வேண்டும் என்று உள்ளூரில் தனக்குத் தெரிந்த சொந்தக்காரரிடம் விலை பேச ஆரம்பித்தார். ஒரு வகையில் தனக்கு அவர் தாத்தா முறை.

"தாத்தா என் நிலைமை இப்ப சரி இல்ல. இந்த பன்னி எல்லாத்தையும் வித்தா கிட்டத்தட்ட நாலு அஞ்சு இலட்ச ரூபாய்க்கு வரும். ஆனா, அதை வாங்குவதற்கு ஆள் இல்லாம முழிச்சுட்டு இருக்கேன். கடங்காரன் வேற ஒரு பக்கம் என்ன நச்சரிச்சிட்டு இருக்கான். ஒரு ஒன்றரை லச்ச ரூபாய்க்கு இதை விக்கலாம்னு இருக்கேன். பாத்து சொல்லுங்க தாத்தா" என்றார்.

"இல்ல பேரப்பிள்ளை. இப்போ உங்க வீட்டைப் பாத்தா அறுபது ஆயிரம் ரூபாய்க்கு முடிவு பண்ணுவோம். தந்தா தாங்க, இல்லன்னா நான் போறேன்" என்றார் தாத்தா.

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பேசிய ஒப்பந்தம் கடைசியில் அறுபது ஆயிரம் ரூபாய்க்கு வந்து நின்றது. வீட்டை வாங்குவதற்கு வேறு யாருமே முன்வராத நிலையில் வேறு வழியில்லாமல் சொந்தக்காரத் தாத்தாவிடம் அறுபது ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார்.

வீட்டை விற்ற பணம் இன்னும் கையில் வராத நிலையில் மீண்டும் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வீட்டுக்கு வந்திருந்தார்.

"நாக தேவன் நான் சொன்னது என்னாச்சு? எனக்கு பணத்தைக் கொடுங்க. இல்லன்னா நடக்கதே வேற" என்று தகாத சொற்களை வீசிக் கொண்டிருந்தார்.

"அண்ணாச்சி, என் வீட்டை வித்தாச்சு... பணம் கைக்கு வந்ததும் உங்களுக்குத் தந்துடுவேன்" என்றார்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க என் கூட வாங்க" என்று வட்டிக்காரரின் பைக்கின் பின்னால் நாகதேவனை அமர்த்தி அழைத்து சென்றார்.

நாகதேவனின் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் இதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் முன்னிலையில் இவ்வாறு நடக்கிறதே என்று அவருக்கும் அவமானம் தாங்க முடியாமல் கிளம்பினார்.

வட்டிக்காரர் கொடுத்த நிபந்தனையுடன் வீட்டுக்குத் திரும்பினார் நாகதேவன். மறுநாளே அவரின் தாத்தாவும் வீடு வாங்கிய பணத்தைக் கொடுத்து விட்டார். தாமதமாக வந்த பணத்தினால் எந்த உபயோகமும் இல்லை. கடன்கார்களுக்கு முன்னே அவமானம் தான் மிஞ்சியது நாகதேவனுக்கு.

வீட்டை விற்ற பணத்தை தான் வாங்கிய வட்டிக்கடன்காரனுக்கு கொடுத்துவிட்டார். வீட்டை வாங்கியவரும் ஒரு வார கால அவகாசம் கொடுத்து வீட்டை காலி செய்து விடுமாறு ஏற்கனவே கூறியிருந்தார். "பேரப்பிள்ளை சீக்கிரம் வீட்டை காலி பண்ணுங்க. நானும் குடியிருக்க ஆளைக் கூட்டிட்டு வரணும்."

"தாத்தா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க. இந்த பன்னியை மட்டும் தூக்கிட்டம்னா நான் எங்க மாமியார் வீட்டுக்கு போயிடுவேன்."

"நாகதேவன் வித்த பொருளுக்கு விலை இல்லை, நீங்க இன்னும் சீக்கிரம் போகலைன்னா பன்னிய அடிச்சு நானே வெளியே துரத்தி விட்டுடுவேன்" என்றார் தாத்தா மிகவும் கோபமாக.

ஓராண்டு காலத்திற்கு மேலாக வளர்த்த பன்றிகளை 'அடித்து துரத்தி விடுவேன்' என்று தாத்தாவும் கூறியது நாகதேவனை நிலைகுலையச் செய்தது. பன்றிகளை விற்பனை செய்ய நாகர்கோவிலுக்கு வியாபாரிகளை பார்க்க ஆயத்தமானார். அரசு பேருந்து ஓட்டுனராக இருந்த சூசை அவர்களை அழைத்துக் கொண்டு வியாபாரிகளைக் கண்டுபிடித்தார்கள்.

"தம்பி உங்களுக்கு விஷயம் தெரியும் தான? இப்போ பன்னி எல்லாம் விக்கது கிடையாது. வேணும்னா உங்க வீட்ல இருக்க பன்னி எல்லாம் எடுத்துட்டு என்னோட இடத்துல வச்சுகிடுதேன்." என்றார் இறைச்சி வியாபாரி.

"அண்ணேன் நீங்க பைசா தரலனாலும் பரவாயில்லை. என் பிள்ளைகளை போல வளர்த்த அந்த பன்னியக் கொன்னுபுடுவோம்ன்னு சொல்லது மனசு தாங்க மாட்டுகுது. நீங்க சும்மானாலும் அதை எடுத்துட்டுப் போங்க" என்றார்.

"சரி தம்பி, நாளைக்கு உங்க ஊருக்கு ஏன் டெம்போவ அனுப்புதேன். நீங்க போயிட்டு வாங்க" என்று இறைச்சி வியாபாரி கூறியது மனதுக்கு நிம்மதியாகவும் வருத்தமாகவும் இருந்தது‌.

"ஏன் மாப்பிள்ளை, இந்த பன்னி வளக்கது எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத வேலை. பேசாம பி.எஸ்.என்.எல் வேலை செஞ்சிட்டு இருக்க வேண்டியதுதானே. நமக்கெல்லாம் தொழில் செய்ய சரியா வராது மாப்பிள்ளை. அதுக்கு பணம் வேணும். சொல்லிக் கொடுக்க ஆள் இருக்கணும்" என்றார் சூசை.

"மச்சான் நீங்க சொல்றது சரிதான்... நான் இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். என் நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது. பட்டாதான் தெரியும் சொல்லுவாங்களே, அது நான் தான் மச்சான்" என்றார் நாகதேவன்.

அடுத்த நாள் நாகர்கோவிலில் இருந்து ஒரு டெம்போவை எடுத்துக் கொண்டு வந்திருந்தார் இறைச்சி வியாபாரி. நாகதேவன் வீட்டிலுள்ள அனைத்து பன்றிகளையும் மிகுந்த வேதனையுடன் ஏற்றி வைத்தார்கள். டெம்போ கிளம்பும்போது இறைச்சி வியாபாரி நாகதேவனிடம் "தம்பி உங்க பொருளை சும்மா எடுத்துட்டுப் போக எனக்கு மனசு வரல. இந்தாங்க இதுல ஒரு ஆறாயிரம் ரூவா இருக்குது இதை வச்சுக்கங்க" என்று பணத்தைக் கொடுத்தார், கூடவே பன்றிகளை தூக்கிவிட்ட நபர்களுக்கு ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

'கால்நடை வளர்ப்பு' என்ற சுயதொழில் ஆரம்பித்த நாகதேவனுக்கு கடைசியில் தான் வசித்த இருப்பிடத்தையும் காலி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. எதில் பிழை நேர்ந்தது என்று கடைசிவரை அவருக்கு விளங்கவில்லை. தன்னுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கால்நடையாய் மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு நடந்தார். அன்றைய நாளின் இரவும் அவருக்கு மிக நீண்டதாக அமைந்தது.

மறுநாள் காலையில் வாடை காற்று வீசிக் கொண்டிருந்தது, வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வாத்தியாரும், இம்மானுவேல் அண்ணனும் நாகதேவனைக் காண வந்திருந்தார்கள்.

***

துபாயில் செய்து வந்த வேலை அவருக்குப் பிடித்திருந்தது. குடும்பத்தையும், உறவுகளையும், நண்பர்களையும் பிரிந்திருப்பது மட்டுமே வேதனையாக இருந்தது. அன்றைய இரவில் துணைவியார் நாயகிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

"நாயகி... எப்படி இருக்க? பிள்ளைங்க எப்படி இருக்கு?" என்று கேட்டவர், "நீங்க எப்படி இருக்கீங்க, சாப்பாடீங்களா?" என்று கண்ணீரோடு கேட்டார் நாயகி. காதல் துணைவியார், உற்ற தோழியாய் உடனிருந்து பயணித்தவர். நாகதேவனின் மீதிருந்த அன்பு மட்டும் குறையவேயில்லை.

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை, புத்திசாலியில்லை" பாடல் தொலைக்காட்சியில் ஓடியது. சந்திரபாபு ஆடிப் பாடிய இந்த பாடலை பல ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் விழாவில் இவரும் பாடி இருக்கிறார். கடந்த காலத்தை மறக்கவே அவரும் நினைத்தார். ஆனால், பழைய நினைவுகள் அவரை விடவில்லை.

மறுநாள் காலை மீண்டும் துபாயில் வெப்பக் காற்று வீசத் தொடங்கியிருந்தது.

- பாண்டி

Pin It