அத்தனை வேகத்தில் அது நிகழும் என்று கண்டிப்பாக நான் நினைத்தேன்.

கிட்டத்தட்ட ஜி பி சிக்னலில் இருந்தே அந்த கிராதகன் வண்டி ஓட்டிய ஸ்டைல் அப்படி.

காரை விட்டு இறங்கிய வேகத்துக்கு கையில் ஒன்றும் அகப்படவில்லை. பைக்கில் சென்றிருந்தால் கூட ஹெல்மெட்டை கழற்றி அடித்திருப்பேன். காரில் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப் பட்டது. கீழே விழுந்து எழுந்தவனுக்கு காரின் உள்ளொடுங்கிய பின்பக்கம் பதபதப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்

உடலை சரி செய்து கொண்டே "ப்ரோ...... தெரியாம......."

அவன் முடிப்பதற்குள் "என்னடா தெரியாம....." அவன் அம்மாவைக் குறிக்கும் குறிச்சொல்லைத்தான் முதலில் பயன்படுத்தினேன்.

திகைத்துப் பார்த்தான்.

"என்னாச்சு.... என்னாச்சு.....? என்னாச்சு.......!"

சுற்றி நின்ற மூன்று நான்கு வெட்டிப் பயலுகளின் வண்டிகள்.... ஆழ் மன பூரிப்போடு எட்டிப் பார்த்தன. வேடிக்கை பார்ப்பதில் அதுவும் விபத்துகளை வெறி கொண்டு பார்ப்பதில் இருக்கும் அலாதிப் பிரியம் கேவலமான மானுட பிறப்புக்குத்தான் அதிகம் என்று ஃபிராய்டு சொல்லி இருக்கிறார். சுருக்கென்றது. அந்த பைக்காரனைப் பார்த்து... "டேய்.. தறுதலை இங்க வா.. நான் சுத்தி பாக்கறதுக்குள்ள எவனும் இங்க நிக்கக் கூடாது... போ.... போய் கால்ல விழுந்து கெஞ்சு.. இல்ல.. கேன..... ன்னு பேட் வேர்டு பேசு. ஆனா நான் வண்டிய ஓரமா நிறுத்தறக்குள்ள எவனும் இங்க நிக்கக் கூடாது" என்று மிரட்டி விட்டு வண்டியை ஓரம் கட்டினேன்.

வேர்த்துப் புழுங்கிய நடுங்கும் முகத்தோடு அருகே ஓடி வந்து ஒரு வேலைக்காரனைப் போல நின்றான்.

"ப்ரோ நீங்க சடனா பிரேக் போட்டுடீங்க அதான்......கண்ட்ரோல் பண்ண முடியல..."

"அடி செருப்பால... நான் உனக்கு ப்ரோவாடா... தொலைச்சிருவேன்... மரியாதையா ஐயான்னு கூப்டுடா..."

அவன் கண்கள் உருளப் பார்த்தான்.

"எனக்கு முன்னால போனவன் சடன் பிரேக் போட்டான். நானும் போட்டேன். அப்போ நீயும் போட்ருக்கணும்ல..எல்லா நேரத்துலயும் கன்ரோல் வேணும் ராஜா... சரி லைசன்ஸ் எடு... ஆர்.சி புக் எடு...ஹெல்மெட் போடல... முக்கியமா மாஸ்க் போடல..."

அவன் என்னையே குறுகுறுவென பார்த்தான். அவன் குறுந்தாடி கோபத்தில் விரிந்து விரிந்து சுருங்கியது.

"ரோட்ல வரும் போது மாஸ்க் போடணும்னு தெரியாதா,..... உனக்கு தான் ஹெல்மெட் போடணும்னே தெரியலயே.. அப்புறம் எங்க. மாஸ்க் போடாததுக்கு ஆயிரம் காரணம் சொல்லு. ஆனால் ஆயிரத்தோராவது காரணம் கொரோனாவுக்கு இருக்கு...... புரியுதா மரமண்டை."

"ஹெலோ... தேவை இல்லாம..."

பளாரென்று விட்டேன். "எதுடா தேவை இல்லாதது....?" கிட்ட நெருங்கி முறைத்தேன். என் கண்களில்.... கொரோனா கொத்தாகத் தொங்கியது.

அவன் கண்களையே பார்த்தேன். அவன் தடுமாறினான். குற்றமுள்ள கண்கள் சிமிட்ட மறக்கும். மறந்தது அவனுக்கு. திடுதிப்பென அறைவேன் என்று அவன் யோசித்திருக்க மாட்டான். கன்னத்தில் இருந்து கை எடுக்க மறந்து பயந்தபடியே நின்றான்.

"சரி விஷயத்துக்கு வர்றேன்.. உனக்கு ரெண்டு சாய்ஸ். ஒன்னு இன்னைக்கு சாயந்த்ரத்துக்குள்ள நீ கொழுப்பெடுத்து வேகமா வந்து மோதி சேதப் படுத்தின காரோட பின்பக்கத்தை சரி பண்ணிக் குடுத்துரு. ரெண்டு.... அப்படி முடியலன்னா.... நாளைக்கு உன் வீட்டுல யாரு வெளிய வந்தாலும்... இதே காரால பின்னால் போயி அதிவேகத்துல முட்டி விபத்து ஏற்படுத்துவேன்.. என்ன சொல்ற.....?" என்றேன்.

அவன் தொண்டையில் எச்சில் அழுந்திக் கொண்டு போனது. சொரண்டி எடுத்த அவன் அரை மண்டையில் வியர்வை நடுங்கிக் கொண்டே கோடிழுத்தது. அவன் இதை எதிர்பார்க்கவில்லை. முகம் விரிந்து மூளை நகர்ந்து பார்த்தான்.

"போலீஸ்லல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைமா.....நீ ஹெல்மட் இல்லாம வண்டி ஓட்டுனது தப்பு. அதுவும் இந்த புண்ணாக்கு ரோட்டுல 100 க்கு மேல போனது அத விட தப்பு. அதுவும் ஹெட்போன்ல பேசிக்கிட்டே வந்து என் கார்ல அவளோ வேகமாய் முட்டுனது அதை விட தப்பு. எல்லாத்துக்கும் மேல நீ மாஸ்க் போடல.."

"சார்..... சார்...... பிளீஸ்....... தெரியாம...." - காலில் விழாத குறையாக கெஞ்சினான். போனை எடுத்து எண்களைத் தேடியபடியே அங்கும் இங்கும் பரபரத்தான். முள்ளம்பன்றி தலையை அவ்வப்போது விரல்கள் கொண்டு கொத்திக் கொண்டான்.

"டேய்... இவனே..." என்று சொடக்கு போட்டு நிமிர்த்தினேன்.

"என்ன......உன் ஆட்டுத் தாடி நண்பர்களுக்கு போன் போடறயா... போடு.... ஆனா..... இங்க வந்து எந்த ...... பையனாவது என்கிட்டே சமரசம் பேசவோ.... இல்ல.. பஞ்சாயத்து பண்ணவோ வந்தா... இருக்கற கடுப்புக்கு நாளைக்கு உன் வீட்டுல யார் சிக்குனாலும் டமார் தான்.... இது முனியாண்டி சாமி மேல சத்தியம்...." என்றேன். என் வளைந்த மீசை அவனுள் மிகப் பெரிய சத்தத்தை ஏற்படுத்தியது போல.... வெறித்துப் பார்த்தான்.

அவன் கண்கள் கலங்கி விட்டன. காதடைத்திருக்கும் போல. ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். தனித்து விடப்பட்ட பயம் அவன் முகத்தில் வழிந்தது.

"இதெல்லாம் புடுங்கி மாதிரி வந்து மோதறக்கு முன்னால யோசிச்சுருக்கணும்... சரி சரி... போ..... போயி....மெக்கானிக்க கூட்டிட்டு வா. வரும் போது.. ரெண்டு வடை... ஒரு பால் டீ...... ஒரு ஹெல்மெட்.. ரெண்டு செட் மாஸ்க்... வாங்கிட்டு வா...." என்றேன்.

"டே... குறுக்குப்... கேட்டுச்சா....." என்று கத்துவதற்குள் வண்டியை எடுத்தான்.

"மவனே... நீ அவ்ளோ பெரிய புத்திசாலியா.. சுள்ளான்... நடந்து போடாத்......" - சாவியைப் பிடுங்கினேன்.

அவன் மூச்சிரைக்க மெக்கானிக்கை கூட்டி வந்திருந்தான்.

வண்டியை மெக்கானிக் ஓட்டிச் செல்ல அவன் பைக்கில் பின்னால் நான் ஏறிக் கொண்டேன். மாஸ்க்கை பிரித்து முகத்தில் போடச் சொன்னேன். போட்டான். ஹெல்மெட்டைப் பார்த்தேன். அவனாகவே எடுத்து தலையில் மாட்டினான்.

"இதுக்கு லோன் முடிஞ்சிருச்சா" என்று கேட்டேன்.... டிக்கி தூக்கிய பைக்கை தட்டிக் கொண்டே.

"இன்னும் 13 மாசம் இருக்கு" என்றான். ஒரு கடனாளியின் கர்மா அவன் உடலை நெளிய வைத்தது.

"லோன் போட்டு வண்டி வாங்கி இப்டியா பொறுப்பில்லாம ஓட்டுவ முண்டம்........ சரி போ... போயி.....அன்னபூர்ணாவுல மஷ்ரூம் பிரியாணி வாங்கிட்டு வா...." என்றேன்.

.............?

"காசா... உங்கொம்மாகிட்ட போய் கேளுடா...காரை முட்டிட்டு காசு கேக்கறியா..... காசு இல்லாதவன் என்ன மயிருக்குடா இத்தன வேகமா வண்டி ஓட்டற... இந்த உலகம் காசுள்ளவனுக்குத்தான் சுத்துது.... காசில்லாதவன் மூடிக்கிட்டு மெல்லமா போகணும்......" - கத்தினேன்.

பிரியாணி சாப்பிட்ட போது உச்சி தாண்டி இருந்தது சூரியன்.

"நீ என்ன பண்ற.... இப்டியே போயி.... இடையர் பாளையத்துல கரண்ட் பில்லு கட்டிட்டு..... அது பக்கத்துல இருக்கற.... ரேஷன் கடைக்குப் போய் அரிசியும்.... சீனியும் வாங்கிட்டு.. அப்டியே அதை ஒட்டுனாப்புல இருக்கற பார்வதி ஸ்டோர்ஸ்ல இந்த மளிகைப் பொருள்களை வாங்கிட்டு வந்துரு போ......" என்றேன்.

அவன் வெறித்துப் பார்த்தது பற்றி எனக்கென்ன வந்தது. மளிகை லிஸ்ட்.... ரேஷன் அட்டை... கரண்ட் அட்டை எல்லாம் அனிச்சையாக அவன் கையில் திணித்தேன்.

"...........?."

"காசா...... உங்காயாகிட்டே போய் கேளு... ஒரு நாளு பொழப்பக் கெடுத்துட்டு.. ...காசு கேக்கறயா....." ஆயிரம் முறையாவது கெட்ட வார்த்தையில் கத்தினேன்.

"சார் வண்டி ரெடி..." என்ற மெக்கானிக்கைப் பார்த்து கும்பிட்டேன்.

"உங்கள மாதிரி மெக்கானிக்குகள் தான் ரோட்டின் கடவுள்கள்" என்றேன். கடவுள் புன்னகைத்தார்.

"டேய்... மயிராண்டி..." என்று அவன் பக்கம் திரும்பி..."காசு குடுத்துட்டு உன் வண்டிய எடுத்துட்டுப் போ... 50 தாண்டக் கூடாது..." என்று நாக்கைக் கடித்து மிரட்டினேன்.

"மாஸ்க் போட்டு ஹெல்மெட் போட்டு தான் போகணும் சரியா..... வீட்டுக்குப் போய் நைட்டெல்லாம் குழம்பி, ரிவெஞ் எடுக்கலாம்னு வெட்டிப் பயலுங்க எவனையாவது கூட்டிட்டு வந்த..... உன் வீட்டுல நாய்க்குட்டி வரை தேடி தேடி வண்டிய ஏத்துவேன்.. சொல்லிட்டேன்.. போ..... மூடிட்டுப் போய் இன்னைக்கு ராத்திரி பீர் அடிச்சு அழு... புத்தி வரும்..." - நான் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

கொஞ்ச தூரம் வந்த பிறகு வண்டியை நிறுத்தி இறங்கி பின்னால் சென்று பார்த்தேன். வண்டி முன்பிருந்தது போலவே இருந்தது.

அப்பாடா என்றிருந்தது.

முதலாளியம்மாவுக்குத் தெரிஞ்சா மானங்கெடப் பேசும். அவன் முட்டுற வரைக்கும் நீ புடுங்கிட்டு இருந்தியான்னு கேக்கும். சொந்தக் காச செலவு பண்ணி சரி பண்ணு... அப்ப தான் புத்தி வரும்னு சொல்லும். 12000 ரூபாய் சம்பளத்துல நான் வீட்ட பாப்பனா.. வண்டியப் பாப்பனா.

கார் டிரைவரா இருக்கறதெல்லாம் எவ்ளோ கொடுமைன்னு ஃபிரென்ட் வீலை சகட்டுமேனிக்கு ஓடவிட்டு பேக் வீலைப் பத்தி கவலைப்படாத டூ வீலர் ஓட்றவங்களுக்கு கண்டிப்பா தெரியாது.

- கவிஜி

Pin It