ஒரு பெரிய வேப்ப மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் அவன். சுயநினைவை இழந்திருந்த அவன் வாயிலிருந்து எச்சிலும் ரத்தமும் ஒன்றாக சேர்ந்து ஒழுகிக்கொண்டிருந்தது. கூட்டமாய் நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் வேகமாய் ஓடி அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டான். எந்த சொரணயும் இல்லாமல் கிடந்த அவன் மூக்கு உடைப்பட்டு அதிலிருந்து ரத்தம் பீரிட்டுக்கொண்டு வந்தது.

அவன் அணிந்திருந்த சட்டையும், பேண்ட்டும் நார் நாராய்க் கிழிந்திருந்தது. அவன் உள்ளாடைகூட உடுத்தியிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவன் உடம்பிலிருந்து வெளியேறிய வியர்வைத் துளிகளுடன் அவன்மீது ஒட்டியிருந்த கருமைநிற அழுக்கும் பிசுபிசுப்புடன் வெளியேறிக்கொண்டிருந்தது.

அவன் கால்கள் நிலைகொள்ளாமல் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டிருந்தன. மரத்தோடு இறுக்கிக் கட்டியிருந்த கயிறு அவன் கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்கு ஒரு ஆதாரமாய் இருந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. அதன் விளைவாக அவன் மேனியெங்கும் தடியடிபட்ட இடங்களில் உருண்டை உருண்டையாக உப்பிக்கொண்டிருந்தன.

சுற்றியிருக்கும் எல்லோருடைய கைகளும் கட்டைகளையும், கொம்புகளையும் பிடித்திருந்தன. சிலபேரின் கைகளில் விலையுயர்ந்த செல்போன்கள் இருந்தன. அவற்றின் கேமராக்கள் அனைத்தும் அவனை நோக்கிப் படமெடுத்துக்கொண்டிருந்தன. படம் பிடித்த வேகத்தில் அதை வாட்சப், பேஸ்புக்களில் சிலர் பதிவேற்றிவிட்டனர்.

ஊரே ஒன்றுகூடியிருந்த அந்த கூட்டத்தில் ஒருத்தரும் அவனுக்காகவோ அவன் நிலைக்காகவோ வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களின் கண்களில் கொலைவெறியின் உச்சம் மட்டுமே வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

வாட்சப்பில் பதிவேற்றிவிட்ட ஒருவன் “இந்த வீடியோவ பாக்குற எவனுக்கும்…இனிமே கொழந்தைங்கள கடத்தணும்ன்ற எண்ணமே வரக்கூடாது” என்று சொல்லிவிட்டு அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். அப்போது அவன் உடம்பில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட, “யோவ்… பாருங்கயா இவன் இன்னும் உசுரோட இருக்கான்… அடிச்சி கொல்லுங்கயா இவன” என்று கத்திக்கொண்டே தன் கையிலிருந்த கட்டையால் ஓங்கிக்கொண்டே அவனை நோக்கி ஓடினான்.

இதற்குள் பக்கத்து நகரத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் போயிருந்தது. அந்த இடத்தை நோக்கி ஒரு காவல்துறை வேன் வருவதைப் பார்த்த அந்தக் கூட்டம் கொஞ்சமும் அச்சப்படாமல், விலகாமல் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டதைப் போல் மதப்பாக நின்றுகொண்டிருந்தது. “ரெண்டு நாளா… இங்கயே சுத்தி திரியுறான் சார்… நாங்களும் எப்படியெப்படியோ வெரட்டியடிச்சிப் பாத்தோம்… இந்த ஊரவுட்டு நவுர மாட்டங்கிறான்… வேற வழியில்லாமத்தான்… இப்படி செஞ்சோம்…” என்று வாகனத்தில் வந்திறங்கிய காவல்துறை அதிகாரியை நோக்கிச் சொன்னான் ஒருவன்.

அவனை முறைத்துப் பார்த்துவிட்டு பதில் எதுவும் சொல்லாமல் மரத்தில் கட்டியிருந்தவனை அவிழுத்துவிட அவர் முயற்சிக்கையில், “சார்… அவன் பேசுற பாசையும் புரியில… அவன் பார்வையும் சரியில்ல… ரெண்டு நாளா கொழந்தைங்களையே மொறச்சி மொறச்சிப் பாத்துக்குனே இருந்தான் சார்… அதான் எங்குளுக்கு பயமாயிடுச்சி… அவன உடாதீங்க…” என்று சொல்லிவிட்டு அந்தக் காவல்துறை அதிகாரிக்கு அருகில் போய் நின்றான் ஒருவன்.

காவல் அதிகாரி அவன்மேல் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்ததுதான் தாமதம், சட்டென்று சரிந்து விழுந்தான் அவன். அவன் உடல் முழுவதும் கன்னிப் போயிருந்தது. முகம் பெரிதாக் வீங்கி ஊதிப்போயிருந்தது.

வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துவந்து அவன் முகத்தில் தெளித்தார் ஒரு காவலர். அவன் முகம் கொஞ்சம் சிலிர்த்து தலை ஆடியது. சற்று நேரத்தில் அவன் வாய் அசையத் தொடங்கியது. அவன் ஒரே ஒரு வாசகத்தைத் திரும்பத் திரும்பத் சொல்லத் தொடங்கினான். அதைக் கேட்ட கூட்டத்திலிருந்த ஒருவன் “ரெண்டு நாளா இந்த வார்த்தையத் தான் சார் சொல்லிக்கினு இருக்குறான்…. அவன் சொல்றது இன்னான்னும் எங்குளுக்குப் புரியலை… ஆனா இவன் கொழந்தைங்கள கடத்துறவனாத்தான் சார் இருக்கணும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்து கூட்டத்தோடு போய் நின்று கொண்டான்.

அவன் பேண்ட் பாக்கெட்டிலும், சட்டைப் பாக்கெட்டிலும் தனது கையைவிட்டுத் துழாவிப் பார்த்தார் அந்தக் காவலர். அதில் ஒரு இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண்குழந்தையின் பழைய சிறிய புகைப்படம் அவரது கையில் சிக்கியது. அந்தப்புகைப்படம் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

அவர் கையில் இருந்த புகைப்படத்தை சட்டென்று பிடுங்கின அரை மயக்கத்தில் இருந்த அவன் கைகள். பிடித்த வேகத்தில் அந்த புகைப்படத்தைத் தன் வாய்க்கருகில் கொண்டு போனவன், தன் ரத்தம் சிந்தும் உதடுகளால் முத்தம் கொடுத்துக்கொண்டே உளறினான்.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. கூட்டம் நிரம்பியிருந்த அந்த இடத்திற்கு மூன்றாவதாய் ஒரு போலீஸ்காரர் வந்து நின்றார். நல்லவேளையாக அவன் பேசும் மொழி அவருக்குப் புரிந்திருந்தது. அவனை அவர் பரிதாபமாகப் பார்த்தார். சுற்றியிருந்த அனைவரையும் பார்த்த அவர் மிகவும் கேவலமாகக் காரித் துப்பிவிட்டு காவல்துறை அதிகாரியிடம், “இவன் கொழந்த தொலஞ்சி போயிட்டு இருக்குது சார்…. அதத்தான்… இவன் தொடர்ந்து சொல்லிகிட்டே இருக்குறான்… இதைக்கூட புரிஞ்சிக்காத இந்த மரமண்டைங்க…” என்று சொல்லிவிட்டு தன் தலையிலடித்துக் கொண்டார்.

அந்த மூன்று காவலர்களும் அவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் புழுவாக நெளிந்தார்கள். தாம் செய்துவிட்டது மாபெரும் தவறு என்று உடனே உணர முடியவில்லை என்றாலும் அவர்களின் மனங்கள் பதைபதைக்கத் தொடங்கியிருந்தன.

அவனை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டுபோய் தங்களின் வாகனத்தில் போட்டுக்கொண்டு புறப்பட்டது அந்த போலீஸ் வாகனம். எல்லோரும் அந்த வாகனத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சிலர் விசாரணைக்குப் பயந்து ஊரை விட்டுக் கிளம்புவதற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஊரின் எல்லா இடங்களிலும் அவர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த பிள்ளைப் பிடிப்பவன் வரும் வரைக்கும் அவர்களுக்கு ஒன்றும் பாதகமில்லை. காப்பாற்றுவதற்குத்தான் பெற்றோர்கள் இருக்கிறார்களே!

- சி.இராமச்சந்திரன்

Pin It