பூங்கோதை வீட்டுக் குளியலறையின் மூலையில், பயத்தில் நடுங்கியவாறே ஒளிந்துகொண்டிருந்தாள் ஜனனி. வீட்டின் வெளியே இடப்புறமாயிருந்த அந்தக் குளியலறைக்கு மேற்கூரையோ, கதவோ கிடையாது. குளியலறை என்பதற்கு அடையாளமாக , நடுத்தர அளவில் பாதம் தேய்க்கும் ஒரு கருங்கல் மட்டுமே இருந்தது. பூங்கோதை அப்போதுதான் குளித்திருக்க வேண்டும். ஈரமான மண்தரையில் படிந்திருந்த மஞ்சள்தூளும், இலேசான சந்தனசோப்பு வாசனையும் அதை உறுதிப்படுத்தின.குப்பென்று வீசிய மூத்திரநெடி, சோப்பு வாசனையைக் காட்டிலும் சற்று மிகுதியாகவே இருந்தது. ஜனனிக்கு குடலைப் புரட்டியது ; குமட்டிக்கொண்டு வந்தது. எவ்வளவு நேரம்தான் இந்த மூத்திரவாடையை சகித்துக் கிடப்பது? இதற்கு அம்மாவின் கையில் அகப்பட்டுக்கொள்வதே தேவலாம் என்றிருந்தது அவளுக்கு.

ஜனனி வீட்டிற்கும், பூங்கோதை வீட்டிற்குமான இணைப்பு ஒரு பொதுச்சுவர்தான். வீட்டை ஒட்டியே நடைபாதை. நடைபாதைக்கு கிழக்கேதான் ஜெகதீஷ் வீடு. தன் வீட்டில் அமுதன் அழுகிற சத்தம் கேட்டதும் ஜனனியின் நெஞ்சு படபடத்தது. அம்மா இந்நேரம் வீட்டிலிருந்து கிளம்பியிருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தபோதே ,"நீ எங்க இருப்பனு எனக்குத் தெரியாதா? செய்யறதயும் செஞ்சிட்டு ஒளிஞ்சிட்டு வேற இருக்கியா?" என்ற அவளது அம்மா, வாசலை விட்டிறங்கி கூச்சலிட்டவாறே பூங்கோதை வீட்டைநோக்கி தரையதிர நடந்துவந்தாள். ஏறக்குறைய ஜனனியின் மூச்சு நின்றிருந்தது.

"மன்னிச்சிருடா, மன்னிச்சிரு . சத்தியமா வேணும்னே செய்யல " என்று ஜனனி தனக்குத்தானே நூறுமுறையாவது சொல்லியிருப்பாள் . கூடவே "சாமி மாரியாத்தா எனைய எப்டியாவது காப்பாத்து" என்ற பிரார்த்தனை வேறு. கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர். என்ன செய்வதென்று புரியாத நிலையில், இரு கைகளையும் பற்களுக்கு நடுவே வைத்து நரநரவென வெறிபிடித்த மாதிரி கடித்துக்கொண்டாள். தலைமுடியை பிய்த்துக்கொண்டாள். சுதாரித்து எழுவதற்குள் அவளது அம்மா, தலைமுடியை கொத்தாகப் பிடித்திருந்தாள். தடுத்த பூங்கோதையை, ஆக்ரோஷமாய் தள்ளிவிட்டுவிட்டு, தரதரவென தெருவில் இழுத்துப்போகையில் அண்டை வீட்டு ஜெகதீஷ் வேடிக்கை பார்க்க குடுகுடுவென ஓடிவந்தான். அப்படியொரு வெட்கம் பிடுங்கித் தின்ன அவனைக் கடந்து ஒருவாறு வீடடைந்தவள் , தம்பி அமுதனின் அழுகைச்சத்தம் கேட்டபிறகே பிரக்ஞையுற்றாள். அமுதனுக்கு இரண்டு வயது மூத்தவள் ஜனனி.

அன்று விடுமுறை. பொழுது விடிந்திருந்தது. ஜனனியும் , அமுதனும் காலைக்கடன் கழிக்கவென தனித்தனியே கிளம்பினர். முடித்து வீடு திரும்புகையில் தனது அரைக்கால் ட்ரௌசரை ஒரு கையிலும் மற்றொரு கையால் அவளது தோள்பட்டையை எக்கிப்பிடித்தவாறும் நடந்து வந்தவன் திடீரென "அக்கா , ரொம்பதூரம் யார் கல் வீசறாங்கனு பாக்கலாமா" வென சவால் விடும் தோரணையில் கேட்டான். சோளப்பயிர் அறுவடையாகியிருந்த அந்த வறண்ட வெறும்பரப்புதான் அவர்களுக்கு மலக்களம், விளையாட்டுக்களம் எல்லாமும். கல்வீசினார்கள். ஒவ்வொரு முறையும் தூரம்போகும் கல்லானது அடுத்தவரின் விசிறலை மிஞ்சியபடியே இருந்தது.

வெற்றி தோல்வி உறுதியாகுமுன் எங்கிருந்தோ காற்றில் பறந்துவந்த நெகிழிப்பை, ஜனனியின் பிடியில் சிக்குண்டது. சட்டென அவளுக்கொரு யோசனை தோன்றிற்று. நாலைந்து கற்களை அதனுள் போட்டு சர்...புர்..ரென சகட்டுமேனிக்கு சுற்றத்துவங்கினாள். மேலே வீசுகையில் ராக்கெட்டைப் போலவே பறப்பதை இருவரும் வியப்புடன் நோக்கினர். அக்கா, "ஒருவாட்டி குடேன், நானும் சுத்திப்பாக்கறேன்" எனக் கெஞ்சிய தம்பியைப் பொருட்படுத்தாமல் நெகிழிப்பையைச் சுழற்றியவாறு பரந்த வெளியில் தாறுமாறான வட்டங்களை வரைந்துகொண்டிருந்தாள். அதிசயத்தைப் பார்ப்பதுபோல சற்றே அண்ணாந்து வாய்பிளந்த அமுதன் , தன்னையறியாமல் ஜனனியை நெருங்கியிருந்தான். அவ்வளவுதான். சுழற்சியின்போது எதிர்பாராதவிதமாக ஒரு கல் அவனது பற்களில் "பட்" என மோதியது. ஒருபாதி முன்பல் அரைநிலா வடிவில் உடைந்து சிதறியது. உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது . வாயை உள்ளங்கையால் பொத்திக்கொண்டு அழுதவாறே வீட்டிற்கு ஓட்டம் பிடித்தான். செய்வதறியாது அவனது ட்ரௌசரை எடுத்துக்கொண்டு அவன் பின்னால், “அமுதா” என்று இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டே வேகமாக ஓடினாள் . வீட்டிற்குப் போனால் சரமாரியாக அடிவிழும் என்ற எண்ணம் தோன்றவே, ஓட்டத்தில் பின்தங்கியவள் , பூங்கோதை வீட்டின் மூத்திர அறையினுள் நுழைந்தாள். அதற்குள்ளாக , பூங்கோதை வீட்டைக் கடந்திருந்தான் அமுதன்.

ஜனனியை இழுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த அம்மா, கணுக்கோல் ஒன்றால் ஆத்திரம் தீர அடித்தாள். அடிவாங்கியவாறே அமுதனைத் தேடினாள். பாட்டியின் மடியில் படுத்தவாறு தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தவனைப் பார்த்து "ஓ" வென கதறினாள். அவனது உதடும் , ஈறும் புஸ்ஸென வீங்கியிருந்தது. இவன்தான் அமுதன் என்று அடையாளம் கண்டறிய முடியாதபடி முகம் அகோரமாய் மாறியிருந்தது. பாட்டி, சிட்டிகை மஞ்சள்தூளை உதட்டில் வைத்து அழுத்திப்பிடித்து இரத்தக்கசிவை நிறுத்த முயன்றுகொண்டிருந்தாள். அவன் அழுதுகொண்டே "இரு , இரு அப்பாகிட்ட சொல்லி உனைய மாட்டிவிடறேன் பாரு" என்றதும் ஜனனியின் பயம் மேலும் கூடிற்று. முன்பொரு முறை பேட்டரி செல்லால் அவனது மண்டை உடைபட்டபோது பாவாடையில் "ஒன்றுக்குப்" போகுமளவு அப்பாவிடம் அடிவாங்கியது நினைவிற்கு வரவே அப்படியே பிரக்ஞையற்று தரையில் உட்கார்ந்துவிட்டாள்.

நேரம் ஆக ஆக உதடு வீக்கம் அதிகமானது. பார்த்தவுடன் அப்பா கண்டுபிடித்துவிடுவாரே. அவரிடமிருந்து தப்பிப்பது சுலபமல்லவே. நினைக்கையில் ஜனனிக்கு தொடை நடுங்கியது. அழுதழுது சோர்ந்திருந்த அமுதனுக்கருகில் போய் "டே அமுதா, மன்னிச்சிருடா. நா வேணும்னு செய்யல, தெரியாம பட்ருச்சு. வேணும்னா பள்ளிக்கூடம் போகைல உன்னோட புஸ்தகப்பைய கூட நானே சொமந்திட்டு வரேன்டா" என்று சமாதானம் சொன்னபோது பதிலேதும் சொல்லாமல் முகத்தை சுவர்ப்புறம் திருப்பிக்கொண்டான்.

அப்பா திரும்புகையில் பொழுது இருண்டிருந்தது. பாட்டிதான், "பையன் பல்ல பாருடா . அவ அம்மா வேண்டுமட்டும் அடிச்சிட்டா , நீயும் பிள்ளைய அடிச்சிராத"என ஆரம்பித்தாள். அமுதனின் முகத்தைப் பார்த்தவர் கோபத்துடன் ஜனனியின் முதுகு பழுக்க அறைந்தார். இடுப்புக்கச்சையை உருவி விளாசினார். மூச்சு நிற்கும்படியான ஒரு அழுகை ஜனனியிடம். ஊர்கூடி வேடிக்கை பார்த்தது. இம்முறை ஜனனி தரை நனைக்கவில்லை. ஆனால் பாவாடையில் ஈரம் படர்ந்திருந்தது. அவள் அணிந்திருந்த சிவப்புநிற கண்ணாடி வளையல் துண்டுதுண்டாய் உடைந்து தரையெங்கும் சிதறியிருந்தது.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It