சில போது கதைகள் நிஜத்தை விட பயங்கரமாக இருக்கும்.

சில போது நிஜம் கதைகளை விட படு பயங்கரமாக இருக்கும்...

இது கதையா நிஜமா என்பது இங்கே அவசியமில்லை.... ஆனால் காலத்தின் அடுத்த கட்டத்தைக் கூட்டும் கட்டமைப்பில் நீளும் ஒரு மதிலின் தூரத்தை முடிந்தளவு கடக்கும் சாந்து நிற பூனையின் இரவு சொப்பனமென இருந்து கொள்ளட்டும். முடிவின் தீராத் துயரை முதலே சொல்லி விடும் யுக்தியின் சொற்படி இங்கே அவள் படுத்திருக்கிறாள். ஊரே திகைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

பார்க்கும் முகமெல்லாம் ஆயிரம் கேள்விகளுடன்... அவளை எட்டிப் பார்ப்பதும் .. சுற்றி நின்று கொட்ட கொட்ட விழிப்பதும்... வாய் வரை வந்து கழுத்து நரம்பு துடிக்க... கண்டும் காணாமல் சற்று ஒதுங்கி நிற்பதும்.... நீண்ட அவள் பிணத்தின் நீட்சி சற்று வாடை எடுக்க ஆரம்பித்த பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.

சாவின் வாசத்தை மாலைகளே கொண்டு வருகின்றன...

என்ன நடக்கிறது.....?!!!

சூரமர்த்தனி கழுத்தில் புது பொலிவோடு தாலி எப்படி....? காதுக்குள் கிசுகிசுத்தும்..... காதே பிசு பிசுத்தும்... மூக்கால் அழுதாலும் ஊர்க்கிழவிகள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். ஒன்றும் புரியவில்லை. நேற்று வரை கழுத்தில் தாலி இல்லை.. இன்று எப்படி.... நாற்பதை தொட்டும் கல்யாணம் ஆகாதவள் சூரமர்த்தனி. ஒப்பாரியின் சுவை கண்ட வீதி செவிகள் மெல்ல யானைக்காதாட்டின. கழுதைக்காதாகவும் மிரட்டின. பிணத்தின் உடல் மேயும் அற்ப கண்களில் ஆயுதமென சுருண்டு கிடந்த மஞ்சள் கயிற்றில் காலம் பின்னிக் கிடந்தது.

வாசல் முழுக்க மனித பிணங்கள். அவள் மரண பிணமென கிடந்தாள். அந்த கூட்டத்தில் ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் துக்கத்தை விழுங்கிக் கொண்டு பற்கள் கடித்து கடித்து நின்று பார்த்துக் கொண்டிருந்தது. மனம் ஓடி சென்று அவள் மேல் விழுந்து புரண்டாலும் யாது தடுக்கிறதென்று புரியவில்லை. நிஜம் சுட்ட நிலையின் நிழலின் சூடு பெற்று விட்ட நிலையை பெற்று விட்டேனோ என்று எங்கோ ஒரு மூலையில் அவன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

"யாராவது வர வேண்டுமா........?"

"எப்போது ஆனது........? எப்போது எடுக்கலாம்" என்று எப்போது அவளை கொண்டு சென்று ஒளித்துக் கட்டுவது ஒன்றே குறியாக இருந்தது ஒரு கூட்டத்துக்கு. ஒரு கூட்டம்... அவளின் மரணம் குறித்து அச்சப்பட்டுக் கொண்டிருந்தது. "ஒருவேளை போலிஸ் வந்தால் பிரச்சினை ஊர் தாண்டி உள்ளூர் செய்தியாகி விடும். அதற்குள் அடக்கம் செய்து விடலாம்" என்று அரித்தார்கள்.

வெயிலை காலம் உள்ளாடைக்குள் சொட்டிக் கொண்டிருந்தது.

முழுதும் சொட்டி முடிப்பதற்குள் அதே வெயில் கால முன் கதை ஒன்றை கண்டு வரலாம்....

*

வெயில் முளைத்து வெயில் விழுந்து வெயிலே பிறந்து வெயிலே சாவும் வெயில் கொண்ட முன்னிரவில்.... புழுக்கம் தாங்காத ஊர் பெருசுகள்.... வீதிகளில்... வீட்டு திண்ணைகளில்.....கோவில் வராண்டாவில் என்று கண்ட இடங்களிலும் காலை விரித்துப் படுத்துக் கிடக்க......சிறுசுகள்.. மொட்டைமாடிகளிலும்.. கிணற்று மேட்டுகளிலும் சுருண்டு கிடக்க... எந்த நாயின் கண்களிலும் பட்டு விடாத பேயின் சொரூபமாக அவன் பயந்து பயந்து... ஒளிந்து ஒளிந்து... கானல் நீரைப் போல காற்றில்லாத வெளியில் மிதந்து வந்தான்.

புளிய மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு சற்று நேரம் நோட்டம் விட்டான். ஊரே வெயிலடித்து செத்து போனது போல கருகிக் கிடந்தது. இரவின் நிறத்தை வெயிலின் காலம் வேறு மை அடித்து நிரப்பி இருந்தது. குறுக்கு சந்து தாண்டி பெரிய வீதி தாண்டி குட்டி வீடு தாண்டி மறைந்து மறைந்து வந்து சேர்வதற்குள் கொஞ்சம் வெந்து விட்டது போலத்தான் இருந்தது. மீள் வெட்டின் நீள் தோற்றமென அவனின் முகமும் உடலும் கொதித்துக் கொண்டிருக்க.....கை கொண்ட நரம்பெல்லாம் நீண்டு புடைத்து இனி காண்பவரை கழுத்திறுக்கி கொன்று விட்டு சென்று விட ஒரு வித பரிதவிப்பின் துயரத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனை யாரோ எட்டி உதைத்தாற் போல நம்பிக் கொண்டே முன்னேறினான். அப்படி இப்படி என்று ரத்னமா பாட்டி வீட்டை கடந்து அந்த வீட்டின் முன் நின்றான். உருவமில்லா குடுகுடுப்பைக்காரனைப் போல தன்னை உணர்ந்தான். ஜக்கம்மா வானவில் பூத்து அவனின் மீது விழுந்து கொண்டிருந்தாளோ என்னவோ... மினுங்கும் ஒளியின் நகரும் துளியென அவன் மெல்ல கதவை தட்டினான்.

மீண்டும் தட்டினான்.

வெளியே தூங்கும் பிசாசுகளின் காது கேட்டு விட கூடாதென்று தட்டும் கைகளுக்கு பூட்டிட்டு கதவை சாவியின் துழாவலில் படிய விட்டு தட்டினான். மெல்ல பூத்து விட்டது போல கதவு திறந்தது. கனவு திறந்தது போல உள்ளேயிருந்து வெளி வந்த ஒரு பெண்ணுருவம்....தளர்த்தி விரிந்து உடலை இருண்மைக்கு வெட்டி விட்டாற் போல நிழலின் கூட்டுத் தொகையை உள்ளே நிகழும் இருட்டின் படிம தோற்றமாய் நின்றாள். உடல் மூச்சு விட்டதை வெளி நகரும் வெப்ப சலன மிச்சத்தில் உணர முடிந்தது.

இரு உருவங்களும் ஒன்றையொன்று மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டன. முன் பக்கம் இரண்டுக்குமே ஓட்டைகளோ என்பது போல இருட்டை வைத்து அடைத்திருந்தார்கள் மாறி மாறி பார்த்துக் கொள்கையில். அடுத்த நொடியில் அது முன் சென்றது. கதை உள் சென்றது. இவன் பின் சென்று கதவை அடைத்தான். உள்ளே ஒரு அறையில் சட்டென வெளிச்சம் பூத்தது.

நேரம் இரவு 11.30.

*

மூன்றாவது வீட்டு வாசலில் ரவி அண்ணன் சைக்கிள் துடைத்துக் கொண்டேயிருந்தார். பக்கவாட்டு வீடு வாசலில் சித்ராக்கா பானை கழுவிக் கொண்ண்டேயிந்தார். வீதியின் பல கதவுகள் அடைத்துக் கிடந்தன. டி வி எஸ்-ல் சென்று கொண்டேயிருந்தாள் பாப்பாக்கா. எதிரே சைக்கிளில் வந்து கொண்ண்டேயிருந்தான் புருசோத்தமன். எதிர் வலது வீட்டு வாசலில் மீராயி தலை கோதிக் கொண்டேயிருந்தாள். சற்று தூரத்தில் லக்கி பனங்காயை கட்டி இழுத்து வந்து கொண்டேயிருந்தான்.

அந்த வீதி ஓர் ஓவியத்தில் இருந்தது. பனி சொல்லும் ஓவியமாக அது பரந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

பனி சூழும் பொழுதுகள் மெல்ல மெல்ல விடுபட்டன. அவன் மீராயி வீட்டு திண்ணையில் வழக்கம் போல அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். பனி சொட்டும் காலை பொழுதை சூரிய கைகள் மெல்ல மெல்ல விலக்கும் காட்சிக்குள் இருந்து இடது கையை முதுகின் கீழ் பரப்புக்கும் பின் புறத்தின் மேல் பரப்புக்கும் இடையே ஒரு தலைமை
ஆசிரியரைப் போல குறுக்கு வெட்டாக லாவகமாக வைத்துக் கொண்டு ஒரு கையை வேகமாய் வீசி வீசி.....நடப்பதற்கு தகுதியானது போன்ற செப்பு சிலை என மர்த்தனி வந்தாள்.

சிவப்பு பனியனில் கனத்து நின்ற மார்புகள் கண்ணடித்தன. பனி மீண்டும் சூழ்ந்தது போல ஒரு வகை குளிர் திடுமென அவர்களை சூழ்ந்தது. விதியின் வழியே பனி சூழும் நிகழ்வென காதலின் ஒளி மெல்ல சிதறியது.

"நல்ல இருக்கா ...........(பெயர் பீப் செய்யப்பட்டிருக்கிறது ) காலைல இருந்து உன்ன எங்கெல்லாம் தேடறேன்.... புது பனியன்டா.... நல்ல இருக்கா...?!" என்று வயிற்று பக்கம் பனியன் இழுத்துக் காட்டியபடியே கிட்ட வந்து அமர்ந்தாள்.

பனி சொட்டியது உள்ளே. மனம் கொட்டியது வெளியே.

"ஏன்டா முறைக்கற....!"

"இப்டி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தா முறைக்காம கொஞ்சுவாங்களா...போடி போய் இத மாத்திட்டு வா..."-எத்தனை தடுத்தும் கண்களை மார்பிலிருந்து எடுக்க முடியவில்லை.

"ஏன் நல்லா இல்லையா....?" -தன்னையே ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டாள்.

அவனும் ஒரு முறை பார்த்துக் கொண்டு...."அயோ..... ட்ரெஸ் மாத்தினா என்கிட்ட பேசு.. இல்லனா கிளம்பு..." என்று சொல்லி விட்டு திண்ணையில் தொங்கிய தன் கால்களை அனிச்சை செயல் போல ஆட்டத் தொடங்கினான். ஊன்றி இருந்த கைகள் இன்னும் அழுத்தமாக ஊன்றின.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இன்னும் அருகில் வந்து "ஏன்....(பெயர் பீப் செய்யப்பட்டிருக்கிறது ) பிடிக்கலையா...?" என்று கிசுகிசுத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனும் அருகில் வந்து "லூசு பிடிச்சிருக்கு.. ஆனா இப்படி சுத்தினா ஊர்ல எல்லாரும் பாப்பானுங்கடி...." பல்லை கடித்து கொண்டு சத்தம் வராமல் கத்தினான்.

"ஓ...." என்று மீண்டும் ஒரு முறை குனிந்து பார்த்தபடியே எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

குனிந்திருந்த அவன் மெல்ல தலையை தூக்கி வலது பக்கம் அவள் போவதை மெல்ல கண்கள் சிரிக்க பார்த்தான். அவளுக்கு குந்தாணிச்சி என்றொரு செல்ல பெயர் இருப்பதை நினைத்துக் கொண்டான். டபக் டபக் என்று நடந்தவள் மெல்ல திரும்பி பார்த்து என்ன லுக்கு என்பது போல கையை காட்டி விட்டு சிரித்துக் கொண்டே நடந்தாள். அவள் தூரத்தில் சிரித்துக் கொண்டே நடப்பது இவனுக்கு தெரியும். அவனும் சிரித்துக் கொண்டே அமர்ந்திருப்பது அவளுக்கும் தெரியும்.

*

நேரம் இரவு 11.30

கதவைத் தட்டினான். குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான். யாரும் தன்னை பார்க்கவில்லை என்று மீண்டும் மீண்டும் சமநிலைப் படுத்திக் கொண்டான். மனதுக்குள், வந்த வழி... ஒளிந்து கடந்த சந்துகள் என்று ஒருமுறை சாகசப் பயணத்தை நினைத்துக் கொண்டே தட்டினான். அதே காதும் காதும் வைத்த கதவு தட்டல். நொடிகளில் கதவு திறந்து கொண்டது. உள்ளே இருட்டை போர்த்திக் கொண்டவள் நடுங்கியது போல தெரிந்தது. குளிரின் நாக்குகள் இருவரையும் மாறி மாறி கணம் ஒன்றில் நடுங்க செய்தது. வழக்கம் போல அவள் உள்ளே செல்ல அவன் பின்னால் சென்றான். உள்ளே அதே அறையில் வழக்கம் போல வெளிச்சம் பூத்தது. கதவை அடைத்தபடி குளிர் பூசிக் கொள்ளத் தொடங்கியது வீடு.

*

மழை நாளில் பள்ளி விடுமுறை என்று தெரிந்தாலும் பள்ளி வரை சென்று விட்டு விடுமுறையை உறுதி செய்து கொண்டு அதே மழையோடு பேசி விளையாடிக் கொண்டு வீடு திரும்புதல் சொர்க்கம் திறத்தலுக்கு சமம். அவன் அப்படித்தான் வந்து கொண்டிருந்தான். மழை வருவதும்......சாரலாய் மாறுவதும்.... தூறலாய் நனைவதும்...என போக்கு காட்டிக் கொண்டிருந்த மழை சற்று தடித்து வரத் தொடங்க........பழைய போஸ்ட் ஆபிஸ் கட்டட முகப்பில் தஞ்சம் புகுந்தான் நண்பர்களோடு.

அங்கே ஏற்கனவே மழையை கொழுக் முழுக்கென வாங்கிக் கொண்டு முன்வரிசை பற்களில் ஒன்று மெல்ல பழுத்திருக்கும் பெரும் உதட்டு சிரிப்போடு மார்த்தனி பாவாடையை கொஞ்சம் கொத்தோடு மேல் நோக்கி பிடித்து கால்கள் சாரலுக்கு நனைந்தால் பரவாயில்லை என்பது போல நின்று கொண்டிருந்தாள். கூட அவளின் தோழிகள் மற்றும் சிலர். ஊறிய கால்களில் மண் துகள்கள் ஊறிக் கொண்டிருந்தன.

"டேய்....(பெயருக்கு பீப் போடப்பட்டிருக்கிறது)

"மர்த்தனிக்கா.... மழைல மாட்டிகிட்டியா..." என்றபடியே கைகளை உதறியபடியே உள்ளே வந்தான்.

"ஆமாண்டா...." என்றவள் கைக்குட்டையால் முகத்தை துடைத்தாள். ஆனாலும் கூந்தல் சொட்டிய துளிகள் முகத்தில் கோலம் போட்டன.

விரல்களை கொத்தோடு முடிக்குள் நுழைத்து மழைத்துளிகளை வழித்து பின்னால் விட்டபடியே தலையை நாய் சிலுப்புவது போல சிலுப்பி கோதிக் கொண்டே இருந்தான் அவன்.

மழை வலுக்கத் துவங்கி இருந்தது.

"கிட்ட வந்து நில்லுடா....சாரல் அடிக்குதுல்ல...." என்றாள்.

"ஆமால்ல" என்பது போல மழைக்கு முகம் கொடுத்தபடியே அவளருகே வந்து நின்றான். இருவர் கண்களும் கணம் ஒன்றில் உரசிக் கொண்டு மெல்ல சிரித்துக் கொண்டன.

மழை பெய்து கொண்டே இருந்தது. எதிரே மற்றும் சுற்றும் முற்றும் அந்த காட்சியில் இருந்த மக்கள்.....கூட இருந்த தோழிகள்... என்று அவர்கள் இருவரைத் தவிர அந்த காட்சியே வழக்கம் போல ஓவியத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே...." பாடல் எதிரே இருக்கும் ஓவிய டீ கடையில் கசிந்து கொண்டிருந்தது.

மழையை இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவள் அவ்வப்போது அவனை பார்த்துக் கொண்டே மெல்ல சிரித்துக் கொண்டாள். அரும்பு மீசையில் நடுங்கிக் கொண்டே நகரும் துளி ஒன்றை கண் கொண்டே உருட்டினாள்.

"தென் மேற்கு பருவ காற்று தேனி பக்கம் வீசும் போது" பாடல் உடலை தானாக ஒரு குலுக்கு குலுக்கியது.

உள்ளே சொட்டும் மழையை உள்ளங்கைக்குள் எடுத்து எடுத்து வீசிக் கொண்டிருந்தான் அவன்.

"சின்ன சின்ன தூறல் என்ன என்னை கொஞ்சும் பாடல் என்ன" டீ கடைக்காரர் மழைப் பாடலாக போட்டு நனைந்து கொண்டிருந்தார். தேநீரின் சுவை குடிக்காமலே கிடைத்தது போல சிலிர்த்து கொண்டாள் மர்த்தனி.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. மழை சத்தம் சீராக சர் சர் என ஒரு பக்கமிருந்து மறு பக்கம் காற்றோடு இணைந்து வருவதும் போவதுமாகவே இருந்தது.

மழை நுழைந்து ஓவியம் கலைத்தது போல பட்டென்று கள் மழை ஒன்று விழுந்தது.

"டேய் ....... (பெயர்) இனி என்ன அக்கான்னு கூப்பிடாதாடா" என்றாள் மழையை பார்த்தபடியே...

(அவள் அவனை விட மூன்று வயது மூத்தவள். அவ்வப்போது பெயிலாகி படிப்பதால் இம்முறை இருவரும் ஒரே வகுப்பு படிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்)

மழையில் இருந்து கண்களை எடுத்தவன்....."ஏன்க்கா!?" என்றான். தொண்டை வார்த்தையில் நனைய தேடியது.

முதன் முறையாக அவள் கண்களை அத்தனை அருகினில் அப்போது தான் பார்த்தான். ஜுவாலை எரியும் மழை வண்டென மின்னின. குண்டு கன்னம் பிளக்க பெரும் உதடு நகர்ந்து சிரித்தது.

அவள் கண்ணில்.... அவன் கடந்த மாதம் ஊர் திருவிழாவுக்கு ஆடிய ரெக்கார்ட் டேன்ஸ் வந்து போனது... படிப்பில் முதல் மாணவன் என்று ஊரார் பேசும் சொற்கள் காதில் கேட்டன. யாரோ தொலைத்த பணத்தை ஊர் பெரியவரிடம் கொண்டு கொடுத்தது...அவன் கடிதம் எழுதிக் கொடுத்து அதைக் கொடுத்து சேர்ந்த காதல்கள் ஊருக்குள் எத்தனையோ இருக்கிறது அதனாலோ... யாருமற்று தனித்து கிடக்கும் அவன் வாழ்வின் இருண்மைக்குள் அவன் அவ்வப்போது அழுது தொலைப்பது.... அநாதை சிறுவனாக யார் வேலை சொன்னாலும் செய்து கொடுத்து விட்டு அவர்கள் தரும் டீயை வாங்கி வாசலில் நின்றே குடிப்பது... என்று எது அவளை அவன் பக்கம் அக்காவாக இருந்து காதலியாக மாற்றியது என்று தெரியவில்லை. வந்து விட முடிவெடுத்து விட்டால்.... காதல் அப்படித்தான். எப்படியாவது வந்து விடும்... அவள் காதலில் விழுந்திருந்தாள்.

"உன்ன லவ் பண்றேன்...."

*

நேரம் இரவு 11.30

ஊத காத்து உசிர் எடுக்கும் போல.... ஊரே அசைந்து கொண்டிருந்தது. காற்றோடு காற்றாக நிறமற்று ஒளிந்து கொண்டே வந்தான். கதவு தட்டப்பட்டது. வாயும் வாயும் பேசிக் கொள்ளும் முத்தத்தை போன்றது இந்த தட்டல். கதவு திறந்தது.... பின் அடைத்துக் கொண்டது. உள்ளே வெளிச்சம் பொங்கியது.

*

வெயில் கால நடு மதியம் ஒன்று

சந்திரன் போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தான். ஒரு வயது சின்னவன் என்றாலும் அவனை எதிர்த்து அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான் அவன்.

"ஏன்டா நாயே.... உனக்குன்னு இந்த ஊர்ல ஒருத்தன் இல்ல.... அடிச்சு கொன்னா கூட ஒருத்தன் கேக்க மாட்டான்......நீ இவ்ளோ வாய் பேசறியா...!" ஒரு சொல் ஒரு குத்து. ஒரு குத்து மறு சொல். போட்டு புரட்டிக் கொண்டிருந்தான் சந்திரன். வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வட்டம் போட்டு நிற்க கழுகு கொத்தி தின்று கொண்டிருந்தது.

மடித்து விடப்பட்ட அரைக்கை சட்டை. சட்டையின் கீழ் முனை இரண்டும் முடிச்சு போட்டு "புதியபாதை பார்த்திபன்" ஸ்டைலில் இருந்தது. கெண்டங்கால் வரை பாவாடை... ஆனாலும் "சிறையில் பூத்த சின்ன மலர் விஜயகாந்த்" ஸ்டைலில் சுழன்று சுழன்று விழுந்த உதை சந்திரனை தாறுமாறாக கிழித்தது.

"மர்த்தனி உனக்கு தேவை இல்லாதது... உள்ள வராதா.... உங்கம்மா கிட்ட சொல்லிடுவேன்...." வாய் கிழிந்து வழிந்த ரத்தத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டே சிறு நடுக்கத்தோடு பேசிய சந்திரன் அவனையுமறியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

"சொல்ல சொல்லவே கிழிந்த இடத்தையே மீண்டும் கிழித்தாள்.

"போயி செத்து போன எங்கப்பன்கிட்டயே சொல்லுடா.... .................. பையா......"

அதற்கு பின் ஏகப்பட்ட பீப் போட வேண்டியதாகி விட்டது. கன்னம் அதிர... அடித்து துவம்சம் செய்து விட்டாள்.

"அடிடா பாக்கலாம்.... அவனை இனி எவனாவது தொட்டிங்க................... அறுத்து விட்ருவேன்...."

"டேய் மர்த்தனி கால தூக்கும் போது ......... ஜட்டி தெரிஞ்சுதுடா.... மஞ்சள் கலரு...."

"அய்யொ நான் பாக்கலியே....."

சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்த சண்டை பார்த்த கூட்டத்தில் அந்த இருவர் கன்னத்தில் பட்ட பட்டென நாலு முறை அறைந்தான் அவன். அவள் முறைக்க இன்னும் ரெண்டு அறை சேர்த்து விழுந்தது.

ஊர் இளசுகள் கூட்டம் ஆவென பார்த்துக் கொண்டே இருந்தது.

"மர்த்தனி உங்கம்மா வருது" என்று கூட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து சத்தம் வர மர்த்தனி ஓடத் துவங்கினாள். அவள் நடப்பது ஓடுவது எல்லாமே... சிவரஞ்சனி என்றொரு நடிகை இருந்ததே அதுபோலவே இருக்கும். அல்லது மர்த்தினி போல சிவரஞ்சனி இருக்கிறாரோ என்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவனும் பின்னால் ஓட ஆரம்பித்தான்.

அவன் கால்பந்து விளையாடுகையில்.....கில்லி விளையாடுகையில்......அவனுக்கென்று அவள் கைகள் மட்டுமே தட்டிக் கொண்டிருந்தது. கரி குழம்பு...மீன் குழம்பு... பாயசம்....தேங்காய் பால் என்று டிபன் பாக்ஸுக்குள் மறைத்து மறைத்து கொண்டு வந்து கொடுத்து சில சமயம் ஊட்டி விட்டும் போனது. தலைவலி என்று சொன்ன இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து தைலம் தேய்த்து விட்டு போனது........என்று எல்லாமே அவன் மனதுக்குள் பட்டாம் பூச்சிகளாக விரிந்தன.

அவள் ஓடி சென்று நின்ற இடம்... மெட்டாங்காட்டு பனை மரத்தின் வெளி. பின்னால் ஓடி வந்தவனை சட்டென்று நின்று வாரி அணைத்து திக் திக்கென்று முத்தமிட துவங்கினாள்.

"என்ன பாக்கற......இந்த முத்தம் கூட இல்லன்னா வயசான காலத்துல யோசிக்கறதுக்கு எதுவுக்கே இருக்காதுடா... தம்பி..." என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டவள்.... "சாரி என்னங்க..." என்று சொல்லி பழுப்பு பல் சிரிக்க நிறைந்தாள். அவனும் கட்டிக் கொண்டான். முத்தமிட தெரியாமல் கடித்து வைத்தான்.

மழை வந்தால்.... குடை கொண்டு வருவாள். வெயில் வந்தால் தாவணி குடை பிடிப்பாள். குளிருக்கு மார்பு தருவாள். பனி வந்தால்... முத்தமிடுவாள்.

*

நேரம் இரவு 11.30

மழையோடு துளியாக கதவை தட்டினான்.

வழக்கத்துக்கு மாறாக கதவு உடனே திறந்து கொள்ளவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான்.

இம்முறை சற்று சத்தமாகவே தட்டினான்.

யோசித்த கதவு திறந்தது. இருட்டுக்குள் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் கட்டித் தழுவிக் கொண்டார்கள். உள்ளே வெளிச்சம் இல்லை. வழக்கமாக எரியும் விளக்கு எரியவில்லை. சற்றைய மௌனம் ஏதோ புரிபட முடிவுக்கு வந்தவளாக அவனையும் தள்ளிக் கொண்டே வெளியே வந்தாள். யோசிக்காமலே கதவு அடைத்துக் கொண்டது. இருவரும் நாற்பதில் இருக்கும் தோற்றத்தை வீதி மெர்குரி வெளிச்சம் காட்டிக் கொடுத்தது. நரை கூடி... இளமை தொலைந்திருந்த தேகத்தில் தோளோடு தோள் சேர்ந்து கொண்டு வீதியில் நடக்கத் தொடங்கினார்கள். வழக்கமாக அமரும் மீராயி திண்ணையில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒன்றாக கடைசியாக பார்த்த "மின்சாரக் கனவு" படத்தை பற்றி பேசிக் கொண்டார்கள்.

"இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னே அதிகாலை அனுப்பி வைப்பேன்..." காதில் முணு முணுத்தாள்.

சுருட்டை முடி கொண்ட அவள் கூந்தல் புசு புசுவென்று தலை நிறைய தலைக்கு மேல் பூத்திருந்தது. தலை தடவியவன் நெற்றியில் முத்தமிட்டான். ஊர் அடங்கிக் கிடந்தது. இரவுக் கண்களில் அவர்கள் முதன் முறையாக விழுந்தார்கள். அமரா பாட்டியின் வீட்டு வாசலில் நின்று கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டார்கள். அவள் அவனை துரத்தினாள். அவன் கொஞ்சம் தொப்பை கொண்டு ஓடினான். அவளுக்கு மூச்சிரைத்தது. சுய பச்சாதாப சிரிப்பை அவளே உணர்ந்தாள்.

கிணற்று மேட்டில் கொஞ்ச நேரம் அமர்ந்தார்கள். கோவில் திண்டில் தூங்குவோர் தூங்குவதாக. கிணற்றுக்குள் எட்டி பார்த்தான். எத்தனை நாள் இதே கிணற்றில் இருவரும் மாறி மாறி நீர் இறைத்திருப்பார்கள். ஒரு சேர ஒரே எண்ணம் இருவர் மனதிலும் ஏழ மாறி மாறி சிரித்துக் கொண்டார்கள். கிணற்றுக்குள் மிதக்கும் நிலா சாட்சி.... கையில் தாலியை கொடுத்து........"கட்டு" என்றாள்.

"எனக்கும் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லடா... ஆனா... ஒரு மனநிறைவு வர மாட்டேங்குது....'

......................................

"உனக்காகவேதான் நான் வாழறேன்... இத்தனை வருஷம் வாழ்ந்துட்டேன்...உனக்கு எந்த பிரச்சினையும் வர கூடாதுங்கிறதுக்காக தானே மறைஞ்சு வாழ்றேன்... இனியும் அப்டித்தான்...இந்த வட்டம் கட்டமெல்லாம் நாமளே போட்டுக்கறது தான.... அதுல ஒரு நிம்மதி.. அவ்ளோ தான். இந்த கயிறு ஒரு விஷயமே இல்ல... ஆனா வரலாறு ரெம்ப முக்கியம் கவிஞரே.... நூறு வருசத்துக்கப்றம் உன்ன பத்தி எவனாது தேடினா... நூல் பிடிச்ச மாதிரி நானும் வந்துடுவேன்ல.... அப்போ ஒரு கெத்தா இருக்கணும்ல...கவிஞருக்கு பொண்டாட்டின்னா சும்மாவா......? கட்டுங்க தம்பி" என்று கன்னம் கடித்தாள்.

சிரித்துக் கொண்டே கட்டினான். ஏனோ இதுவரை தாலி கல்யாணம் என்று அவளும் கேட்டதில்லை. அவனும் பேசியதில்லை.

காதுக்குள் அப்போ "பஸ்ட் நைட்டு" என்று கிசு கிசுத்தான்.

"போங்க தம்பி..... இது 2000 மாவது நைட்டு" என்று வாய் பொத்தி சிரித்தாள்.

பழுப்பு பல் தெரிய அத்தனை அழகாய் இருந்தாள். எங்கிருந்தெல்லாமோ வந்து ஒட்டிக் கொண்ட பேரழகை அவ்விரவில் கண்டான். தேஜஸ் மினுங்கியது. உடல் வனப்பு 40 வயதுக்கு பொருள் விளக்கியது.

"கன்னத்தில் முத்தமிட்டால்.......உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி................. உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா...................... உன்மத்தமாகுதடி........."

அவள் முத்தமிட்டாள். புளிய மரத்தின் அடியில்.... நீண்ட வருடங்களுக்கு பின் ஊர் காற்றின் சுவாசத்தை உணர்ந்தார்கள். 20 வருட ரகசிய வாழ்வின் கைகள் காற்றின் திசையில் கோர்த்து இசையானது.

"என்னமோ தெரியல... இன்னைக்கு தைரியம் வந்திருச்சு... உனக்கு பயமா இருக்கா...." என்றாள்.

"ம்ம்ம்ம்..... நீ பேசுறது நடந்துக்கறது எல்லாம் வித்தியாமா இருக்கு.... உன்ன பார்த்தா கடவுள் மாதிரி தோணுது" என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதான். அவள் குண்டு முகத்தில்.....பால்நிலா சொட்டும் இரவை பிய்த்து பிய்த்து அமுதூட்டுபவள் போல் நின்றாள். ஒரு தேவதையின் பிரசவம் அரங்கேறிக் கொண்டிருப்பதை போன்று தோன்றியது.

"இன்பக் கதைகளெல்லம்.................உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ............................ அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம்.................. உண்டோ....?"

கண்கள் துடைத்து விட்டு வாயோடு வாய் வைத்தாள்.

"ஒவ்வொரு முறையும் எச்சில் புனிதமாகும் முத்தத்தை அவளே செய்கிறாள்" என்று நாவில் கவிதை எழுதினான்.

அவளை சுற்றி வெண்ணிறம் பளிச்சிட்டது....

"எல்லா புதிரும் அவிழ்ந்த மாதிரி இருக்குடா.... எல்லாமே நிறைஞ்ச மாதிரி இருக்கு....இந்த கிணறு கூட நிறைஞ்சிருச்சோ என்னவோ......"

அவர்கள் படித்த பள்ளியின் நுழைவாயிலில் படபடக்கும் காற்றில்... கை கோர்த்துக் கொண்டு நின்றார்கள். வெறித்த இருட்டில் நிறம் பாயும் சிரிப்பை அவள் அவிழ்த்தாள். மஞ்சு வீட்டின் ஜன்னல் பக்கம் நின்று ஒரு கணம் மாறி மாறி பார்த்தாள். சசி வீட்டு பின்புறம் மெல்ல நடந்தார்கள். முருகன் தியேட்டர் முன்னால் இருக்கும் பாலத்தின் மேல் சற்று நேரம் அமர்ந்தார்கள். கண்ணபிரான் மாட்டு கொட்டகைக்கு முன்புறம் இருந்த கோவிலில் சாமி கும்பிட்டார்கள். பெரிய வீதியில் அவள் ஓட அவளை துரத்திக் கொண்டு ஓடினான் அவன். பைத்தியம் பிடித்த பால் வீதியில் செத்த ஆத்துமாக்களை போல அலைந்தார்கள்.

நேர் படிக்கட்டுகள் இல்லாமல் கைவிடப்பட்ட ரேடியோ ரூம் மேல் தளத்துக்கு பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் கம்பிகள் பற்றி சற்று எம்பி ஜன்னல் முகப்பு நீளும் சதுர ஸ்லேபில் இருகைகளையும் ஊன்றி ஒரே எம்பலில் மேலே சென்று மேல் தளம் சென்றாள். அப்படிதான் அதற்கு வழி. கட்டடம் ஊறிக் கிடந்தது.

"இந்த காலத்து இளசுகள் யாருமே இங்க வர்றது இல்ல போல" என்றாள். "அவனவனுக்கு செல்போன்ல சாகவே நேரம் சரியா இருக்கு" என்று வறட்டு புன்னகையை தந்தான்.

"இரு ஒரு தடவ உன்ன தூக்கி பாக்கறேன்" என்று அவனை தூக்கினாள். சிறு வயதில் அடிக்கடி தூக்கிய நினைவு. அது அம்மாவின் அரவணைப்பை உயரத்தியது போல இருந்தது. நீள் வெளிச்சம் வீதி முழுக்க சிவந்திருப்பதை ரேடியோ ரூம் மேல் தளத்தில் இருந்து பார்ப்பது மலை உச்சியில் இருந்து எட்டி குதிக்க போகும் பறவை பார்ப்பது போலவே இருந்தது. சற்று நேரம் அணைத்தபடி ஊரையே பார்த்தார்கள்.

காதலால் காதலோடு வாழுதல் பேரழகு தான் என்பது போல வழி மாறிய பறவை ஒன்று வானம் கிழித்து போய்க் கொண்டிருந்தது.

அவளை வீட்டில் விட்டு விட்டு தட தடக்கும் காற்றில்... ஒரு மின்காந்த அலையைப் போல காணாமல் போனான். "என்ன சத்தம் இந்த நேரம்"- மனதுக்குள் கேட்டது...

*

முன் கதை முடிந்தும் முடியாமலும் இருக்க...அதற்கு மேல் வைக்க முடியாது என்று யார் யாரோ எடுத்த முடிவுகள் பலமாகி......பாடியை தூக்கிக் கொண்டு ஊர் போனது. பின்னால் ஊர் மக்கள் காதில் அலைபேசி வைத்துக் கொண்டு... மனதில்... வேறு வேறு சிந்தனைகள் பூண்டு... நடந்தும் பைக்கில் ஊர்ந்தும் சென்று கொண்டிருந்தார்கள். அதே கூட்டத்தில் தான் அவனும் அழுகை அடக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அவனுக்குள் முந்தைய இரவின் முடிச்சுகள் வேக வேகமாய் அவிழ்ந்தன. அவன் கண்களில் அவளின் நிறம் மினுங்கத் துவங்கியது. மர்த்தனியின் பேரன்புக்கு கிணறு நிறையும் பாக்கியமே. இனி ஊர் மனதின் ஆழ் மனதில் கட்டப்பட்டிருக்கும் தாலிக்கு சாயம் போவதில்லை.

அவன் யாரென்று தேடுவதை விட அவள் ஆத்மா சாந்தியடை பிராத்திப்போம்.....

*

கதவு தட்டப்பட்டது.

கதவு தட்டப்பட்டுக் கொண்டே இருந்தது....

மழைக்காலம்.....வெயில் காலம்.. பனிக்கலாம்......குளிர் காலம் என்று அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் அவன் தட்டிக் கொண்டே இருக்கிறான்....காதலின் குறியீடாக யாருமற்று தானுமற்று கிடந்தது மர்த்தினியின் வீடு.

முகமற்றவனுக்கு காதலும் பெரிது. அதன் கதவும் பெரிது..!

- கவிஜி

Pin It