சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தின் வடமேற்கில் உள்ள மு.சூரக்குடி, முறையூர், அரளிப்பாறை, அய்யாபட்டி, செம்ணிப்பட்டி கிராமங்களுக்கு மருதிப்பட்டிதான் அரசாங்கத்தால் அறிவிக்கப்படாத பேருந்து நிலையம். வெளியூர்களுக்குச் சென்று வரும் இக்கிராம மக்கள் காரைக்குடி திண்டுக்கல் பிரதான சாலையில் உள்ள மருதிப்பட்டியில் இறங்கி அங்குள்ள தேனீர் கடையிலோ, இளநீர் கடையிலோ, குளிர்பானக் கடையிலோ இளைப்பாறிவிட்டு அவரவர் வசதிக்கேற்ப, சில்லரையாளர்கள் தானியிலும், சிலர் மிதிவண்டியிலும், பலர் நடராசா வண்டியிலும் அவரவர் ஊர் உள்ள திசையைப் பார்த்து செல்வார்கள்.

sad manஇக்கிராமங்களைச் சுற்றிலும் கருவ மரங்கள்தான் அதிகம். பெரிய ஏரிகளிலும், குளங்களிலும், விவசாய நிலங்களிலும் கருவ மரங்கள் மண்டியிருக்கும். 1960’களுக்குப் பிறகுதான் இந்த விவசாய பூமியில் கருவ மரங்கள் எட்டிப்பார்த்தன. அதற்கு முந்தைய காலங்களில் இப்பகுதிகளில் விவசாயம் செழித்தோங்கி இருந்தது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் நெற்கதிர்களும், கடலைக் கொடியும், ஆடு மாடுகளும் இம்மக்களை வாழவைத்தது. 1950’க்குப் பிந்தைய ஏதோ சில ஆண்டுகள் பருவ மழை பொய்த்துவிட்டதாம். ஊரே பஞ்சத்தில் வாடியது. வீட்டில் இருக்கும் இருப்புகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கால்நடைகளுக்குத் தீனி போட முடியாமல் அவைகளை மேலூர் சந்தையில் குறைந்த விலையில் விற்கத்தொடங்கினர். உழவு மாடுகள் மட்டுந்தான் பாக்கி. அவைகளையும் சிலர் விற்றனர். குடிதண்ணி ஊருணியும் வற்ற தொடங்கியது. வீட்டில் விதை நெல் மட்டுந்தான் மீதி. பெரும்பாலானோர் பஞ்சம் பிழைக்க வெளியூரோ, வெளிநாடோ செல்லத் திட்டமிட்டனர். ஆனால், வெளிநாடு செல்ல பணம்?

அந்நேரத்தில்தான் அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு உதவி வந்தது. அது உதவியா? உபத்தரவ‌மா? என்பதை அப்போதும் சரி இப்போதும் சரி யாரும் அறியவில்லை. ஏதோ ஒரு வடநாட்டு நிறுவனம் கல் குவாரி அமைக்க அக்கிராமங்களை முற்றுகையிட்டது. “உங்கள் நிலங்களை கொடுத்தால் நல்ல விலைக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்வோம்” என்றது அந்நிறுவனம். முக்கால்வாசிக்கு மேலானோர் தங்கள் நிலங்களை ஏக்கருக்கு ஏற்ப முப்பது, நாற்பது வருடங்களுக்குக் கல் எடுத்துக்கொள்ள எழுதி கொடுத்தனர். அவர்களுக்கு வெளிநாடு செல்ல தேவையான பணமும் கிடைத்தது. ஆண்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு கூலி வேலைக்குச் சென்றனர். பெண்கள் தங்கள் நிலங்களில் அந்நிறுவனம் நிறுவியிருக்கிற குவாரிகளில் கூலி வேலைக்குச் சென்றனர். இங்கும் அங்கும் சேர்ந்து நல்ல சம்பாத்யம். இப்படியாக இக்கிராம மக்களுக்கு தொற்றியது வெளிநாட்டு மோகம்.

குத்தகை முடிந்தும் அந்நிலங்களில் கல் இருப்பது தெரிந்தால் நிறுவனத்தார்கள் மேலும் பல ஆண்டுகளுக்கு எழுதி வாங்கிக் கொள்வார்கள். சுற்று வட்டாரங்களிலும் கிளை பரப்பியது அந்நிறுவனம். 2005ம் ஆண்டு இறுதி வரை கணக்கிட்டால் இம்மக்கள் விவசாயத்தை மறந்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அனைவரும் வெளிநாடு சென்று சம்பாதிக்கத் தொடங்கினர். அது இன்று வரை தொடர்கிறது. தூர் வாராமலும், உழவு காணாமலும் கிடந்த ஏரிகளிலும், வயல்களிலும் கருவ மரங்கள் மண்டின.

மருதிப்பட்டியில் இருந்து நடராசா வண்டியில் போகிறவர்கள் பெரும்பாலும் சாலையோரத்தில் சுமைதாங்கி கல்லுக்கு அருகில் உள்ள ஒண்டி கருப்பண்ண சாமியை வணங்கிவிட்டு திருநீறு எடுத்துக் கொண்டுதான் செல்வார்கள். வழிநெடுகிலும் கருவக்காடுகள் இருப்பதாலும், திடீரென்று குவாரிகளில் வேட்டு வைப்பதாலும் இயல்பாகவே பயந்த சுபாவம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். அவர்கள் “ஏதும் தன்னை அண்டக் கூடாது” என வேண்டிக் கொண்டும், பயம் அறியாமல் இருக்க கருப்பண்ண சாமி பாடலைப் பாடிக் கொண்டும் நடக்க ஆரம்பிப்பார்கள்.

“கருவமர காட்டுக்குல்ல; ஒத்தாசைக்கி ஆருமில்ல.
ஒத்தையில நா போகையில; ஒண்டிப்புலி வழி மறிக்கும்.
ஒண்டிகட்டையா நானிருப்பே; நொண்டி கருப்பண நெனச்சுக்குவே.
ஓ…னு கொரலெடுத்து; நொண்டி கருப்பண அலச்சிக்கிட்டு,
ஒண்டிப்புலி நேர் எதிக்கே; ஒத்தைக்கொத்த நானிருப்பே…
கருவமர காட்டுக்குல்ல…”

மேலோட்டமாக எண்ணிப்பார்த்தால் மருதிப்பட்டியில் பதினைந்து இருபது வீடுகளுக்கு மேல் தாண்டாது. இவ்வீடுகளில் குடியிருப்பவர்கள் இங்குள்ள கடைகளின் முதலாளிகளாவோ அல்லது கடைகளில் வேலை செய்யக்கூடியவர்களாவோ இருப்பார்கள். இரண்டு தேனீர் கடை, குளிர்பான கடை, மிதிவண்டி சீர் செய்யும் கடை, மளிகைக் கடை, தொலைப்பேசி நிலையம், சாப்பாட்டுக் கடை, பெட்டிக் கடை போன்ற கடைகள் மருதிப்பட்டியில் உள்ளது. மருதிப்பட்டியைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில் வேலை செய்யும் ஆட்களையும், இங்கு பயணத்திற்காக வரும் கிராம மக்களையும் சார்ந்து இக்கடைகளின் வியாபாரம் உள்ளது.

மருதிப்பட்டிக்குள் வரும் மக்கள் அந்தக் கடைக்குச் சென்று தேனீர் சாப்பிடாமல் வரமாட்டார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். மொத்தம் இரண்டு தேனீர்க் கடைகள்தான் மருதிப்பட்டியில். ஒன்று சிங்கம்புணரிக்காரன் வைத்திருக்கும் கடை. அவ்வளவு சுத்தமாக இருக்கும் இவன் தயாரிக்கும் தேனீர். காலையில் எழுந்து சுத்தமாகக் கோப்பையைக் கழுவி, அவனது வீட்டு மாட்டிலியே பால் கறந்து, அடுப்புத் தீ மூட்டி, தூளைத் தண்ணீரில் காயவைத்து, பசும்பாலைக் கொதிக்க வைத்து, இரண்டையும் சேத்துக்கலக்கி, முந்தின நாள் அலசிப்போட்ட வடித்துணியை எடுத்து வடிகட்டி முதல் கோப்பைத் தேனீரை ஒண்டி கருப்பண்ண சாமிக்கு கொடுத்துவிட்டு கடையில் வந்து உக்காருபவன்தான், மாலை வரை ஈ ஓட்டிக்கொண்டிருப்பான். இடையிடையில் மட்டும் “சொர்… சொர்…” என டீ ஆத்தும் சத்தம் கேட்கும். எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அந்தக் கடையின் சுவை இந்தக் கடையில் இல்லை. இவன் கடையை விட அந்தக் கடையில் விலையும் குறைவு, சுவையும் மிக அதிகம். ஆனால், ஆரோக்கியம் எங்குள்ளது என யாரும் நினைப்பதில்லை.

அந்தக் கடைக்காரன் பெயர் என்னவென்று இக்கிராமங்களில் உள்ள யாருக்கும் தெரியாது. அவர் அங்கு கடை வைத்துப் பதினெட்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அவ்வூரில் அவன் மனைவி மக்களைத் தவிர வேற யாருக்கும் அவரைப் பற்றிய முழு விவரம் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. கிராம மக்கள் அவரை நாயர் என்றே அழைப்பார்கள். கடையின் பெயர் ‘டி.டி.கே நாயர் நயம் சாயா ஷாப்’.

ஊமையனின் பூர்வீகம் மதுரை சத்திரப்பட்டியை அடுத்துள்ள காஞ்சரம்பேட்டை. நாயர் கடையின் வேலைக்காரன். பதினாலு பதினைந்து வயது இருக்கக்கூடிய சிறுவன். நல்ல கருப்பு தோல். கருவாயன் என்றும் சிலர் அழைப்பார்கள். நன்றாக உழைக்கக் கூடியவன். இவனின் பெயரும் இக்கடையின் வாடிக்கையாளர்களில் யாருக்கும் தெரியாது. முதலாளி நாயருக்கு எப்போதாவது ஊமையனின் பெயர் ஞாபகத்துக்கு வரும். அப்பன் கிடையாது. வயல் வரப்பு போன்ற சொத்துக்களும் இல்லை. ஆத்தா மாரியன்னை காஞ்சரம்பேட்டை அம்பலம் வீட்டின் வேலைக்காரி. அவளின் சம்பளமென்பது சாப்பாடு போட்டு, தங்க கொட்டகை குடுத்து, ஆண்டுக்கொரு புதுத்துணி. இந்த லட்சணத்தில் அவள் ஊமையனை வைத்து எப்படி கஞ்சி ஊத்துவது? அவனை அம்பலம் பண்ணையில் சேர்த்துவிட்டாலும் ஒழுங்காக இருப்பதில்லை. அவளின் தூரத்து அண்ணன் முறை சொல்லி மருதிப்பட்டியில் இந்த நாயர் கடையில் வந்து விட்டுப் போனாள். மகனின் மேலே அவளுக்குப் பாசம் அதிகம். வாராவாரம் தொலைப்பேசியில் அவனின் குரலை கேட்பாள். அந்நேரத்தில் அவர்களின் உரையாடலைக் கேட்டால் நெகிழ்ந்து போவோம்.

ஊமையனுக்கு சம்பளம் என்று ஒன்று கிடையாது. இருந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு 8.30 மணிக்குள் நாயர் கடையை மூடிவிடுவார். கடைக்குள்ளே ஊமையனும் இருக்க வேண்டும். காலை நாயர் கடை திறக்கும் போது எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கழுவி சுத்தப்படுத்திய பின்புதான் ஊமையன் உறங்குவான். அவனுக்கு வாய்தான் பேச முடியாதே தவிர காது நன்றாக விளங்கும். அவன் பிறவி ஊமையில்லை. சிறு வயதில் அவனின் மச்சானோடு சேர்ந்து பள்ளிக்குப் போய் வருவான். யாரும் சொல்லிக் கொடுக்காமலே எழுதப் படிக்க கற்றுக்கொண்டான். கடையில் இருக்கும் போது எதையாவதைப் படித்து கொண்டிருப்பான். வார நாளிதழ்களில் வரும் தொடர்களை ஒன்று விடாமல், நாயருக்குத் தெரியாமல் தனியாக எடுத்து வைத்துப் படிப்பான். அவருக்குத் தெரியும் போது “என்டா சோலிய பாக்காம…” என்று ஆரம்பித்துப் புரியாத மலையாளத்தில் கத்துவார். நாயர் வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் தமிழைக் கற்று கொள்ளவில்லை. அவருக்கு அதில் விருப்பமில்லை போலும். பேசுவதைப் புரிந்து கொள்வார்.

வார நாளிதழ்கள் ஊமையனுக்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முந்தியவைதான் கிடைக்கும். தினசரி நாளிதழ்களைத் தவறாமல் படித்து விடுவான். நன்றாக எழுதவும் செய்வான். ஒரு டவுசர், ‘டிப்ஸ்’ என்ற பெயரில் படித்தவர்களும் வெளியுலகம் தெரிந்தவர்களும் கொடுக்கும் சில்லரைகள், ஒரு வெளிநாட்டு பனியன், எழுத பயன்படுத்தும் ஒரு பேனா, மனதில் தோன்றுவதை எழுதி எழுதி குவித்திருக்கும் காகிதங்கள் ஆகியவைகளை வைத்திருக்கும் தகர பெட்டியும், பெட்டிக்கான பூட்டும், இவன் அணிந்திருக்கும் டவுசரும் ஒரு சட்டையும், மாரியன்னையும்தான் இவனது சொத்துக்கள். அந்த வெளிநாட்டுப் பனியன் சூரக்குடி இளைஞர் சுகுமார் கொடுத்தது. அதைக் கொடுத்து ஏழு மாதங்கள் ஆகியும் அணியாமல் வைத்திருந்தான். சத்திரப்பட்டி பிறவியெடுப்புக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் அவனும், அந்த பனியனும். பெட்டியில் கிடக்கும் சில்லரைகளை மாரியன்னை வரும் போது அவளின் கையில் திணித்து விடுவான். அதுதான் ஆத்தாளுக்கு அவனால் குடுக்க முடிந்த தொகை. “என்னால இவ்வளவுதான் முடிஞ்சது” என்று மனதினுள் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே கொடுப்பான். மகனைப் பார்த்துவிட்டு செல்லும் போது ஊமையன் கொடுத்த சில்லரைகளைக் கையில் வைத்து கண்ணீரோடு பார்த்துக்கொண்டு செல்வாள், மாரியன்னை. கண்ணீரோடு பார்ப்பதால் அது அவளின் கண்களுக்குப் பெருகித் தெரியும். சத்திரப்பட்டி பிறவியெடுப்புக்கு மட்டும்தான் ஊமையன் ஊருக்குச் செல்வான். மற்றபடி இரவிலும், ஓண‌த்திற்கும், மலையாள புத்தாண்டு விஸுவிற்கும் மட்டும்தான் நாயர் கடை பூட்டியிருக்கும்.

அன்று அவன் கையில் கிடைத்த ‘லெமூரியக் கூட்டம்’ என்ற இரண்டு வாரங்களுக்கு முந்தைய வாரப் பத்திரிக்கையில் புதிதாகத் தொடங்கவுள்ள துணிக்கடை வழங்கும் வாசக‌ர்களுக்கான போட்டி வந்திருந்தது. இரண்டு கேள்விகள். ஒன்று பொது அறிவு கேள்வி. மற்றொன்று அந்தத் துணிக்கடைக்கு ஒரு ஸ்லோகன் எழுத வேண்டும் என்பது. அதில் ‘SMS வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.06.2005 இரவு 12 மணிக்குள்’ என்று இருந்தது. இவன் அந்த பத்திரிக்கையைப் பார்த்ததோ 25.06.2005 மதியம் 2 மணிக்கு. இரவு 7 மணிக்குள் அவன் யாரிடமாவது அலைப்பேசி வாங்கி SMS அனுப்பினால்தான் உண்டு. பரிசுத்தொகை 10 பேருக்குத் தலா ஒவ்வொருவருக்கும் ரூ.5000 மற்றும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு வேட்டியோ அல்லது பட்டுச் சேலையோ. ஊமையனின் விருப்பம் பட்டு சேலை; ஆத்தாளுக்கு.

பொது அறிவு கேள்விக்குப் பதில் தெரியும். ஸ்லோகனையும், யாரிடம் அலைப்பேசி வாங்கலாம் என்பதையும் யோசிக்கத் தொடங்கினான், ஊமையன். அக்கிராமங்களில் யார் யாரிடம் அலைப்பேசி உள்ளது என்பதை சுலபமாக எண்ணி விடலாம். ஊமையனுக்குச் சட்டென்று சுகுமாரின் நினைப்புதான் வந்தது. அவன் காலையில்தான் திருப்பத்தூர் சென்றான். சுகுமார் எப்போது வருவான் என எதிர்பார்க்கத் தொடங்கினான். சுகுமார் சில நாட்களுக்கு முன்னர்தான் சற்று விலை கூடுதலான அலைப்பேசி வாங்கியிருந்தான். யாருக்கும் உதவும் மனப்பான்மை சுகுமாருக்கு உண்டு. அதிலும் ஊமையனின் மேலே அவனுக்குப் பிரியம் அதிகம்.

ஒரு காகிதத்தை எடுத்து தனக்கு தோன்றும் வரிகளையெல்லாம் எழுத தொடங்கினான். மதிய நேரமாதலால் கடைக்கு யாரும் வரவில்லை. நாயரும் வீட்டிற்குச் சென்று இருந்தார். சாப்பாடு முடித்து சிறிய தூக்கத்திற்குப் பின் மாலை 5 மணி போல் கடைக்கு வருவார். ஊமையனும், டீ மாஸ்டரும்தான் கடையில். வேகவேகமாகவும் அழகாகவும் எழுதினான். எழுதிக்கொண்டிருக்கும் போதே பிறவியெடுப்புக்கு 5,000 ரூபாயை ஆத்தாவிடம் கொடுப்பதை எண்ணிக் கொண்டான். இதுதான் ஒரு திருவிழாவிற்கென்று அவர்கள் வம்சத்திலேயே அதிகம் செலவழிக்கப் போகும் பணம். அவனுக்குள் பெருமையாக இருந்தது. தனக்கு பரிசு கிடைத்துவிட்டது என்றே நினைக்கத் தொடங்கினான். எப்போதுமே அவனின் மேலே அவனுக்கு அபார நம்பிக்கை.
கடைக்கு வெளியே சாலையின் மேலே சிறிது உயரத்தில் கானல் நீர் பளீரென்று தெரிந்தது. சில பேருந்துகள் கடந்து போய்க்கொண்டிருந்தது.

“வெயிலடிக்குதுனுட்டே ஒரு பயலூ எறங்க மாட்ரானோ…?” அப்போது கடந்து போன ராசரத்தினம் பேருந்தைப் பார்த்து ஊமையனிடம் கேட்டார் டீ மாஸ்டர்.

ஊமையனிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. அவனின் மூஞ்சியைப் பார்த்து “என்னத்ததே அப்படி குறுகுறுனு எலுதி கிலிக்கிறியோ போ… மசுராண்டி…”

தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது. தொண்டையைச் செருமி, காறி “தூஊஊஊ…” என துப்பும் சத்தம். அக்கிராம மக்களுக்கும், நிச்சயமாக அக்கடையின் வாடிக்கையாளர்களுக்கும் கண்டிப்பாகத் தெரியும், வருவது செம்ணிப்பட்டி படைத்தலைவன் என்று. விறுவிறுவென கடைக்குள் வந்தார். அவரைப் பார்த்தவுடன் ஊமையனுக்கு ஒரு நிம்மதி “அலைப்பேசி கிடைத்து விட்டது” என்று. எட்டு வருடங்களாக மலேசியாவில் இருந்து சம்பாதித்தவர் படைத்தலைவன். அவருக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் குழந்தை மனம் படைத்தவர். நல்ல வசதியான ஆள். சில மாதங்களுக்கு முன்னர்தான் தனது மகனை வெளிநாடு அனுப்பி வைத்தார். அவர் உள்ளே நுழைந்தவுடன் மாஸ்டர் டீ போட்டு வைக்க ஊமையன் கோப்பையை அவர் முன் வைத்தான். எழுதி வைத்த காகிதத்தை எடுத்து வந்து படைத்தலைவன் முன்னால் நின்று கொண்டு “பே…” என்றான். அவர் தேனீர் கோப்பையை எடுத்து ஒரு தடவை “ஸ்ர்ஸ்ர்” என்று உறிஞ்சி பலகையில் வைத்துக்கொண்டே தலையைப் பின்னுக்கு இழுத்து “என்னடா…” என்றார். ஊமையன் கட்டைவிரலை மேலேயும், சுண்டு விரலை கீழேயும் விரித்து மற்ற விரல்களை உள்ளங்கைக்குள் மடித்து காதின் மீது வைத்து, இடது கையால் “தா…” என்றான்.

படைத்தலைவன் “போனா… எதுக்குடா…?”

ஊமையன் மீண்டும் கேட்க…

“என்னத்துக்குனு சொல்றா…தாரேன்”

அவன் நெஞ்சுக்கு நேரே இரண்டு கை கட்டை விரல்களாலும் தாளம் போட்டு மீண்டும் கேட்டான்.

படைத்தலைவன் “டீய நிம்மதியா குடிக்க விட்ரானா பாரு…” என்று சட்டைப் பைக்குள் கையைவிட்டு அலைப்பேசியை எடுத்து “இந்தாடா… என்னமோ பண்ணித்தொல” என்று ஊமையனின் கையில் திணித்தார். அவன் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டு பக்கத்துப் பலகையில் சென்று அமர்ந்தான். காகிதத்தை எடுத்து எந்த ஸ்லோகனை அனுப்பலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தான். மாஸ்டர் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு அலைப்பேசியைப் பார்த்துக்கொண்டே இருந்தார். ஊமையனிடம் இருந்து அதை வாங்கி அடுப்புக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார். ஊமையன் ஒரு ஸ்லோகனை தேர்ந்தெடுத்தான். தேனீரைக் குடித்து முடித்ததும் படைத்தலைவன் “டேய் போன கொண்டாடா” என்றார். ஊமையன் “இரு…இரு…” என்பது போல சைகை செய்துவிட்டு மாஸ்டரிடம் போனான். மாஸ்டரின் ஈரக்கைகளுக்குள் அலைப்பேசி ஒளியில்லாமல் இருந்தது.

மாஸ்டர் சந்தேக முகத்துடன் அதை பார்த்துக்கொண்டே இருந்தார். ஊமையன் இதை பார்த்துக் கோவமடைந்துவிட்டான். மாஸ்டரின் கையைப் பிடித்து உதறி அவரின் கையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதையும், தண்ணீர் உள்ளுக்குள் சென்றால் அது வேலை செய்யாது என்பதையும் சைகையால் சொன்னான். மாஸ்டர் பயந்து அலைப்பேசியை ஊமையன் கையில் திணித்து “நீனே கொண்டேயி குட்றா…நாந்தே இப்புடி பண்ணேனு சொல்லாத. மனுசே கத்தியே கொன்றுவாரு. உன்னயத்தே ரொம்ப புடிக்கும்ல. போடா…” என்று முதுகை அழுத்தி தள்ளிவிட்டார். ஊமையன் தலையில் அடித்துக்கொண்டு விறுவிறுவென்று படைத்தலைவன் அருகில் சென்று அலைப்பேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

படைத்தலைவன் அலைப்பேசியை எடுத்து பார்த்து கோவமடைந்து “ஒக்காளி ஓங்கிட்ட போயி குடுத்தே பாரு… நல்லாருந்த போன இப்படியா பண்றது… பெரிய ம…சுரு மாரி வாங்கிட்டு போன… ஒக்காளி ஒன்னயெல்லா போயி அந்த நாப்பய நாயரு வேலக்கி வச்சுருக்கான் பார்ரா…” என்று கத்திக்கொண்டே வெளியில் சென்றார்.

ஊமயன் அதை பொருட்படுத்தவேயில்லை. இதை போல எத்தனையோ முறை அவரிடம் ஊமையன் திட்டு வாங்கியிருக்கிறான். மாஸ்டர் ‘தப்பித்தோம்’ என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டான்.

வெகுநேரமாகியும் யாரும் கடைக்கு வரவில்லை. மாலை நேரத்தில் கூட்டமும் அதிகமாகும். நாயரும் இருப்பார். அதனால் யாரிடமும் பேசவும் முடியாது. யாரிடம் வாங்குவது என்ற எண்ணமே ஊமையனின் மூளையில் ஓடியது. அந்நேரத்தில் நாயரும் வந்துவிட்டார். மாலை மணி சரியாக 4:45. குவாரிகளில் வேலை நேரம் முடிந்து ஆட்கள் திரும்பி கொண்டிருந்தனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், ‘பொழுது சாய்வதற்குள் வீடு திரும்ப வேண்டும்’ என்பவர்களும் பேருந்துகளில் இருந்து இறங்க ஆரம்பித்தனர். வேலை ஆரம்பித்துவிட்டது.

ஊமையனும், மாஸ்டரும் மாடாக உழைத்துக் கொண்டிருக்க நாயர் அதைவிட அதிக வேகத்துடன் கல்லாவை நிரப்பிக் கொண்டிருந்தார். கடைக்குள் அமர்ந்திருக்கும் ஆட்களுக்கும், வெளியில் நின்று கொண்டிருக்கும் ஆட்களுக்கும், தேனீர் போட்டு வைத்திருக்கும் மாஸ்டருக்கும் என இவர்களுக்கிடையில் ஊமையன் அலைந்து கொண்டிருந்தான். உண்மையில் இந்த பரபரப்புகளுக்கிடையில் அவனிடம் போட்டி பற்றிய நினைவு அவ்வப்போதுதான் வந்தது. அந்த நினைவில் நேரத்தைக் குறித்த பயம்தான் அதிகம் கலந்திருந்தது. கூட்டம் சிறிது சிறிதாகக் குறைந்தது.

கூட்டம் குறைந்ததும் ஊமையனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. மாஸ்டரை ஒரு டீ போட சொல்லி, “ஆட்டோ சிவா கேட்டாரு” என்று சைகையில் நாயரிடம் சொல்லிவிட்டு, டீயை எடுத்துக்கொண்டு தானி ஓட்டுனர் சிவாவைப் பார்க்க சென்றான், ஊமையன்.

சிவா “நா டீ சொல்லவே இல்லையடா… நீ பாட்டுக்க எடுத்து வர… நாயருக்கு நல்லா சம்பாதிச்சு கொடுக்கிரியாக்கும்…” என்று சொல்லிக் கொண்டே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த சிவா டீயை எடுத்து உறிஞ்சினான். அவன் தேனீர் அருந்தும் வரைதான் ஊமையனுக்கான நேரம். சிறிது தாமதமானாலும் நாயர் ஒரு விசாரணைக் குழுவே வைப்பார். சிவா சொன்னதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவனின் சட்டைப் பையில் கை விட்டு அலைப்பேசியை எடுத்தான், ஊமையன். கேள்விக்கான பதிலையும், ஸ்லோகனையும் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய எண்ணுக்கு அனுப்பியேவிட்டான், ஊமையன். சிவா தேனீர் குவளையையும், சில்லரைகளையும் ஊமையனிடம் நீட்ட, ஊமையன் அலைப்பேசியை சிவாவிடம் நீட்டினான். சிவா கையைத் தொட்டவுடன் அலைப்பேசி மெல்லியதாக சத்தம் போட்டது. ஊமையன் ஆவலோடு அவசரமாக வாங்கிப் பார்த்தான். அதில் “pending” என ஆங்கிலத்தில் ஒரு தகவல் காட்டியது. ஊமையன் வேகவேகமாக பாக்கி தொகையைப் பார்த்தான். அதில் 1.45 பைசாதான் இருந்தது.
ஊமையன் “கார்டு வாங்கிப் போடு” என அஞ்சலைக் கடையைப் பார்த்து கை நீட்டி சொன்னான்.

சிவா “அதுக்கிட்ட காலேலேயே காசு கொடுத்துட்டேண்டா… ஆனா நாளைக்கிதே ஏறுமாம்… நெட்டு வேல செய்யலேனு சொன்னுச்சு…” என்றான்.

ஊமையன் விரக்தியாக முனகிக் கொண்டே போனான். இருளத் தொடங்கியது. அவனிடம் நெருக்கத்தோடும், அன்போடும் உள்ள ஆட்களிடம் அலைப்பேசி கேட்டுவிட்டான். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. சுகுமார் மட்டும்தான் பாக்கி. ஆட்கள் நடமாட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

நாயர் கடையை மூடுவதற்குத் தயாரானார். மாஸ்டர் தேனீர் கோப்பைகளைக் கழுவி கொண்டிருக்க, ஊமையன் தண்ணீர் பிடித்து பெரிய டிரம்மை நிரப்பிக் கொண்டிருந்தான். நாயர் மாஸ்டரை அழைத்து அன்றைய சம்பளத்தைக் கொடுத்தார். மாஸ்டர் பணத்தை வாங்கி சட்டையில் வைத்துவிட்டு, பால் சட்டியை இறக்கி, அடுப்பை அணைத்தார். ஊமையனும் ட்ரம்மை நிரப்பி முடித்தான்.

தலை கலைந்து, முதல் மூன்று சட்டைப் பொத்தான்கள் கழண்டிருக்க, முகமெல்லாம் வியர்த்து, நிறை போதையில் கடைக்குள் நுழைந்தான் பிரணாப். பிரணாப் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள கல்குவாரியில் மேலாளர் பணி. மிகுதியான குடிப்பழக்கம் உள்ளவன். “குவாரி முதலாளி இரவு வருவார்” என்ற தகவல் கிடைத்ததால் போதையைத் தணிக்க நாயர் கடைக்குள் டீ சாப்பிட நுழைந்தான், பிரணாப். மாஸ்டருக்கு அருகில் சென்று “ஸ்ஸ்ஸ்டோராங்…” என்று எச்சி தெறிக்கும் வண்ணம் சொன்னான். ஊமையன் அவன் கையைப் பிடித்து இழுத்து, நாற்காலியில் அமர செய்தான். கையிரண்டையும் மடித்து மடியில் வைத்துக்கொண்டு, பின்புற சுவற்றில் வாயைத் திறந்து கொண்டே சாய்ந்து கிடந்தான். ஊமையன் டீயை கொண்டு வந்து அருகில் வைத்தான். நாயர் அன்றைய வரவு செலவுகளை எழுதிக் கொண்டிருந்தார். ஊமையன் ஒரு முறை அவரைப் பார்த்துவிட்டு, பிரணாப் மீது பார்வையைச் செலுத்தினான். பிரணாப் தலையை மட்டும் ‘வெடுக்கென்று’ தூக்கி தேனீர்க் குவளையை எடுத்தான். உதட்டு இடைவெளிகளில் எச்சில் படர்ந்திருக்க, ‘ஸ்ஸ்ர்ர்ர்…’ என அருவருக்கத்தக்கும் வகையில் டீயை உறிஞ்சினான், பிரணாப். ஊமையன் பல்வேறு குழப்ப மன நிலையுடன், பயம் மிகுந்து பிரணாப்பின் சட்டைப் பையில் இருந்து “கீழே விழுவோமா…? வேணாமா…?” என யோசித்துக்கொண்டிருக்கும் அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஊமையன் மெதுவாக பிரணாப்பின் தோளைத் தொட்டான். பிரணாப் கண்கள் சுழல “என்ன” என்பது போல் பார்த்தான். ஊமையன் நாயரை ஒரு முறை பார்த்துவிட்டு, திரும்பி மாஸ்டரைப் பார்த்தான். மாஸ்டர் ஊமையனிடம் “வாங்குடா…” என்று பல்லைக்கடித்து, கழுத்தைச் சிறிது முன்னுக்கு நகர்த்தி, உடம்பை இறுக்கம் கொள்ள செய்து, வலது கையை பாதி நீட்டிச் சொன்னார். இது ஊமையனிடம் உள்ள பாசத்தாலும், அவன் மீது இருந்த இரக்கத்தாலும் சொன்னது. மதியத்தில் இருந்தே அவனின் தவிப்பை மாஸ்டர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். பிரணாப்பிடம் வாங்கினால்தான் உண்டு. நாயர் கணக்கு எழுதி முடித்ததும் ஊமையனை உள்ளே தள்ளி கடையைச் சாத்தி விடுவார். “யாருமே இல்லாத நாலு சொவத்துக்குள்ள அவே யார்ட்ட போனு வாங்குறது” என்பது மாஸ்டருக்குப் புரிந்துதான் பிரணாப்பிடம் வாங்கச் சொன்னார்.

ஊமையன் வலது கையின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை உள்ளுக்குள் மடக்கி வாயின் அருகே கொண்டு சென்று “போதயில இருக்கியானே” என்றான். மாஸ்டர் நாயரைப் பார்த்துவிட்டு “அதனால ஒன்னூ இல்லடா… நாளைக்கி நா சொல்லிக்கிரே… வாங்குடா மயிராண்டி” என்று முன்பு போலவே சத்தம் இல்லாமல் முழுக்க சைகையை மட்டுமே முன்னிருத்தி சொன்னார். பிரணாப் இன்னொரு முறை தேனீரை உறிஞ்சிவிட்டுக், குவளையைத் தேனீர் வெளியில் தெறிக்கும் வண்ணம் ‘டப்…’பென்று மேசையில் வைத்துவிட்டு “நாந்தா ஒலகத்துக்கே ராசா” என்பது போன்ற தோரணையில் ஊமையனை மீண்டும் ‘என்ன’ என்பது போல பார்த்தான்.

ஊமையன் தயக்கத்துடன் “செல்லு வேணும்” என்பதை உணர்த்தினான். பிரணாப் கீழே குனிந்து அலைப்பேசியை பார்த்துவிட்டு மெதுவாக நிமிர்ந்து ஊமையனைப் பார்த்தான். ஊமையனின் மேல் வைத்த கண்பார்வையை எடுக்காமல், மேசையில் ஊன்றியிருந்த இடது கையை சட்டைப் பையினுள் நுழைத்து அலைப்பேசியை எடுத்து கர்வமும், பெருமையும் கலந்து உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு ஊமையனிடம் அலைப்பேசியைக் கொடுத்தான் அந்த பாரி வள்ளல். நாயர் பார்ப்பதற்குள் அனுப்பவேண்டிய எண்ணுக்கு பதிலையும், ஸ்லோகனையும் அனுப்பிவிட்டான் ஊமையன்.

வாரம் தவறாமல் ‘லெமூரிய கூட்டம்’ பத்திரிக்கையை சேகரித்தான். ‘எந்த வாரத்தின் பத்திரிக்கையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என்பது போட்டி வெளிவந்த அன்றைய பத்திரிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தாலும் ஆர்வ மிகுதியால் அனைத்து வாரங்களிலும் அந்த பத்திரிக்கையைச் சேகரித்தான், ஊமையன். போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து வரும் முதல் பத்திரிக்கையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த இரண்டு மாதங்களும் அவன் கனவுலகில்தான் அதிகம் இருந்தான். சத்திரப்பட்டி பிறவியெடுப்பு அவன் கண் முன்னே வந்து கொண்டிருந்தது. அதில் அவனுக்குதான் முதல் மரியாதை.

இரண்டு வாரங்கள் கழிந்து அந்த நாள் வந்தது. இன்று வரும் பத்திரிக்கையில்தான் வெற்றியாளர்களும் வருவார்கள். சுகுமாரிடம் பணம் கொடுத்து திருப்பத்தூரில் ‘லெமூரிய கூட்டம்’ பத்திரிக்கை வாங்கி வரச்சொன்னான். “நா வாங்கியாரே… நீ பெரிய மனுசே மாரி பணத்த நீட்டாம உள்ளே வைய்டா” என்று பாசம் கலந்த கோவத்துடன் அடிக்கப்போவது போலக் கையை ஓங்கி கூறினான், சுகுமார். மிகவும் மகிழ்ச்சியுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ஊமையன். “ஓவர் மெதப்புல இருக்கடா” என்றார் மாஸ்டர். அதற்குப் பதிலாக மிகவும் அழகாகக் கிண்டல் செய்வது போல புன்னகைத்தான்.

மூன்று சின்ன யானை (TATA ABE) வண்டிகளில் பல வர்ணங்கள் கலந்த கொடிகளுடனும், ஒலிப்பெருக்கி குழாய்களுடனும், வண்ண விளம்பர காகிதங்களுடனும் ஆட்கள் மருதிப்பட்டியில் வந்து இறங்கினார்கள். அவர்கள் ஏதோ சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. மறுநாள் அவ்வழியாக வரும் அவர்களின் தலைவரை வரவேற்கும் விதமாகக் கொடிகள் கட்டவும், குழாய்கள் வைப்பதற்கும், வீர வசனங்கள் உள்ள காகிதங்களை ஒட்டுவதற்கும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு நாயர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர். சுகுமார் கையில் பத்திரிக்கையுடன் பேருந்தில் இருந்து இறங்கினான். சாதி சங்கப் பாடலை ஒலிப்பெருக்கி அலறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டம் அடுத்த ஊரைப் பார்த்துச் சென்றது. லெமூரிய கூட்டம் கடைக்குள் வந்து மேசையில் படுத்தது. அதனருகில் சுகுமார் அமர்ந்திருந்தான்.

நாயர் வெளியில் எழுந்து சென்றார். ஊமையன் மிக வேகமாக புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். வெற்றியாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் பெயர்களுக்குள் பிரணாப் என்ற பெயரும் ஒளிந்திருந்தது. ஊமையனைப் பிடிக்க முடியவில்லை. துள்ளி குதித்தான். கடைக்குள்ளே ஓடினான். மாஸ்டரும், சுகுமாரும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மாஸ்டர் “இந்தர்ரா… டேய் நாயரு வர்ராருடா…” என்று மிரட்டி நடித்து பார்த்தான். ஊமையனிடம் அது எடுபடவில்லை. சுகுமார் “மாஸ்டர்… நா போரே. ஓ பாடு… அவே பாடு…” என்று புறப்பட்டான். அவனை வழிமறித்து “பத்திரிக்கை அலுவலகத்துத் தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து ‘எப்போ காசு குடுப்பீங்க’னு கேளு” என்றான் ஊமையன். சுகுமாரும் அவனது அலைப்பேசியில் இருந்து அழைத்து விசாரித்ததில் அவர்கள் “வெற்றியாளர்களுக்கு அவர்களின் அலைப்பேசி எண்ணில் அழைத்து முன் கூட்டியே தெரிவித்து விட்டதாகவும், இப்போது பத்திரிக்கையில் உள்ள அறிவிப்பு வாசர்களுக்காகத்தான் எனவும், வெற்றியாளர்களுக்குப் பணமும் அனுப்பிவிட்டதாகவும்” கூறினார்கள். சுகுமாரின் மூலம் இதைக் கேட்ட ஊமையன் மனதில் பிரணாப்பைப் பற்றிய சந்தேகம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. சுகுமார் புறப்பட்டுச் சென்றான். வெளியில் இடைவிடாமல் ஒலிப்பெருக்கி கத்திக்கொண்டே இருந்தது.

வழக்கம் போல மாலை நேர பரபரப்பான வியாபரத்துக்குப் பின்னர் நாயர் கடையுடன் சேர்ந்து அன்றைய பொழுதும் அமைதி காணத் தொடங்கியது. அதீத போதையுடனே பிரணாப் அன்று வந்தான். “டீ வேண்டாம்” என்றான். ஊமையன் அவனருகில் சென்று ‘லெமூரிய கூட்டம்’ பத்திரிக்கையைக் காண்பித்துப் பரிசு அறிவிப்புப் பக்கத்தை பிரித்துக் காண்பித்தான். பிரணாப் சிறிது கூட அலட்டி கொள்ளாமல் வலது கையை மேலே தூக்கி “போடா… போடா” என்பது போல விசிறினான். மாஸ்டர் முகத்தில் ஊமையன் மீது உள்ள பரிதாபத்தையும், மனதில் உள்ள பரிதவிப்பையும் வெளிக்கொணர்ந்து, பாய்லரைக் கழுவி கொண்டே ஊமையன், பிரணாப் உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஊமையன் கோவத்தின் உச்சிக்குச் சென்றான். ஆனால், உண்மையில் அந்த உச்சியின் உயரத்தை விட அதிகமாகவே உள்ளுக்குள் அழுதான். அழுகையை வெளிக்காட்டாமல் “ப்ரெய்ஸ்ச குடு” என்றான். பிரணாப் சிறிது கூட குற்ற உணர்வு இல்லாமல் இருந்தான். மாஸ்டருக்குப் புரிந்துவிட்டது “ஊமையேன் மல்லுக்கட்டதே போறான்” என்று. மாஸ்டர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஊமையனும், பிரணாப்பும் புரண்டனர். ஊமையனின் கோவம் அவன் உடம்பின் ஆக்ரோசத்திலும், கண்களில் கண்ணீருடன் அவன் பேச முயன்று வார்த்தைகள் வராமல் “பே… ஙே… ப்பே… ங்ஙே…” என்ற ஒலிகளிலும் தெரிந்தது.

ஊமையன் பிரணாப்பைப் புரட்டிக் கொண்டிருக்க, மாஸ்டரும், நாயர் “டா… டா…” என்று கத்திக்கொண்டும் அவர்களைப் பிரிக்க ஓடினர். ஊமையனைப் பிடித்து இழுத்து அறைந்தார் நாயர். மாஸ்டர் பிரணாப்பை அழைத்துச் சென்றார். “பட்டி… பட்டி” என ஊமையனைத் திட்டிவிட்டு பிரணாப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார், நாயர். ஊமையன் மேசையின் அருகிலே நின்று கொண்டிருந்தான். மாஸ்டர் அவனை உள்ளே இழுத்தும் அவன் கல்லாக நாயரையும், பிரணாப்பையும் பார்த்துக் கொண்டிருந்தான். நாயர் “ஏதூ ப்ராப்ளம் வேண்டா சாரே…” என கெஞ்சினார். பிரணாப் ஊமையனைப் பார்த்து விரலை நீட்டி மிரட்டும் தோரணையிலும், அவனுக்குத் தெரிந்த தீய வார்த்தைகளையும் உபயோகித்தான். நாயர் பிரணாப்பை வெளியில் இழுத்துச் சென்றார்.

ஊமையன் கல்லாக நிற்க பிரணாப் ஊமையன் பக்கமாகத் திரும்பி எச்சில் தெறிக்க சொன்னான் “த்தாவ்டியாயாயா… ப்பயன்…”

வெளியில் சாதி சங்க பாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

- பிச்சையம்மான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It