“சாகுறதுக்குள்ள ஆம்பளைங்க முன்னாடி நாற்காலியில குந்திப்புடணும். எப்படியெல்லாம் குந்த முடியுமோ, அப்படியெல்லாம் குந்திப்புடணும். ஆம்பளை மாதிரி, ராஜா மாதிரி, ஆபீஸ்சர் மாதிரி கால்களை நீட்டி, மடக்கி குந்தணும். நல்லா நிமிர்ந்து, திமிரா, நெஞ்சு புடைக்க, அத்தனை சனமும் வாய்ப்பிளந்து பார்க்கிற மாதிரி குந்தணும்..................

  old lady 320சிவப்பாயிக்கு இந்த ஆசை துளிர் விட்டது நேற்றோ, இன்றோ அல்ல. அவளுக்கு இது அரை நூற்றாண்டு கனவு. அந்த கனவு அவளுக்குள் வேர் பிடித்து, துளிர் விட்டு, கிளையடித்து, பூத்து, காயத்து பரந்துப்போயிருக்கிறது

  ஒரு நாளைக்கு நான் ஆம்பளைக்கு முன்னாடி குந்தத்தான் போறேன் எனும் நம்பிக்கை வந்ததன் பிறகு சிவப்பாயி ஆம்பிளைங்க குந்துவதை நின்னு நிதானித்து பார்க்க தொடங்கிவிட்டாள். அவள் பார்த்த வகையில் குந்துவதில் எத்தனையோ வகை இருக்கு. முதன் முதலா ஆம்பிளைக்கு முன்னாடி குந்தும் போது யார் மாதிரி குந்தலாம் என்பதுதான் அவளுடைய கணக்கு.

  அவள் பொறந்த ஊர்ல நாட்டாமைக்காரர் நாற்காலியில் குந்தும் அழகை பாவாடை, சட்டை வயசுல ரசித்திருக்கிறாள். அவர் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டுக்கொண்டு, மெல்ல ஆட்டிக்கொண்டு, விரல் இடுக்கில் எச்சில் துப்பிக்கொண்டு, “அப்பறம் என்ன? பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாமா? இல்ல வேறு யாரும் வரணுமா? “எனக் கேட்கும் தொனியை பிஞ்சுக்கண்கள் மினுமினுக்க ரசித்திருக்கிறாள். அந்த நாட்டாமைக்காரரை அம்மா, அப்பாவிடம் சொல்லி மெச்சிருக்கிறாள் “அப்பா......... நீ ஒரு நாளைக்கு அப்படி உட்காருப்பா “அரிசி பற்கள் தெரிய மெல்ல சிரித்துக்கொண்டு சொல்லிருக்கிறாள். அதற்கு அவள் அம்மா சொன்னாள் “அடி சிறுக்கி உன் அப்பன் என்ன நாட்டாமைக்காரரா? அந்த பெரியவருக்கு எடுபிடி ஆளு “என்றபடி மகளை வாறி அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தாள். அம்மா சொன்னதைப்போலதான் மறுநாள் பஞ்சாயத்தில் அப்பா நடந்துக்கொண்டார். நாற்காலியை தூக்கிக்கிட்டு ஓடி வந்து, ஒரு மரத்தடியில் வைத்து, தனது கைத்துண்டால் துடைத்து, கையைக் கட்டிக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் சிவப்பாயி காற்று போன பலூனைப்போல ஆகிவிட்டாள்.

    அப்பா கையைக் கட்டிக்கொண்டு பவ்வியமாக நிற்க, அந்த நாட்டாமைக்காரர் கால்களை ஆட்டிக்கொண்டும், மீசையை நீவி விட்டுக்கொண்டும் ஒரு பக்கம் சாய்ந்து குந்திருப்பதை பார்க்கும் போது அவளுடைய மனசு எழுந்து அடங்கியது. தகப்பன் குந்த முடியாத நாற்காலியில் அத்தனை பேருக்கும் முன்னாடி ஒரு நாளைக்கு குந்திப்புடணும் எனும் வைராக்கியம் அன்றைக்குத்தான் அவளுக்குள் முதல் வேர் விட்டது. இன்று வரை அந்த வைராக்கியம் இளம்பச்சையாக, ஈரமாக, மனசெங்கும் ஆக்ரமித்த மரமாக நிறைந்துப்போயிருக்கிறது.

   தாய்மாமனுக்கு வாக்கப்பட்டு பேரன், பேத்தி எடுத்துவிட்டாள் சிவப்பாயி. இதுநாள் வரைக்கும் அவளாலே ஆசை தீர ஒரு நாற்காலியில் குந்த முடியலை. அவள் வீட்டில ஒரு கட்டில் இருக்கு. அதில் ஏறி குந்தி ஒத்துகை பார்க்க நினைப்பாள். யாராவது ஒரு ஆம்பிளை பார்த்து தன்னை ரொம்ப ராங்கிக்காரினு நினைச்சிட்டால்................? ஆசையை எச்சிலாக, கசப்பு மருந்தாக, மாத்திரையாக விழுங்கிக்கொள்வாள்.

   பொம்பளைங்க கூனிக்குறுகி புருசன் கால்களை கட்டிக்கிட்டு கீழே குந்தியக் காலமெல்லாம் காற்றோடிப் போய் பல வருசமாச்சு. இன்னைக்கு பொட்டப்பிள்ளை பொறந்தாலும், மொத வருசம் பொறந்த நாளை நாற்காலியில் குந்த வச்சிதான் கொண்டாடனுங்கிற காலத்துக்கு வந்தாச்சு. இருந்தாலும் சிவப்பாயி இன்னும் ஒரு நாற்காலியில குந்த முடியாதது அவளுக்கு யாரோ விட்ட சாபம் போல எட்டாக்கனியாக இருக்குது.

  போன வருசம் அவள் ஊர் பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழா நடத்துனாங்க.. அந்த விழாவில் ஒரு பொடியன் ராசா வேசம் போட்டுக்கிட்டு, மீசையை முறுக்கிவிட்டுக்கிட்டு நாற்காலியில குந்தினான். அதைக்கண்டதும் அவளுக்குள் கெலிப்பு, மனசு குதிகால் ஆட்டம் போட்டது. இப்படியும் குந்தலாமா? நீண்ட வருசத்துக்கு பிறகு அதை உள்ளுர ரசித்தாள். ரசிக்க மட்டுமா செய்தாள்? அத்தனைப்பேருக்கு முன் கைக்கொட்டி ஆரவாரம் செய்தாள். அந்த நாட்டாமைக்காரரெல்லாம் அந்த பொடியனுக்கிட்ட பிச்சை வாங்கணும். இதுவரைக்கும் காணாத அப்படியொரு கம்பீரம், தலை நிமிர்வு, அதிகாரப்பாவனை அப்பப்பா............ குந்தினால் இவன் மாதிரி குந்தணும். இல்ல, அவன் காலை தொட்டு கும்பிடணும்.

  ஒரு நாள் சிவப்பாயி புருசனிடம் சொல்லிக்கிட்டிருந்தாள். “ஊர் ஆம்பளைங்க நட்ட மரம் மாதிரி நின்னுக்கிட்டிருக்க, நானு நாற்காலியில குந்தணும்.“

   அவளை கடு, கடுவென பார்த்து வைத்தார் பேச்சியன். இவளுக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை ? அதுவும் சாகப்போகிற காலத்துல...............

  “குந்துனா…………. யாரு மாதிரி குந்துவேன் தெரியுமா?”

  “யாரு மாதிரி……………?“

  “போன வருசத்து பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் ஒரு பொடியன் ராசா வேசம் போட்டுக்கிட்டு குந்துனான் பாருங்க, அவனை மாதிரி குந்துவேன்“

  “நீ உசிரோட இருக்கிற காலத்துல இது நடக்கப்போறதில்ல. ஒரு வேள எனக்கு முன்னாடி நீ செத்துப்போனா, உன்னை நான் அப்படி குந்த வைக்கிறேன் “என்றபடி சிரித்து முடித்தார் பேச்சியன். அவளது கிழட்டு முகத்தில் பிழிந்த துணைியைப்போல மேலும் பல சுருக்கம் விழுந்தது.

              பேச்சியனுக்கு பொஞ்சாதியை நினைக்க வியப்பாக இருந்தது. இதுகாலம் வரைக்கும் பேச்சியனே அப்படியெல்லாம் குந்திப்புடணுமுனு நினைச்சதில்லை. குடியானவனுக்கு முன்னாடி கைக்கட்டி நிற்கும் அவர் தலையை சொறிய மட்டும் கையை விரிக்கிறதோட சரி. இவளால் எப்படி இப்படியெல்லாம் நினைக்க முடியாது? நினைப்பு பொழப்பை கெடுக்காமல் இருந்தால் சரி......... என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

   டண, டண…………………………. தம்பட்டம் காதை கிழிக்குது. இரண்டு வாலிபர்கள் நாக்கில் கட்டை விரலை உரசி ஹோ........... இந்தா, ஆ............. இந்தா என்றவாறு குத்தாட்டம் போடுறான்க. வாய் கட்டப்பட்டு, பத்து மாலைகள் கழுத்தில் தொங்க, தலை முடி அள்ளி முடியப்பட்டு, நெற்றியில் ஒத்த ரூபாயோடு, நிமிர்ந்த தலையாக நாற்காலியில் குந்திருக்கிறாள் சிவப்பாயி. அவள் புருசன் பேச்சியன் வாயில் கையை வைத்தபடி நின்னுக்கிட்டிருக்கார்.

    படுதாவில் பந்தல் போடப்பட்டிருக்கு. பொண்டுக பத்து பேர் வயித்திலும் மார்பிலும் அடிச்சிக்கிட்டு அழுறாங்க. ஊர் ஆம்பிளைங்க, பொம்பிளைங்க அத்தனைப்பேரும் தன்னை மறந்து குழுமி நிக்குறாங்க. ஊர் பஞ்சாயத்து பெரிசுங்க கையைக்கட்டிக்கிட்டு சிலைமாதிரி நிக்குறாங்க.

   சிவப்பாயி ராசா வேசம் போட்ட அந்த பொடியனை மாதிரி, நெஞ்சை நிமிர்த்தி குந்திருக்காள்.

   “பாட்டியம்மா………………………நீங்க குந்திருக்கிறதை பார்த்தா சாமி மாதிரி தெரியுது. பொணம் மாதிரி கைகளை மடியில வச்சிக்கிட்டு,,தலையை தொங்கவிட்டுக்கிட்டு குந்துங்க”

   “அதெல்லாம் முடியாது. குந்துனா இப்படிதான் குந்துவேன். இல்ல கெழம்புறேன்.………………………” என்றபடி சட்டென எழுகிறாள் சிவப்பாயி.

   “பாட்டியம்மா……………….. அஞ்சு கோடி மொதலீடு போட்டு படமெடுக்கிறேன். முக்கியமான சீன் இதுதான். நான் சொல்றது மாதிரி குந்துங்க………………………” என்றபடி கையெடுத்து கும்பிடுகிறான் சினிமாக்காரன். சிவப்பாயிக்கு கொம்பு முளைக்குது.

 - அண்டனூர் சுரா

Pin It