அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஏசி கேன்டீனில் அப்போதைக்கு ஜாஸ்தி கூட்டம் இல்லைதான். கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், புல் தரையினூடே அமைந்த நடைபாதையில் தங்கள் ஆக்ஸஸ் கார்டுகளைத் தேய்த்தபடி போய் வந்து கொண்டிருந்த என்ஜினியர்களைப் வெறுமையாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். 

உண்மையில் அது அவன் வேலை செய்யும் அலுவலகம் அல்ல. அவன் வேறு நிறுவனத்தைச் சார்ந்தவன். நண்பனைப் பார்க்க‌ கொடுக்க கெஸ்ட் பாஸ் போட்டு வந்தவன் பதட்டமாய் அப்படி அமர்ந்திருந்ததற்கு வேறு காரணங்கள் இருந்தது. அவன் வந்து அமர்ந்த நேரம், பக்கத்து டேபிலை ஆக்கிரமித்திருந்த 10 பேர் கொண்ட கும்பலில் ஒருவன் காட்டிக்கொண்டிருந்த ஆல்பத்தில் ஒரு புகைப்படத்தில் ராகவன் மணைவி மாலதி ஒரு சுருண்ட தலைமுடிக்காரனின் இடது கையைப் பிடித்தபடி நின்றிருந்தாள், மற்றொரு புகைப்படத்தில் மாலதியும் அந்த சுருண்ட தலைமுடிக்காரனும் தங்களுக்கு இடையில் இருந்த டேபிலில் வலது கைகளைப்பிணைத்தபடி வலுக்கொடுத்து ஒருவர் கையை ஒருவர் தள்ளிப்பார்த்துக்கொண்டிருந்தனர். 

பார்த்த நொடியில் ராகவன் அதிர்ந்து போனான். அந்த புகைப்படங்களில் தெரிந்த இடங்கள் ஒரு கல்லூரியை ஒத்து இருந்தது. ஆனால், திருமணம் ஆன இந்த 3 மாதத்தில் மாலதி காண்பித்த அவளின் கல்லூரிப்புகைப்படங்களில் இந்த புகைப்படங்கள் இல்லை. பக்கத்து டேபிலை ஆக்கிரமித்திருந்த அவர்கள் ஆல்பங்களை மூடிவிட்டு ஏதேதோ பேசிச்சிரித்தபடி கலையத் தொடங்கினர். அந்த புகைப்படங்களைத் தவிர அவர்கள் பேசியது எதுவும் ராகவன் கவனத்தில் ஏறவில்லை. 

யாரந்த சுருண்ட தலைமுடிக்காரன்? மாலதியின் நண்பனா? அப்படியானால் மாலதி காட்டிய ஆல்பத்தில் ஏன் இவன் இல்லை? ஒரு வேளை முன்னால் காதலனோ? அப்படியானால் மாலதி முதலிரவன்று தனக்கு அப்படி யாரும் இல்லை என்று சொன்னது பொய்யா? ராகவன் பலவாறாக குழம்பினான். கலைந்து சென்று கொண்டிருந்த அவர்களை நிறுத்திக்கேள்வி கேட்க அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. என்னவென்று கேட்பது. என் மனைவி கைகோர்த்து நிற்பது யாருடன் என்றா கேட்பது? விஷயம் என்னவென்று தெரியாமல் அப்படி கேட்டால் நகைப்புக்குரியதாகிவிட்டாள்?. 

அவர்கள் கலைந்து ஆளுக்கொரு பக்கம் சென்றதைப்பார்த்தபின்பு, நண்பனைப் பார்க்காமலேயே கிளம்பினான். காரில் வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் அவனால் அந்த புகைப்படங்களைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. எப்போது வீடு வந்து சோபாவில் அமர்ந்தோம் என்று நினைவில் இல்லை. மாலதி இன்னும் அலுவலகம் விட்டு வரவில்லை. ஒருவேளை அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் அவனும் வேலை செய்கிறானா? என்னவோ அந்த நேரத்தில் மாலதி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகம் செல்வது நினைவுக்கு வந்து இம்சை செய்தது. 

எதற்கு குழப்பம். மாலதியிடமே இதுபற்றி கேட்கலாமே என்றால், மாலதி முதலிரவின்போது தனக்கு அப்படி யாரும் இல்லையென்று சொன்னது நினைவுக்கு வந்தது. இப்படிச் சொன்னவளிடமிருந்து, மீண்டும் கேட்டால் வரும் பதில் தன் கேள்விகளுக்கு முழுக்க பதில் சொல்லுமா தெரியவில்லை. இரவு 8 மணி சுமாருக்கு மாலதி வந்தாள். அலுவலகத்திலேயே சாப்பிட்டுவிட்டதாக சொல்லிவிட்டு படுக்க போய்விட்டாள். ராகவனுக்குத்தான் சாப்பாடு தூக்கம் எதுவும் பிடிக்கவில்லை. அந்த இரவு அவனுக்கு நீளமாக கழிந்தது. 

மறுநாள் அவன் அலைபேசியிலிருந்து ஒரு டிடெக்டிவ் ஏஜன்ஸி தொடர்பு கொள்ளப்பட்டது. விஷயத்தை ரகசியமாக வைத்துக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மாலதியை சில கான்டிட் காமிரா கண்கள் ரகசியமாக உளவு செய்தன. ஒரு வாரத்தில் மாலதியின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. அலுவலக வேலையைப் பார்த்தபடியே எடுத்தவள் முகம் வெளிறிப்போனது. பேசியவன் தன்னை சுதாகர் என்றும், தான் ஒரு டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துவதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவளை மயிலாப்பூரில் உள்ள ஒரு உயர்தர ஹோட்டலுக்கு வரச்சொன்னான். கறுப்பு பாண்ட், நீல சட்டை அணிந்து ஓரளவு சுமாரான ஆங்கிலம் பேசியவன் அங்கு அவளை சந்தித்தான், அவள் கைகோர்த்து நின்றதாக இருந்த ஃபோட்டோக்களில் ஒன்றை எடுத்து டேபிலில் வைத்துவிட்டு ஒரு லட்சம் தந்தால் ராகவனிடம் மாலதி பற்றி நன்நடத்தை சான்றிதழ் தருவதாக சொன்னான். மாலதிக்கு புரிந்துவிட்டது. வந்தவனிடம், யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு அந்த ஃபோட்டோவை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். அவன் மாலதி நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். 

மாலதி யோசித்தாள். ஹோட்டலில் சந்தித்தவன் இதையே தொழிலாக செய்பவன். அவன் பார்த்த பார்வையே சரியில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஃபோட்டோக்கள். அது கல்லூரி படிக்கையில் எடுத்தது. அந்த சுருண்டமுடிக்காரன் இவளின் நண்பன். பெயர் திவாகர். ஒரு காலத்தில் தன்னை காதலித்ததாக சொன்னவன். இவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். நட்பாக அவனுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களை ஃபோட்டோஷாப் உதவியுடன் மார்ஃபிங்கில் நெருக்கமாக இருப்பதுபோல் திரித்து எல்லோரிடமும் காட்டி மகிழ்கிறான் அந்த கயவன் என்று புரிந்து போயிற்று. ராகவனிடம் நடந்ததை விளக்கினாள். 

தன் தோழி கமலாவிற்கு ஃபோன் செய்தாள். அவளின் அப்பா ஒரு நகைக்கடை வைத்திருக்கிறார். கமலாவிடம் சொல்லி ஒரு 1 லட்சம் பெருமானமுள்ள தன் தங்க நகைகளை, தனக்கு தெரிந்த பையனை வைத்து சுதாகர் பெயரில், அவன் டிடெக்டிவ் ஏஜன்சி முகவரி தந்து விற்று பணம் வாங்கச்சொன்னாள். அந்த பணத்தின் சீரியல் நம்பர்களை கமலாவின் அப்பாவிடம் சொல்லி பில்லுடன் டாகுமென்டாக பெற்றுக்கொள்ளச்சொன்னாள். அந்த பணத்தை டிடெக்டிவ் ஏஜன்சியிடம் கொடுத்து மீதி ஃபோட்டோக்களை வாங்கினாள். தன் இன்னொரு தோழி விமலாவை இன்ஃபொர்மராக செயல்பட வைத்து திவாகர் திருடியதாக உடனே போலீஸ் ஸ்டேசன் சென்று போட்டுக்கொடுத்து ஃபோட்டோவையும் கொடுத்தாள். 

போலீஸ் வந்தது. திவாகரை வளைத்துப்பிடித்தது போலீஸ். திவாகர் மறுண்டான். பயந்தான். மாலதியுடன் அத்தனை நெருக்கமில்லை என்று வாதாடினான். அந்த ஃபோட்டோக்கள் தானே பொய்யாய் உருவாக்கியதாக ஒப்புக்கொண்டான். நகைக்கடையில் பெற்ற சீரியல் நம்பர்களை தொடர்ந்து போலீஸ் சுதாகரை அமுக்கியது. சுதாகரை அடித்துத் துவைத்ததில் உண்மையை ஒப்புக்கொண்டான். 

அவ‌னிட‌மிருந்து பெற்ற‌ ப‌ண‌த்தில் போலீஸ் மாலதியிடம் ந‌கையை மீட்டுக்கொடுத்த‌து. டிடெக்டிவ் ஏஜென்சியை பூட்டி சீல் வைத்தது. இன்ஃபார்ம‌ராக‌ செய‌ல்ப‌ட்ட‌ விம‌லாவிற்கு 5% க‌மிஷ‌ன் அளித்த‌து. 

ராக‌வ‌ன் மால‌தியின் சாம‌ர்த்திய‌ம் க‌ண்டு வாய‌டைத்து நின்றான். 

- ராம்ப்ரசாத்

Pin It