கன்னங்களின் இருபுறத்திலும் விழுந்திருந்த ஒடுக்குகளும் முகத்தின் ஆங்காங்கே ஊடுருவிக் கிடக்கும் சுருக்குக் கோடுகளுமாக சட்டையணியாத அந்த வெற்றுடலின் மேல் துருத்திக் கொண்டு நிற்கும் மார்புக் கூடு, ஒட்டிப் போயிருந்த அவரது வயிற்றில் பசியைத் தவிர வேறொன்றுமில்லை. ஒல்லிக் குச்சி போலக் காட்சியளிக்கிறார் தப்பாட்டத்தான். அறுபது வயதைத் தொட்டாயிற்று வாலிபமும் வந்து போயிற்று மிச்சமிருப்பது என்னவோ இந்த வயோதிகம்தான். கிட்டத்தட்ட வாழ்வின் விளிம்பு நுனியை எட்டி விட்டதாக உணர்வார். அறுபது வயதைத் தொட்ட போதிலும் அதே நடை, அதே மிடுக்கு இன்னமும் மாறவில்லை.

தப்பாட்டத்தானின் ஆத்தா அப்பன் வெச்ச பெயர் என்னவோ பழனிச்சாமிதான். இவருக்கு விவரம் தெரியாத வயதிலேயே அப்பா இறந்து போக, அம்மாவின் நிழலில்தான் வளர்ந்து வந்தார் அந்த நிழலும் இவரது பதிமூன்று வயதில் மாயமாகிப் போனது. அம்மா இறந்து போனாள் அவளது சடலத்தை பாடையேற்றி ஊர்வலம் போனபோதுதான் பழனிச்சாமி தப்பட்டையை கையிலெடுத்தார்.

அம்மா இறந்து போனபோது குடிசையில் உறுப்படியாக இருந்தது இந்தத் தப்புதான் "இது நம் பாட்டன் காலத்துத் தப்பு" என அம்மா அடிக்கடி சொல்வாள். இவரது முந்தைய தலைமுறை இவருக்கென விட்டுப்போயிருந்தது என்னவோ இந்த தப்புக்கட்டையைத்தான் என்று, அன்றைக்குத்தான் உணர்ந்தார்.

தப்புக்கட்டையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இவரது அம்மாவின் கண்களில் பெருமை பொங்கி வழிவதை இவர் நன்கு உணர்வார். வழி வழியாய் தொடர்ந்து வந்த இந்தக் கலையைப் பற்றி அம்மா சொல்லிவிட்டுப் போன சொற்கள்தான் தப்பாட்டத்தானின் நெஞ்சில் ஆழமாய் பதிந்திருந்தது.

தப்பின் மீது அன்று தொட்ட பிடியை நாற்பத்தி ஏழு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்று வரையிலும் தளர்த்தவில்லை. பழனிச்சாமி என்பவர் ஒத்தப் பனமரக்காட்டு மக்களின் மனதில் தப்பாட்டக்காரனாகவே பழகிப்போய் விட்டதால் ஊரார்கள் தப்பாட்டத்தான் என்றே கூப்பிட ஆரம்பித்தனர். இத்தனை ஆண்டுகளாய் தப்புச்சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனுக்கு இந்த ஊரார் கொடுத்தது என்னவோ இந்தப் பட்டப் பெயரை மட்டும்தான். இன்று ஒத்தப் பனமரக்காட்டில் நின்று பழனிச்சாமி என்று கேட்டால் தெரியாது தப்பாட்டத்தான் என்றால் அதோ அந்த முக்குல ஒரு குடிசை இருக்கே அதுதான் எனக் கைகாட்டுவார்கள்.

இருளை முழுவதுமாக முழுங்கிவிட்டு பிரகாசமாகப் வெளிச்சம் பரவி விட்டது சூரியனின் பாதி முகம் பூமியை எட்டிப்பார்க்கிறது. விடிகின்ற பொழுதெல்லாம் நல்ல பொழுதாகவே இருக்க வேண்டும் என்பதுதான் தப்பாட்டத்தானின் எதிர்பார்ப்பு. ஆனால் என்ன செய்வது எல்லாப் பொழுதுகளும் அப்படி இருந்து விடுவதில்லையே! இன்றைய பொழுது விடிந்ததுமே கயித்துக்கட்டிலில் உட்கார்ந்திருந்த வண்ணமே கைகளைத் தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு ஏதேதோ முனகினார், ஒவ்வொரு பொழுதுகளையும் நகர்த்த தன் மனதுக்கு அடிக்கடி இப்படித்தான் நம்பிக்கையூடிக் கொள்வார் இந்த நம்பிக்கைதான் ஏதோ வேளை தவறாது பசியை வெல்லும் ஊட்டத்தையும் அடுத்த கட்ட நகர்தலுக்கான தூண்டுதலையும் கொடுக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டிலிலிருந்து மெல்ல அசைவு கொடுத்து எழுந்தவர் செம்மண் புழுதி பட்டிருந்த வெள்ளை வேட்டியை மடித்துக் கொண்டு தோளில் ஒரு துண்டை மட்டும் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து நடையைக் கட்டினார்.

தப்பாட்டத்தான் ஒரு ஒண்டிக்கட்டை இருபத்தி ஏழு வயது வந்த போதுதான் மணமுடிக்கும் எண்ணமே அவரிடத்தில் வந்தது. சின்ன வயசிலிருந்தே வாய் வழியியாய் "ராஜாமணி உனக்குத்தான்"னு தாய்மாமன் அடிக்கடி சொல்வார் ஆனால் அம்மா செத்த பிறகு பேச்சு மூச்சில்லை, இருந்தாலும் அன்றைக்கு சொல்லி ஆசை கூட்டிய வார்த்தைகள் தப்பாட்டத்தானின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த தைரியத்தில்தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் நெடு..நெடுவென்று தாய் மாமன் குருநாதன் வீட்டுக்குப் போய் மாமன் மகள் ராஜா மணியைப் பெண் கேட்டார்.

"பொழப்பத்தவனுக்கு பொண்ணுக் கொடுக்க நான் தயாரில்லை" என்ற ஒரே வார்த்தையில் தப்பாட்டத்தானின் நினைப்பை சுக்கு நூறாக்கினார்.

"தப்பைத் தூக்கி வீசிட்டு பை நிறையலைன்னாலும் கை நிறையுற அளவுக்காவது சம்பாதி ராஜாமணியை நானே கட்டி வெக்கிறேன்"னு தாய்மாமன் ஒரே போடாய்ப் போட்டார், அப்போது தப்பாட்டத்தான் வார்த்தைகளற்ற ஊமையாகிப் போயிருந்தார்.

ராஜாமணி மேல் கொள்ளைப் பிரியம்தான் அதற்காக தாய்மாமனின் இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்துவர மறுத்து விட்டார். பித்துப் பிடித்தாற்போல தப்பின் மீது என்ன ஒரு போதையோ அதையே கட்டிக்கொண்டு அழுதால் யார்தான் பொண்ணு கொடுப்பாங்க என்று அவரே நினைத்துக் கொள்வதுண்டு ஆனால் தப்பை வீசி எறிந்து வர ஒரு போதும் அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. அப்படியே நாட்கள் நகர்ந்தது. ராஜாமணியை மட்டும் மறக்க சில காலங்கள் தேவைப்பட்டது அப்புறம் சத்தியமங்கலத்திலிருந்து வந்து ராஜாமணியை பெண் எடுத்துப் போனார்கள் என்பது மட்டும் தெரிய வந்தது அப்படியே காற்றோடு காற்றாய் ராஜாமணியின் நினைவுகளும் கரைந்து போனது.

வீட்டிலிருந்து நடையிட்டு மெல்லவே ஒத்தப்பனமரக்காடு பஸ் ஸ்டாப்பை வந்தடைந்தார். இந்த மார்கழி மாத காலைப் பொழுதில் குளிர் சக்கை போடுபோட்டது. ஒத்தப்பனமரக்காடு பஸ் ஸ்டாப்பில் ஒருத்தரைக் கூடப் பார்க்க முடியவில்லை ஊர் ஜனங்க முழுதும் அடிக்கிற குளிருக்கு இதமா இழுத்துப் போத்திக்கொண்டு படுத்துக்கிடக்கிறார்கள். ஏதோ போர்வையை முழுசும் போர்த்திக் கொண்டு பீடியும் புகையுமாக சில பெருசுகள் டீக்கடையின் பெஞ்சில் உட்கார்ந்த வண்ணம் இருந்தார்கள். தப்பாட்டத்தான் டீக்கடைக்குள் நுழைந்ததும்

"ராசு... சூடா ஒரு டீ போடு.." என்றபடியே அலீம் பீடியை வாயில் செருகி பற்ற வைத்தார்.

"தப்பாட்டத்தா..என்ன இன்னும் அறுவத்தி நாலு ரூவாய் பாக்கி இருக்கு எப்பத் தர்றீங்க" டீயாத்தியபடியே கேட்டான் டீக்கடை ராசு.

"ஊருக்குள்ள ஒரு திருவிழா இல்லை ஒரு எழவு இல்லை அப்புறம் எப்படி எம்பொழப்பு ஓடும் உனக்குப் பணம் கொடுக்கணும்ங்கிறதுக்காக ஒருத்தனை சாகவா சொல்ல முடியும்" என்றபடியே புன்னகைய உதிர்த்தார். இதைக்கேட்டதும் டீக்கடை ராசுவும் சேர்ந்து சிரிக்க ஏதோ நடக்கிறது என்பதை மட்டும் உணர்ந்த படி சில பெருசுகள் உட்கார்ந்து கிடந்தது.

புகை பறக்க நுரை ததும்ப ஒரு டீயாற்றிக் கொடுத்தான் ராசு. காலைக்குளிருக்கு இதமாக இருந்தது. ஆற அமர்ந்து ஒவ்வொரு மொடக்கையும் உற்சாகமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தவரை நோக்கி ஓடி வந்தான் ராமசாமி பேரன் சந்தோஷ்.

பதட்டமாய் வந்த அவனிடத்தில் "ஏன்டா இப்படி ஓடியார?"

"ராமசாமித் தாத்தா படுத்த கிடையாயிட்டாருங்க...இன்னும் ரெண்டு நாள் தாட்டுறதே கஷ்டந்தான்னு டாக்டர் சொல்லிப்புட்டுப் போனாரு. உங்களைப் பாத்தாகனும்னு கையோட கூட்டி வரச் சொன்னாருங்க வர்றீங்களா"

"இத போ சித்த நேரத்துல வர்றேன்" என்றார். வந்தவன் சொல்லிப் போனது கத்திகளாய் தப்பாட்டத்தானின் மனதை ரணமாக்கி விட்டது. சலனமற்ற ஏக்கப்பார்வை பார்த்த தப்பாட்டத்தானின் கண்களில் நீர் கோர்த்தன. டீ டம்ளரை அப்படியே வைத்து விட்டு ராமசாமி வீடு நோக்கி நடையிட்டார்.

ராமசாமியும் தப்புக்காரர்தான் கொஞ்ச நஞ்சமல்ல நாற்பது ஆண்டுகள் தன்னோடு ஒட்டி உறவாடிய உயிர் இன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது தப்பாட்டத்தானை மேன்மேலும் ரணப்படுத்தியது. பெற்ற சொந்தமோ பெற்றெடுத்த சொந்தமோ இல்லை வாழ்க்கை இதுதான் என வகுத்துக் கூறவும் நாதியில்லை என்று தப்பாட்டத்தானின் மனம் ஏங்கித் தவித்த அந்த சமயத்தில்தான் ராமசாமியின் நட்பு கிடைத்தது, தப்பாட்டத்தானை நேசிக்க இந்த பூமியில் ஒரு உயிர் இருக்கிறதென்றால் அவர்தான் ராமசாமி.

பதட்டமாய் வெடுக்.. வெடுக்..என போட்ட நடையில் ராமசாமி வீட்டை வந்தடைந்தார். தாழிடப்படாத கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போனார், வராண்டாவைத் தாண்டியதுமே கட்டிலில் படுத்த வண்ணம் ராமசாமி தென்பட்டார், கவலை தோய்ந்த முகத்தோடு ராமசாமியை நெருங்கினார். தப்பாட்டத்தானைக் கண்டதுமே ராமசாமிக்குள் ஒரு வருத்தம் கலந்த புன்னகை. தப்பாட்டத்தானை கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு இதுதான் என்பதைப் புரிந்து கொண்டார்.

"உன்னைய நான் முந்திட்டேன் எனக்கு சந்தோஷமா இருக்கு" என்று சிரித்தபடியே சொன்னார் ராமசாமி.

"ஏ இப்பிடிப் பேசுற வாயை மூடு"

"நா மொதல்ல செத்தா எனக்குத் தப்படிக்க நீ இருக்கியல்ல"

"தப்படிக்குறது ஒரு சமாச்சாரம்னு பேசிக்கிட்டுக்கிட்டிருக்க ஒனக்கு இப்ப ஒடம்பு எப்புடி இருக்கு"

"அப்படிச் சொல்லாத ஊரார் சாவுக்கெல்லாம் தப்படிச்ச நம்மளோட சாவுக்குத் தப்படிக்க யாரும் இல்லைனு உலகம் பேசக் கூடாதல்ல எஞ்சாவுக்குத் தப்படிக்க நீயிருக்க உஞ்சாவுக்கு யாரிருக்கா?" சுர்ரென்றிருந்தது இப்போது ராமசாமியின் கேள்விக்கு தப்பாட்டத்தானிடம் மௌனம் மட்டுமே பதிலாய் இருந்தது.

தப்பாட்டத்திற்கென இருந்த குழுக்கள் எல்லாம் காலப்போக்கில் தப்பை தூக்கி வீசி விட்டு பிழைக்கிற வழியைத் தேடிப்போய்விட்டன. இவன் குடுக்கிற சாராயத்தைக் குடிச்சுட்டு தப்படிச்சு ஆடுவதை விட இதுவே மேல் என தடம் மாறிப் போய் விட்டார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இன்றைக்குத் தப்பாட்டக் காரர்கள் இருக்கிறார்கள், இதுவும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை பின்னே எந்த முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொல்வார். கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த தப்பாட்டத்தானின் தோள்ப்பட்டைகளைப் பிடித்து மெல்லமே உளுக்கினார் ராமசாமி.

"பொறக்குற மனுசன் சாகத்தான் செய்வான் நீயி நானு எல்லாருமே ஆனா தப்புக்கட்டையும் அப்படித்தானா?"

"இல்லவே இல்ல"

"எப்படிச் சொல்ர்ற நம்ம கூட தப்படிச்சுக்கிட்டு சுத்தித் திரிஞ்ச பயலுகளெல்லாம் இன்னைக்கு என்ன பண்றாங்கன்னு பாரு சுத்துப்பட்டி முழுக்க நம்மளைத் தவித்து தப்படிக்க யாருமே இப்ப இல்லை... நான் இன்னைக்குப் போயிருவேன் நீ நாளைக்குப் போயிருவே...நம்ம தப்பு?" மெல்லிய குரலில் கேள்வி எழுப்பிய ராமசாமியின் குரல் நெஞ்சை உலுக்கிப் போட்டுவிட்டது. கலைகள் என்பதற்கு அழிவு கிடையாது ஏனென்றால் கலைகள் என்பது தலைமுறைகளைக் கடந்து பயணிப்பது ஒவ்வொரு கலைஞர்களின் தலையாயக் கடமை தங்களது கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுப்பதுதான். இது போன்று அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுக்காததால்தான் பல கலைகள் அழிந்து விட்டதென தப்பாட்டத்தானே அடிக்கடி சொல்வதுண்டு. அந்தக் கட்டாயம் இப்போது தனக்கே வந்து விட்டதாக நினைத்தார் தப்பாட்டத்தான்.

ராமசாமியின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு

"நீ ஒன்னுங் கவலைப் படாத நம்ம கண்ணு முன்னால தப்புக்கட்டைய மாண்டு போக வுட்ருவமா" என்று சொல்லி விட்டு கண்களாலே வருகிறேன் என்கிற தொனியில் பார்த்து விட்டுப் போனார் தப்பாட்டத்தான். இவர் போன அடுத்த நாளே ராமசாமி இறந்து விட்டதாக சேதி வரவே தப்பும் கையுமாகப் புறப்பட்டுப் போனார். எந்த எழவாக இருந்தாலும் தப்பாட்டத்தானும் ராமசாமியும் பிணத்தின் முன்பு தப்படித்து ஆடுவார்கள் காலம் வரைந்த கோலம் என்றுதான் சொல்ல வேண்டும் இன்று பிணத்தின் முன்பு தப்பாட்டத்தான் மட்டும் தனியே ஆடிக்கொண்டிருக்கிறார் ராமசாமியோ பிணமாக!

ராமசாமியின் மறைவு தப்பாட்டத்தானுக்குள் ஏகப்பட்ட கேள்விகளை தூண்டி விட்டது. நாளைக்கு ராமசாமியின் நிலைதான் நமக்கும் என்கிற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். தப்பைப் பற்றிய வரலாறு ஏதும் தெரியாது ஆனால் அது வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை மட்டும் உணர்ந்தார் தப்பாட்டத்தான், ஏதோ யோசித்தவராய் ஊர் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் அண்ணமார் கோவில் நோக்கி நடையிட்டார்.

தப்புத் தண்டாக்களுக்கு பேர் போன இடமாகிப் போயிருந்தது அண்ணமார் கோவில் திடல். சரக்கு, சீட்டு, கஞ்சா என எல்லாமே இங்குதான் என்பதால் இன்றைய இளவட்டங்கள் முகாமிட்டிருப்பதும் இங்குதான். தப்பாட்டத்தான் அண்ணமார் கோவிலுக்குள் நுழைந்ததும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஒருத்தன்

"டேய் தப்புக்காரப் பெருசுடா...." என்றான். உடனே கூட்டமே திரும்பி அவரை ஏறிட்டுப் பார்த்தது "இந்தப் பெருசுக்கு இங்க என்ன வேலை" என்பதைப் போல ஒவ்வொருவரின் பார்வையும் இருந்தது. இன்றைய இளவட்டங்களுக்கு பெருசுகளைப் பார்த்தால் மரியாதை எங்கே வருகிறது நக்கலடிக்கத்தான் தோணுகிறது போலும். சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கும்பலில் ஒருவன்

"என்ன பெரிசு வாங்களே ஒரு கை போடுவோம்" என்றதும் அந்தக் கூட்டத்தில் பயங்கரச் சிரிப்புச் சத்தம்.

கஞ்சா உறிஞ்சிக் கொண்டிருந்தவர்கள் தன் பங்குக்காக "பெருசு இங்க வாங்க வந்து ஒரு இழுப்பு இழுத்துட்டுப் போங்க" என்றான்.

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதது போல தப்பாட்டத்தான் அந்தக் கூட்டத்தை நெருங்கினார்

"என்னடா... எல்லாரும் நம்மூர்ப் பயலுகதானா"

"ஆமாம் என்ன சமாச்சாரம்"

"ஏனுகளா இங்க வந்து கத்தை கட்டுற நேரத்துல தப்பாட்டம் கத்துக்கிட்டு நாலூரு காரியத்துக்குப் போய் வர்றது"

"பெருசு.. அந்தக் காலத்துலயே இருக்கியே... அவனவன் பேண்ட், ட்ரம்ஸ்னு சுத்திக்கிட்டுத் திர்றான் நீ என்னன்னா பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கிட்டிருக்க"

"டேய் என்னமோ சொல்றியே ட்ரம்ஸ்..க்ரிம்ஸ்னு அதெல்லாம் தப்பு மாதிரி வருமா?"

"பெருசு உனக்கு உலகமே புரிய மாட்டேங்குது இப்ப என்னான்ற நீ தப்பைக் காப்பாத்துறேன்னு வந்துட்ட நல்லதுதா காலம் போன காலத்துல உன்னையக் காப்பாத்த யாரிருக்கா?" குடி போதையில் கேட்டாலும் தெளிவான அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றுப் போனவராய்த் திரும்பினார் தப்பாட்டத்தான்.

தப்பாட்டத்தானுக்குள் உள்ளூர ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது அன்று மாமன் மகள் ராஜாமணியை கல்யாணம் செய்திருந்தால் கூட அநாதைப் பிணமாக மாட்டோம் என்று தோன்றிற்று. இருந்தும் தப்பின் மீதான காதலே அவருக்குப் பெரிதாய்ப் பட்டது. அப்படியே மெல்லவே வீட்டை வந்தடைந்ததும் ஓலைக்குடிசையின் ஓரத்தில் மாட்டியிருந்த தப்பை எடுத்தார். தான் மாண்டு போன பிறகு இந்த தப்பு வாழுமா? என்கிற ஒரு கேள்விதான் தப்பாட்டத்தானுக்குள் திரும்பத் திரும்ப எதிரொலித்தது. நாகரிக வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு இன்றைய இளசுகள் தப்பைத் தூக்குவதையே அநாகரிகமாகக் கருதுகிறது இந்த நிலையில் எங்கு போய் தப்பு வாழ்வது இந்த உலகில் கொட்டி முழங்கிக் கொண்டே இருப்பது என்கிற நம்பிக்கையற்றுப் போனவரானார் தப்பாட்டத்தான். தப்பை அப்படியே கட்டியணைத்து இடப்புறமாய் சாய்ந்து படுத்துக் கொண்டார் கண்ணீர் அப்படியே இடப்புறமாய் வழிகிறது. ஏதேதோ யோசனைகள் தூக்கமே வரவில்லை. நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பின்தான் தூங்கினார்.

அடுத்த நாள்...

மணி நான்கு.....எழவில்லை

மணி ஐந்து.......எழவில்லை

மணி பதினொன்றாகி விட்டது......இல்லவே இல்லை..ஒரேயடியாய்த் தூங்கிப் போனார் தப்பாட்டாத்தான். ஊரே கூடி அடக்கம் செய்வதற்காய் தப்பாட்டத்தானின் உடலை பாடையில் ஏற்றி மயானம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு உண்மை இந்த ஊரில் எந்த எழவு ஊர்வலமும் இவ்வளவு அமைதியாக நடந்திருக்கவில்லை,

"ஊரார் சாவுக்கெல்லாம் தப்படிச்சாரே பாவி மனுச இவரு சாவுக்குத் தப்படிக்க யாரும் இல்லாமலேயே போச்சே" என்றுதான் ஊரே பேசிக்கொண்டது.

ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமான ஆறடி நிலம் இன்று தப்பாட்டத்தானுக்காக காத்துக் கிடந்தது. குழி வெட்டி விட்டார்கள் தப்பாட்டத்தானின் சடலத்தையும் குழிக்குள் இறக்கி விட்டார்கள். சுற்றியிருந்த அத்தனை மக்களிடத்திலும் மௌனம் கலந்த வருத்தம்.

தப்பாட்டத்தானின் சடலத்தின் மேல் அவரது தலையணை போர்வை என அவர் பயன்படுத்திய பொருட்களை அள்ளிப் போட்டனர்.

"யோவ்...இந்தாளு கூடவே நாப்பது வருஷம் இருந்ததுய்யா இந்தத் தப்பு அதையும் உள்ள வைங்கடா" என்றான் ஒருத்தன். தப்பாட்டத்தானின் இன்னொரு உயிரையும் குழிக்குள் போட்டு விட்டார்கள்.

"ஆளாளுக்கு ஒரு கை மண்ணு அள்ளிப் போடுங்க மனுசரை மூடிப்புடலாம்" என்றதும் ஆளுக்கு ஒரு கை மண் அள்ளிப் போட்டு விட்டார்கள் குழியும் மூடப்பட்டது. வந்திருந்த கூட்டம் அப்படியே ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தது. ஒத்தப் பனமரக்காட்டில் இனி என்றுமே கேட்காது இந்தத் தப்புச் சத்தம்!

Pin It