கூட்டத்தை பிரித்துக்கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்குவதற்குள் சவுந்திரத்துக்கு மயக்கம் வரும்போலத் தள்ளியது. பின்னால் சிக்கிக்கொண்ட முந்தானையை இழுத்துக்கொண்டு இறங்கி, ஓரமாக நிழலில் நின்றாள். இரண்டு நாளாக முணுமுணுப்பாக பொங்கிக்கொண்டு இருந்த பெரியவன் என்ன சாக்கு கிடைக்கும் என்று காலையில் ஆரம்பித்துக் கொண்டான். கலக்டரை பார்க்க கிளம்பறாங்களாமா? என்று ஆரம்பித்து கொட்டித் தீர்த்துவிட்டான். கூடவே கஷ்டப்பட்டு அய்டிக்கு பீஸ் கட்டியது, கல்யாணத்துக்கு செலவு பண்ணது என்று நீண்டு கொண்டது. ஏதாவது மிச்சமாகிவிடப் போகிறதே என்று மருமகள் எட்டி எட்டி அடக்கிக்கொண்டு இருந்தாள். அவனைச் சொல்லியும்தான் என்ன? தன்னைப்போல பெயிண்ட் அடிக்க போக வேண்டாம் என்று தம்பியை படிக்க வைத்தான். முகத்தைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்தாள்.

சின்னவனின் மாமியார் ஒரு வார்த்தை வா என்று கூப்பிடவில்லை. சவுந்திரம் நடையிலேயே நின்றுகொண்டாள். பசி புரட்டி புரட்டி வாந்தி வரும்போல இருந்தது. குனிந்துகொண்டு வந்த கிழவி அவள் காலைப் பார்த்து தலையை உயர்த்தி, அடையாளம் தெரிந்ததும் எட்டி கையைப் பிடித்துக்கொண்டாள். பேத்தியைக் கூப்பிட்டாள். இடுப்பில் குழந்தையுடன் வந்தவள்,இவளைப் பார்த்ததும் விக்கித்து நின்றாள். குழந்தை ஆறுமாதத்தில் வளர்ந்திருந்தான். "எம்புள்ளையையும் சீரழிச்சாதான் தூக்கம் வருமா?". உள்ளிருந்து ஒரு உறுமல் கேட்டது. பிள்ளையை மாமியாரிடம் கொடுத்துவிட்டு அழுதுகொண்டே உள்ளே ஓடினாள். சவுந்திரம் குழந்தையுடன் நடந்தாள். பால் சதையுடன் சிரித்துக்கொண்டே வந்தது. "உங்கப்பனா சாமி நீ ? உங்க தாத்தனா சாமி நீ ?" என்று வழியெல்லாம் முத்திக்கொண்டே பஸ் பிடித்தாள்.

இவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் கூட போதும். இப்படி எடுத்துக் கொண்டு வர ரொம்பப் பாடாயிற்று. வெளியூரில் இருந்து வந்து ஊரில் தங்கி இருக்கும் முத்து வாத்தியார்தான் ,சர்ச் பாதரையும் கூட்டிக்கொண்டு நடந்தது. பால்குடிப்பிள்ளை ன்னு கடைசியில் கொடுக்கமாட்டார்களோ என்று வேண்டாத கடவுளில்லை. ராத்திரிக்குள்ள கொண்டு விட்டுடனும்னு. தகப்பன்னு இல்லன்னு ஆயிடுமான்னு நினைத்துக் கொண்டாள். போன முறை பாதரும் வாத்தியாரும் கூட வந்து வாங்கித் தந்தார்கள்.

சீக்கிரம் போனாதான் முதலில் அட்டை பதிய முடியும். சவுந்திரம் சிகரெட்டு வாங்கிக்கொண்டாள். கூட்டத்தைப் பார்த்ததும் திக்கென்று வந்தது. குழந்தை சிணுங்க ஆரம்பித்திருந்தான். வெயிலும் புழுக்கமும் சூட்டைக் கிளப்பி இருக்கும் குழந்தைக்கு. அந்த வராந்தாவில் கூச்சலும் அழுகையும் நிற்க இடமில்லாமல் நெரிசலுமாக இருந்தது. அழுக்கும் இருட்டும் காத்தில்லாததும் குழந்தை அழுவானோ என்று பதட்டப் படுத்தியது.

கதவைத் திறந்ததும் முட்டி மோதியது கூட்டம். தள்ளிக்கொண்டு வராமல் பின்னால் நின்றுகொண்டிருந்தான். சவுந்திரத்தால் முன்னுக்கு போகமுடியவில்லை. குழந்தை கையில் நிற்காமல் அழுதான். முன்னால் இருக்கும் இடத்துக்கு வா வா என்று கத்தினாள். கொஞ்சமாய் நகர்ந்து முன்னுக்கு வந்தான். குழந்தையை முகத்தைத் திருப்பிக் காண்பித்தாள். மகன் பின்னால் ஏதோ சைகை செய்துகொண்டே இருந்தான்.

புரியாமல் என்ன என்னான்னு கத்தினாள் சவுந்தரம். ஓரமாக ஒல்லியாக நின்றிந்தவன் வெளியில் கூப்பிட்டான். இவனா என்று மகனைப் பார்த்தாள். கூட்டம் மூடியிருந்தது அவனை. அவனிடம் சிகரெட்டும், வாத்தியாரிடம் வாங்கிக் கொண்டு வந்திருந்த ஐநூறு ரூபாயையும் கொடுத்தாள். அவனிடம்தான் தரவேண்டுமா என்றும் தெரியவில்லை. திரும்பவும் மகன் முகத்தை பார்த்துவிட முண்டினாள். முடியவில்லை. காசுகொடுத்ததை சொல்லிவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

வெளியில் வந்து டீக்கடையில் பால்வாங்கி குழந்தைக்கு புகட்டினாள். அது கக் கக் என்று சிரித்துக்கொண்டே புர்ரென்று பாலை வெளியில் விட்டது. குடிக்கத் தெரியவில்லை. அதைக் கொஞ்சிக்கொண்டே சீக்கிரம் கொண்டுபோய் அம்மாவிடம் விட்டுவிடவேண்டும் என்று பஸ் பிடித்தாள். திடீரென்று குழந்தையை அவன் பார்த்தானா என்று யோசித்தாள். அவளுக்குப் பிடிபடவில்லை. குழந்தை சூடாக அவள் மடியில் மூத்திரம் பெய்தது. அவள் சிரித்துக்கொண்டே தூக்கி புடவையில் துடைத்தாள். குழந்தை சவுந்தரத்தின் முகத்தில் முகத்தைத் தேய்த்துகொண்டே மடியில் குதித்து குதித்து சிரித்தது. "என் சாமி, அப்பனைப் பாத்தியா? இன்னா சிரிப்பு!!" .அவளுக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டது.

- இந்திரா பாலசுப்ரமணியன்

Pin It