'ஆங்.. உங்க விலாசம் கிடைச்சது மேம். எங்க ஃபீஸ் ஐயாயிரம். உங்க அப்பாயின்ட்மென்ட் கன்ஃபர்ம்ட் மேம். சீக்கிரம் சந்திக்கலாம். நன்றி.' என்றுவிட்டு மொபைல் அழைப்பை துண்டித்தாள் மலர்.

'ம்ம்.. யாரு க்ளையன்ட்? ஆள் எப்படி?' மலர் மொபைல் அழைப்பை துண்டித்துவிட்டதை ஓரக்க‌ண்களால் சரிபார்த்துவிட்டு கேட்டாள் கோகிலா.

'ஒரு பொண்ணு கோகிலா. இங்கிலீஷ்லதான் பேசிச்சி. பேச்சு நல்லா போல்டா பேசுது. ரொம்பவே விவரம். ஸ்வீட் வாய்ஸ். ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குதாம். ஆனா, ஏதோ சொந்த விவகாரம் போல. அதான் நேரடியா போகாம, நம்மள மாதிரி வீட்டுக்கு போய் கவுன்சிலிங் பண்றவங்களா பாத்து கால் பண்ணியிருக்கு. கவுன்சிலிங் வேணுமாம்'

'ம்ம்.. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு தானே அப்பாயின்ட்மென்ட் குடுத்திருக்க?'.

'ஆமா கோகி'.

'சரி.. இப்போ மணி 1. வா சங்கீதால சப்பிட்டுட்டு அப்டியே கோயிலுக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு அந்த பொண்ண பாக்க போகலாம்'.

'சரி கோகி, ஆனா, ... மாட்டிக்கமாட்டோம்ல.. நாமளே அரைகுறை. இன்னும் கவுன்சிலிங் சைக்காலஜில‌ டிகிரி கூட வாங்கல.. இவ விவரமா இருக்கா. இவளுக்கு யாரையாச்சும் பெரியாளுங்கள தெரிஞ்சு நம்மள மாட்டிவிட்டுடப்போறா'.

'ஹேய்... வாயை மூடுடி.. அபசகுனமா.. முடிஞ்ச அளவுக்கு சமாளிப்போம்'

ஹோட்டல் சங்கீதாவும், அந்த கோயிலும் இவர்கள் பொருட்டும் ஒரு முறை நிரம்பி காலியானது. அந்த விலாசம் சற்றே அலைமோத விட்டே அகப்பட்டது அண்ணா நகரில்.

'மலர், இதானே அந்த அட்ரஸ்? நல்லா பாத்தியா?'

'கோகி, திஸ் இஸ் இட்' என்றுவிட்டு அந்த அண்ணா நகர் சாந்தி காலனி அப்பார்ட்மென்டின் தரைதளத்தில் சாலையை நோக்கிய வீட்டின் கதவருகே இருந்த காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்த நொடிகளில் உதடுகளை ஒரு முறை ஈரமாக்கிக்கொண்டாள் கோகிலா.

அந்த ஃப்ளாட்டுக்கு எதிர் ஃப்ளாட் கதவு ஒருக்களித்து திறந்திருந்தது. எதேச்சயாகத் திரும்பினாலும் நடு ஹாலில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் பாட்டில்கள் தெளிவாகத் தெரிந்தன. உள்ளிருந்து இரண்டு தலைகள் எட்டிப்பார்த்தன. ஆண்கள். அவர்கள் உதடுகள் கருப்பாய் தெரிந்தது. நிரம்பப் புகைப்பார்கள் போல. குளிக்காமல் தூக்கம் உதறி எழுந்தமேனிக்கு இருந்தார்ப்போல இருந்தது. கண்கள் ஒடுங்கி இருந்தது. முகசரும நிறம் சீராக இல்லை. கோகிலா, அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதை தவிர்த்து சட்டென‌ திரும்பிக்கொண்டாள்.

ஒரு பெண் வந்து கதவைத் திறந்தது. அவளை முந்திக்கொண்டு அவளின் முன்னழகு வசீகரித்தது. வயது 25 இருக்கலாம். நல்ல நிறம். உயரம் ஐந்தரை அடி, வீட்டுக்குள்ளேயே அவள் அணிந்திருந்த அந்த துணியாலான அந்த செருப்பு நீங்கலாக. தலை போனி டெயில். மையிட்டு மெருகூட்டப்பட்ட அடர்ந்த புருவங்கள் அவள் முகத்தை திருத்தமென நினைக்கச்செய்தன. அழகான பெரிய கண்கள், வட்ட முகம். அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் டிசர்டில் ஒல்லியுமில்லாமல், குண்டுமில்லாமல் அளவான உடலை குறித்துக்கொண்டாள் கோகி. எதிர் ஃப்ளாட்டில் எட்டிப்பார்த்த இருவரில் ஒருவர் அவளை நோக்கி புன்னகைத்திருக்கவேண்டும். அவள் கோகிலாவையும் தாண்டி பார்வையைச் செலுத்தி நட்பாய் புன்னகைப்பதை யூகிக்க முடிந்தது.

'ஹாய், ஐ அம் கோகிலா. திஸ் இஸ் மை அஸிஸ்டென்ட் மலர்'

'ஹாய், ஐ அம் மாதங்கி. ப்ளீஸ் கம் இன்'

அந்தப் பெண் கடனே என சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டது சற்று வித்தியாசமாக இருந்தது. அவளிடம் உள்ளே செல்வதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பாக அதையே ஏற்றுக்கொண்டு கோகி பாதனிகளை குதிகாலால் நெம்பி கழற்றிவிட்டு முதலில் நுழைந்தாள். பின்னாலேயே மலர்.

வாசலில் அடுக்கடுக்கான ஸ்டாண்டில் ஷூ, ஹீல்ஸ் செப்பல் என விதம்விதமான நிறங்களில் காலணிகள். உள்ளே நுழைந்ததும் 11க்கு 10ல் மார்பிள் பதிக்கப்பட்ட ஹால். அந்தப்பக்க கிட்சனாக இருக்கலாம். பக்கவாட்டில் இரண்டு அறைகள். கதவுகள் அனைத்தும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தேக்கில் செய்திருந்தது. மேல்தட்டு வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் சில உயர்ரக பெரிய சைஸ் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. அதன் எதிரே சாம்சங் டிவி ம்யூட்டில் டெல்லி 6ன் மசக்களி ஹிந்தி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. மேலே சில புகைப்படங்கள். அதில் இருந்தவர்களுக்கும் அந்தப் பெண் மாதங்கிக்கும் துளியும் சம்பந்தப் இருப்பதாகத் தோன்றவில்லை. பக்கவாட்டு அறைகள் திறந்தே இருந்தன. அறைக்குள்ளாகவே துணி காயப்போடப்படும்  ஸ்டான்டில் சில உள்ளாடைகளும், பாடட் ப்ராக்களும் காய்ந்துகொண்டிருந்தன. சட்டென கோகிலா மாதங்கியின் வசீகர முன்னழகை ஒரு முறை நினைத்துக்கொண்டாள்.

'ப்ளீஸ் பீ சீட்டட்' என்றுவிட்டு மாதங்கி ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒரு சோபாவில் நிரைந்துகொள்ள, 'தாங்க்ஸ்' என்றுவிட்டு கோகிலாவும் மலரும் அவள் எதிரே நீளமான சோபாவில் நிரைந்துகொண்டனர்.

எங்கிருந்தோ ஒரு அமைதி சட்டென வந்து ஒட்டிக்கொள்ள முயல, அதை உணர்ந்தவளாய் விரட்டும் தோரணையில் தொடர்ந்தாள் மலர்.

'இந்த ஏரியாவுல நிறைய அப்பார்ட்மென்ட்ஸ். கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டுட்டோம்'.

'ம்ம்.. போஷ் ஏரியா..' என்று சலனமே இன்றி போக்கு காட்டினாள் மாதங்கி. மலர் லேசாக உதடு சுழித்ததை கோகிலா மட்டும் கவனித்துக்கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு,

'மாதங்கி, சும்மா நாங்க இங்க உக்காற்ரதுக்காக நீங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கலன்னு நினைக்கிறேன்?'

'யெப், நான் நேரா விஷயத்துக்கு வந்துடறேன். ஒரு வருஷன் முன்னாடி, எனக்கு ஒரு லவ்வர் இருந்தான். நாங்க நாலு வருஷமா காலேஜ் லைஃப் முழுசும் காதலிச்சோம். பட், அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க லைக் பண்ணல. அப்புறம் நான் ஆஃபிஸ் ஜாயின் பண்ணினப்போ என் ஃப்லோர்ல ஒருத்தனோட லவ் வந்தது. பட் கல்யாணம் ம்ஹூம். இப்போ ஒரு பையனோட ப்ரேக் அப் ஆயிடிச்சு. காரணம் கேட்டா, என் ஜாதகம் சரியில்லன்னு அவன் அம்மா சொன்னாங்களாம். ரப்பிஷ். என் கூட சுத்தும்போது அது தெரியலயா அவனுக்கு.ஐ ஃபீல் சம்திங் ராங். நீங்க என் கேஸ ஸ்டடி பண்ணி சொல்லுங்க. வாட்ஸ் கோயிங் ஆன்?'.

'ம்ம்ம்.. ஓகே.. புரியிது அதுக்கு நான் இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் தெரிஞ்சிக்கணும். அதாவது, உங்க கடந்த கால ஆண் நண்பர்கள் கூட உங்களுக்கான நெருக்கம் பத்தி?'

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் 'ஓ.. கிம்மி எ ஸெக்' என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்ற மாதங்கி, திரும்பி வந்தமர்கையில் அவள் மடியில் ஒரு லாப்டாப் இருந்தது. அதை அவள் கோகியிடம் நீட்ட, வாங்கி அதிலுள்ள படங்களைப் பார்த்துவிட்டு வாய் பிளந்தாள். சிறிது நேரம் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு, மலரிடம் அந்த லாப்டாப்பை நீட்டினாள். அப்போது கோகி கண்ணடித்ததை மாதங்கி கவனிக்கவில்லை.

'ஆக்ச்சுவலி, உங்க கேஸ் ரொம்ப ஈசி. உங்க பிரச்சனை என்னன்னு புரியிது. அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்?' என்றாள் கோகி மாதங்கியிடம் திரும்பி.

அதுவரை, அசட்டையாய் இருந்த மாதங்கி முகம் சட்டென பிரகாசமானது.

'அப்படியா!! உண்மையாவேவா?!!!'

அவள் முகத்தில் சட்டென ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்தைப் பார்த்து மலர் உதடு இறுக்கி, லேசாக இடமும் வலமுமாய் ஆட்டியதை இந்த முறை மாதங்கி, கோகி இருவருமே கவனிக்கவில்லை.

'எஸ்... பட் அதுக்கு உங்க பெயர், ஜாதகம் மாதிரி விஷயங்களையும் நாங்க கன்சிடர் பண்ணனுங்குறதுனால இன்னும் கொஞ்சம் காஸ்ட் ஆகும். இன்னொரு 5000 பரவால்லயா?'.

இப்போது மலர் சடாரென திரும்பி கோகியை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் மாதங்கியின் லாப்டாப்பினுள் முகம் புதைத்தாள்.

'ஓ.. பட்,  நீங்க ஒரு சைக்காலஜிஸ்ட் தானே. அதானே உங்க வேலை. எதுக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட்?'.

'கரெக்ட். நாங்க சைக்காலஜிஸ்ட் தான்னாலும் ஜாதகம், நேமாலஜி பத்திலாம் சேத்துதானே உங்களுக்கு சொல்யூஷன் குடுக்கவேண்டியிருக்கு. அதுக்குத்தான்'.

'ஓ, ஓகே' என்றுவிட்டு கொஞ்சம் முறுவளித்து கால் நீட்டி ஜீன்ஸ் பாண்ட் பாக்கேட்டிலிருந்து பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை உறுவி கோகியிடம் நீட்டினாள். 

அவற்றை வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்திவிட்டு மலரிடம் திரும்பினாள். மலர் தஞ்சாவூர் பொம்மை போல் வேலை முடிந்தது என்பதாய் தலையாட்ட, லாப்டாப்பை சோபாவின் ஓரத்தில் மூடி வைத்துவிட்டு இருவரும் எழுந்துகொண்டனர்.

'என்ன? என்னாச்சு, எழுந்துட்டீங்க?'.

'ஆமா, வந்த வேலை முடிஞ்சது. கிளம்பறோம். பை.'

'வாட், என்ன சொல்றீங்க நீங்க? நீங்க இன்னும் எனக்கு முடிவு செல்லல.? கவுன்சிலிங் இன்னும் முடியலன்னு நினைக்கிறேன்'

'முடிவு குடுத்தாச்சு. உனக்கெல்லாம் பத்தாயிரம் பில் தான் முடிவு'

'என்ன!! கிறுக்கு புடிச்சிருக்கா உங்களுக்கு?'.

'எனக்கு இல்லை, உனக்குதான் கிறுக்கு புடிச்சிருக்கு. அஞ்சு வருஷத்துல மூணு லவ்வர்ஸ். தெரியாமத்தான் கேக்குறேன், உன் டிக்ஷனரில பெண் சுதந்திரமா இது? ஒரு காலத்துல கட்டிக்கபோறவனுக்காக வருஷக்கணக்கா கற்பையும், அழகையும் காப்பாத்தியிருந்தாங்க. ஆனா, நீ வெளிப்படையா கடை விரிக்கிற. இப்படி கடைவிரிச்சா கற்பையும் அழகையும் விலை குடுத்து வாங்க‌ பாக்குறவந்தான் வருவான். அவன் கிட்ட நேர்மையை எதிர்பார்க்குற நவீன‌ முட்டாள் நீ. திருடன் கிட்ட ராஜா முழியை எதிர்பாக்குற மாதிரி. எப்படி நடக்கும்?'

'ஹேய் ச்சீட், உன்னை விடமாட்டேன். என் பத்தாயிரத்தை திருப்பிக் குடு, இல்லேன்னா....' என்றபடி மறித்தாள் மாதங்கி.

'ஹெல்லோ மேடம், நீ போலீஸ கூட கூப்பிட்டுக்கோ. நீ அந்த மூணு பேரோட அடிச்ச கூத்தெல்லாம் ஃபோட்டோவா உன் லாப்டாப்லேர்ந்து ப்ளூடூத்ல எங்க மொபைல்ல டீடெயில்டா பதிவாகியிருக்கு. சத்தம் போட்டு ஊர கூட்டினா, மொத்தமும் நடுரோட்டுக்கும் வந்திடும். அப்புறம் உனக்கு ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது.  தெரிஞ்சுக்க' சத்தமாய் ஆக்ரோஷமாய் உருமினாள் கோகிலா. கோகிலாவிடமிருந்து கடுமை கலந்த குரலை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை போலும். வெலவெலத்துப் போய் நின்றிருந்தாள் அந்தப் பெண் மாதங்கி.

சொன்ன வேகத்தில் வேகமாய் கதவு திறந்து வெளியேற பின்னாலேயே நழுவினாள் மலர். இருவரும் ஃப்ளாட்டிலிருந்து வெளியேறி கடந்து போன ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொள்ள, ஆட்டோ அண்ணா நகர் பன்னிரண்டாவது மெயின் ரோடு அடைந்து சாலையில் விரையத் தொடங்கியது.

'ஹேய் கோகி, உனக்கு செம தில்லுதான். ஆனா இதெல்லாம் டூமச் டீ. நாமளே ஃப்ராடு. சைக்காலஜி முடிக்காமயே வயித்துப்பிழைப்புக்கு ரகசிய பிரச்சனைகளுக்கு அணுகவும்னு விளம்பரம் குடுத்து டோர் கவுன்சிலிங் பண்றோம். தப்பு தானே. பத்தாயிரம் ரொம்ப பெரிய அமெளன்ட். எனக்கு கில்டியா இருக்குடீ'

'ஷட் அப். அந்தப் பொண்ணு மாதங்கி பண்ணினது நியாயமா? இது என்னன்னு தெரியுமா?. ஆம்பளைங்களோட புரிஞ்சுக்காத தனத்தை சாதகமா பயன்படுத்திக்கிறது. இவ மட்டும் என்ன யோக்கியமா? ஐ.டி ல இவுங்கலாம் எப்படி சம்பாதிக்கிறாங்கன்னு தெரியாதா. கிளையன்ட் ஒரு டெக்னாலஜி கேட்டா, அவனை ஏமாத்தி அதுக்கு சம்பந்தமே இல்லாத டெக்னாலஜி ஆளைப்போட்டு வேலையை  வாங்கிட்டு பில்லும் போட்டுக்குறாங்கதானே. கம்பெனியா பண்ணினா நியாயம் , நாம பண்ணா தப்பா? அடிப்போடீ, இவளையெல்லாம் இப்படித்தான் ஓட விடணும். தூங்குறவனை எழுப்பிடலாம். தூங்குறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது. கல்யாணம் பண்ணிக்கத்தான் காதலிக்கிறோம்ங்குற போர்வைல அவசரப்பட்டு துணையை தேடிக்கிற, நினைச்ச நேரம் ஆளை மாத்திக்கிற இந்த மாதிரி ஆளுங்க திருந்தவே மாட்டாங்க. கல்யாணம் தான் நோக்கம்னா அதுவரைக்கும் நட்பே போதுமே. நல்லா இருக்குற பொண்ணுங்க பேரையும் இவ மாதிரி ஆளுங்க கெடுக்குறாங்க' என்றவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள் மலர்.

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It