ஆதாரமில்லாமல்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அடர்த்தியான இருள்
குறைந்த சுருதியில்
விண்ணை நோக்கி
குரல் உயர்த்துகிறது
இருளை வேண்டுமளவு
தன்னில் போர்த்திக்கொண்ட
ஊனமான ஒர் நாய்
நெருக்கத்தின்
வியர்வைக்கசிவில்
சில்லுகளாய் உடைந்து வீழ்கிறது
மேலும் கொஞ்சம் இருள்
மலர்த்திப்போட்ட இருளை
துளி வெளிச்சத்தால்
கலைத்துப்போட்டு
மீண்டும் அடுக்கி அழகுபார்க்கிறது
ஒரு குழந்தையின் திடீர் அழுகை
காற்றில் திசை மாறிப்போன
இரவுப்பறவைகளும்
இருளின் தூரத்தை கடக்கிறது
விடிய விடிய
இப்படி எல்லா இருளும்
இரவாக இருக்க
துயில் இழந்த
என் ஜன்னலில் தெரியும்
இருள் மட்டும் வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது
இருளில் நான் பகிர்ந்து கொண்ட
முதல் முத்தத்தையும்
அடுத்த சந்திப்பில் அவள் காட்டிய
வெட்கப்புறக்கணிப்பையும்
 
 - பிரேம பிரபா, சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It