அன்று நான் 

உன் தெருவுக்கு வந்தகணம்

தூரத்தே பார்வைக்குத் தெரிந்தவுன்

வீட்டுத் திண்ணைப் பரப்பில்

மடியில் நூலமர்த்தி

வாசிப்பில் ஆழ்ந்திருந்தாய்

சந்திக்கவேண்டுமென்ற தவிப்பில்

சின்னச் சின்னதாய்

எல்லா ஓசைகளையும்

நானெழுப்பிப் பார்த்தேன்

வரிகளிலிருந்து நீ

தலையெழுப்பவே இல்லை

உலகத்தின் ஒட்டுமொத்த

புத்தகங்கள் எழுத்துக்களையெல்லாம்

போட்டெரித்து அழித்துவிடவேண்டுமென்ற

அளவு மீறிய கோபம் என்னில்

தோன்றி மறைந்தது அன்றைக்குத்தான்

 

நானும் வாசகன்தான்

என் மடியில் நீயிருந்து

இமைகளை மூடவிடாமல்

எல்லாப் புத்தகங்களையுமென்

இரு விழிகளிலும்

இறுதிவரைக்கும் வாசித்துக்கொள்

நானேதும் சொல்லமாட்டேன்


- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It