இப்போதெல்லாம்
முற்றத்துப்பூமரங்களும் குப்பைக்கூளங்களை
உற்பத்திப்பதேயில்லை.
ஷாம்பூ மணக்கும் குளியலறைத் தரைவிளிம்புகளில்
அழுக்குப் பாசிகளோ வளருவதேயில்லை.
துவைக்காத துணிகள்கூட
சலவைத்தூள் விளம்பரத்தில் மடமடக்கும்
அழுத்திமடித்த ஆடைகளாய்….
அலம்பாத பாத்திரங்களும் பளபளப்பில்
நட்சத்திரங்களை வென்றபடி…
இப்போதெல்லாம்
சமைக்காத சட்டிப்பானைக்குள்ளும்
கறிவேப்பிலையும் ஏலமும் கமகமக்கும் கறிசோறு
ஈரத்துணியுரசாத தரையோடுகளிலும்
படிவதாயில்லை தூசுத்துணிக்கை
இப்போதெல்லாம்…..
புதிதாய் அணிந்தும் அள்ளிப்போட்டுக் கொண்டுமான
மாலைநேரப் பயணங்களிலெல்லாம்
மனசு இஸ்டப்படுவதேயில்லை
மேசை இழுப்பறைக்குள் வாரப்பத்திரிகையின்
கவிதைப்பக்கங்களை நறுக்கிப்போடத் தோணுவதுமில்லை
இணையத்தில்கூட புதிதாயொன்றும்
இணைப்பதாயுமில்லை
சின்னத்திரைகளுக்குள் 
மூக்குச்சிந்திக்கூட வெகுநாளாச்சு.
வழிபாடும் அது சார்ந்தவையும் தவிர்ந்து
முழுநாளின் தேடலுமே உன்
ஒற்றைப்பைக்குள்ளேயே ஒடுங்கிப்போனதா..?
சிட்டுக்குருவியே… சிட்டுக்குருவியே…
வெண்பஞ்சு மேகங்களை இறகாயணிந்தே என்
மனசு முழுக்கச் சிறகடிக்குமென்
சின்னக்குருவியே.. கொஞ்சம் வாயேன்.
இன்றைய உன் வகுப்பறைக்குள் கடைசிமணி
எப்போது ஒலிக்குமென சொல்லிவிட்டுப் போயேன்.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It