மெலிதாக தாரைகள் நெகிழ
அசைவற்றிருக்கும் நீரை
கிணற்றுக்குள் பார்த்தபோது
அதன் அசையாமை தந்தது
ஆச்சரியத்தையும் ஆசையையும்.
சலனமற்ற நீர்த்தட்டில்
என் சலனமற்ற முகம்
என் மூச்சுக் காற்று பட்டு
கலைந்துவிடுமென கவனமாக
மூச்சுப் பயின்றேன்.
நிச்சலனம்
நிறைவின் ஆரம்பமா?
முடிவா
சற்றே தள்ளியிருந்த பெயர் தெரியா மரத்தின்
மெலிதான பூவொன்று
வீசிய காற்றில் நலுங்கி சுழன்று
என் கண் முன்னாலேயே
என் கிணற்றிற்குள் இறங்க -
விழுதலா? நுழைதலா?
இன்னும் சில நொடிகளில்
என் முகம் சலனிக்கக்கூடுமோ?
- ரமேஷ் கல்யாண்