ஓநாயின் கூடாரமொன்றில்வன்னி தடுப்பு முகாம்
கிழிந்த கூரையை வேய
அழைக்கப்பட்டிருந்த ஆடொன்றின்
மனநிலையில் அலைந்ததுண்டா?

பாயும் குருதியின்
நாளங்கள் பிடிக்க
உங்கள் நரம்புகளே
தூண்டில்களாக்கப்பட்டதுண்டா?

புளித்த உணவுப் பொட்டலம்
பிரித்து
கழித்த மலம் முன்னே
உண்டதுண்டா?

இருப்பிடம் விட்டு எழும்போது
பின்பக்கம் ஒட்டிய மண்ணாவது
சொந்தமாக இருக்கட்டும் என
கைகளால் துடைக்க மறுத்ததுண்டா?

சகோதரியைப் புணர்தலை
கண்முன்னே
கண்டதுண்டா?

அனுபவமில்லையென்று சொல்பவர்களே
எங்களுக்கு இதுவே வாழ்க்கையின்
அடையாளமாகிப்போனதென்பதை
அறிவீர்களா?

மௌனங்களை வார்த்தைகளாக்கத்
தெரிந்த உங்களுக்கு
வார்த்தைகள் மௌனங்களாகிப்
போனதன் காரணம் தெரியுமா?

பிறந்த குழந்தையின்
ஆடை விலக்கிக் குறிபார்த்துப்
பாலினம் அறியும் வர்க்கமே!
இனி பிறக்கின்ற குழந்தைகளின்
குறி பார்க்கும்போது - அங்கே
துப்பாக்கியொன்று உங்கள் நெற்றிப்பொட்டை
குறிபார்க்கும்!
அப்போது அறிவீர்கள்
எங்கள் இனம் பற்றி...

- நாவிஷ் செந்தில்குமார்

Pin It