Ladyசில்லறைகளைக் கொட்டி எண்ணும்
பிச்சைக்காரனுக்கு
அகப்படுகின்ற
செல்லாத நாணயம் போலிருக்கிறது
அக்கணம்

நூறாயிரம் கணங்களைக்
கடக்கின்ற நீங்கள்தான்
கடக்கிறீர்கள்
அக்கணத்தையும்

ஒரு மலைத்தொடரை
ஏறிக் கடப்பதுபோல
பெருங்கடலில் படகு வலிப்பதுபோல்

அடைமழை நாளில்
திறக்கும் ஊற்றுக்கண்களென
நொதித்து நாறும் மனக்கண்கள்
திறக்கின்றன அக்கணத்தில்

பலநூறு சொற்களைக் கடக்கின்ற
நீங்கள் தான்
அந்த ஒரு சொல்லையும் கடக்கிறீர்கள்
மெளனத்தில் உறைந்து கண்சிமிட்டிய அவை
அக்கணத்தில் தம்
அரிதாரத்தைக் கழுவுகின்றன

துட்டதெய்வத்தின் கரங்களென
முளைக்கும் மனத்தின் வன்மம்
ரத்தம் கக்கிச் சாகும்படி
ஏவும் அச்சொல்லை

பறவையுதிர்க்கும் இறகு போலல்லாது
உலோகப் பறவையொன்றின்
வயிற்றினின்று வீழும்
அந்தச் சொல்லெனும்
அரூப நஞ்சு

அந்த
ஒரு கணத்தை
அந்த
ஒரு சொல்லைக்
கடக்கின்ற நீங்கள்தான்
அந்த ஒருத்தியைக்
கடக்கத் திராணியற்று நிற்கிறீர்கள்


அழகிய பெரியவன்

Pin It