Indiaதேசியக்கொடி தருகிறாய்
குத்திக் கொள்ள
முதலில்
நீ களவாடிய என் சட்டையைக் கொடு

உன்னால் பிடுங்கப்பட்ட
என் விழிகளுக்காக அழுகிறேன்
நீயோ
வானவேடிக்கை காட்டுகிறாய்

சேரியெங்கும்
எம் தாய்களின் ஒப்பாரி
எப்படிப் பாடுவேன்
நான் மட்டும் ஜனகனமன

எம்மக்களோ சிறையில்
நாடு மட்டும் எப்படி
சுதந்திரத்தில்

எம் கதறல்களை அரங்கேற்றுவீர்களா
உங்களது கலைவிழாவில்

ரத்தத்தில் மிதக்கும்
எங்களின் பிணத்தைச்
சுமந்துவரச் சம்மதிப்பீர்களா
தியாகிகளின் ஊர்வலத்தில்

எப்படி முடிகிறது உங்களால்
இழவு வீட்டில் இலைவிரிக்க?

துரத்தப்பட்ட எங்களின் பிள்ளைகள்
காடு மேடுகளில்
சுதந்திரக் கொடி ஏற்றிவிட்டுப் போகிறாய்
ஆளில்லாத பள்ளிக் கூடத்தில்

(‘உனக்குப் பிறகான நாட்களில்’ தொகுப்பிலிருந்து)

பச்சியப்பன்
Pin It