Busநாரசமாக ஒலிக்கிறது
நகரப் பேருந்துகளின்
நடமாட்டம்.
நகரமாக இருக்கிறது
அவற்றில் எனக்கு நேரும்
பயண அனுபவங்கள்.

என்னருகே சிக்கிய
எவனோ ஒரு பயணி
இளஞ்சூடாகக் கசியவிடுகிற
கார்பன்டை ஆக்சைடுதான்
எனக்கான ஆக்ஸிஜனாகிறது
கொட்டிவாக்கத்தில் இருந்து
அடையாறு வரைக்கும்.

படியில் தொற்றிப் பாதை பதைத்து
'முன்னால் போ' என
மரண ஓலமிடுகிறார்கள்
தமது முந்தைய பயணங்களில்
'முன்னால் போகாதவர்கள்'
நசுங்கும் என் கால்களை
லாவகமாக மீட்டெடுத்து
மிதிக்கத் தேடித் தோற்கிறேன்
மிதித்த கால்களை.

இருந்தும்,
டைரியால் பஸ் மறித்து
பாய்ந்து உட்புகுந்து
அதிகாரம் பீய்ச்சிய
பரிசோதகர்களிடம்
கொடுத்துவிட்டேன்
பயணச்சீட்டை!

யாரிடம் கொடுப்பது
பயண வேதனைகளை?

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It